— எழுவான் வேலன் —
பிரதேச வாதம், பிரதேச உணர்வு: புரிந்து கொள்வதற்கான முன்வரைவு
அரங்கம் பத்திரிகை கிழக்கு பிரதேசவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு பத்திரிகை எனவும் அதில் எழுதுகின்ற தம்பியப்பா கோபாலகிஸ்ணன், எழுவான் வேலன், படுவான் பாலகன், அழகு குணசீலன் போன்றவர்கள் பிரதேசவாதிகளாகவும் அவர்களுடைய கருத்துக்கள் பக்கச்சார்பானவைகளாகவும் முகநூல்களில் எழுதப்படுகின்றன.
பொதுவாக முகநூல்களில் எழுதப்படும் பதிவுகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் இவ்வகைப்பட்ட பதிவுகளை வாசித்து அவற்றுக்கு கருத்துக் கூறிக்கொண்டிருப்பதற்கு பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அதுவே ஒரு உயர்தரமான விமர்சனமாக அல்லது கருத்தாடலாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஓரளவு உயர் கல்வித் தகமையைக் கொண்டிருக்கின்ற குறிப்பாக ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இவ்வகைப்பட்ட நிலையில் இருப்பது எமது சமூகத்துயரமாகப் பார்க்கின்றேன். இந்த சமூகத்துயரத்துக்கு பதிலிறுக்க வேண்டிய சமூகப்பொறுப்பு சமூகத்தை உள்ளாந்து நேசிக்கும் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது.
ஒரு பத்தி எழுத்துக்கான கருத்துக் கூறல் என்பது ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்ளும் தெருச் சண்டை அல்ல. அது ஒரு தத்துவார்த்த தளத்தில் குறிப்பிட்ட அரசியல் சமூகச் சூழலை பகுப்பாய்வு செய்து முன்வைப்பதேயாகும். இந்தப் பகுப்பாய்வானது தனது விருப்பு வெறுப்பு மற்றும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி நலன், அதன் மீதுள்ள விசுவாசம் என்பதற்கு அப்பால், அது முழுக்க முழுக்க புறநிலைத் தன்மையவாய்ந்தவையாக இருக்க வேண்டும். அவ்வாறு முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களின் கருத்தாடல்கள் ஒரு பிரச்சினைக்கான பல தீர்வுகளை அல்லது அணுகுமுறைகளைக் கொண்டுவருவதாக இருக்கும்.
கருத்தாடல்களின் நோக்கம்
இவ்வகையான கருத்தாடல்கள் சமூகத்தை சரியான திசைவழிப்படுத்துவதுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர்களும் புதிய சிந்தனைகளை உருவாக்கவும் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை மேலும் மேலும் அணுகி தங்களைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடியும். நாம் இன்று எதிர்பார்ப்பது இவ்வாறான ஒரு அரசியல், பொருளாதார, சமூகக் கருத்தாடலையேயாகும். இது ஒரு ஆரோக்கியமான அரசியல் பண்பாடுமாகும். ஆனால் முகநூல்களில் பதிவிடும் அறிவாளிகள் குறிப்பாக ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருந்தகைகள் எவ்வித தத்துவார்த்த தளமும் இன்றி அகவயநிலையில் இருந்து தங்கள் தங்கள் அரசியல் சார்பு நிலையினை துதிபாடுபவர்களாக இருக்கிறார்கள். காக்கைக்கும் ‘தன்குஞ்சு பொன்குஞ்சு‘ என்ற நிலையிலான கருத்து முன்வைப்புக்கள் சமூகத்தை சரியான திசைவழிப்படுத்த உதவமாட்டாது. மனுநீதி கண்ட சோழன் போல் தன் மகனாக இருந்தாலும் அவன் மீது தேரை ஏற்றத் தயங்காக உளவலிமை கொண்டவர்களாகவும் நக்கீரர் போல் ‘நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே‘ என்று கூறக்கூடிய தத்துவார்த்த தெளிவும் நேர்மைத் திறனும் கொண்டவர்களாக இக்கருத்துக்களை முன்வைப்பவர்கள் இருப்பார்களேயானால் அது எமது சமூகத்துக்கு புதிய ஒளியைப் பாச்சும் என்பதில் எவ்விதச் சந்தேககங்களும் இல்லை.
