— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவை அமைக்கும்போது தங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டி 18.03.2021 அன்று புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து காலையும் மாலையும் வெளிவரும் மின்னிதழொன்று தனது 21.03 2021 மாலைப் பதிப்பில் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
இச் செய்தியைப் படித்ததும் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. தமிழர் தரப்பு அரசியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் எவ்வளவு பலவீனமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இந்த நிபுணர் குழுவை அமைத்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் அவர்கள். இக்குழுவை ஜனாதிபதி அவர்கள் அமைத்த போது ஆரம்பத்திலேயே இக்குற்றச்சாட்டை ஜனாதிபதியிடமே இரா.சம்பந்தன் முன்வைத்திருந்தால் அதிலொரு அர்த்தமும் நியாயமும் தர்க்கமும் இருந்திருக்கும். இப்போதும்கூட இக்குற்றச்சாட்டு இக்குழுவை அமைத்த ஜனாதிபதியிடமல்லவா வைக்கப்பட்டிருக்க வேண்டும். நிபுணர் குழுவிடம் வைப்பது பொருத்தம்தானா? இல்லையே.
மேலும், இக்குழு அமைக்கப்பெற்று அக்குழு பொதுமக்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்று அதன் பின்னர் அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டபோது, 20.02.2021 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் குழு நிபுணர்குழுவுடன் சந்திப்பு நிகழ்த்தி ஒரு மாத காலமும் கழிந்த பின்னர் திடீரென்று ஞானம் பெற்று விழித்தெழுந்த இரா. சம்பந்தன் இப்படியொரு குற்றச்சாட்டைக் காலம் கடந்த நிலையிலும் பொருத்தமற்ற இடத்திலும் முன்வைப்பதற்கான அரசியல் காரணம் அல்லது அரசியல் தூண்டுதல் என்னவென்று விளங்கவேயில்லை.
உண்மையைச் சொன்னால் இரா. சம்பந்தனுக்கு அறளை பெயர்ந்து விட்டதோ என்று எண்ணுவதற்கும் சொல்வதற்கும் மனதிற்குச் சங்கடமாகவும் வெட்கமாகவும் வேதனையாகவும் கூட இருந்தாலும் அதனைச் சொல்ல வேண்டியுள்ளது. வாசகர்கள் மன்னித்துக் கொள்வார்களாக.
இரா. சம்பந்தன் நிபுணர் குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஏற்கெனவே வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு ஓர் ஐக்கிய பிரிவுபடாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வைக் காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச்செல்லும் உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேண்டும்.” என்று கேட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகச் செய்தி கூறுகிறது.
இரா.சம்பந்தன் அரைத்த மாவையே மீண்டும் அரைக்க வேண்டியேற்பட்ட அவசியம் என்னவென்று தெரியவில்லை. அதுவும் அரசியலமைப்பை உருவாக்குவதில் அதிகாரமற்ற நிபுணர் குழுவிடம் முறைப்பாடு செய்வதில் எதுவுமே ஆகப்போவதில்லையே. மேற்படி ஊடகச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டதென எடுத்துக்கொண்டால் கடிதத்தில் அல்லது அதன் மூலமொழி ஆங்கிலமாயின் அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகாரப் ‘பரவலாக்கம்’ என்ற சொல்லாடல் பொருத்தமாயிராது. பரவலாக்கம் என்பது ஆங்கிலத்தில் Decentralization ஆகும். ஆனால் தமிழர்களுக்கு வேண்டியது அதிகாரப் ‘பரவலாக்கம்’ அல்ல. அதிகாரப்’பகிர்வு’ ஆகும். பகிர்வு என்பதே ‘ Devolution’ of power ஆகும். அப்படியாயின் சம்பந்தன் எழுதியுள்ள மூலக்கடிதத்திலா (கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால்) அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பிலா அல்லது ஊடகச் செய்தியிலா தவறிருக்கின்றதென்பதும் தெரியவில்லை.
நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் பெற்று அது பின்னர் அமைச்சரவையில் அங்கீகரிக்கப் பெற்று புதிய அரசியலமைப்பு மசோதா (சட்டமூலம்)வாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பெற்று அது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படும் போது மட்டுமே சட்டமாகுமென்பது சம்பந்தனுக்குத் தெரியாததொன்றில்லையே. மேலும், இந்த நிபுணர் குழு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பெற்ற ஓர் ஆலோசனைக் குழுவொன்றே தவிர, புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இக்குழு ஓர் அதிகாரம் பெற்ற அமைப்பல்ல. அப்படியிருக்க, இப்படியொரு கடிதத்தை நிபுணர் குழுவுக்கு எழுத இரா.சம்பந்தனைத் தூண்டிய காரணி யாது? என்பதும் தெரியவில்லை.
இவை ஒரு புறமிருக்க, உத்தேச புதிய அரசியலமைப்பில் (அது வருமென்ற எடுகோளில்) இரா.சம்பந்தன் எதிர்பார்க்கும் அதிகூடிய அதிகாரப் பரவலாக்கம் (பகிர்வு என்ற எடுகோளில்) தற்போது நடைமுறையில் உள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்ட திருத்தத்திலும் மேலானதாக அதாவது பதின்மூன்று ‘பிளஸ்’ ஆக இருக்குமா? அப்படி இல்லையாயின் தமிழ்த் தேசிய அரசியல் மீண்டுமொரு தடவை சாண் ஏறி முழம் சறுக்கியதாக அல்லது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகத் தொடரப் போகிறதா?
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இலங்கைத் தமிழர் விவகாரத்தைக் கையாள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான அரசியல் நிகழ்ச்சிநிரலோ- வேலைத் திட்டமோ-அணுகுமுறையோ- தந்திரோபாயமோ இல்லை என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.
மேலும், நிபுணர் குழுவுக்கு இரா.சம்பந்தன் எழுதியுள்ள இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், ஐநா செயலாளர் நாயகம், ஐநா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் மேற்படி ஊடகச் செய்தியிலுள்ளது.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு வரைவொன்றினை வரைவதற்காக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கும் ஐ.நா. வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.?
முறைப்படி இக் கடிதம் ஜனாதிபதிக்கு முகவரியிடப்பெற்று அதன் பிரதிகள் பிரதமருக்கும் நிபுணர் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால் இங்கு முறைதலைமாறி நடந்திருக்கிறது. சரி அந்தத் தவறைத்தான் விட்டுவிடுவோம். இக்கடிதத்தின் பிரதிகளை ஐ.நா.வுக்கு அனுப்பும் தேவைப்பாடும் அவசியமுமென்ன? குழப்பமாயுள்ளது. எடுத்ததற்கெல்லாம் ஐநாவுக்கு எழுதுவதால் அல்லது முறைப்பாடு செய்வதால் என்ன ஆகப்போகிறது. ‘சேர் அடிக்கிறான், ரீச்சர் கிள்ளுகிறான்’ என்று கூறும் முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவனைப் பார்ப்பதுபோலல்லவா ஐநா செயலாளர் இரா.சம்பந்தனைப் பார்வையிடுவார். இப்படிச் செய்ததன் மூலம் இலங்கை ஜனாதிபதியையும் பிரதமரையும் நிபுணர் குழுவையும் எரிச்சலூட்டச் செய்வதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமா?
இக்கடிதத்திற்கு உள்நோக்கமொன்று இல்லாமல் இருக்க மாட்டாது என்றே எண்ணத் தோன்றுகிறது. வேறொருவர் போடும் தாளத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுவது போலவும்படுகிறது. தங்களைத் தெரிவு செய்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு விசுவாசம் இல்லாமல் வெளிநாடுகளில் வதியும் வேறெவர்க்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலை சாய்க்கிறது/தலையாட்டுகிறது போலுள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. ‘கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு’ என்பார்கள். இருந்துதான் பார்ப்போமே.