சொல்லத் துணிந்தேன் – 29

சொல்லத் துணிந்தேன் – 29

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

05.08.2020 அன்று நடந்து முடிந்த இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் (தமிழரசுக் கட்சிக்குக்) கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் தமிழர் பிரதிநிதித்துவம் அற்றுப்போன  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியலில்  வேட்பாளராகப்  போட்டியிட்ட கலையரசனுக்கு) வழங்கப்பட்டிருப்பதை மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏதோ தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுதான் இவ்வாறு செயற்பட்டிருக்கின்றது போலத்தான் தோன்றும்.  

ஆனால் உண்மை அதுவல்ல. ‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’.  அவ்வாறு செய்யாவிட்டால் இனிமேல் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்க முடியாது என்ற களநிலையிலும்  சரிந்து போயுள்ள தமது வாக்கு வங்கியைத் தூக்கி நிறுத்த வேண்டிய தேர்தல் தேவைகளுக்குமாகவே தேசியப் பட்டியல்  ஆசனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலையரசனுக்கு வழங்கியுள்ளது.  

யாழ் மேலாதிக்கத் தமிழர் அரசியல் தலைமைகளுக்கு  உண்மையிலேயே அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள்  மீது  ஆத்மார்த்தமான அக்கறை இருக்குமானால் 1994 இல் இது போன்றதொரு தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோன  சந்தர்ப்பத்தில்  அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்  தமிழர் ஒருவருக்கல்லவா  வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அப்போது அவ்வாசனம் கொழும்பைச் சேர்ந்த  அமரர் நீலன் திருச்செல்வத்திற்கே  வழங்கப்பட்டது.  

இந்த இடத்தில் 1994 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பதிவிடவேண்டியுள்ளது.  

1994 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இருந்த பாராளுமன்றம், அப்போது பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  பண்டாரநாயக்கவினால் கலைக்கப்பட்டு தேர்தல் எதிர்நோக்கப்பட்ட காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தனித்தனியே  போட்டியிடத் தீர்மானங்களை மேற்கொண்டன. விகிதாசாரத்  தேர்தல் முறையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குரிய ஒரேயொரு  பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பறி போய்விடக் கூடிய ஆபத்தை உணர்ந்து,  அதைத் தடுத்து, மாற்று வழியைத் தேடும் வகையில் அம்பாறை  மாவட்டத்தமிழர் மகா சங்கத்தின் மாவட்ட  இணைப்பாளர் ஆகிய நானும் பொதுச்  செயலாளராகிய து.இராமகிருஷ்ணனும்  இணைந்து அம்பாறை  மாவட்டத்தமிழர் வாழ் பிரதேசமெங்கும் சென்று அழைப்புக் கொடுத்து கல்முனை ஆர்.கே.எம். பாடசாலை  மண்டபத்தில் முக்கிய ஊர்ப் பிரமுகர்கள் சுமார் 300 பேர் கலந்து  கொண்ட கூட்டம் ஒன்றினைக் கூட்டினோம். அக்கூட்டத்தில்  பின்வரும்  தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்பெற்றது.  

அம்பாறை மாவட்டத்தில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுச் சின்னத்தின்  கீழ் போட்டியிட வேண்டும்அவ்வாறு சாத்தியப்படவில்லையானால் தனித்தனியே போட்டியிடுவதைத் தவிர்த்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் நிறுத்தும் சுயேச்சைக்  குழுவுக்கு வழிவிட்டு ஆதரவு  தரவேண்டும்“. 

 இத்தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்காக எனது தலைமையில்  பதினெட்டுப்பேர் அடங்கிய நடவடிக்கைக் குழு ஒன்றும்  தெரிவானது. 

இக் குழு கொழும்பு சென்று அனைத்துத் தமிழ் அரசியல்  கட்சிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது.  ஈபிஆர்எல்எப்,  டெலோ, புளட்,  ஈபிடிபி ஆகிய கட்சிகள் யாவும்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன்  சின்னத்தின்  கீழ் ஒன்றிணைந்து போட்டியிடச் சம்மதித்தன. அமரர் குமார்  பொன்னம்பலம் தலைமையிலான அகில  இலங்கைத் தமிழ்க்  காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவளித்தது. அப்போது தமிழரசுக்கட்சி இயங்கவில்லை. உறங்கு  நிலையிலிருந்தது.  தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் அதற்குச் சம்மதியாது, அம்பாறை மாவட்டத் தமிழர் மகா  சங்கத்தின் மாற்று  ஆலோசனைகளையும்  நியாயமான கோரிக்கைகளையும்  அசட்டை  செய்துவிட்டு, யாழ்ப்பாண  மாவட்டத்தைச்  சேர்ந்த மாவை சேனாதிராசாவைத் தலைமை வேட்பாளராக நிறுத்தி அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டது. இது உண்மையிலேயே  கடைந்தெடுத்த யாழ் மேலாதிக்க  அரசியலாகும்  என்று கருதிய  அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் அம்பாறை  மாவட்டத்  தமிழர்களின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவும்  யாழ் மேலாதிக்க அரசியலை எதிர்த்தும் எனது தலைமையில் மாவை சேனாதிராசாவுக்கு எதிராகச் சுயேச்சைக் குழுவை நிறுத்தியது.

இதுதான் அன்று நடந்தது. அன்று அம்பாறை மாவட்டத்தமிழர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பறி போவதற்குத் தமிழர்  விடுதலைக் கூட்டணியும் தனிப்பட்ட  முறையில் பதவி ஆசை  பிடித்த மாவை சேனாதிராசாவுமே காரணம். 

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை முதலில் தனக்காக்கிக்கொள்ளவே  தமிழரசுக் கட்சிப் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் விரும்பி இருந்தார் எனவும், ஆனால் அவ்வாசனத்தைத்  திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குகதாசன் என்பவருக்கு வழங்குவதற்கு மனம் கொண்டிருந்த இரா சம்பந்தன்  அவர்கள் துரைராசசிங்கத்தின்  விருப்பத்தைத் தட்டிக் கழித்து  விட்டார்  என்றே  தமிழரசுக் கட்சி வட்டாரங்களிலிருந்து  அறியக்  கிடக்கிறது.  

அதேவேளை மாவை சேனாதிராசாவுக்கும் அவ்வாசனத்தின் மீது கண்ணிருந்தது. மாவை சேனாதிராசா தான் ஆரம்பத்தில்  ஒரு பெண்ணுக்கு அவ்வாசனம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதனைத் திருமதி சசிகலா ரவிராஜ் அவர்களுக்கு  வழங்க  உத்தேசித்து இருந்ததாகவும் பின்னர் மற்றவர்களின்  வற்புறுத்தலுக்காக அப்பதவியைத் தான் ஏற்கச்  சம்மதித்ததாகவும் ஆனால் பொதுச்செயலாளர் அதனைக் கலையரசனுக்கு வழங்கி, அதற்குரிய  கடிதத்தையும் தேர்தல்  ஆணையத்துக்கு அனுப்பி விட்டதால் அது தனக்குக்  கிடைக்காது என்றறிந்ததும் இப்போது “சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்”எனும் தோரணையில் கூறி அரசியல் நகைச்சுவை நாடகமொன்றினை அரங்கேற்றியுள்ளார்.  

இத்தேசியப் பட்டியல் ஆசனம் தனக்குக் கிடைப்பதைத்  தட்டிக்கழித்துக்  குகதாசனுக்கு வழங்கவிருந்த சம்பந்தன்  மற்றும் இவ்வாசனத்தின் மீது கண் வைத்திருந்த மாவை சேனாதிராசா இருவருக்கும் “செய்து காட்டுகிறேன் வேலை பார்” எனுமாற்போல் துரைராசசிங்கம் தற்றுணிவுடன் செயற்பட்டுக் கலையரசனுக்கு அதனை வழங்கும் கடிதத்தைத் தேர்தல்  ஆணையகத்துக்கு அனுப்பிய விடயத்திற்காக இப்போது  துரைராசசிங்கத்துக்கு  ஒரு ‘சபாஷ்’ போடலாம்  போல்  தோன்றுகிறது. 

தேசிய பட்டியல் ஆசன விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் பொதுச்செயலாளர் துரைராசசிங்கத்துக்கும் இடையே எழுந்த பிரச்சனை காரணமாகச் சம்பந்தன் அவர்கள் குகதாசனை வசதியாக மறந்து விட்டார். இடையில் கலையரசனுக்கு ‘அதிர்ஷ்டம்’  அடித்திருக்கிறது.  தேசியப் பட்டியலுக்கான வேட்புமனுவில் பெயர்  முன்மொழியப்பட்டிருந்த கொழும்பில் வதியும் சட்டத்தரணி கே வி தவராசா ‘அம்போ’வெனக் கைவிடப்பட்டதால் அவரும் மனக்குறையில் உள்ளார்.  குகதாசனும் தேர்தலுக்கு  முன்னர்  தீர்மானித்தபடி தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்படவில்லை என மனத்தாங்கலிலுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளட், டெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்களான முறையே சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் தேசியப்பட்டியல் ஆசனம்  அம்பாறைக்கு வழங்கப்பட்டதை எதிர்க்கவில்லையாயினும் இவ்வாசனம் மாவை சேனாதிராசாவிற்கு  வழங்கப்படுவதில்  உடன்பாட்டு நிலையிலேயே இருந்தனர்.

இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) தலைமைப் பீடத்தைப் பொறுத்தவரை  கலையரசன் ‘வேண்டாப் பொண்டாட்டி’தான். இதனைத் தெரிந்து கொண்டுதான் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு தான் அனுப்பிய பதவி விலகல்  கடிதத்துடன் பிறிதாக இணைத்து அனுப்பியுள்ள கடிதத்தின் முடிவிலே கலையரசனை முழுப் பதவிக்காலத்திற்கும் (ஐந்து வருட காலத்திற்கும்) பதவி வகிக்க அனுமதிக்கும் படியும் அதற்கிடையில் அவருடைய பதவிக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் தமிழரசுக்கட்சியினரை மிகவும் மன்றாட்டமாக வேண்டியுள்ளார்.  

இத்தகைய  யாழ் மேலாதிக்க அரசியல் போக்கைக் கிழக்குத் தமிழர்கள்  குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இனிவரும்  காலங்களிலாவது புரிந்து கொள்ள வேண்டும்.