பிரதேசவாதம்
இந்த அடிப்படையில் எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நோக்குகையில், முதலில் பிரதேசவாதம், பிரதேச உணர்வு போன்றவற்றை விளங்கிக் கொள்தல் வேண்டும். ஈழத்தில் பிரதேசவாதத்தினை அறிமுகப்படுத்திய பெருமை ஆறுமுகநாவலரையே சேரும். அவர் முன்வைத்த ‘சைவமும் தமிழும்‘ எனும் கருத்துநிலை இதில் முக்கியமானதாகும். இதன்படி தமிழர் என்றால் அவர் சைவராக இருக்க வேண்டும் என்பதும் அந்த சைவராக இருப்பவர் உயர் வேளாளராக இருக்க வேண்டும் என்பதும் இதனுள்ளிருக்கும் உள்ளார்ந்த அர்த்தமாகும். இதற்குள் உள்வராத மற்றவர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களாக விழிம்புநிலைப்படுத்தி ஒதுக்கி யாழ்ப்பாண சமூக அதிகாரப்படிநிலையினை இக் கருத்துநிலை மேலும் இறுக்கமாக்கிப் பேணியது.
இதன் இன்னுமொரு விளைவு என்னவெனில் யாழ் குடாநாட்டுக்குள்யேயும் வெளியேயும் பல பிரதேச சமூக வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தியதாகும். அதாவது மொழிவழி தமிழர் ஒற்றுமையினையன்றி மதவழியினூடு அது பேணிய சற்சூத்திரக் கொள்கையின் காரணமாக பிரதேச வேறுபாடுகள் முக்கியமானதாக விளங்கியது / விளங்குகின்றது. உதாரணத்துக்கு தீவார், வடமராட்சியார், தென்மராட்சியார், வலிகாமத்தார், வன்னி, மட்டக்களப்பார், தோட்டக்காட்டார் என்பவற்றைக் குறிப்பிட முடியும். இந்தச் சொல்லாடல்கள் கிழக்கிலிருந்து உருவாகவில்லை என்பதையும் எம்மைப் பிரதேசவாதிகள் என்று கூறுபவர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.
கிழக்கில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் படுவான்கரை, எழுவான்கரை என்ற பிரதேச ரீதியான பிரிப்பையே காணலாம். இந்தப் பிரிப்புக்கு அடிப்படையாக இருப்பது மட்டக்களப்பின் புவியியல் அமைப்பே தவிர சாதி அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அதாவது மட்டக்களப்பு வாவியை அடிப்படையாகக் கொண்டு வாவிக்கு மேற்கே சூரியன் மறையும் பிரதேசம் படுவான்கரை என்றும் வாவிக்கு கிழக்கே சூரியன் உதிக்கும் பிரதேசம் எழுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் காணப்படும் இந்தப் பிரிப்பு பிரதேச அடையாளம் சார்ந்ததாகவும் அந்தப் பிரதேச பண்பாடு சார்ந்ததுமான ஒரு நோக்குநிலையைக் கொண்டிருக்கின்றது. ஆனால் வடமராட்சியார், தீவார், தோட்டக்காட்டார் என்பதெல்லாம் அவற்றின் புவியல் எல்லையைக் கடந்து அதற்குள் அடிப்படையாக சாதிரீதியான அடையாளம் ஊடுபாய்ந்திருக்கின்றது. ஒரு யாழ்ப்பாணத்தவர் மற்றொரு யாழ்ப்பாணத்தவரைப் பார்த்து ‘நீர் யாழ்ப்பாணத்தில் எந்த இடம்‘ என்ற விசாரிப்பு அந்தக் குறிப்பிட்ட நபரின் சாதியை அறிந்துகொள்வதற்கான ஒரு பொதுமொழியாக இருக்கின்றது என்பதை பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். புலம்பெயர் பிரதேசங்களில் தங்கள் சாதியை மறைப்பதற்காக தங்களின் பிறந்த இடத்தை பலர் மறைத்து வாழ்வதாக தேவதாசன் தனது ‘புலம் பெயர்ந்த சாதியம்‘ எனும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
சமூக அதிகாரப் படிநிலையை பேண முனைதல்
