இசைக்குத் தணியாத இதயத்து நோய்!

இசைக்குத் தணியாத இதயத்து நோய்!

மூத்த இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவரின்  குறிப்பு. 

 (பாடகர் பாலசுப்ரமணியம் குறித்த நினைவலைகளைப் பகிர்கிறார் எஸ் எம் வரதராஜன். இவர், இலங்கையின் மூன்று தொலைக்காட்சி நிலையங்களில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்தவர். தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்கள் பங்குபற்றிய மெகா மேடை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்கென நெறிப்படுத்தித் தயாரித்தவர்)

 — எஸ் எம் வரதராஜன், நியூசீலாந்து —  

புகழ்பெற்ற பாடகர் மொகமட் ராஃபி காலமானபோது, இந்தியா சஞ்சிகை ஒன்று ‘ இதய நோய்க்கு இசை இரசனை இல்லை’ எனத்  தலைப்பிட்டதாம். 

இது மறைந்த பின்னணிப்பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் பொருந்தும் என ஓடிய என் மன அலைகள் இவை! 

இதயங்கள்  இணைந்து குதூகலமாய் மகிழ   

இதமான பாடல்களை இசைத்த எம் நிலவே! 

இயற்கை எனும் இளைய கன்னி தந்த 

உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல,  

உலகின் பல இலட்சம் குடும்பங்களில் நிலவிய காற்றின் வெளியிடைத் தலைவனாய்  

நின்றவர் நீர்!  

எங்கெங்கே நாம் தானோ  

அங்கங்கே எம் அன்பாய்  

பாடும் நிலாவாய் நிலவியவர் எம் நீர்!  

இளமை எனும் பூங்காற்றாய்  

எம் வயதையெல்லாம்  

நனைய வைத்த உம் இசையை  

நேசித்த இதயங்கள்  

பல லட்சம் கோடி!  

‘மலரே மௌனமா‘  எனத் தாம் தெரிந்த இசையிலெல்லாம் உம் சுகம் வேண்டிப் பாடியோர்தம்  

காற்றுவெளி கடந்த  

இதயத்தின் கோவில் நீர்!  

‘இதயத்தின் நோய்‘  என்றுதான் கடைசியாகச் சொன்னார்களாம்!  

ஆயின்,  உலகில்,  

அந்த நோய்க்கு மட்டும் தான்  

 உம் இசையை  

இரசிக்கத் தெரியல்லையே ஐயா! 

தெரியவில்லையா ஐயோ!  

அன்புள்ள பாலு சேர், 

நான்குக்கு மேற்பட்ட உங்களது இசை நிகழ்ச்சிகளை பல் கமரா ஒளிப்பதிவிற்காக அல்லது நேரடிக்காக நான் நெறிப்படுத்தியதால், பாடல்களில் ஒலிக்கும் குரல்கள்,  இசைக்கும் வாத்தியங்களை வரிக்கு வரியாய் நான் குறித்துக்கொள்ள உங்கள் அனுமதியுடன் உங்கள் ஒத்திகையைப் பயன்படுத்துவதே என் வழக்கம். (அது என் வழமையான முறைமை). 

 அப்படி நீங்கள் ஒத்திகை பார்த்தபோது (எவரும் அனுமதிக்கப்படாதது) உங்கள் இசைக் குழுவினருடன் ஒவ்வொரு பாடல்களின் போதும் நீங்கள் சொல்லும் அப்பாடல்களின் கதைகள், இசையமைப்பாளர்களின் உத்திகள், திறமைகள்,  சுவையான திருட்டுகள் போன்ற நகைச்சுவை மிக்க கதைகள், உரையாடல்கள் எனக்கு ஓர் இசை அகராதி போலவும், பாடல்கள் மற்றும் இசைச் செயலமர்வு போலவும் இருந்தன.  

வாசகர்களுடன் சிலவற்றை நான் பகிரலாம் என நினைக்கிறேன். 

ரஜினிகாந்த் நடித்த பிரபலமான படத்தில் வந்த அமோக வரவேற்புப் பெற்ற ஒரு பாடலை மேடையில் ஒத்திகை பார்த்தபோது, பாலுசார்  ஒரு கதை சொன்னார். 

ஒலிப்பதிவுக்கு முதல் தாம் அதனைப் பாடப்பாட தமக்கு கே. வி மகாதேவன் இசையமைத்த ஒரு பாடலின் மெட்டு வந்து குழப்பிக் கொண்டிருந்ததாம். தான் இசையமைப்பாளரிடம் ஏதாவது ‘மெலடியை’  இடையில் சேர்க்கச் சொல்லிக் கேட்டாராம். அதற்குப் பின்னர் அவர் இடையில் ஆமோனியத் தொனியைச் சேர்த்தாராம். 

‘நந்தா நீ என் நிலா‘ பாடலைப் பாடி ஒத்திகை பார்க்கும் போது வாத்தியக் கலைஞர் ஒருவரைப் பார்த்துச் சொன்னார்,  

‘அடே, தயவுசெய்து இந்தப்பாடலை ஒருபோதும் ‘ரீ மிக்ஸ்’ செஞ்சிடாத’  என்றார். அத்துடன் இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தியின் சிறப்புகளை அவர்களிடம் பகிர்ந்தார். 

இன்னோர் இசையமைப்பாளருடைய பாடலை ஒத்திகை பார்க்கும்போது தாளவாத்தியக்காரர் எடுத்தவுடன் இசைத்த ஒலியின் சுருதிகள் வித்தியாசம். அவர் இசையமைப்பாளர் கொடுத்த ‘நோட்ஸுக்கு’ அதன்படியே உடனடியாக தமது வாசிப்பை மாற்றினாலும், அந்த மெட்டினைப் பிடிக்க சற்று நேரம் எடுத்தது என்றார்.  

இசை வாத்தியக்கலைஞர்கள் போல தாளவாத்தியக் கலைஞர்களும் மிக முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு சுவையாக இக்கதையைச் சொல்லி விளக்கினார். 

உங்கள் நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவை விடவும் நான் பெரிதும் விரும்பியது நீங்கள் மேடைநிகழ்ச்சிகளுக்காகச் செய்த ஒத்திகைகளையே என்பதே உண்மை!  

மேடை இசை நிகழ்ச்சிகளின் அமைப்பாளர்களுடன் பழகியவன் என்ற வகையில் உங்களது மனிதாபிமானத்தை அறிந்தவன் நான். அதில் ஒரு சம்பவத்தைப் பகிர்தல் தகும்.  

ஒருமுறை மேடை நிகழ்ச்சிகளுக்குப் புதியவர் ஒருவர் கொழும்பு அரங்கு ஒன்றில் உங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த நிகழ்வுக்கு   சில நாட்களுக்கு முன்னர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருந்தது.  

பிரமாண்டமான அரங்கின் மேடையின் பின்புறமாக வந்த நீங்கள் மேடைக்கான நுழைவாயிற் திரையை அகற்றி அரங்கத்தைப் பார்த்துவிட்டு அமைப்பாளரிடம், ‘ அவருக்கு ‘டிக்கற் விற்பனை  சரியாகப் போனதா? ‘ என்று அவரது  நிதி நிலைமையை விசாரித்தறிந்ததை நேரில் கண்டவன் நான். 

அமரர்கள் ராம்தாஸ் அண்ணர், வி பி கணேசன் ஆகியோருடன் ஒருநாள் ஒன்றாக விருந்து உண்டு களித்த போது நீங்கள்  வலியுறுத்திச் சொன்னதை இன்றும் நான் பகிர்வதுண்டு! 

‘எவ்வளவுதான் வேலைப்பழுவாக இருந்தாலும், உங்கள் பிள்ளைகள்.. குறிப்பாக அவர்களின் பாடசாலை நாட்களில் மிகவும் அக்கறையாக இருங்கள்!‘ 

அது உங்களது அன்பான அறிவுறுத்தல் என்று எடுத்துக்கொண்டேன். அத்துடன் சேர்த்து நீங்கள் சொன்ன உங்கள் மனந்திறந்த அனுபவத்தை இங்கு பகிர்தல் இன்று அறம் அல்ல என்று நினைக்கிறேன்.   

உங்கள் பிள்ளை “ஷரண்” சக்தி டிவியில் நான் தயாரித்த ‘இளையகானம்’ தொடர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆண்டுகள் பல பணியாற்றி என் உள்ளம் கவர்ந்த நண்பரானார்.  உங்களது அன்பும் பணிவும் மிக்க சின்ன நிலா அவர். சக்தியின் முதலாம் ஆண்டு இசை நிகழ்ச்சியை நான் நெறிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பில் அவரே தொகுப்பாளரானமையினின்று எம் நட்பு “இளையகானம்’ ஊடாகத் தொடர்ந்தது. 

