மாஸ்க் (சிறுகதை)

மாஸ்க் (சிறுகதை)

 — சபீனா சோமசுந்தரம் — 

நேரம் 9.00ஐ தாண்டிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சுதர்சன் ஞாயிற்றுகிழமை முடிஞ்சிட்டு.. காலைல வேலைக்கி போகணும்..‘ என்று அலுத்துக் கொண்டு தொலைக்காட்சியை அணைத்து விட்டு எழுந்தான்.  

முன் கதவ வடிவா லொக் பண்ணிட்டு வந்து படுங்க..‘ என்றாள் அவன் மனைவி. 

அவன் கதவை பூட்ட வாசலுக்கு செல்ல கேட்டை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. 

ஆரோ கேட்ட தட்டுறாங்கப்பா.. ஆரெண்டு பாருங்க..’ 

இஞ்சே மாஸ்க்க போட்டுட்டு போங்க.. ஆராவது கொரோனாவோட வந்து நிக்கானுகளோ தெரியாது..‘ என்றாள் மனைவி. 

முகக்கவசத்தை ஒன்றுக்கு இரண்டாக எடுத்து போட்டுக் கொண்டு சாமத்தில ஆரடா கேட்ட தட்டுறவன்..‘ என்று புறுபுறுத்துக் கொண்டு போனான்.  

வாசலில் எதிர்வீட்டு சிறுவன் நின்றிருந்தான். பக்கத்தில் போகாமல் எட்டி நின்றபடியே என்னடா தம்பி.. என்றான் சுதர்சன். 

நாளைக்கி எட்டு மணியோட கரண்ட் கட் பண்ணுவாங்களாம்.. பின்னேரம் தான் வருமாம்.. அம்மா சொல்ல சொன்னவ.. என்று சொல்லி விட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் ஓடி விட்டான் சிறுவன். 

இப்போது சுதர்சனிடம் தகவல் சொல்லி விட்டு போகும் சிறுவனின் தாய் மின்சார சபையில் தான் வேலை பார்க்கிறார். அதனால் மின்சார தடங்கல் செய்திகள் சுதர்சனின் மனைவிக்கு முன்கூட்டியே வந்து சேரும்.  

உள்ளே வந்து கதவை தாழிட்டு மிண்விளக்குகளை அணைத்து விட்டு அறைக்குள் போனான். 

சுஜீ.. நாளைக்கு கரண்ட் கட்டாம்.. என்றான் மனைவியிடம். அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.  

திரும்பி மனைவியை பார்த்தான். அவள் குழந்தையை அணைத்தபடி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். 

அடி பாவி.. இந்த கேட்டுக்க போய் வாறத்துக்குள்ள இப்பிடி தூங்கிறியேடி.. என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு தலையணையை சரி செய்து விட்டுப் படுத்தான். 

படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்தான். உடல் வியர்ப்பது போல் இருந்தது. மேலே பார்த்தான் மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. மீண்டும் புரண்டு படுத்தான். நேரம் போக போக மூச்சு முட்டியது. மனைவியை கூப்பிட்டான் சுஜீ.. சுஜீ..‘ என்றான் குரல் வரவில்லை.  

ஒரு வேள கொரோனாவோ எனக்கு… மூச்சு விட கஸ்டமா இருக்கு..‘ அவனுக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது. பயத்தில் உடல் துவண்டு போனது எழும்ப முடியவில்லை. திரும்பி பார்த்தான் அவனது மனைவியும் நான்கு வயது மகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். 

கடவுளே.. நான் என்ன செய்ய.. எனக்கு கொரோனா எண்டா.. ஐயோ.. என்ர மனிசி பிள்ளைய யார் பாக்குறது.. ஒரு வேள நான் செத்திடுவனா..ஐயோ… அப்பிடி இருக்காது.. ஹொஸ்பிட்டல் தனிமைப்படுத்தல் எண்டு பெரிய கஸ்டத்தில விளப்போறனே.. வேலக்கி போகாட்டி சம்பளம் இல்ல.. கையில காசும் இல்ல..‘ நினைக்க நினைக்க அவனுக்கு மேலும் மூச்சு விட கஸ்டமாக இருந்தது.  

அரசாங்க வேலை எண்டாலும் பரவால்ல வேலைக்கு போகாட்டிலும் சம்பளம் கிடைக்கும். பிறைவெட் வேலைல வேலை செய்தா தான் சம்பளம். அதையும் நேர காலத்துக்கு தரவும் மாட்டாங்கள்… இப்படியெல்லாம் யோசிக்க யோசிக்க அவனை பயம் ஆக்கிரமித்தது.  