சமூக அதிகாரப் படிநிலை உறவின் பேணுகையில் சமூகத்தின் உளவியல் இயங்கு தளமும் அதன் திருப்தியும் முக்கியமானதாகும். அதாவது தனக்குக் கீழ் உள்ளவனை விட தான் சிறந்தவன் என்பதும் தான் அதிகாரம் செலுத்துவதற்கும் தனக்கு கொளரவமும் மதிப்பும் வழங்குவதற்கும் தனக்குக்கீழ் குறிப்பிட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதும் ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடை அடிமனம்வரை ஊடுபாய்ந்து நிற்கும் ஒரு உளவியல் யதார்த்தமாகும். இந்த உளவியல் நிலை காரணமாக ஒரே சாதியாக இருந்த போதிலும் மற்றைய பிரதேசத்து சாதிகளிலும் பார்க்க தான் உயர்ந்தவன் என நினைப்பதும் உருவாகின்றது. உதாரணத்துக்கு ‘தீவுப்பகுதியில் பஞ்சமர் தம்மை வடமராட்சிப் பகுதிப் பஞ்சமரிலும் பார்க்க அந்தஸ்து நிலை கூடியோராக நோக்குவது வழமை‘ என்பார் கா.சிவத்தம்பி. இது போன்றே இன்னொரு சுவாரஸ்யமும் இதற்குள் உண்டு அதாவது மொத்த யாழ்ப்பாணமுமே மற்றப் பிரதேசங்களை விட அந்தஸ்து கூடியது என்ற நோக்கு நிலை. அதாவது யாழ்ப்பாணத்து உயர் வேளாளரால் தீண்டத்தகாத ஒருவராக நோக்கப்படும் ஒருவர், யாழ்ப்பாணத்துக்கு வெளியே வந்தால் அவர் யாழ் உயர் வேளாள அந்தஸ்த்தினைப் பெற்று மற்றப் பிரதேசத்தவரை கீழானவராக நோக்குகின்ற நிலையாகும். இந்த யாழ்ப்பாணத்து மனநிலையே பிரதேச வாத அடையாளமாகவும் அதன் அடிப்படையாகவும் இருப்பதை மறந்துவிடலாகாது.
கிழக்கை “கீழ்” எனக் கருதும் யாழ் மேலாதிக்கம்
இந்த யாழ் மேலாதிக்கம் எப்போதும் கிழக்கை தனக்கு கீழான ஒன்றாகவே நோக்கி நடாத்தி வந்திருக்கிறது/ நடாத்தி வருகிறது. இங்கு யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவும். யாழ் மக்களில் பெரும்பாலானோர் இந்த யாழ் மேலாதிக்கத்தால் மூக்குப் பேணியிலும் சிரட்டையிலும் தேத்தண்ணி குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்பதோடு பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்கத் தடுக்கப்பட்டதோடு கோயில்களிலும் வெளியே நிறுத்தப்பட்டவர்கள்தான். இவ்வாறு நடாத்துவதற்கு வாய்ப்பாக மதம் வழங்கிய அவர்களின் சமூக அந்தஸ்த்துக்கு மேலாக அவர்களின் பொருளாதாரம், கல்வி அந்தஸ்த்துகள் என்பனவும் உதவின.
கிழக்கைப் பொறுத்தவரையிலும் அதே நிலமைதான் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வேளாளர் ஆதிக்கம் மட்டக்களப்பில் முக்குவர்கள். சற்சூத்திரக் கொள்கையின் படி முக்குவர்கள் வேளாளரைவிட சமூக அந்தஸ்த்தில் குறைந்தவர்கள். தன்னைவிட சமூக அந்தஸ்த்தில் குறைந்தவன் தன்னை மேவிவிடக் கூடாது என்பதில் மிகக் கறாராக இருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த சாணக்கியனின் தாத்தா இராசமாணிக்கம் அவர்கள் பட்டிருப்புத் தொகுதியில் எதிர்மனசிங்கம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட போது மண்டூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘முக்குவன் பாராளுமன்றம் போய் எம்.பி. ஆவதா? எனப் பேசினாராம். மட்டக்களப்பிலே பிறந்து வளர்ந்த வேளாளரான இராசமாணிக்கம் அவர்களே முக்குவன் பாராளுமன்றம் செல்லக் கூடாது என நினைக்கும் போது சமூக அதிகாரக் கட்டமைப்பை மிக இறுக்கமாகப் பேணிய யாழ்ப்பாணம் முக்குவர்களை மிக இலகுவில் அங்கீகரிக்கும் என நாம் நினைப்பது முட்டாள்த்தனமானதாகும்.
