— கருணாகரன் —
“தமிழ்த்தேசிய அரசியலையும் (எதிர்ப்பு அரசியலையும்) அரசாங்கத்துடனான இணக்க அரசியலையும் மறுத்துப் பேசி வருகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் முன்வைக்கும் அரசியல் என்ன? அந்த அரசியலின் பொருத்தப்பாடுகள், சாத்தியப்பாடுகள் என்ன? அதற்கான வழிமுறை என்ன? அதை யார் முன்னெடுப்பது? எப்படி அதை முன்னெடுப்பது? இந்தக் காலகட்டத்திற்கு அது இயலுமா? இப்பொழுது அந்த அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் இருக்கின்றனவாக?” என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகிறார்கள்.
முதலில் இது ஒரு முதற்கட்ட வெற்றி. ஏனென்றால் இவர்கள் மறு அரசியல் ஒன்றை – மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குள் சில ஐயப்பாடுகள் – குழப்பங்கள், நம்பிக்கையீனங்கள் உள்ளன. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலின் வெறுமையை இவர்கள் புரிந்துள்ளனர். அதாவது வெறும் அரச வெறுப்பு அரசியல் என்பது அந்த அரசியலை முன்னிறுத்தும் சிறியதொரு உயர் குழாத்தினரின் நலன்களையும் அந்தஸ்தையும் உயர்த்துகிறதே தவிர, பரந்து பட்ட தமிழ் மக்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வராது. அவர்களுக்கான தீர்வையோ அந்தஸ்தையோ நலன்களையோ இது நிறைவேற்றாது என்று புரிந்திருக்கிறது. இவர்கள் தங்களுடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் நேர்மையாக உள்ளனர். மக்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதுடன் காலத்தை மேலும் விரயம் செய்யவும் இவர்கள் விரும்பவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தோற்பதற்கு எந்த வகையான நியாயமும் இல்லை. அவசியமும் இல்லை என்பதிலும் தெளிவோடும் உறுதியோடும் உள்ளனர். இதுவரையான அனுபவம் இந்த மெய்ஞானத்தை உண்டாக்கியுள்ளது. ஆகவே இவர்களைப் பாராட்ட வேண்டும்.
இதைப்போல இணக்க அரசியலில் –தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றாக அல்லது அதை எதிர்த்துக் கொண்டு அரச சார்புடன் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் –நம்பிக்கை வைத்திருந்தோரிலும் பலர் அதனால் ஒரு எல்லைக்குமேல் எதையும் செய்ய முடியாது. அரசின் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு இழுபடமுடியுமே தவிர சுயாதீனமாக எதையும் செய்ய முடியாது. அதற்கான வெளி (Space) கிடைக்காது. மட்டுமல்ல, அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது. அரசுடன் இணைந்திருப்பதன் மூலம் சிறிய அளவிலான நன்மைகளை (நிதி ஒதுக்கீடு வேலை வாய்ப்பு போன்றவற்றில்) பெறலாம். அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்குள்தான் என்று புரிந்துள்ளனர். குறிப்பாகத் தன்னுடைய நலன்களை மையப்படுத்தி அரசு சிந்திக்குமே தவிர தனக்கு ஆதரவளிக்கிறார்களே என்று அது சிந்திக்கவில்லை. தன்னை ஆதரிக்கும் இந்தச் சக்திகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் இவை விரும்பவில்லை. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அங்கயனைத் தனியாகவும் டக்ளஸ் தேவானந்தாவைத் தனியாகவும் கையாள்கின்றன. வன்னியிலும் அப்படித்தான். கிழக்கில் பிள்ளையான் சந்திரகாந்தனைத் தனியாகவும் கருணா மற்றும் வியாழேந்திரனைத் தனித்தனியாகவும் கையாள்கிறது. முஸ்லிம் கட்சிகளையும் இப்படியே இவை தனித்தனியாகக் கையாண்டன.
இங்கே அரசு என்று குறிப்பிடுவது அந்தந்த ஆட்சியாளர்களையே குறிக்கிறது. அது ஐ.தே.கவாக இருந்தாலென்ன சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அதனோடு இணைந்த பொது ஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சியாக இருந்தால் என்ன? இரு தரப்பினரும் ஒரே அணுகுமுறையையே சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பாகக் கொண்டிருக்கின்றனர். இவர்களும் தங்களுடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் விசுவாசமாக உள்ளனர். சனங்களைக் குறித்து நேர்மையாகச் சிந்திக்கின்றனர். தமிழ் மக்களின் மெய்யான முன்னேற்றம், அவர்களுடைய சிறப்பான –உத்தரவாதப்படுத்தப்பட்ட எதிர்காலம் போன்றவற்றை உண்மையாகவே விரும்புகின்றனர்.
