— நூலகவியலாளர் என்.செல்வராஜா,லண்டன் —
பயிற்சிப் புத்தகக் கலாச்சாரம் என்பது இன்று இலங்கையில் பெற்றோர்- மாணவர்களிடையே பரவி, விரவிக் கிடக்கின்றது. ஐந்தம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தொடங்கி, கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை வரை வியாபித்திருந்த பயிற்சிப் புத்தகக் கலாச்சாரம், இன்று பல்கலைக்கழகங்களிலும் வேறு பரிமாணங்களில் ஊடுருவி வருவதாக அறிவுஜீவிகள் அங்கலாய்க்கின்றார்கள். இதனை ஒரு லாபமீட்டும் வர்த்தகமாகவே புத்தக விற்பனையாளர்கள் கருதுகின்றார்கள். வருடாவருடம் பயிற்சிப் புத்தகங்களும் பொது அறிவுப் புத்தகங்களும் பெருகிய வண்ணம் உள்ளன.
சுய கற்கைகளுக்காக இலங்கையின் கல்வி அமைச்சு 60களில் பாடநூல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அப்பாடநூல்களின் பயிற்சிகளுக்காக பயிற்சிக் கையேடுகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. வகுப்பறைக் கற்கைகளுக்கு அப்பால் மாணவர்கள் தமது வீட்டுச் சூழலில் தமது கற்கையை இரைமீட்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நல்ல செயற்றிட்டம் ஆசிரியர்களால் அன்றாட வகுப்பறைக் கல்வித் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களின் தலையில் பொதியாகச் சுமத்தப்பட்டுவிட்டது. இன்று சராசரி ஒரு மாணவன் 9 கிலோ எடைகொண்ட பொதியை அன்றாடம் பாடசாலைக்குச் சுமந்து வருவதாக கல்வித் திணைக்களப் புள்ளிவிபரமொன்று தெரிவிக்கின்றது. (சர்வதேச கல்விச் சீர்திருத்த வரையறை ஒரு மாணவனின் உடல் எடையின் 10 வீதத்தையே பாடசாலைப் பையில் சுமக்கலாம் என்று வரையறை செய்திருக்கின்றது.) ஆனாலும் இது நடைமுறையில் இலங்கையில் சாத்தியமாவதில்லை. சுகாதாரக் கேடாக கருதப்படும் இந்தப் பாடசாலைப் பையில் 37 சதவீதம் ஆக்கிரமித்திருப்பது பாடப்புத்தகங்களும் பயிற்சிப் புத்தகங்களுமே. சுமையைக் குறைக்க கல்வித்திணைக்களம் ஆண்டுக்குரிய பாடநூல்களை சிறு பாகங்களாகக் குறைத்தாலும், அந்தக் குறைநிரப்பியாக பயிற்சிப் புத்தகங்களின் சுமை மாணவர்களின் முதுகில் ஏற்றப்பட்டு விடுகின்றன.
எம்மிடையே இந்தப் பயிற்சிப் புத்தகங்கள் ஏன் இவ்வளவு ஜனரஞ்சகமாகிவிட்டன? அது கல்வி வளர்ச்சிக்கான குறுக்குப் பாதையை மாணவர்களிடமும் பெற்றோரிடமும் காட்டிவிட்டிருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். விரிந்த தேடலுக்குரிய அறிவியல் நூல்களை வாசிப்பதில் அக்கறை செலுத்தவிடாமல் அவர்களை குறுகிய வட்டத்தினுள் தமது பரீட்சைக்கான புள்ளிகளைப் பெற்று வெற்றிபெறத் தூண்டும் பெற்றோரும், ஆசிரியர்களுமே இளையோரிடையே பரந்துபட்ட வாசிப்பின் இன்பத்தையும், பெட்டிக்குள் அடங்காத விரிந்த தேடலுக்கான வாய்ப்பினையும் தட்டிப்பறித்து விடுகிறார்கள்.