ஆயினும் கிழக்கு எப்போதும் இந்த அதிகார நிலைக்கு எதிரான ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. உதாரணத்திற்கு யாழ் மேலாதிக்கம் ஆகம வழிபாட்டை வற்புறுத்திய போது கிழக்கு பத்ததி வழிபாட்டையே தொடர்கிறது, அங்கு கண்ணகி இராஜஇராஜேஸ்வரியாக மடைமாற்றம் அடைந்தார் கிழக்கு கண்ணகியை விட்டுக்கொடுக்கவில்லை. அங்கு ஆறுமுகநாவலர் சமூக வேற்றுமைகளை கூர்மைப்படுத்தினார். இங்கு விபுலாநந்தர் சமூக ஒற்றுமைகளை வலுப்படுத்தினார். ஆறுமுகநாவலரும் அவருடைய அணியும் சர்வசன வாக்குரிமை வழங்கக் கூடாது என்றார்கள். கிழக்கின் பிரதிநிதி திரு.E.R.தம்பிமுத்து வழங்க வேண்டும் என வாக்களித்தார். ‘முக்குவன் பாராளுமன்றம் போய் எம்.பி ஆவதா? எனக் கேட்ட இராசமாணிக்கம் எதிர்மனசிங்கத்திடம் தோல்வியடைந்தார். யாழ் மேலாதிக்கம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. கிழக்கின் பிரதிநிதிகள் அதனை நிராகரித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தேர்தல்களில் போட்டியிட்ட அமிர்தலிங்கம், மாவை சேனாதிராசா போன்ற தலைவர்களை கிழக்கு தோற்கடித்தது.
கிழக்கு யாழ் மேலாதிக்கத்துடன் இணைந்து போன சந்தர்ப்பங்களிலெல்லாம் தங்களுக்காகப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்தார்கள். அல்லது தமிழ்த் தேசியம் எனும் பெயரில் தங்களுக்கான அரசியல் மேலாதிக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டு அதன் அறுவடைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள். உதாரணத்துக்கு சமாதான காலத்தில் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் எந்தவொரு கிழக்கைச் சேர்ந்த போராளியும் உள்வாங்கப்படவில்லை என்பது கருணா தனது பிரிவுக்கு முன்வைத்த காரணங்களிலொன்றாகும். கருணாவின் சரி, பிழைகளுக்கப்பால் அந்த உண்மையை எவரும் கடந்து போகமுடியாது. அதே போல் இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற பெரும்பான்மையோர் யாழ் மேட்டுக்குடிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. யாழ் மாவட்ட மாவீரர் பட்டியலில் இந்த மேட்டுக்குடியினர் எத்தனை வீதம் உள்ளனர் என்பதையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
இவ்வாறு வரலாறு முழுக்க யாழ் மேலாதிக்க அதிகாரத்துக்கு எதிரானவர்களாக கிழக்கு மக்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இது யாழ் மேலாதிக்கம் ஈழத்தில் எங்கும் சந்திக்காத சவாலாகும். இந்தச் சவாலை தனது அறிவுஜீவித்தனத்தினால் எதிர்கொண்டு வருகின்றது அது. அவ்வாறு எதிர்கொள்வதற்காக தமது புத்தியில் இருந்த பிரதேசவாத்தினை அப்படியே எமது தலையில் கட்டி எம்மைப் பிரதேசவாதி என்கின்றது, நாம் பேசுவதை பிரதேசவாதம் என்கின்றது.
