— அழகு.குணசீலன் —
கலையும் கனவுகள்: நேற்று ஈழம்!இன்று பலஸ்தீனம்!! நாளை..?
காலக்கண்ணாடியின் முன் நான். அது என் முதுமையின் நிழலை காட்டுகிறது. ஆனாலும் என் அன்றைய இளமையை நினைவூட்டுகிறது. இளமைக்கால அரசியலை முதுமையின் அனுபவங்களுடன் திரும்பிப்பார்க்க தூண்டுகிறது.
கடந்த கால நினைவலைகள், அவற்றின் நிழல்களின் விம்பங்களாக..
1970, 1980களில் சுதந்திரன் பத்திரிகையில், சுடர் சஞ்சிகை யில் பலஸ்தீனம் பற்றி வந்த கட்டுரைகள், குறிப்புகள் எல்லாம் விம்பங்களாக என்முன்.
அது அரங்கத்தில் மட்டுமன்றி பட்டி தொட்டி எல்லாம் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றி அந்த மக்களின் பற்றுறுதி பற்றி பேசப்பட்டகாலம்.
கடந்த வாரம் மத்திய கிழக்கில் ஒரு ஒப்பந்தம் பிரசவித்திருக்கிறது.
அதற்காகவே இந்த இரைமீட்டலூடாக ஒரு பலஸ்தீனப் பயணம்.
இலண்டனில் வாழ்ந்த ஈரோஸ் ஸ்தாபகர் இரத்தினசபாபதியின் ஏற்பாட்டில் எமது இளைஞர்கள் பலஸ்தீன விடுதலை இயக்க பயிற்சிகளைப் பெற்றகாலம்
பின்னர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசபடைகளுக்கு பயிற்சி வழங்கிய இஸ்ரேல், சம காலத்தில் அதேமுகாமில் இன்னொரு மூலையில் புலிகளுக்கும் பயிற்சி வழங்கிய வரலாறும், புலிகள் பயிற்சி பெற்றதும் மற்றொரு சந்தர்ப்ப வாதம்.
அப்போதெல்லாம் விடுதலைக்கு முரணான செயற்பாடெல்லாம் இராஜதந்திரம் என நியாயப்படுத்தப்பட்டது.
வங்காளதேசத்தின் பிரசவ மருத்துவர் இந்திராகாந்தி
தமிழ்போராளிகளுக்கு பயிற்சியும் பணமும் வழங்கியதுடன் பலஸ்தீனத்திற்கும் இந்திய வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கினார்.
அப்போது உலகப் பந்து இரண்டாகப் பிரிந்து, அரசியல் விளையாடிய போது, வல்லமையற்ற மூன்றாம் தரப்பொன்று தம்மை அணிசேராதவர்கள் என்றழைத்தார்கள்.
சோவியத்முகாம், அமெரிக்க முகாம்களுக்கிடையில் இவர்கள்.
பலஸ்தீனபோராட்டம் சோவியத் முகாமாலும், அணிசேரா அணியாலும் அங்கிகரிக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பையும் அதற்கான அமெரிக்க ஆதரவையும் இத்தரப்புக்கள் நிராகரித்தன. இந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா ஒரு வரையறைக்குள் ஆதரித்தது.
இலங்கையும் இந்தியாவும் அணிசேரா அணியில் முக்கியநாடுகளாக இருந்தும், இந்திராகாந்தியும் சிறிமாவும் நல்ல நண்பிகளாக இருந்தும் இந்திரா இதை ஒரு தார்மீகக் கடமையாகக்கருதினார்.
பாலஸ்தீன சமாதான முயற்சியில் தோல்விகண்ட நோர்வே அமெரிக்கத் தரகராக இலங்கைக்கு வந்தது. அதிலும் தோல்வியே பதில். ஆனால் அங்கு பலஸ்தீனம் தோற்கவில்லை.