சக்தியின் ஆரம்ப நேரடி ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சிக்கு,  குடும்பத்துடன் நீங்கள் வந்தபோது, நிகழ்ச்சியின் இடையில் உங்கள் புதல்வன் ஷரண், இளையகானத்தில் பங்குபற்றிப் பாடும் பிள்ளைகளைத் திருத்தும் காட்சியை நீங்கள் பார்க்கவேண்டுமென,  நாங்கள் விரும்பி, அந்த நேரடியொளியின் இடையில் ஓடிக் காட்டியபோது, சரண் உங்களைப் பார்த்து நளினமுற்று நெளிய..;  

“ அடே, நீ இப்படியெல்லாம் பாடுவீயாடா, இதெல்லாம் உனக்குத் தெரியுமாடா?’ என்று நீங்கள் கேட்க,  

உங்கள் சகோதரி ஷைலஜா, ‘எங்களுக்கும் சொல்லித்தாயேன்’ என்றோ என்னவோ அவரைக் கடிக்க;  

அன்று நாம் பார்த்த “ஷரண்” எங்கள் மனதில் இன்று வருகிறார். 

அதே “ஷரண்” இன்னும் எங்கள் மத்தியில் இருந்து, உங்களை எமக்கு நினைவாய்த்தரவேண்டும் என்பது, எனது அல்ல பலரதும் விருப்பம்! 

இளையகானம் நிகழ்ச்சியில் ஷரண் பேசும் தமிழை நீங்கள் பாராட்டினீர்கள். 

அப்படிப் பாராட்டியபோது, ஷரண் ‘ தயாரிப்பாளர் ஒரு சொல் தப்பானாலும் விடமாட்டார் கட் கட்’  என்று என்னைக் காட்டிச் சொன்னபோது, ‘ இலங்கைக்கு உங்களிடம் வந்தப்புறம் ..அவன் இப்போ நல்ல தமிழ் பேசுறான்’ என்று  நீங்கள் சொன்நீர்கள்.  அந்தப் பெருமை “தமிழ் மொழியின்  சக்தி”க்குரியதாக நான் அப்போது எண்ணி மகிழ்ந்தேன்! 

ஷரனின் தொடர்புதான்  உங்களை மேலும் என்னுடன் இணைத்தது என்பேன்!  

சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஓர் இசை நிகழ்ச்சி தொடர்பாகப் பேசியபோது..  எனது சுகம்விசாரித்த நீங்கள் ’ஷரனையும் சேர்த்து நியூசீலாந்துக்கு வரலாம்; ஓரு புரொஜெக்ற் பண்ணலாம்’ என அன்பாக உரிமையோடு ஆலோசனை ஒன்றைச் சொன்னது என் செவிகளில் இன்றும் ஒலிக்கின்றது! 

எனக்கு பாலு சேர் பழக்கமானது அமரர், நடிகர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், அமரர் ராம்தாஸ் அண்ணர் மூலமாகவே.  

இலங்கையில் ராம்தாஸ் அண்ணர், ஹமீத் அண்ணர் ஆகியோருடன் நல்ல நட்பையும் உறவையும் நீண்டகாலமாக வைத்திருந்தார் பாலுசேர். ராம்தாஸ் அண்ணரின் பெற்றோருடைய அறுபதாவது திருமண விழாவுக்கும், ஹமீத் அண்ணரின் புதல்வன் ஷிராஜின் திருமண நிகழ்விற்கும் தம்பதியாக வந்து கலந்துகொண்டார். 

இலங்கையின் இனிய கலையுலக நாட்கள் அவை! அவை எம்மை விட்டு மெல்ல மெல்ல விலகிச் செல்லுகின்றன என்பதே உண்மை! 

எங்கள் மூச்சில் எம் கனவில் எங்கள் நினைவில் என்றும் நிலவாய் வலம் வரும் அணையாவிளக்காய் உலவுவீர்கள் சேர்! 

( படம் : சக்தி Tv சக்திFm  

மேடை மெகா இசை நிகழ்ச்சிக்கு SPB அவர்கள் 2001 இல் குடும்பத்துடன் வந்தபோது எடுத்த படம். என்னுடன் நிற்பது என் மகன் கிசாலன், அவன் அப்போது சக்தி FM இன் “அரும்புகள் குழந்தைகள்” நிகழ்ச்சியின் குழந்தை அறிவிப்பாளராக இருந்தபோது எடுத்தது)