பிரதேசவாதம் என்பது என்ன? மதவாதம், இனவாதம் போன்றதுதான் பிரதேசவாதமுமாகும். அதாவது தனது மதம்தான் உயர்ந்தது என்றும் மற்றவையெல்லாம் மூடநம்பிக்கைகள், அழிக்கப்படவேண்டியவை என்று கருத்தேற்றம் செய்து தனது மதக்காரர்களை மற்றைய மதக்காரர்களுக்கு எதிராகத் தூண்டுவது அல்லது செயற்படுவது மதவாதமாகும். அதுபோன்றே இனவாதமுமாகும். தனது இனமே சிறந்தது மற்ற இனங்கள் தாழ்ந்தவை அழிக்கப்படவேண்டியவைகள் என தனது இனத்தினரைக் கருத்தேற்றம் செய்து மற்றைய இனங்களுக்கு எதிராக தூண்டுவது அல்லது செயற்படுவது அல்லது செயற்படவைப்பது இனவாதமாகும். பிரதேசவாதமும் இதுபோன்ற ஒன்றுதான் தனது பிரதேசமே எல்லாவகையிலும் சிறந்தது மற்றப் பிரதேசங்கள் மோசமானவை, தாழ்ந்தவை, தங்கள் மேலாண்மைக்கு உட்பட்டவை என தனது பிரதேசவாதிகளைக் கருத்தேற்றம் செய்து மற்றப் பிரதேசங்களுக்கு எதிராகத் தூண்டுவது அல்லது செயற்படுவது அல்லது செயற்படவைப்பது பிரதேசவாதமாகும்.
பிரதேச உணர்வு பிரதேச வாதமல்ல
எங்களுடைய எழுத்துக்கள் எதிலும் எங்களுடைய பிரதேசம்தான் உயர்ந்தது என்றும் மற்றப் பிரதேசங்கள் தாழ்ந்தது என்றும் இதனால் அப்பிரதேசங்களைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்றோ எழுதியது கிடையாது. அல்லது அந்தப் பிரதேசத்து சாதாரண மக்களுக்கு எதிரானதாகவும் எழுதுபவர்கள் அல்ல. அவ்வாறு மற்றப் பிரதேசங்களில் உரிமையில் அவற்றின் அபிவிருத்தியில் அந்த மக்களுக்கு எதிராக நாங்கள் மூக்கை நுழைக்காது நாங்கள் எங்களுடைய உரிமையினையும் அபிவிருத்தியினையும் வாழ்வாதாரத்தினையும் எங்களுடைய அடக்குமுறையாளர்களிடமிருந்து கோருவது எவ்வகையில் பிரதேசவாதமாகும்? இது உண்மையில் பிரதேச உணர்வாகும்.
பிரதேச உணர்வு என்பது அந்தப் பிரதேசம் தொடர்பான பற்றேயாகும். நாம் எல்லோருமே பற்றுக்கொண்டவர்கள்தான். பற்றையறுத்து வாழ்வது மிக உயர்ந்த துறவு நிலையாகும். நாங்கள் எவரும் துறவிகள் அல்ல சாதாரண மனிதர்களே. இந்த சாதாரண மனிதர்களின் பற்றானது தனது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதாவது குடும்பத்தில் பற்று, தனது சொந்தபந்தங்களில் பற்று, தனது ஊரில் பற்று, தனது மாவட்டத்தில் பற்று, தனது மாகாணத்தல் பற்று, தனது நாட்டில் பற்று என இந்தப் பற்று விரிவடைந்து செல்லும். இதனை இன்னொருவகையிலும் கூறலாம். அதாவது, ஒரு பிரதேச செயலக மட்ட விளையாட்டுப்போட்டியில் நமது ஊருக்கு ஆதரவைத் தெரிவிப்போம், மாவட்ட மட்டப்போட்டியில் நமது பிரதேச செயலகப் பிரிவுக்கு ஆதரவைத் தெரிவிப்போம், ஒரு மாகாணமட்டப் போட்டியில் நமது மாவட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிப்போம், ஒரு தேசியப் போட்டியில் நமது மாகாணத்துக்கு ஆதரவைத் தெரிவிப்போம், ஒரு சர்வதேசப் போட்டியில் நமது நாட்டுக்கு ஆதரவைத் தெரிவிப்போம்.
