யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

— சீவகன் பூபாலரட்ணம் —

‘நானே செய்வதா, அல்லது நாலுபேரை வைத்துச் செய்வதா?, அந்த நாலுபேரும் நமது சகோதரர்களாக இருந்தாலும் நானே நேரடியாக செய்வதுபோல வருமா?, ஏற்கனவே நாலு விடயத்தை (சரி, இரண்டு விடயம் என்று வைத்துக்கொள்வோமே…) நான் நாலு பேர் இல்லாமல் நேரடியாக, நேர்த்தியாக, வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறேந்தானே…, நாலுபேர் சேர்ந்தா அது நடந்திருக்குமா?’ 

இங்கு இதுதான் இப்போது பிரச்சினை. இது ஒன்றும் எனது சொந்தப் பிரச்சினை அல்ல. பொதுப்பிரச்சினை, நாட்டுப் பிரச்சினை. அதாவது அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தேவையா, இல்லையா என்ற பிரச்சினையின் அடிநாதம் இதுதான். 

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியில் இல்லாமல், நாடாளுமன்றமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அலகாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை பெரிதாக வந்திராது. ஆனால், நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி ஒருவருக்கு கொடுத்துவிட்டு, நாடாளுமன்றம் உட்பட அரசாங்கத்தின் ஏனைய அலகுகள் எந்தக் காரியத்தையும் இலகுவில் செய்து முடிக்காமல், இழுத்தடிக்கும் ஒருவகை நிலையை பலகால யதார்த்தமாக காண்பித்ததால்தான், “தானே அனைத்தையும் நேரடியாகச் செய்தால் பிரச்சினை எதுவும் இல்லைதானே” என்ற கருத்து ஜனாதிபதியின் மனதில் வந்திருக்கிறது. 

அதாவது அதிகாரம் யாரிடம் இருந்தால் இலகுவாக நிர்வகிக்கலாம் என்ற கேள்வி ஒருபுறமும், அதிகாரம் பகிரப்படுதல் நல்லதா அல்லது ஒருவரே அனைத்தையும் செய்வது நடைமுறையில் பிரயோசனமா என்ற கேள்வி ஒருபுறமும் எழுவதால் பதில் காணமுடியாத நிலை இங்கு உருவாகியிருக்கிறது. அதுதான் இங்கு விவாதமும். 

ஜனாதிபதியைப் பொறுத்தவரை மற்றவர்களின் தலையீடு எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலையில், முன்னர் இருந்த இழுபறிகளை, பின்னடைவுகளை தவிர்த்து ஒரு போரை அவர் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். மற்றவர்களின் தலையீடுகளை நிராகரித்து, ஒரு இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தி, அவர் ஒரு கிட்டத்தட்ட ஒரு இராணுவத்தளபதிபோல வெற்றிபெற்றிருக்கிறார்.  

அடுத்ததாக, கொரொனா நோய்ப்பரம்பல் பெரும் வல்லரசுகளையும், வளம்மிக்க செல்வந்த நாடுகளையும் நிர்மூலம் செய்தவேளையில் குட்டி நாடான இலங்கையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கை போலச் செயற்பட்டு, அதுவும் தனது இராணுவத்தின் உதவியுடன், கொரொனாவை இதுவரை வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார்.  

இவை இரண்டும், அவர் அதிகார பகிர்தலுக்கோ, பரவலாக்கலுக்கோ பெரிதும் இடம்கொடுக்காமல், தானே தனது இராணுவத்தின் தளபதிபோல,  அவசர நிலையை பயன்படுத்தி, நேரடியாக செயற்பட்டு கண்ட வெற்றிகள்.  

இதனால்தான், குட்டி நாடான இலங்கையில் பல படிநிலைகளில் அதிகாரத்தை பிரித்து வைத்து, சிவப்பு நாடாமுறை மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகள், இழுபறிகள் ஆகியற்றின் மூலம் விடயங்கள் இழுத்தடிக்கப்படாமல் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்து (20வது திருத்தம்) அதிகாரத்தை தனது கரத்தில் நேரடியாக எடுத்துக்கொள்ள அவர் நினைக்கிறார். 

ஆனால், இதற்கும் மறு பக்கம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதாவது, ஆட்சியில் முடியாட்சியும் நல்லதுதான் குடியாட்சியும் நல்லதுதான், ஆனால், ஆளுவது யார் என்பதுதான் பிரச்சினை. ஆளுபவர் நல்லவராக இருந்தால் எந்த ஆட்சியும் சரியாக இருக்கும். “தான் நல்லவர்” என்று ஜனாதிபதி நினைக்கலாம். ஆனால், அவரது கட்சியில், கூட்டணியில், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அப்படி முழுமையாக நம்புவார்களா என்பதுதான் பிரச்சினை. அதற்குத்தானே ஜனநாயகம் அவசியமானது. அதிகாரங்கள் பரவலாக்கலும் பகிரப்படுதலும் வந்தன. 