உலகில் கல்வித்துறையில் முன்னேறிய நாடுகளைக் கூர்ந்து அவதானித்தால் அவற்றின் ஆரம்ப இடைநிலைக் கல்வித் திட்டமானது தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேடலுக்கான வழிகாட்டிகளாகவே உள்ளனர். அதற்காக அவர்கள் அதிகமான அறிவை அன்றாடம் தேடிப்பெற்று வளர வெண்டியிருக்கின்றது. இந்தத் தேடல் எமது ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு வாய்த்துள்ளது?
இலங்கையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பரீட்சையை முன்நிறுத்தியே மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கிறார்கள். கடந்தகாலப் பரீட்சை வினாத்தாள்களினூடாகத் தமது பரீட்சைக்கான வினாக்களுக்கான விடையை எளிதில் காணவிரும்புகிறார்கள். பரீட்சைக்கு என்ன தேவையோ அதை மாத்திரம் படித்தால் போதுமானதாகிவிடுகின்றது. சிக்கலில்லாமல் பல்கலைக்கழகம் வரை அந்த மாணவன் வெற்றிநடை போடக்கூடியதாயிருக்கும். அவன் கற்றுத் தேர்ந்த கல்வி அவனது பொது வாழ்வில் அவனை வெற்றியடைய வைக்கின்றதா என்பதை அவனது பிற்கால வாழ்க்கையே அவனுக்குத் தெரியவைக்கின்றது.
இன்று பாடசாலைகளின் நூலகங்களுக்கான நூல்கொள்வனவில் பெரும்பங்கு பயிற்சிப் புத்தகங்களுக்கே செலவிடப்படுவது எழுதாச் சட்டமாகிவிட்டது. புத்தகச் சந்தைகளிலும், புத்தக விற்பனை நிலையங்களிலும் ஏராளமான பொது அறிவு நூல்கள் பரந்த கிடப்பினும், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் (அங்குகூட நூல்தேர்வில் நூலகர்களின் வகிபாகம் வரையறைக்குட்பட்டு விடுகின்றது.) பயிற்சிப் புத்தகங்களையே தேடி அலைவதை காணமுடிவதுண்டு.
2015 முதல் 2019 வரை இலங்கையின் கல்வி அமைச்சராக இருந்த அகில விராஜ் காரியவாசம் நல்லதொரு பணியை பாடசாலை நூலக உலகிற்கு வழங்கிச் சென்றுள்ளார். 2017இல் 700 மில்லியன் ரூபாவை 3200 இலங்கைப் பாடசாலைகளுக்கு ஒதுக்கி பாடசாலை நூலகங்களுக்கான நூல்களை வாங்கிச் சேகரிக்க வழியமைத்துக் கொடுத்திருந்தார். ஒரு மாணவனுக்கு ஆகக்குறைந்தது பத்து நூல்கள் என்ற வீதத்தில் ஒவ்வொரு பாடசாலை நூலகமும் அடிப்படை நூல்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே அந்தத் திட்டத்தின் பிரதான நோக்காக இருந்தது. அன்றைய கணக்கெடுப்பின்படி தென்னிலங்கையில் ஒரு மாணவனுக்கு 30 நூல்களைக் கொண்ட பாடசாலைகள் இருந்த நிலையில், வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையான பாடசாலைகளில் மூன்று மாணவருக்கு ஒரு நூல் என்ற ரீதியில் கூட பாடசாலை நூலகங்கள் நூல்களைக் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் 2017இல் பயனடைந்த அதிகளவான பாடசாலை நூலகங்கள் வடக்கு- கிழக்கு மலையகப் பிரதேசங்களாகவே இருந்தன. அதிகளவு நிதியை இப்பாடசாலைகளுக்கு ஒதுக்கியிருந்த நிலையில், இலங்கையில் சிறுவர்களுக்கான நூல்களில் பெரும் பற்றாக்குறை காணப்பட்டு, தமிழகத்திலிருந்து அவசர அவசரமாக தமிழ் நூல்களை இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசர நிலையில் இலங்கைப் புத்தக விற்பனையாளர்கள் இருந்தனர். தமிழ் ஆசிரிய வெளியீட்டாளர்கள் தனித்தனித் தீவுகளாக இருந்தமையாலும், அவர்கள் ஒன்றிணைந்த ஒரு குழு நிலையில் தமது நூல்களின் இருப்பினை கல்வி அமைச்சின் நூல் கொள்வனவுத் திட்டத்திற்கு தெரிவிக்கத் தவறியதால் பல ஆசிரிய/வெளியீட்டாளர்களால் தமது நூல்களை இத்திட்டத்தில் வழங்க முடியாமல் இருந்தது.