இங்கு தோற்றது நோர்வேமட்டும் அல்ல ஈழமும்தான் என்று நான் எழுதிய காலம் ஒன்று இருந்தது.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய,
புலிகள் பலஸ்தீன ஹாமாஷ் அமைப்புடன் பயங்கரவாதப் பட்டியலில்.
பாலஸ்தீன அமைப்புக்கள் மேற்கில் பல தாக்குதல்களை மேற்கொண்டு பட்டியலில் சேர, புலிகளோ மேற்கிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது செயற்பட்டு தமது விசுவாசத்தை காட்டிய போதும், இதைத் தவிர்க்க முடியவில்லை.
ஈழப்போராட்டம் தொடர்பான பேட்டி ஒன்றில் நாங்கள் உங்களைப்போல் சகோதர இயக்கப் படுகொலைகளைச் செய்வதில்லை என பி.எல்.ஓ. முக்கியஸ்தர் அப்பாஸ் கூறியது நினைவிலிருக்கிறது.
புலிகள் பெற்றிருந்த ஆயுத, பண பலம் பி.எல்.ஓவிற்கு கிடைக்கவில்லை. மக்களை மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக ஏற்றுமதி செய்து மக்கள் அற்ற மண்ணுக்காக அவர்கள் போராடவில்லை.
முடிவு : நாங்கள் தோற்றுப்போக பலஸ்தீனம் அனைத்து அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து போராடுகின்றது.
வலது, இடது முகாம்கள் அற்றுப்போய் முதலாளித்துவ முதலீடும், ஏற்றுமதி இறக்குமதியும்
இலாபமும் மானிட விடுதலையை விஞ்சி நிற்கின்றன.
அனைத்து விடுதலைப் போராட்டங்களினதும் கழுத்து மேலாதிக்க சக்திகளால் நெரிக்கப்பட்டு, விடுதலை விலை பேசப்படுகிறது.
அன்று ஈழக்கனவைக் கலைத்தது போன்று
இன்று பலஸ்தீன கனவிலும்
கைவைக்கும் திட்டம் ஆரம்பம்.
கடந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் கையொப்பமிட்ட நாடுகள் ஐக்கிய அரபு ஏமிரேட்டும், பஜ்ரயினும்.
இது பலஸ்தீனர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனை பலஸ்தீன தலைவர் மஹ்முட் அப்பாஸ் நச்சு உடன்பாடு என்று கூறி தனது ஆத்திரத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த இரு அரபு நாடுகளும் தமக்கு முதுகில் குத்தி விட்டதாக பாலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.
சொந்த அராபிய சகோதரர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டோம் என்பது அவர்களின் குமுறல்.
இதில் மரத்தால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதை என்ன வென்றால் சவுதிஅரேபியாவும், எகிப்தும் உடன்பாட்டை பாராட்டியிருப்பதாகும்.
மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்தநிலைக்கு எங்களின் ஒற்றுமை இன்மை தான் காரணம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள,
இஸ்ரேலின் காலில் விழுவதைத்தவிர வேறுவழி இல்லை என ஒப்பந்த அரபுத் தரப்பு கருதுகின்றது.
மறு பக்கத்தில் இந்த உடன்பாடு பெற்றுத்தரக்கூடிய பொருளாதார நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பும் திருப்தியாக உள்ளனர்.
இனிமேல் பலஸ்தீனம் என்பது எங்கள் அரசியல் டயரியில் இடம்பெறாது என்று அபுதாபியில் ஒரு முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.
ஆக, அரபு நாடுகள் பலஸ்தீன கனவில் இருந்து விலகத்தீர்மானித்து விட்டன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் தமது நலன்சார்ந்து காய்களை நகர்த்துகின்றன.
பலஸ்தீனத்தின் குரல் வளையில் இஸ்ரேல் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் கரங்கள்.
அரபு நாடுகள் தங்கள் கரங்களால் பலஸ்தீன கண்களை குத்துகின்றன.
நேற்று ஈழம்!
இன்று பலஸ்தீனம்!
கனவுகள் கலைகின்றன.
நாளை… ? காலமே பதில்.