— சு. சிவரெத்தினம் —
நீ
காத்திரியாம் பூச்சி
உன்
இறக்கைகளின் அழகை ரசிக்கிறேன்.
மருதமுனைக் கைத்தறியில்
பாவோடி நெய்த ஆடையாய் இருக்கிறது
உனது இறக்கை.
ஓவியர் குலராஜ்
கைகளால் செய்த
பெற்றிக் வடிவமாகவும் தெரிகிறது
உனது இறக்கை.
உயரப் பறந்து
வானவில்லில்
உரசிக் கொண்டு வந்த வண்ணமாக ஜொலிக்கிறது
உனது இறக்கை.
உன்
இறக்கைகளின் அழகை ரசிக்கிறேன்.
வெள்ளாவி வைத்து
வெளுத்தாலும்
மங்காதா?
உன் ஆடை
கொழுத்தும்
கோடை வெயிலுக்கு
வெளுறாதா?
உன் ஆடை
கார்த்திகை மாதம் போனால்
காணாமல் போய்விடும்
காத்திரிகையாம்
பூச்சி நீ.
மழையிலும் வெயிலிலும்
கோடை வரட்சியிலும்
கொடும் புயலிலும்
அசையாது நிற்கும்
ஆலமரம் நான்.
எனது நிழலில்
ஆயிரம் யாத்திரிகர்
காலாறிப் போவர்.
எனது கனியால்
ஆயிரம் பட்சிகள்
பசியாறிப் போகும்.
எனது மூச்சிக் காற்று
உலகுக்கு நல்லது.
நீ
வாழ்வதும்
எனது காற்றால்
ஆயினும்
உனது மொழியில்
நான் ஒரு மரம்.