ஒரு தேசியப் போட்டியில் தனது மாகாணத்துக்கு ஆதரவைத் தெரிவிப்பவரை நாம் பிரதேசவாதி என்று கூறுவதில்லையே. அப்படியாயின் இந்த அரசியல் போட்டியில் நாங்கள் எங்களுடைய மாகாணத்தைப் பற்றிப் பேசும் போது ஏன் பிரதேசவாதியாக்கப்படுகின்றோம் என்றால் அரசியல் என்பது அதிகாரத்துவம் தொடர்பானது. அதிகாரம் என்பது மற்றவர்களை ஆளுகின்ற அல்லது அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு கருவியாகும். ஆளும் வர்க்கம் இந்தக் கருவியினை ஒரு போதும் இழந்து விடுவதற்கு விரும்பியது கிடையாது. அது தன்னைக் காப்பதற்கு அனைத்து வகையான எத்தனங்களையும் செய்யும், தன்னை நியாயப்படுத்தி மற்றவர்களை மோசமானவர்களாகச் சித்தரிக்கும், இதற்கு அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து விதமான நிறுவனங்களையும் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளும். பாடசாலைகள், மதவழிபாட்டிடங்கள், ஊடகங்கள், மற்றும் சமூகமட்ட நிறுவனங்கள் என இது விரிந்து செல்லும். உதாரணத்துக்கு சுயநிர்ணய உரிமை கோரிய தமிழர்கள் இனவாதிகளாக்கப்பட்டதும் போராளிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டதும் இந்தப் பின்னணியிலேயாகும். இதனை தனது அதிகாரத்தின் மூலம் சாதாரண சிங்கள மக்களின் மூளையில் பதியப் பண்ணி அவர்களையும் வெற்றி கொண்டு தனது அதிகாரத்தைத் தொடர்வதைக் காணலாம்.
இதே விடயத்தைத்தான் யாழ் மேலாதிக்கம் கிழக்குத் தமிழர்கள் மேல் மேற்கொள்கின்றது. அதாவது ஈழத் தமிழர்களிடத்தில் மேலாண்மை பெற்ற சமூகக்குழுமமாக இருக்கின்ற யாழ் உயர் வர்க்கம் தனது அதிகாரத்தினை இழக்க விரும்பவில்லை. எப்படி சிங்கள பேரினவாத அரசு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இலங்கைத் தேசியத்துக்கு எதிரானதாகவும் தமிழ்ப் போராளிகளை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்ததோ அதே முறையில் யாழ் மேலாதிக்கம் கிழக்கின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதாகவும் அந்த நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்களை பிரதேசவாதிகளாகவும் அல்லது தமிழ்த் தேசியத் துரோகிகளாகவும் சித்தரிக்கின்றது. இவ்வாறு சித்தரிப்பவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராகப் பேசுவதற்கு அருகதையற்றவர்களாகும்.
இவ்வகைப்பட்ட பேர்வழிகள் யாழ் மேலாதிக்கவாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. யாழ் மேலாதிக்க கருத்தியலால் உள்வாங்கப் பட்டு அதற்கேற்ப செயற்படும் கிழக்கைச் சேர்ந்த நபர்களும் இதில் உள்ளடங்குகின்றார்கள். கிழக்கைச் சேர்ந்தவர் என்பதற்காக அந்தக் கருத்தியலையும் அந்தக் கருத்தியலை முன்னெடுப்பவரையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகப் பார்க்க முடியாது. அதே போன்று யாழ் உயர்வர்க்கத்திலுள்ள ஒருவரோ அல்லது சாதாரண நபர் ஒருவரோ அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தைக் கொண்டிருப்பாரானால் அவர் யாழ்ப்பாணம் என்பதற்காக எங்கள் விமர்சனத்துக்குரிய நபருமல்ல. அவ்வாறு பார்ப்பதே பிரதேசவாதமாகும் அதாவது கருத்தியலை விட்டு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு தனிமனிதர்களை நோக்குவதும் பிரதேசவாதமாகும். எம்மைப் பொறுத்தவரை எந்தவொரு பிரதேசத்து மக்களையும் நாம் எதிரியாகவோ அல்லது துரோகிகளாகவோ பார்க்கவில்லை. நாங்கள் விமர்சனத்துக்குட்படுத்துவது யாழ் மேலாதிக்க கருத்தியலையே தவிர தனிப்பட்டவர்களை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படியாயின் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதனது பாராளுமன்ற உறுப்பினர்களையும்தானே விமர்சிக்கின்றீர்கள் என்ற கேள்வி எழலாம். யாழ்மேலாதிக்க கருத்தியலின் அரசியல் வடிவம் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கை தலைமையாகக் கொண்ட அரசியல் கட்சிகளும் என்பது எங்களுடைய நிலைப்பாடாகும். அதனால் எமது கருத்து மோதுகை இந்த அணியினருடன் பெருமளவுக்கு இடம் பெறுகின்றது. அதற்காக பிள்ளையானையோ கருணாவையோ அல்லது வியாழேந்திரனையோ நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றோம் அவர்கள் தொடர்பாக விமர்சனங்கள் இல்லை என்பதல்ல. அவர்கள் தவறுவிடுகின்ற போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது அவற்றைக் கூறிக்கொண்டுதான் வருகின்றோம். ஆனால் அவற்றை இந்த முகநூல் விமர்சகர்கள் கண்டுகொள்வது கிடையாது.
சீவகன்??
அடுத்து சீவகன் தனது சுயநலத்துக்காகத்தான் ‘அரங்கம்‘ பத்திரிகையை மட்டக்களப்பில் வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எனக்குத் தெரிந்தவரையில் அவ்வாறானதொரு சுயநலம் அவருக்குள்ளிருப்பதாக என்னால் அறியமுடியவில்லை. கிழக்கில் கிழக்கினுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு பத்திரிகைதானும் இல்லை என்ற ஆதங்கம் எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் கிழக்கின் பிரச்சினைகளை அந்தப் புரிதலுடன் வெளியிடுவதற்கு எந்தவொரு தமிழ்ப் பத்திரிகைகளுமே முன்வருவது கிடைகாது. அதனால் நாம் எந்தப் பத்திரிகைக்கும் எழுதுவதும் கிடையாது. இதனால் நமக்கான பத்திரிகை வேண்டும் என்பதிலும் அதில் எங்களுடைய பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்பதிலும் மிகத் தெளிவாக இருந்தோம். இந்த நிலையில்தான் சீவகன் ‘அரங்கம்‘ பத்திரிகையினை வெளிக்கொண்டு வந்தார். இதில் எங்களுடைய ஆக்கங்களை அனுப்பினோம் அவரும் அவற்றைப் பிரசுரித்தார். அவர் எங்களுடைய ஆக்கங்களை மட்டுமல்ல எங்கள் ஆக்கங்களுக்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களுடைய கருத்துக்களையும் பிரசுரிப்பதற்கு தயாராக இருப்பதாக பல முறை தனது முகநூல் பக்கங்களில் கூறிக்கொண்டுதான் வருகின்றார். ஆனால் அரங்கம் பிரசுரிக்கும் கட்டுரைகளுக்கு மாற்றான கருத்துக் கொண்ட எந்தவொரு கட்டுரைகளையுமே எவருமே எழுதுவது கிடையாது. இது எமது சமூகம் அரசியல் ரீதியாக எவ்வளவுக்கு காயடிக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறு இருப்பதை ஒரு ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டு உரையாடலைக் கொண்ட சமூகமாகப் பார்க்கமுடியாது. இதற்காக நாம் எல்லோருமே வெட்கப்பட வேண்டுமேயொழிய வெறுமனே சீவகனை குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது தீர்வாகாது.
யாழ்ப்பாணத்திலிருந்து முன்பு உதயன்,ஈழநாடு, ஈழநாதம், ஈழகேசரி போன்றவை தினசரிப் பத்திரிகைகளாக வெளிவந்தன. தற்போது உதயன், வலம்புரி போன்றன வெளிவருகின்றன. நாங்கள் எப்போதாவது இவற்றை யாழ்ப்பாணப் பிரதேசவாதப் பத்திரிகைகள் இதனை, வெளியிடுபவர்கள் தங்கள் சுயநலத்துக்காகத்தான் வெளியிடுகிறார்கள் எனக் குற்றம் சுமத்தியிருக்கின்றோமா? அந்தப் பத்திரிகைகள் வெளிவருவதற்கு அந்த மக்கள் வழங்கும் ஆதரவும் அந்த மக்களின் வாசிப்புப் பண்பாட்டையும் மிக வெகுவாகப் பாராட்டுகின்றோம். ஆனால் மட்டக்களப்பிலிருந்து ஒரே ஒரு பத்திரிகை அதுவும் வாசகர்களின் ஆதரவின்றி தனது அச்சுப் பிரதியை நிறுத்தி மின்னிதழாக வெளிவருகின்றது. அதைக் கூட வெளியிடக் கூடாது வெளியிடவேண்டுமென்றால் தங்கள் எஜமானர்களின் துதிபாடிக்கொண்டுதான் வெளியிடவேண்டும் என்ற நினைப்பில் மிக கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது எதனைப் புலப்படுத்துகின்றது என்றால் யாழ் மேலதிகாரத்துக்கு எதிராக அதல்லது அதன் முகவர்களுக்கு எதிராக எந்த ஒரு புல் அசைந்தாலும் அதனை வேருடன் பிடுங்கி அதிகாரத்தைக் காப்போம் என்பதைத்தான்.