அடுத்ததாக, ஒருவரிடன் அதிகாரம் வந்துவிட்டால் ஜனநாயகத்திலும் ஒரு சர்வாதிகாரம் என்ற நிலைமை ஏற்பட்டு விடுமே என்ற மக்களின் அச்சமும் நியாயமானதுதானே. இந்த இரு தரப்பு எதிரெதிர் விருப்பங்களின் முரண்தான் இது.  

பிரச்சினை இதுதான்: 

சரி இனி பிரச்சினைக்கு வருவோம். எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுவிட்டபோதிலும், பொதுமன்றுக்கு வந்த தருணத்தில்தான் 20வதாவது திருத்தம், ஆளும் சிறிலங்கா பொதுஜனபெரமுனவுக்கு உள்ளேயும் அதன் தலைமையிலான கூட்டணியின் தலைவர்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகளிடமும் மற்றும் ஊடகங்களினதும் எதிர்ப்பலையை சந்திக்கத் தொடங்கியது.  

ஜனாதிபதித்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு கிடைத்த பெருவெற்றிகள் இந்தத் திருத்தம் பிரச்சினை இல்லாமல், எதிர்ப்பில்லாமல் வந்துவிடும் என்று பலரையும்  நினைக்கச் செய்திருந்தாலும் இப்போது நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. 

இதன் காரணமாகத்தான் இந்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஒரு குழுவை அமைக்கும் நிலை ஏற்பட்டது. 

சிங்கள தேசியவாதிகளுக்கும் கவலை: 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களும் சிங்கள தேசியவாதிகளுமான  சிலரும், இந்த 20வது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு எதிராக பேசமுற்பட்டமை ஜனாதிபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

சிங்கள தேசியவாதிகள் இந்தத் திருத்தம் குறித்து குறிப்பாக என்ன சொல்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியாவிட்டாலும், “இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் நாடாளுமன்றம் செல்லலாம்” என்று வரக்கூடிய சரத்தை அவர்கள் விரும்பவில்லை என்றே கருதப்படுகின்றது. இதன் காரணமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர் மாத்திரமல்ல, மேற்கத்தைய நாடுகளின் ஆதரவாளர்களான புலம்பெயர் சிங்களவர்களும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்துவிடுவார்களோ என்பது அவர்களின் கவலையாக இருக்கலாம். 

ஆளும் கட்சியில் இருக்கும் சில கூட்டணி தலைவர்களுக்கு இரட்டைக்குடியுரிமை பெற்ற பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்துக்கு திரும்ப வருவதுகூட அவ்வளவு விருப்பமில்லை. உண்மையில் பொதுஜன பெரமுனவின் திரைமறைவுத்தலைவர் அவர்தான். அந்தக் கட்சியின் இந்த விரைவான மீட்சியின் சூத்திரதாரியும் அவர்தான். இது பலருக்கு இங்கு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவதை அவர்கள் விரும்பவில்லை. அதுமாத்திரமல்ல, கடந்த தடவை இந்த சகோதரர்களின் ஆட்சி நடந்தபோது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு அடுத்ததாக அதிகாரங்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து செயற்பட்டவரும் இவரே. 

உருவாக்கத்தில் வெளிப்படைத்தன்மை? 

ஜனாதிபதி கோத்தபாயவுக்கு ஆதரவான சில சட்டத்தரணிகளால் அவசர அவசரமாக, வெளிப்படைத்தன்மை அற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதுதான் 20வது திருத்தச் சட்டமூலம் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு. இந்த சட்டத்தரணிகள் அரசியலோடு பெரிதும் சம்பந்தப்படாதவர்கள் என்பதோடு, நாடாளுமன்ற அரசியல்வாதிகள் குறித்து பொதுவாக “குறைவான மதிப்பீடு” கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.  

நிறைவேற்று ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது 20வது திருத்தம். அரசாங்கத்தின் வேறு எந்த அலகாலும் அது சோதனைக்கு உட்படுத்தப்படாததாக இருக்க வேண்டும் என்பதையும் அது கோடிட்டுக்காட்டுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி செயற்திறனுடன் இருக்க இது அவசியம் என்பது அதன் இலக்காக பார்க்கப்படுகின்றது.  