ஆகவே இந்த இரு அரசியலிலும் (எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல்) நம்பிக்கை இழந்த ஒரு தரப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. இது மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்கிறது. அந்த மாற்று அரசியல் என்ன? என்பதே இவர்களுடைய பிரச்சினை.
மாற்று அரசியலைப் பற்றி நாம் பேச முற்பட்ட போது சிலர் அதைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும் அவசர அவசரமாக தலைகளை மாற்றவும் பெயர்களை மாற்றவும் முயற்சித்தனர். அதாவது அடிப்படையே தவறு என்பதை விட்டு விட்டு போத்தலை மாற்றினால் சரி என்ற மாதிரிச் செயற்பட்டனர். இதன் விளைவே தமிழ் மக்கள் பேரவை, விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அதி தீவிர அரசியல் போன்றவை. இது ஒரு பொய்யான ஏற்பாடு. வெறும் கற்பிதம். எந்த வகையிலும் மாற்று அல்ல என்பதை இவை மிக விரைவிலேயே காண்பித்து விட்டன. முக்கியமாக அரச எதிர்ப்பு என்பதைச் சற்றுத் தீவிரமான நிலையில் மேற்கொள்வன என்பதற்கு அப்பால் எந்த விதமான செயற்பாட்டுப் பொறிமுறையையும் இவை உள்ளடக்கவில்லை. இதனால் இவையும் வெளிறிப்போயுள்ளன.
தமிழ் மக்களுக்கு இன்று தேவையாக இருப்பது செயற்பாட்டு அரசியலே. ஏனெனில் அது போரினாலும் ஒடுக்குமுறையினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பை ஈடுசெய்யக் கூடிய – ஒடுக்குமுறையை செயல்பூர்வமாக எதிர்க்கக் கூடிய –பிராந்திய, சர்வதேச சக்திகளைக் கையாளக் கூடிய, அவற்றை வெற்றிகரமாக அணுகக் கூடிய அரசியலே வேண்டும். அத்தகைய அரசியலை முன்னெடுக்கக் கூடிய அறிவும் ஆற்றலும் உள்ள தரப்புகளுமே வேண்டும்.
அதைக்குறித்தே நாம் சிந்திக்கிறோம். அதையே பேச விரும்புகிறோம். அதுவே தேவையானது. அதுவே பொருத்தமானது.
இதற்கு முதலில் அரசைக் கண்மூடித்தனமாக நம்புவதையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. பழக்கப்பட்ட வழிமுறைகளை விட (பழகிய பாதையை விட) வேறு புதியதொரு பாதையில் பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. அதுவும் இனவாதமும் ஒடுக்குமுறையும் எதிர்ப்புணர்வும் வலுவடைந்திருக்கும் ஒரு சூழலில். ஆனால் வெற்றியைப் பெற வேண்டுமானால், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்தக் கடினமான பாதையில் பயணிக்கவே வேண்டும். புதிய பாதையில் காலடியைப் பதிக்கவே வேண்டும்.
இதற்கு தொடக்கமாக அரசாங்கத்தை முழுதாக எதிர்க்காமலும் முழுதாக ஆதரிக்காமலும் செயற்படும் ஒரு நிலைப்பாடும் செயற்பாட்டு உத்தியும் வேண்டும். இதற்கு அரசு கடுமையான முகச் சுழிப்பைக் காட்டும். அதைப்போல தமிழ்த்தேசிய – அரச எதிர்ப்புத் தரப்பினரும் இந்தத் தரப்பை நம்ப முடியாது. இது அரசின் கையாட்கள், கூலிகள், விலங்கு மீன்கள், ஏன் துரோகிகள் என்று கூறி இதை எதிர்ப்பர். ஊடகங்களும் ஆய்வறிஞர்களாக இருப்போரும் கூட இதில் நம்பிக்கை வைப்பதற்குத் தயங்குவர். தமிழ்த்தரப்பில் பொதுவாகவே ஒரு பொதுக்குணம் உண்டு. முதலில் எந்தப் பெறுமதியான விசயங்களையும் அவர்கள் ஏற்று அங்கீகரிப்பதில்லை. காலம் பிந்தியே அதற்கான அங்கீகாரத்தைக் கொடுப்பர். கொடுப்பதோடு நிற்பதில்லை. அதைச் சுவீகரித்துக்கொள்ளவும் முயற்சிப்பர்.
இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. மாகாணசபை தொடக்கம் பெண்கள் சைக்கிள் ஓடுவது, பிற இடங்களில் குடியேறுவது, வெளியே சென்று உழைப்பது வரையில் ஏராளம். ஏன் பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தபோதே அது வேண்டாம் என்று நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்கள்தானே. இவற்றில் முதலில் ஈடுபட்டவர்களை நிராகரித்து,அவமதித்து, கேலி செய்து, வகைபாடியவர்களே பின்னர் இதை முழுதாக ஏற்றுக் கொண்டு அதில் முழுதாக ஈடுபட்டனர். இப்படியானதுதான் நம்டைய வரலாறு.
ஆகவே இப்பொழுது நாம் கூறுகின்றதை இவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வர் என்றில்லை. ஆனால் அதற்காக நாம் இதைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் இது சரியானது. அவசியமானது. மாற்றானது. புதியது. வெற்றியளிக்கக் கூடியது. இருந்தும் உடனடியாக இதற்கு மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்து விடும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல எந்தச் சரியான விசயங்களையும் தமிழ் மக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவோ அங்கீகரிக்கவோ மாட்டார்கள். காலப்போக்கிலேயே அவர்கள் அந்த வழிக்கு – அந்த இடத்துக்கு வந்து சேருவார்கள். ஆகவே அதுவரையில்
இதை – இந்த இடையூடாட்ட அரசியலை (முழுதாக அரச எதிர்ப்பும் இல்லாத – முழுதாக அரச ஆதரவும் இல்லாத வழிமுறையை) உடனடியாக மக்களிடம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. ஆனால் அதற்காகக் கை விடவும் முடியாது. சரியானதொன்றை எப்படிக் கை விட முடியும்? எனவே இதற்கு மிகப் பொறுமையோடு வேலை செய்ய வேண்டும். அதற்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான செயலணியையும் செயல் வழிமுறையையும் உருவாக்க வேண்டும். இருந்தும் மக்களின் அங்கீகாரம் உடனடியாகக் கிட்டவில்லை என்றால் எப்படி இந்தப் போட்டிச் சூழலின் தாக்குப் பிடித்து நின்று வேலை செய்வது? இன்றைய உலகப்போக்கே மாறியிருக்கும்போது இலட்சியவாதச் சிந்தனையோடு யார்தான் வருவார்கள்? என்று நீங்கள் கேட்கலாம்.
அடிமை நிலையை நீக்க வேண்டும் என்றால், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் எனில் அதற்கு அர்ப்பணித்து வேலை செய்தே ஆக வேண்டும். தவிர்க்க முடியாது. இதில் முக்கியமானது, அரசுக்கு நாம் எதிரானவர்களில்லை. அரசு அல்லது ஆட்சியாளர் மேற்கொள்ளும் அநீதிக்கும் பிழைகளுக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்குமே நாம் எதிரானர்கள். அதையே எதிர்க்கிறோம் என்பதை சிங்கள மக்களுக்கும் பிற சிங்களச் சமூகத்துக்கும் வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக ஆட்சியாளர்களையும் அரசையும் கடந்து சிங்கள மக்களிடம் தாற்பரியத்தை –உண்மைகளை – நியாயங்களை தெளிவாக்க வேண்டும். மக்கள் வேறு. அரசு வேறு என்ற அடிப்படையில் இதைச் செய்வது அவசியம். இதைச் சிங்கள மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆட்சியாளர்கள் லேசில் ஏற்றுக் கொள்ளவோ இடமளிக்கவோ மாட்டார்கள். அவர்கள் இதற்குத் தடைகளை ஏற்படுத்தி இடையூறுகளைச் செய்வர். இனவாதத்தைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இனவாதமே அவர்களுக்கு சோறு போடுகிறது. லாபங்களை அள்ளிக் குவிக்கிறது. எனவே இனவாதத்தைக் கடந்து சிங்கள மக்களிடம் தமிழ் அரசியல் செல்வதை,தமிழர்களின் நியாயம் உணரப்படுவதை அவர்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே நமக்குப்பெரும் இடைஞ்சலும் நெருக்கடியும் ஏற்பட்டே தீரும்.
(மாற்றுப் பாதை தொடரும்)