மட்டக்களப்பு புனித மிக்கேலின் நிறம் என்ன?

மட்டக்களப்பு புனித மிக்கேலின் நிறம் என்ன?

—சீவகன் பூபாலரட்ணம்—

“மட்டக்களப்பு புளியந்தீவில் அமைந்துள்ள புனித மிக்கேல் கல்லூரியின் நிறம் என்ன?” என்ற இந்தக் கேள்விக்கு பொதுவாக அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நீலமும் சிவப்பும் எந்று பதில் தரலாம். ஆம், நானும் கற்ற அந்தக் கல்லூரியின் கொடியின் நிறம் நீலமும் சிவப்புந்தான். 

விளையாட்டுப் போட்டிகளிலும் வேறு நிகழ்வுகளிலும் பள்ளியின் வெற்றிக்கொண்டாட்டங்களிலும் ஜொலித்த அந்த நிறங்களை அந்தக் கல்லூரியின் மாணவர்கள் மாத்திரமல்ல, மட்டக்களப்பு நகரச் சூழலில் வாழ்ந்தவர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆனால், நான் இங்கு பேசமுனையும் நிறம் பற்றிய கருத்து கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு முகநூல் பதிவில் இருந்து இது தோன்றியது. 

சுவாரசியமான கலந்துரையாடல் ஒன்றில் நானும், அதே பள்ளிக்கூடத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் பின்னர் கற்ற மற்றுமொரு ஊடகவியலாளரான நிராஜ் டேவிட்டும் ஒரே மாதிரி கருத்துக்கூறவே, அதனைப் பார்த்த ஒரு நண்பர், “நிராஜ் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன், சீவகன் தமிழ் தேசிய எதிர்ப்பாளர்” என்று எழுதியிருந்தார். நகைச்சுவையாகத்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. 

அதுவே என்னை இது குறித்துக் யோசிக்கச் செய்தது. அதற்கு நான் எழுதிய பதில் “நாங்கள் இருவரும் ஒரே வேரில் இருந்து வந்தவர்” என்பதாகும். அதன் பொருள் நாங்கள் இருவரும் புனித மிக்கேல் கல்லூரி என்னும் வேரில் இருந்து உருவானவர்கள் என்பதாகும். அதுதான் உண்மை. எம்மைப்போன்று கொள்கைகளில் ஒன்றுக்கொன்று முரணான, ஆனால், முரண்களுக்குள்ளும் இணங்கிச் செயற்படக்கூடிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்கியதுதான் அந்த புனித மிக்கேல் கல்லூரி.  

ஆகவே அந்தக் கல்லூரியின் நிறம் வெறுமனே நீலமும் சிவப்பும் மாத்திரமல்ல. அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது அந்தக் கல்லூரி. பலவிதமான நிறம்கொண்ட, போக்குக் கொண்ட, கொள்கை கொண்ட மாணவர்களை, அவர்களை அவர்களாகவே உருவாக்கியது அந்தக் கல்லூரி வளாகம். எங்கள் மனநிறங்கள் மாறுபடலாம், ஆனால், ஒரு தாய் பிள்ளைபோலவே நாம் ஒரே நிறமாக பிரதிபலிப்போம். 

எங்களின் நிறங்கள் பல. எங்களுக்குள் நிறப்பிரிகையும் உண்டு. ஆனால், அனைவரும் ஒன்றாக ஒரே நிறமாக(வெள்ளையாக) நாம் ஒளிர்வோம். அதுதான் புனித மிக்கேல் கல்லூரி. அதுதான் அந்தப் பள்ளிக்கூடத்தின் வெற்றி. ஆனால், அது இல்லாமல் அல்லது அந்த குணாதிசயத்தை பறிகொடுத்துவிட்டுத்தான் எமது சமூகம் இன்று அல்லாடுகின்றது. 

புனித மிக்கேல் கல்லூரியை உருவாக்கியது “ஜெசுவிட்” என்னும் கத்தோலிக்க மிஷன். ஜெசுவிட் மிஷன் குறித்துக்கூட பலவிதமான விமர்சனங்கள் உலக அரங்கில் உண்டு. ஆனால், அது உருவாக்கிய மட்டக்களப்பின் புனித மிக்கேல் கல்லூரி ஒரு சுபீட்சத்தின் ஒளி. சமாதானத்துக்கான வழிகாட்டி. 

விபுலானந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களின் வாழ்க்கையின் திருப்பு முனை புனித மிக்கேல் கல்லூரி. ஆனால், அவை குறித்து இன்னுமொரு தடவையில் பிறிதாகப் பேசலாம். அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சாதனை குறித்தும் தனியாகப் பேசவேண்டும்.  

ஆனால், அந்த வளாகம் எவ்வாறு அதன் ஏனைய சூழலில் இருந்து வேறுபட்டிருந்தது என்று பேசியாக வேண்டும். 

அது ஒரு கத்தோலிக்க பள்ளிக்கூடம். நான் படிக்கும் காலம்வரை அது அரசாங்கப் பாடசாலையாக இருந்த போதிலும் கத்தோலிக்க குருமாரின் அனுசரணையில் இயங்கியது. அங்கு, குறிப்பாக விளையாட்டுத்துறையில், (கூடைப்பந்து, கால்பந்தில்) கத்தோலிக்க குருமாரின் பங்களிப்பு அதிகம். அப்படியான விளையாட்டுக் குழுக்களில் நானும் விளையாடியிருக்கிறேன். அகில இலங்கை ரீதியிலான ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறேன். ஆனால், என்றும் நான் ஒரு “இந்து” என்பதற்காக இரண்டாம் பட்சமாக உணர்ந்ததில்லை. கல்வியிலும் அப்படித்தான். 

எமது பள்ளிக்கூடத்தில் இந்துவான, கிறிஸ்தவரான தமிழர்கள் இருந்திருக்கிறார்கள், முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள், அவ்வளவு ஏன், சிங்களப் பிரிவும் இருந்திருக்கிறது. அதில் பௌத்தர்களும் கற்றிருக்கிறார்கள். ஆனால், கல்லூரி அணிகளில் நாங்கள் ஒன்றாக விளையாடியிருக்கிறோம்.  

இந்து மாணவர்களும் அந்த கத்தோலிக்க பாடசாலையின் அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். பௌத்த மாணவரும் தலைமை தாங்கியுள்ளனர். ஆனால், நாங்கள் ஓரணி மாத்திரந்தான்.  

இனவாதத்துக்கு எதிராக விளையாடினோம் 

கொழும்புக்கு நாம் விளையாடச் சென்ற சில சமயங்களில் எங்களுக்கு எதிராக இனவாதம் போட்டிகளில் தலைவிரித்தாடியதுண்டு. “சில கால்பந்துச் சுற்றுப்போட்டிகளில் அல்லது ஆட்டங்களில் எங்கள் அணியின் 11 பேருக்கு எதிராக 14 பேர் விளையாடிய சந்தர்ப்பமும் உண்டு” என்று கூறப்படுவதுண்டு. அதாவது தெற்கு அணிகளுக்கு ஆதரவாக இனவாத நடுவர்களும் களத்தில் இருப்பார்கள். ஆகவே, நாங்கள் அந்த பதின்னான்கு பேரையும் (இனவாதத்தையும்) எதிர்த்து ஆடவேண்டிய சூழலை சந்திருக்கின்றோம். ஆனால், எங்கள் மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. நாங்கள் புனித மிக்கேல் கல்லூரி அணி அவ்வளவுதான். அதனால்தான், இனவாதமும் எங்களுக்கு எதிராக ஆடிய பல போட்டிகளில்கூட நாம் வெற்றிபெற்றிருக்கிறோம். பல சாதனைகளை இவை அனைத்தையும் தாண்டி நிகழ்த்தியிருக்கிறோம். ஒவ்வொரு புனித மிக்கேல் மாணவனும் இதற்கு உதாரணங்கள் பலவற்றைக்  கூறுவார்கள். அவ்வளவு ஏன், வேறு மாவட்ட மாணவர்களும் எங்கள் சாதனை பேசுவார்கள். 

இதனைத்தான் தமிழ்ச்சமூகம் தவற விட்டுவிட்டது என்று நாம் கருதுகின்றோம். புனித மிக்கேல் கல்லூரி அனைவரையும் உள்வாங்கிய ஒரு நிறுவனமாக திகழ்ந்தது. ஆனால், எமது தமிழ்ச் சமூகம் ஒவ்வொருவராக பிரித்து வெளியேற்றி வருகின்றது. அதனால், பின்னடைகிறது.  

புனித மிக்கேல் கல்லூரியின் இந்தக் குணாதிசயம் அதன் வளாகத்தை கடந்து அதன் சூழலிலும் பிரதிபலித்தது. மட்டக்களப்பு நகரச் சூழல் அதற்கு ஒரு உதாரணம். அவ்வளவு ஏன், இந்தச் சூழ்நிலை எமக்கு அருகில் இருந்த மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் இருந்தது. 

முரண்களின் மத்தியிலும் அனைவரையும் உள்வாங்கிய ஒரு பன்முகத்தன்மை அது. அது இருந்தாலே,  அடிப்படையில் முதல் வெற்றியை அதுவே பெற்றுத்தந்துவிடும். இன்று பிரச்சினையாகக் கருதப்படும் பல விடயங்கள் அப்போது தானாகவே காணாமல் போய்விடும். 

தமிழருக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும்.. 

ஜாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும்  பிரிந்து சிரமப்படும் தமிழருக்கு மாத்திரமல்ல, சிறுபான்மையை உள்வாங்காமல் தவிர்க்கும் பெரும்பான்மை அரசியலுக்கும் இது பொருந்தும்.  

ஒட்டுமொத்த இலங்கையின் அபிவிருத்தியும் கூட இதை அடிப்படையாகக் கொண்டதே. அனைத்து இனங்களையும் உள்ளீர்க்காமால் அல்லது உள்வாங்காமல், புறக்கணித்து வைத்துக்கொண்டு, எந்த ஒரு அரசாங்கத்தாலும் முழுமையான சமூக, பொருளாதார முன்னேற்றத்தைக் காணமுடியாது.  

சிங்கப்பூரின் நிறுவனர் லீ குவான் யூ (Lee Kuan Yew) இலங்கையைப் பார்த்துக் கூறியதும் அதுதான். “உங்களிடம் சுதந்திரத்துக்கு முன்னரே, இரு பல்கலைக்கழகங்கள், இரு துறைமுகங்கள், நல்ல ஸ்டேர்லிங் பவுண் கையிருப்பு இருந்தது. நீங்கள் எங்கேயோ போவீர்கள் என்று நினைத்தேன், ஆனால், இனவாதத்தால் நீங்கள் அழிந்துபோனீர்கள்” என்ற பொருள்பட அவர் கூறியிருக்கிறார். சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு அவரும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றார். இனரீதியாகப் பிரிந்து, பிற இனங்களை தனிமைப்படுத்தி, பிரித்து நாம் இழந்ததை, சிங்கப்பூர் பெற்றிருக்கிறது.

முன்னர் சொன்னதுபோல தமிழர்களுக்கும் இது பொருந்தும். தமிழர்களின் ஒவ்வொரு கூறுகளாக பிரிக்க முனைந்தார்கள், ஒவ்வொரு பிரிவாக உள்வாங்குவதற்கு பதிலாக இனமாக, பிரதேசமாக, சாதியாக பிரித்து வைத்துப் பார்த்தார்கள். இன்று பிளவுண்டு போய் இருக்கிறார்கள். இன்று மூலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், “ஒன்றாகக் கூடுங்கள் சரியாகிவிடும்” என்று நோயின் சமிக்ஞைகளுக்கு மருந்து செய்ய முனைகிறார்கள். நோயின் மூலத்தை, வேரைத் தவறவிட்டுவிட்டார்கள்.

இன்றைய இலங்கையின் பள்ளிக்கூடங்களுக்கும் இது ஒரு பாடம். பன்முகத்தைன்மை கொண்ட, மதம், இனம், சாதி கடந்த பள்ளிக்கூடங்களை உருவாக்குங்கள் அதுவே எதிர்கால இலங்கையை வாழவைக்கும். இல்லாமல், இன ரீதியான, மத ரீதியான பள்ளிக்கூடங்கள் எந்த விதமான பலனையும் தரப்போவதில்லை. இதனை உணரும் போதுதான் எதிர்காலம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

நானும் நிராஜும் ஒரு வகையில் எதிர் எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால், அதனைக் கடந்து, புனித மிக்கேல் கல்லூரி தந்த ஒரு “சகோதர வாஞ்சை” எங்களை இணைத்து வைத்திருக்கும். அதற்கு புனித மிக்கேல் தேவதை அருள் புரியட்டும். (கிறிஸ்தவரான நிராஜும், இந்துவான நானும் புனித மிக்கேல் தேவைதையை நம்பலாமா என்பதை நாங்களே பார்த்துக்கொள்கிரோம்). ஆனால், இலங்கையிலும், தமிழர் மத்தியிலும் அனைவரையும் உண்மையாக உள்வாங்கும் ஒற்றுமையை வளர்க்க முனைவோம். அனைவரின் குரல்களுக்கும் செவிமடுப்போம். அதனைவிடுத்து சும்மா, ‘தமிழ் கட்சிகள் இணையுங்கள், இலங்கை மக்கள் இணையுங்கள்’ என்ற கோஷங்கள் எல்லாம் வீணரின் வார்த்தையாகத்தான் முடியும்.