சுதர்சன் ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக வேலை செய்கிறான். ஏழு வருடங்களாக காதலித்தவளை போராடி கைபிடித்து மனைவியாக்கி கொண்டான். அவன் மனைவி சுஜிதா ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.  

திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க வேண்டுமென்று அவள் வேலைக்கு போவதை நிறுத்தி விட்டாள். வாழ்க்கை ஓரளவு பிரச்சினை இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கொரோனாவால் அடிக்கடி லொக்டவுண் ஊடரங்கு என வருமானம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்தது. ஏதோ வருகிற சம்பளத்தையும் அங்கும் இங்கும் எனச் சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்புகளையும் வைத்து சமாளித்துக் கொண்டு வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. 

இரண்டு நாளாக அவனுக்கு கொஞ்சம் இருமலாக இருந்தது. சும்மா இருமிக்கொண்டு இருக்காம ஒருக்கா ஹொஸ்பிட்டல்ல கொண்டு போய் காட்டுங்களன்..‘ என்று சுஜீ கூறவும். 

சும்மா போடி.. இருமல் எண்டு போனா.. கொரோனா டெஸ்ட் எடுப்பாங்கள்.. பிறகு எல்லாரையும் குடும்பத்தோட தனிமைப்படுத்துவாங்கள்.. வேல இல்ல.. காசு இல்ல.. என்ன செய்யிறது..இது சாதாரண இருமல்.. இருமல் பாணிய குடிச்சிட்டு.. ரெண்டு நாளைக்கு ஆவி பிடிச்சா சரி…‘ என்று சொல்லி மனைவியின் சொல்லை மறுத்துவிட்டான். 

ஆனால் இப்பொழுது அதையெல்லாம் நினைக்க மேலும் பயத்தில் இதயம் வேகமாக துடித்தது அவனுக்கு. கண்கள் செருகியது அவனுக்கு. 

திடீரென்று அவனது தோள்களை பிடித்து யாரோ உலுப்பியது போல் இருந்தது. திரும்பி பார்த்தான். அவன் மனைவி சுஜீ நின்றிருந்தாள்.  

அவளிடம் பேச முயன்றான் பேச முடியவில்லை. குரல் வரவில்லை.  

விசரா உங்களுக்கு.. தூங்கக்குள்ள யாராவது மாஸ்க் போட்டுட்டு தூங்குவாங்களா.. அதுவும் ரெண்டு மாஸ்க்..‘ என்று சொல்லிக் கொண்டு அவனது முகத்தில் போட்டிருந்த மாஸ்க்கை கழட்டி பக்கத்தில் இருந்த மேசையில் போட்டாள்.  

என்ன நடந்த உங்களுக்கு.. என்ர கடவுளே.. இது என்ன இப்படி வேர்த்து போய் படுத்திருக்கிறீங்க.. சும்மாவே வெக்க.. இதில மாஸ்க்க போட்டுட்டு படுத்தா எப்பிடி மூச்சு வரும்.. உங்களப் போய் லவ் பண்ணி கலியாணம் கட்டினனே.. சரியான அரை லூசு நீங்க… போய் குளிச்சுபோட்டு வந்து படுங்க.. என்று திட்டிக்கொண்டு தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள் சுஜீ.  

அட கருமத்த இந்த மாஸ்க்க கழட்டாமலா வந்து படுத்தன்… ச்சேக்.. அது சரி சாகப்போறன் என்று யோசன வந்ததுமே என்ர மனிசி பிள்ள எண்டு கவலப்படுறன், இவள் என்னெண்டா வந்து அரை லூசு என்டுட்டு போறாள்..‘ என்று தன்னைத்தானே நொந்து புலம்பிக் கொண்டான். அழுவதா சிரிப்பதா என்று அவனுக்கே குழப்பம். 

சுதன்.. நாளைக்கு வேலைக்கு போற ஐடியா இல்லையோ..‘ என்று மனைவியின் குரல் அதட்டியது. 

அதெல்லாம் நான் போவன்.. உனக்கு தான் படுத்த உடனயே நித்திர வருதே… பேசாம படு..‘ என்று கோவித்துக் கொண்டு குளியலறைக்குள் நுளைந்தான் சுதர்சன்.