நூல் கொள்வனவுக்கான விதி முறைகளில் தெளிவாக, பயிற்சிப் புத்தகங்கள் தவிர்ந்த அறிவியல் நூல்களே கொள்வனவு செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் பாடசாலை அதிபர்களின் அழுத்தம் காரணமாக, 15 சதவீதம் பயிற்சிப் புத்தகங்கள் கொள்வனவு செய்யலாம் என்று விதிமுறை தளர்த்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள விரைந்த பயிற்சிப் புத்தகத் தயாரிப்பாளர்களும், அதிகளவிலான பயிற்சிப் புத்தகங்களை மீளச்சுச் செய்து புத்தகசாலைகளுக்கு வழங்கியிருந்தார்கள். தமிழ்ப் புத்தக விற்பனையாளர்களின் அனுசரணையுடன் 45 சதவீதம் வரை பயிற்சிப் புத்தகங்களை பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைக்குப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஒரு பிரபல புத்தக விற்பனையாளர் எனக்கு நேரில் தெரிவித்து விசனமடைந்தார்.
பிரித்தானியாவில் கல்வித்துறையில் பாடசாலைக் கல்வியைப் பெறமுடியாத சிறியதொரு மாணவர் சமூகம் உள்ளது. வீட்டிலேயே தமது கல்வியைப் பயிலும் வகையில் கட்டமைக்கப்பட்ட மனவலுக்குன்றியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மாற்று வலுவாளர்கள் என இச்சிறு பகுதியினருக்காக கல்வித் திணைக்களமும், பிரபல புத்தக விற்பனையாளர்களும் பயிற்சிப் புத்தகங்களை பிரத்தியேகமாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இவை பாடசாலை நூலகங்களிலும் தனியார் இல்லங்களிலும் இருக்குமே தவிர, பொது நூலகங்களில் இவற்றைக் காணவே கிடையாது.
துரதிர்ஷ்ட வசமாக மாணவர்களின் விருப்பத்தேர்வு இதுவென்ற வலிந்து திணிக்கப்பட்ட கருத்துருவாக்கத்தின் பயனாக, இலங்கையில் பாடசாலை மற்றும் பொது நூலகங்களிலும், தனியார் நூலகங்களிலும், சனசமூக நிலைய நூலகங்களிலும் பயிற்சிப் புத்தகங்களுக்கென்று தனிப்பிரிவுகளையே உருவாக்கி வளர்த்து பராமரித்து வருகிறார்கள். அதன் சேகரிப்புகளுக்காக பெருமளவு நிதியையும் செலவிட்டு பயிற்சிப் புத்தகங்களையும் வாங்கிச் சேகரிப்பதுமல்லாமல், அப்பிரிவைப் பயன்படுத்தும் வாசகர்களின் எண்ணிக்கையையும் பதிவேடுகளில் அதிகரித்துக் காட்ட சில நூலகர்கள் முன்வருகின்றார்கள்.