நிறைவேற்று ஜனாதிபதிக்கான ஒரு சோதனைப் புள்ளியாக நாடாளுமன்றம் இருப்பதை 20வது திருத்தம் நிராகரிக்க முனைகிறது. நாடாளுமன்றம் வெறுமனே சட்டங்களையும் நிதிச் சட்டங்களையும் நிறைவேற்றும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதும் அதன் பிரதிபலிப்பு. உயர் அரச நியமனங்களை செய்வதில் அதிகாரமற்ற, கொள்கை உருவாக்கத்தில் பெரிய பங்கற்ற நிறுவனமாக அது நாடாளுமன்றத்தை ஆக்க நினைக்கின்றது என்பதும் 20க்கு எதிரான விமர்சனம். 

மஹிந்தவுக்கும் சங்கடம்: 

அனைத்து அதிகாரங்களையும் நிறைவேற்று ஜனாதிபதிக்கு கொடுப்பதை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக விரும்பவில்லையாம். இப்போதெல்லாம் தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை அணுகுவது பல ஆளும் கட்சி எம்பிக்களுக்கு மிகவும் சிரமமாகவே இருக்கிறது. ஆகவே, அனைத்து அதிகாரமும் அவரிடம் போய்விட்டால் தாம் செல்லாக்காசாகிவிடுவோம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். 

வெளிப்படையாக 20வது திருத்தத்தை எதிர்க்காவிட்டாலும்கூட பிரதமர் மஹிந்தவுக்கும் இந்த விடயத்தில் கொஞ்சம் வருத்தம்தானாம். “சரி, என்னதான் நடக்கிறது” என்று பொறுத்திருந்து அவர் பார்ப்பதுபோலவும் தென்படுகிறது. ஆகவே, கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சியினரும் ஊடகங்களும் அதனை எதிர்க்க, அவர் ஆராய ஒரு குழுவை அமைத்துவிட்டார். 

பௌத்தவாதிகளுக்கும் கொஞ்சம் சங்கடந்தான்: 

சில முக்கிய பௌத்த மதகுருமாருக்கும் இதில் கொஞ்சம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. அதாவது 20வது திருத்தம் வந்தால்,  சிங்கள பௌத்த தேசியவாதம் என்பது இராணுவத்தின் கையில் போய்விடும் என்பது அவர்கள் கவலை. அதனால், புத்த பிக்குமார்கூட இராணுவத்துக்கு அடிபணிய வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று அவர்கள் சங்கடப்படுகிறார்கள் போலும். 

சிங்கள மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமைகள் போவதை சிங்கள பௌத்த தேசியவாதிகளும் பௌத்த குருமாரும் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், இந்த 20வது திருத்தத்தால் தாம் கடந்த பல வருடங்களாக அனுபவித்து வந்த ஜனநாயக உரிமைகளை சிங்கள மக்களும் இழக்க நேரிடும் என்பது அவர்களது கவலை என்று ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். 

அரசாங்கத்தில் தமக்கு இருக்ககூடிய பங்கு இந்த திருத்தச் சட்டத்தால் மேலும் இல்லாது ஒழிக்கப்படலாம் என்று ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் கருதுகிறார்கள். அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்புக்கு வரும்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கு வாங்க முயற்சிக்கப்படலாம் என்று சில முக்கிய அரசியல்வாதிகள் எச்சரித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சமநிலை பேணுப்படுவதை தொடரவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 

ஆளும்கட்சி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 149 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. அதற்கு 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குறைந்தபட்சம் பத்து எம்பிக்களையாவது எதிர்க்கட்சியில் இருந்து ஈர்க்க அரசாங்கம் முயலலாம். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பிறகு ஓரங்கப்பட்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் குறிவைக்கப்படலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் சில நினைக்கின்றன. ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. 

முக்கிய எதிர்க்கட்சி பெரும் உட்கட்சிப் போராட்டத்தில் மூழ்கியிருப்பது அரசாங்கத்துக்கு ஒரு சாதகமும்தான். ஆனால், எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ இராஜதந்திரத்துடன் நடவடிக்கைகளை எடுத்தால், ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு தடைகளை போடமுடியும். ஆனால், அவர் அவ்வாறு செயற்திறனுடன் செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மறுபுறம் பார்த்தால், இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடியவகையில் இந்தத் திருத்தத்தில் எந்தவித மாற்றமும் பிரேரிக்கப்படவில்லை. ஆனால், முன்னதாக அந்த மாற்றம் நடக்கப்போகிறது என்றே பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.  

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தில் பல குறைபாடுகள் இருப்பதை பலரும் இப்போது ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள். அதில் சில மாற்றங்கள் தேவைதான். ஆனால், அப்படியான மாற்றங்கள், தனிப்பட்ட ஒருவருக்கு சர்வாதிகாரத்தை கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது.