— சு. சிவரெத்தினம் —
எல்லோரும் வலையை
கரைகளில்தான் வீசுகிறார்கள்
ஒரு அடி கூட
ஆழத்தில் இறங்குவதில்லை
மையத்து மீன்களுக்கு
இப்போ
மவுசு இல்லையாம்.
பொட்டியானும்
வெள்ளியாப்போடியும்
மீசைக்காரப் பனையானும்
இப்போ
நல்ல விலை.
இந்தப் பொட்டியான்கள்
வலைக்காரனுக்கு
குத்திக் கரணமடித்து
பாடுமிரட்டிக்காட்டி
தண்ணிக்குள்ளால் லைற்றும் அடித்து
எத்தனை வித்தை காட்டுகின்றன.
அத்தனையும் கலை நயம்
என்ற சொல் கேட்க
அவைகளுக்கு
இன்னும் உசார் ஏறும்.
நைலோன் வலை
டிஸ்கோ வலை
சுருக்கு வலை என்று
எந்த வலையும் இல்லாமல்
மொழிவலையால் பிடிபடுகிறது
இந்த மீன்கள்.
பொட்டியான்
பொரியலுக்கு நல்லதென்றும்
வெள்ளியாப் போடி
மணப்புக்கு நல்லதென்றும்
மொழிவலை வீசி
உமலை நிரப்புகிறார்கள்.
எச்சில் கையைத்தானும்
வலை வீசும் கரையில் கழுவாதவர்கள்.
கையை நக்கிச் சுவைத்து
விரல்களைச் சூப்பி மகிழ்ந்து
மருத்துவ விளக்கம் அளிக்கிறார்கள்.
ஆழத்தில் முதலைகளும் விரால்களும்
கரையில் பலவித வலைகள்
வலையில் பட்ட மறுகணம்
மடிகின்றன பொட்டியான்கள்
வாழ்கிறார்கள்
வலைக்காரர்கள்.