சுவாமியின் அழுகை! (கவிதையின் தொடர்ச்சி)

சுவாமியின் அழுகை! (கவிதையின் தொடர்ச்சி)

  — சு.சிவரெத்தினம் — 

பூசை அறைகளில்! 

திருநீறு கொட்டுகிறது 

குங்குமம் கொட்டுகிறது 

சந்தணமும் கொட்டுகிறது 

வீதிகளில்! 

பிள்ளையார் பால் குடிப்பார் 

வேப்பமரம் பால் பொழியும் 

மாதா இரத்தக் கண்ணீர் வடிப்பார் 

கிணறு பொங்கி வழியும் 

அத்தி மரத்தில்  

அம்மன் காட்சியளிப்பார். 

அனைத்தும் அதிசயங்கள் 

செய்திகள் தீயாய்ப் பரவும் 

மக்கள் வரிசைகளில்  

கால்கடுக்க நிற்பர். 

விபுலாநந்தரோ கண்ணீர் சிந்துகிறார் 

ஒருத்தன்!  

அவர் பாடலைப் பாடி  

பூக்களைப் பறிக்கின்றான் 

மற்றவன்! 

தன் எல்லையில்  

அவரை அனுமதிக்க முடியாதென்கின்றான்.  

அறிஞர்களோ! 

அவர் (யாழ்) நூலை வாசிக்காது  

அதன் புகழ் உரைக்கின்றார் 

சிற்பிகளோ! 

வீதி எங்கும் சிலை வடிக்கின்றார் 

சிலையில் அவர் இல்லை. 

விபுலாநந்தர் கண்ணீர் சிந்துகின்றார் 

அவர் எப்போதுமே அழுவதினால் 

அது அதிசயமில்லை 

அது செய்தியுமில்லை 

அதைப் பார்க்க எவருமேயில்லை. 

உனது சிரிப்பு செய்தியாக வந்திருக்கிறதா

உனது அழுகை செய்தியாக வந்திருக்கிறதா

நீ உணவு உண்பது செய்தியா

நீ உறங்குவது செய்தியா

என் சுவாமியின் அழுகை செய்தியல்ல. 

என் சுவாமியின் அழுகை அதிசயமில்லை 

அவர் எப்போதுமே அழுகின்றார்.