அடுத்து எங்களுக்கு கிழக்கைப் பற்றித்தான் எழுதத் தெரியும் அதிலிருந்து வெளியே வந்து தேசியப் பிரச்சினைகளையும் உலக நடப்புகளையும் எழுதத் தெரியாது என்றும் விமர்சிக்கப்படுகின்றோம். வீடு பற்றியெரியும் போது பக்கத்து வீட்டுச் சண்டையை புதினம் பார்க்க எவராவது செல்வார்களா? கிழக்கில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றது, அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதுதான் எங்களது முதற்கடமை எனக் கொள்கின்றோம். தேசியப் பிரச்சினைகளையும் உலக நடப்புகளையும் எழுதுவதற்குப் பல பேர் இருக்கிறார்கள், அவற்றை வெளியிடுவதற்கும் பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் கிழக்கைப் பொறுத்தளவில் கிழக்கின் பிரச்சினைகளை அந்தப் புரிதலுடன் ஏழுதக்கூடியவர்களாக குறிப்பிட்ட சிலரே இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவதை வெளியிடக் கூடிய ஊடகமாக ‘அரங்கம்‘ மட்டுமே உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
இனப்பிரச்சினையின் மையம் கிழக்கு
அத்துடன் நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வின் கண்ணியும் கிழக்கில்த்தான் இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். கிழக்கின் பல்லினச் சூழலும் அந்தப் பல்லினங்களின் அரசியல், பொருளாதார சமூகப் பண்பாட்டு அபிலாசைகளுமே அந்தக் கண்ணியாகும். இந்தக் கண்ணியை மிக நுட்பமாக அவிழ்த்து விடுவதில்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு அடங்கியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு முதற்படியாகத்தான் பல்லின இணக்க அரசியல் நடவடிக்கைகளை வற்புறுத்துகின்றோம். கடந்தகால உசுப்பேற்றும் அரசியல் தனிமனிதர்களை வாழவைக்குமே தவிர சமூகத்தை வாழவைக்காது என்பதிலும் உறுதியாக இருந்து கொண்டுதான் எங்களுடைய கருத்துக்களை கிழக்குசார்ந்து தொடர்ச்சியாக முன்வைக்கின்றோம். நாங்கள் முன்வைக்கின்ற அரசியல் கிழக்கு மக்களுக்கானது மட்டுமல்ல கிழக்கு மக்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து சாதாரண மக்களுக்குமான அரசியலேயாகும்.
இன்று யாழ்ப்பாணத்திலுள்ள சில அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் எங்களுடைய கருத்தின் நியாயத் தன்மைகளை விளங்கிக் கொள்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கான அரசியல் சமன்பாடு கிழக்கிற்குப் பொருந்தாது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இதனை தமிழர்களுக்குத் தலைமையேற்றிருக்கின்றோம் எனக் கூறுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு கிழக்கிற்கான அரசியல் வியூகத்தை அமைப்பார்களாக இருந்தால் அவர்களுடன் கைகோர்த்து நடக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
எனவே முடிவாக என்னால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த அரசியல் கருத்துக்கு மாற்றான கருத்துடையவர்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன். அது என்னையும் என்னைப் போன்றவர்களையும் சிந்திக்கத் தூண்டும் என அவாவுறுகின்றேன். கட்டுரையை வாசித்து மாற்றுக்கருத்துக் கூறுவதைவிடுத்து நுனிப்புல் மேய்ந்து விட்டு முகநூலில் ‘எனக்கிருக்கின்ற அரசியல் விமர்சனச் சிந்தனைகளை முன்வைக்கின்றேன்‘ எனக்கூறி பொருத்தமற்ற வகையில் எழுதுபவர்கள் பற்றி முகநூலில் கருத்துக் கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களின் உலகம் அதற்குள்ளிருந்து அவர்கள் வெளியேறி வெளிவரட்டும் உரையாடத் தயாராக இருக்கின்றேன்.