—பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா—
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
ஏற்றமிகு ஏழுவாங்கரையில்,
கிராமத்து வனப்புகளோடும்
நகரத்து வசதிகளோடும்
இறுமாந்து நிற்பது எனது ஊர்-களுவாஞ்சிக்குடி!
கிராமத்துச் செழிப்போடு அழகெல்லாம் கொட்டிக்கிடக்கும் அந்த ஊர்
நகரத்து எழிலோடு இப்போது பரபரப்பாய் பொலிந்து நிற்கிறது.
கிழக்கே எக்கணமும் ஓசை எழுப்பும் கடல்.
பக்கத்தில் மரமுந்திரிகைப் பழமரங்கள், பசுஞ்சோலை.
மேற்கே, எந்நாளும் வற்றாது ஓடுகின்ற சிற்றாறு.
செந்நெல் விளைந்து சிரம் தாழ்ந்த பயிர்களால்
பச்சைநிறப் பாய் விரித்தது போல
வானம் பார்த்த பூமிகளாய்,
நீண்டுகிடக்கும் வயல் நிலங்கள்.
வற்றாத சிற்றாறும்,வயல்களும்,வனப்பான குளங்களும்
சுற்றிவர அமைந்திருக்க
மத்தியிலே கோயில்கொண்டு
காவலாய் ஊரினைக் காத்துநிற்கிறாள் கண்ணகித்தாய்!
வயலுக்கு வளம் சேர்க்க மாரிகாலத்தில்
வதவதவென்று நிரம்பும் குளங்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல –
கயலோடு பலமீன்கள்
தழுவி விளையாடும் நான்கு குளங்கள்!
விரால், சள்ளல், பனையான், கெழுத்தி, சுங்கான் என்றெல்லாம்
வகைவகையான மீன்கள் அங்கே துள்ளியெழுந்து சுழியோடும்.
தண்ணீரை மறைத்தபடி தாமரை இலைகள் மிதக்கும்.
தண்டுகள் நீண்டு வானை முட்ட நினைக்கும்,
தடுக்க நினைத்து தாமரை மொட்டுக்கள் முகிழ்க்கும்
அடுக்கிய இதழ்கள் சிவப்பும் வெள்ளையுமாய் அலர்ந்து சிரிக்கும்.
வட்டிகுளத்தில் விரால் மீன்கள் எட்டியெட்டிப் பாயும்.
ஒட்டியும், ஓராவும் தூண்டிலுக்குத் தப்பி சுழியோடித் திரியும்
கரிய நாரைகள் பெரிய குளத்தில் கால்கடுக்க நிற்கும்
உரிய மீன்களைக் கண்டதும் கவ்வியே ஓங்கிப் பறக்கும்
குளத்தின் நடுவே ஆங்காங்கே நீருக்கு மேலால்
கொப்புக்களோடு நெட்டி நிற்கும் பட்டமரக் குற்றிகளில்
கொக்குக்கள் குந்திக்கொண்டிருக்கும் அழகு
இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
அங்குமிங்கும் பார்த்தபடி ஒரு கணம் பதிந்து,
அப்படியே ஒன்றாகத் துள்ளியெழுந்து,
அந்த வெள்ளைக் கொக்குக்கள் பறந்து வட்டமிடும்போது
அந்தரத்தில் வெள்ளைச் சீலைகள் ஆடுவது போலிருக்கும்.
பெரியகுளம் மாரிகாலத்தில் ஆங்காங்கே
பிள்ளைகளின் நீச்சல்த் தடாகங்களாய் மாறும்.
அம்மன் கோயிலடியில் ஒன்று,
அப்பால் தென்பக்கம், ஏறுமருதயடியில் இன்னொன்று.
குளத்தில், தெளிந்த நீர் நிறைந்து நிற்கும் இடங்களில்
நேரம் போவது தெரியாமல் சிறுவர்கள்
நீந்திவிளையாடுவார்கள்.
அவர்களைத் தேடிவரும் பெற்றோர்களில் சிலர்,
கையில் பிரம்புடன் வந்து பிள்ளைகளைக்
கரையேறுமாறு அச்சுறுத்துவார்கள்.
குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அடிக்குப்பயந்து
குளக்கரையின் எதிர்த்திசையில் வெளியேறி
குதித்துத் துள்ளி ஓடி மறைவார்கள்.