ஈழத்தில் விரிந்து பரந்த அறிவு வேட்கையைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டிய கல்வி நிறுவனங்கள், பட்டதாரிகளை சமூகத்துக்குத் தயாரித்து வழங்கும் ‘உற்பத்தித் தொழிற்சாலைகளை‘ உருவாக்குவதில் பெருமிதம் கொண்டிருப்பதால் தான் இன்று இலங்கைத் தமிழ் புத்திஜீவிகளில் பலர் உயர்கல்வித் தரம் பெற்று பட்டதாரிகளாகாமலேயே சமூக வாழ்வில் பெரும் உச்சங்களைத் தொட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு தம்மை சாதனையாளர்களாக நிரூபித்து வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
பொது நூலகங்கள் விரிவானதும் கட்டுப்பாடற்றதுமான சுதந்திர வாசிப்பனுபவத்தை தனது சமூகத்துக்கு வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு கட்டியெழுப்பபப்பட்டு வந்துள்ளன. பிரதேச சபைகள், ஏராளமான பணச்செலவில் வருடாந்தம் நல்ல நூல்களை கொள்வனவு செய்தும், நூலகர் படையணியொன்றை தனது நூல்வளத்தை உரிய வகையில் பராமரித்துப் பரிமாறவென்று நியமித்து வருகின்றன. இந்நிலையில், இந்த நூல்களை எட்டிப்பார்க்கும் ஆர்வமற்ற, அதனைப் பற்றியே அறிய விரும்பாது, பயிற்சிப் புத்தகங்களின் உதவியுடன் மட்டுமே தனக்குத் தேவையான உலக அறிவை எய்திவிடலாம் என்ற நப்பாசையுடன் வரும் இளையோரையும் இதே நூலகங்கள் ஆதரிப்பதென்பது முரண்நகையாகும்.
இங்கு நூலகர்களுக்கு, குறிப்பாக பொது நூலகர்களின் சிந்தனைக்கு சில வரிகளை ஒதுக்கி வைக்க விரும்புகின்றேன். பொது நூலகம் ஒரு திறந்த பல்கலைக்கழகம் என்று உங்கள் நூலகக் கல்வியில் பயின்றிருப்பீர்கள். எல்லையற்ற அறிவை ஒருவர் எத்தகைய வடிகட்டலுமின்றிப் பெற்றுக்கொள்வது உங்கள் நூலகத்தில் தான் என்பதை மறவாதீர்கள். உலகின் அறிவுத்தேட்டங்களை எல்லாம் பகுத்துத் தொகுத்து வைக்கும் நீங்கள், மிகக்குறுகிய நோக்கம் கொண்ட தேர்ந்த அறிவுக் குறிப்புகளை கைச்சோறுட்டி வளர்க்கும் கூண்டுக் கிளிகளாக்கும் பயிற்சிப் புத்தகங்களை உங்கள் நூலகங்களில் இடம்பெறச் செய்வது உங்களுக்குச் சங்கடமாக இருக்கவில்லையா? பயிற்சிப் புத்தகங்களை நாடிச் செல்லும் சோம்பேறிகளை விரிவான அறிவை நாடிச்செல்ல ஊக்கமளிக்கும் செயற்திட்டங்களை நீங்கள் கைவசம் வைத்திருக்கவேண்டும் அல்லவா?இதைப்பற்றி தீவிரமாகச் சிந்தியுங்கள்.
இலங்கையின் கல்வித் திட்டமும் அப்படியானதே. பரீட்சைப் புள்ளிகளையே குறியாகக் கொண்டமைக்கப்பட்டது. அதனை மாணவர்கள் எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பது அதற்குத் தேவையில்லாதது. கல்வித்துறை என்னும் பெருஞ்சக்கரத்தின் சிறு பல்லாக இயங்கும் பாடசாலை நூலகங்கள் அவ்வாறு நினைக்கலாம். ஆனால் பொது நூலகர்களும் அவ்வாறான சிந்தனையின்பாற்படுவது தவிர்க்கப்படவேண்டும் அல்லவா? புற்றுநோய் வைத்திய சாலை வாயிலில் சிகரட் விற்பனை விளம்பரங்களை ஒட்டிவைப்பது நியாயமா?
உங்கள் நூலகத்தில் இது பற்றிய கலந்துரையாடல்களை சக நூலகர்களுடன் மேற்கொள்ளுங்கள். அதில் உங்கள் பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைத் தலைவர்களையும் படிப்படியாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். பயிற்சிப் புத்தகக் கலாச்சாரத்தை குறைந்தபட்சம் பொது நூலகத்திலிருந்தாவது களை எடுக்க முயற்சி செய்வோம். காலக்கிரமத்தில் எமது சமூகத்திலிருந்து இக்கலாச்சாரத்தை முற்றாக நீக்கிவிட ஓரளவாவது முயற்சி செய்வோம். ‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்‘ என்ற பதாதை வரிகளை அர்த்தமுடையதாக்குவோம்.