கிளிநொச்சி : விற்க முடியா பூசணிக்காய்கள்

கிளிநொச்சி : விற்க முடியா பூசணிக்காய்கள்

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் 15000 கிலோ பூசிணிக்காய்கள் விற்க முடியாத நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதை உரிய விலைக்கு விற்றால்தான் விவசாயிகளுக்கு வாழ்க்கை. இல்லையென்றால் கதை மாறி இவர்கள் கடனாளிகள் என்றாகி விடுவர். இதைப் பற்றி யாரிடம் முறையிடுவது, இதற்கு எப்படித் தீர்வுகாண்பது என்று தெரியாமலிருக்கின்றனர் விவசாயிகள்.  

இவ்வளவுக்கும் விவசாயிகளுக்கும் விவசாயத்துறைக்கும் என விவசாய விரிவாக்கத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் எனச் சில உத்தியோகபூர்வ அமைப்புகளிருக்கின்றன. இதைவிட விவசாயிகள் சங்கங்கள் வேறிருக்கின்றன. மக்களின், துறைசார்ந்தோரின், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய –தீர்வுகாண வேண்டிய பொறுப்பில் மக்கள் பிரதிநிதிகள் வேறு (பாராளுமன்ற உறுப்பினர்கள்) உள்ளனர். இப்படியெல்லாம் இருந்தும் எந்தப் பயனையும் பெற முடியாத நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவுவது யார்? அது எப்படி? 

இது தனியே ஸ்கந்தபுரத்திலுள்ள விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினையில்லை. இதைப் போல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தரப்பினர் என பலரும் ஏதோ வகையில் பிரச்சினைகளை எதிர்கொண்டபடியே உள்ளனர். இதை யார்தான் கண்டு கொள்கிறார்கள்? 

ஒரு போக விளைச்சலை அல்லது அறுவடையை உரிய விலைக்கு விற்க முடியவில்லை என்றால் பல ஆண்டுகளுக்கு பின்னடைவைச் சந்திக்க வேண்டிய தொழில் விவசாயம். சிலவேளை இது தற்கொலை செய்ய வேண்டிய நிலைவரை கொண்டு போய் விடுகிறது. ஆகவேதான்  விவசாயிகள் தங்கள் விளைச்சலை உரிய முறையில் விற்பனை செய்வதைப்பற்றி எப்போதும் பதற்றப்படுகிறார்கள். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்வதையும் அங்கே டில்லியில் விவசாயிகள் நடத்துகின்ற போராட்டங்களையும் கவனிப்பவர்களுக்கு இது புரியும். ஏறக்குறைய இதையொத்த நிலையில்தான் இங்குள்ள விவசாயிகளும் உள்ளனர். இதனால்தான் தற்போது அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் முடிந்த வரையில் சில சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால் அதை விட முக்கியமானது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்தும் வசதியும் விலை உத்தரவாதமுமாகும். இதில் முக்கியமானது விலை உத்தரவாதம். இந்த விலை உத்தரவாதம் என்பது விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாமல், வியாபாரிகளுக்கும் பாதிப்பில்லாமல், பாவனையாளர்களான பொதுமக்களுக்கும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும். அப்படியென்றால் இதற்கு ஒரு உரிய முறையிலான –பொருத்தமான – விலை நிர்ணயச் சபை வேண்டும். அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பள நிர்ணயச் சபை இருக்கிறது அல்லவா அதைப்போல. 

ஆனால் அப்படியானதொரு விலை நிர்ணயச் சபை இதுவரையில்லை. முன்பு மாக்கெற்றிங் டிப்பாட்மென்ற் என்றொரு அமைப்பு இருந்தது. ஓரளவுக்கு இது விவசாயிகளுக்கு சில வாய்ப்புகளை அளித்தது. இப்போதும் சில இடங்களில் விவசாயிகள் சந்தை, பொருளாதாரச் சந்தைகள் என்றுண்டு. வடக்கில் பொருளாதாரச் சந்தைகளுக்கு நேர்ந்த கதை உங்களுக்குத் தெரியும். மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரனும் போட்டி போட்டு அதை இல்லாமல் – வராமலே செய்து விட்டார்கள். கிளிநொச்சியில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விவசாயச் சந்தை உண்டு. அதை இயங்க விடாமல் உள்ளுர் அரசியல் குழறுபடிகள் செய்து விட்டன. ஆகவே இதுவும் இல்லை. 

இந்த மாதிரி மடத்தனமான தெருக்கூத்துகளால் பாதிக்கப்பட்டிருப்பதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் விவசாயிகளே. சரி, விவசாயிகளுக்கான சங்கங்கள் இருக்கின்றனவே. அவர்கள் இதைப்பற்றிச் சிந்திப்பதில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானதே. ஆனால், விவசாயிகளின் அமைப்புகளுக்குள்ளும் அரசியல் அல்லவா புகுந்து விளையாடுகிறது. ஒன்றுக்கும் உதவாத இந்த அரசியலால் இப்படி எத்தனை பிரச்சினை. 

இதற்கு மேலும் இரண்டு உதாரணங்களை இங்கே சொல்ல வேண்டும். ஒன்று, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியத்தின் பிரமாண்டமான அரிசி ஆலையும் நெல் கொள்வனவு நிலையமும் செயலற்றுக் கிடக்கிறது. இதனால் இப்பொழுது அதை மாவட்டச் செயலகம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. இந்த அரிசி ஆலையினால் நாளொன்றுக்கு 10,000 கிலோ அரிசியை உற்பத்தி செய்ய முடியும். இதைக் கூட இயக்க முடியாத நிலையிலிருந்தால் பிறகு எதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம்? பிறகெதற்கு இதற்கொரு இயக்குநர் சபையும் தலைவரும்?பிறகெதற்கு மாவட்டக் கூட்டுறவுச் சபை? பிறகெதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு? மற்றும் மக்கள் பிரதிநிதிகள்? 

இவ்வளவுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் வடக்கில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே இந்த மாதிரி இரண்டு பெரிய மில்கள் கூட்டுறவுச் சங்களுக்கென உண்டு. இரண்டும் செயலற்றுக் கிடக்கின்றன. இதை விட மாவட்டத்தில் ஆறு கூட்டுறவுச் சங்கங்கள் உண்டு. இவையெல்லாம் இருந்தும் கிளிநொச்சியின் நெல்லை மொத்தமாகக் கொள்வனவு செய்து கொண்டு போவது வெளி மாவட்டங்களில் உள்ள தனியாரும் பிற மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களுமே. இதனால் நெல்லுக்குப் பிறகான உற்பத்திகளின் வழியான தொழில் வாய்ப்பையும் வருமானத்தையும் கிளிநொச்சி மக்கள் –மாவட்டம் இழக்க வேண்டியுள்ளது. 

இரண்டாவது கிளிநொச்சி பனை, தென்னை வள உற்பத்திக் கூட்டுறவுச் சங்கமாகும். அது இப்பொழுது தீராத சிக்கலுள்ளாகிப் பொறியில் வீழ்ந்துள்ளது. முடிவற்ற அரசியல் தலையீடுகளால் சங்கத்தின் நிர்வாக சபை மூன்றாக உடைந்து இப்பொழுது நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு புதிய நியமன சபையை உருவாக்கும் நிலை தோன்றியுள்ளது. இப்படியெல்லாம் நடக்கும் போது பாதிக்கப்படுவது சங்கமே. சங்கத்தின் பாதிப்பு என்பது அதனுடைய உறுப்பினர்களின் பாதிப்பு. அவர்கள் அத்தனை பேரும் கடுமையான உழைப்பாளிகள். ஆக மொத்தத்தில் இந்த உழைப்பாளிகளுக்குப் பகிரங்கமாகவே அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முழுக்காரணம், அரசியல் தலையீடுதான். அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதை. பாதுகாக்க வேண்டிய தரப்புகள், சீரமைக்க வேண்டிய தரப்புகள் சீர் குலைக்க முனைந்தால்… விளைவு பேரனர்த்தமாகவே இருக்கும். அதுதான் நடக்கிறது. 

ஆக மொத்தத்தில் இப்படி விவசாயிகள், கூட்டுறவாளர்கள், உழைப்பாளர்கள் எனச் சகல தரப்பும் பாதிக்கப்படும் ஒரு சூழல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அனுமதிக்கப்போகிறோமா? அப்படியென்றால் நாம் எப்படியானவர்கள்? 

இதற்கும் மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்புகளில்லை. மட்டுமல்ல நாமே தீர்வு காணக் கூடியவையுமாகும். அப்படியிருந்தும் இதெல்லாம் காணாமல் விடப்படுகிறது என்றால்… தமிழ்ச்சமூகம் பலவீனப்படுத்தப்படுகிறது என்றே முடியும். ஏற்கனவே இன ஒடுக்குமுறையினாலும் போரினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படுவதாக இருந்தால் அது முடிவில்லாத – மீள முடியாத வீழ்ச்சியிலேயே கொண்டு போய் விடும். 

இப்பொழுது பூசணிக்காயை விற்பதற்கான ஏற்பாட்டை முதலில் செய்வோம். தொடர்ந்து இதைப்போல ஒவ்வொரு உற்பத்தியையும் அவற்றின் உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம். இதில் பொருளாதாரத் துறை சார்ந்து சிந்திப்போருக்கும் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தினருக்கும் பெரும் பங்குண்டு. பலரும் கூடி இழுத்தால்தான் தேர் உருளும். ஆமாம், தேர்ச் சில்லில் உள்ள கட்டைகளை நீக்குவோம். தொடர்ந்து தேரை இழுப்போம்.