இடுப்பளவு நீரில் குளத்தில் நின்று சிலர்
கரப்புக்குத்தி மீன்பிடிப்பார்கள்.
மாற்றி மாற்றி அவர்கள் கரப்புக்குத்தும் ஓசை
” சக்…புக் சக்..புக் ” என்று
காற்றோடு கலந்து வரும்.
ஒருவரொடோருவர் அவர்களில் சிலர்
உரையாடும் வார்த்தைகள்
கரையில் நிற்பவர்களின் காதுகளுக்கும் எட்டும்.
நிரம்பி வடியும் நீர்கொண்ட அந்தப் பெரியகுளம்
கோடை காலத்தில் வரண்டு கிடக்கும்,
வயலுக்கும், ஆற்றுக்கும் செல்லும் குறுக்குப்பாதையாய்
மக்களுக்குப் பயன் கொடுக்கும்.
காய்ந்து வெடித்துக் கிடக்கும் களிநிலத்தில்
ஆனை நெருஞ்சி ஆங்காங்கே முளைத்திருக்கும்.
செழித்துப் பருத்து அவை காய்த்துக் குலுங்கும்.
நிலத்தில் விழுந்து காய்ந்துகிடக்கும் அவற்றின் முட்கள்
சிலவேளை செருப்பையும் ஊடறுத்துக் காலில் தைக்கும்
பாடசாலைகளில் விளையாட்டு மைதானம் இல்லாதிருந்த காலத்தில்
வருடாவருடம் இல்ல விளையாட்டுப் போட்டிகளும் ,
பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும்
நடைபெறும் மைதானமாகி,
நீர்வற்றி வரண்டு கிடக்கும் அந்தப் பெரியகுளம்
மக்கள் வெள்ளத்தில் நிறைந்து கிடக்கும்.
வண்ணான் குளம்!
ஒருகாலத்தில் உடுப்புக் கழுவுவதற்குச் சலவைத்
தொழிலாளர்கள் பயன்படுத்தியதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து சலவைத் தொழிலாளர்கள் அந்தக் குளத்தைப் பயன்படுத்தியதாக
எனக்குத் தெரியவில்லை.
அழுக்குத் தண்ணீர் அங்கே தேங்கிநிற்கும்.
அல்லியும், ஆம்பலும் பூத்துக்கிடக்கும்
இப்போது,
தூர்ந்து போன குளம், பக்கத்து நிலத்தோடு
சேர்ந்து போனது.
எஞ்சிய பகுதி தப்புத் தண்ணீருடன் இப்போது
வடிவம் மாறிய வண்ணான் குளமாக
வற்றிக்கிடக்கிறது.
பொதுச் சந்தையின் கழிவுகளும்
‘பொறுக்கவொண்ணார்” கழிவுகளும்
சேறும் சகதியுமாய் நாறும் சாக்கடையாய்
மாறிக்கிடக்கிறது.
அண்மையில் – சிலவருடங்களுக்கு முன்னர்
வண்ணான் குளத்தில் சில பகுதிகளை
வளைத்துப்போடச் சிலர் நினைத்தனர்
எண்ணமெல்லாம் இதுவாகவே இருந்ததனால்
கண்ணைமூடும் நேரம் கனவிலும்கூட அவர்களுக்கு
வண்ணான் குளம் வந்து தொலைத்ததாம்!
அடுத்தது கரைச்சைக் குளம்.
எப்போதும் அதிலே உப்புத்தண்ணீர்தான் என்று
அப்பப்பா சொல்லுவது
இப்போதும் நினைவில் நிற்கிறது.
வட்டிக்குளம், கரைச்சைக்குளம், பெரியகுளம் ஆகிய குளங்கள் ஒருபுறமும்
வயல் மறுபுறமும் அமைந்திருக்க
இடையே நீண்டு வளைந்து கிடக்கிறது குளக்கட்டு.
மனிதரின் முதுகிலே பள்ளமாகத் தெரியும் முதுகெலும்புப் பகுதியைப்போல
குளக்கட்டின் மத்தியிலே செல்கிறது ஓர் ஒற்றையடிப் பாதை.
பாதைக்கு இருபுறமும் பச்சைப் பசேலென்ற பல்வகைச் செடிகள்
முட்களைக் கொண்டவை சில.
முகந்தால் நறுமணம் தருபவை சில.
தொட்டால் உடலில் அரிப்பைத் தருபவை சில.
தொடாமலே கண்களில் நீர்வரச் செய்பவை சில
செடிகளின் நடுவே சிறியனவும் பெரியனவுமாய்
செங்கல் நிறத்திலே பாம்புப் புற்றுக்கள்.
குளக்கட்டின் சரிவுகளில் இருமருங்கும்
செழித்துப் பருத்து சடைத்து ஆங்காங்கே
வளைந்து வளர்ந்து நிற்கும் மருதை மரங்கள்.
தண்ணென்று வீசும் காற்றோடு இசைந்து
தாலாட்டுப்பாடும் கிளைகளைச் சுமந்து
சாய்ந்த கோபுரங்களாய் அவை நிற்கும் சரிந்து.
சிறுவர்கள் அவற்றின் கிளைகளில் ஏறி அமர்ந்திருப்பார்கள்
பருத்த கிளைகளில் சிலர் சாய்ந்து படுத்திருப்பார்கள்
இன்னும் சிலர் ஏறிக்கொண்டிருப்பார்கள்
ஏறப் பயந்தவர்கள் மரத்தடியில் நின்று
ஏறியோரையும், ஏறுவோரையும்
ஏக்கத்தோடு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்
அந்த மருதை மரங்களிலே ஏறி இறங்கி விளையாடும் போது உண்டான
பத்துப்பன்னிரண்டு வயது நினைவுகள் தருகின்ற இன்ப உணர்வுகள்
வார்த்தைகளால் வெளிப்படுத்தி மாளாது.
குளக்கட்டின் ஓரங்களின் மண்ணரிப்புக் காப்பாக நிற்கின்ற அந்த
மருதை மரங்களின் உச்சாணிக் கிளைகளிலே தூக்கணங் குருவிக்கூடுகள்!
அவை தொங்கும் பாங்கே தனி அழகு.
அந்த தூக்கணங்குருவிக் கூடுகளின் உள்ளேயிருக்கும் குஞ்சுகளுக்கு,
உணவு கொண்டுவந்த தாய்க்குருவி கூட்டின் விளிம்பிலே
ஒய்யாரமாக அமர்ந்திருந்து கழுத்தை உள்ளே நீட்டி
ஒவ்வொருகுஞ்சுக்கும் உணவூட்டும் அழகைப்
பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
காற்றில் மரக்கிளைகள் அசையும்போது
காற்றோடு கைகோர்த்து அந்தக் கூடுகளும் அசைந்து ஆடும்
அது ஏணையில் குழந்தையைத் தாலாட்டுவது போல இருக்கும்.
கிளைகளின் நுனிகளில்,
மழையில் நனையாமல்,வெயிலின் வெப்பம் படாமல்
குஞ்சுகள் பாதுகாப்பாகத் தங்கக்கூடியதாக அந்தக்
கூடுகளைக் கட்டுவதற்கு
இந்தக்குருவிகளுக்குச் சொல்லிக்கொடுத்தது யார்?
எந்தப் பலகலைக்கழகத்தில் இந்தப் பொறியியலை
அந்தக் குருவிகள் கற்றுத் தேர்ந்தன?
இயற்கையின் படைப்பில்தான் எத்தனை வியப்புக்கள்!
குளக்கட்டின் இரு புறமும் சிறு பற்றைகள் அடர்ந்திருக்கும்.
மலங்கழிக்க வருவோர்க்கு அவை மறைவிடமாய் அமைந்திருக்கும்.
குளக்கட்டுச் சரிவுகளில் கூட்டம் கூட்டமாக
மலந்தின்ன வரும் ஆமைகள் நகர்ந்து செல்லும்.
துர்நாற்றம் வராமல் ஒவ்வொரு நாளும் அவை
துப்பரவுசெய்து சூழலைக் காக்கும்.
ஒருகாலத்தில்,
பாலாமை இறைச்சி தின்னும் பழக்கம்
“றாளாமி” ஒருத்தனால் சில இளைஞரிடம் பரவியது
அதனால்,
பாலாமைக்குப் பஞ்சம் ஏற்பட்டது.
அப்போது,
பாலாமையின் தேவையை இந்தப்
பீயாமைகள் பூர்த்திசெய்ததாக
நாலாபக்கமும் கதையொன்று பரவியது,
அந்தக் கதையில் உண்மையும் நிலவியது!
(நினைவுகள் தொடரும்)