“பாடும் நிலா” எஸ். பி. பாலசுப்ரமணியம்  காலமானார்…

“பாடும் நிலா” எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் காலமானார். 

கொரொனா தொற்று ஏற்பட்டு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இருந்த போதிலும் மீண்டும் உடல்நிலை மோசமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து பிபிசி தமிழ் ஊடகம் தனது செய்திக்குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளது. 

“இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது