சொல்லத் துணிந்தேன் – 69

சொல்லத் துணிந்தேன் – 69

  — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — 

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத் தரமுயர்த்தல் விவகாரம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. தரமுயர்த்தப்படாமல் இயங்கிக் கொண்டிருந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை உபபிரதேச செயலகமாகத் தரமிறக்கம் செய்வதற்கானது எனக் கருதப்படும் அரசின் நடவடிக்கை குறித்த எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் விளாசியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டப் பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் (தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்) இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளைச் சாடியிருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பா.உ சிறிநேசன் ஊடகச் சந்திப்பொன்றினை நிகழ்த்திச் சாடவேண்டுமென்று அவர் நினைத்தவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.  

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினொன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பா.உ சுரேந்திரன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தாங்கள் (செல்வம் அடைக்கலநாதனும் தானும்) மேற்கொண்ட நடவடிக்கையால் நிறைவேறவிருந்த இவ்விடயத்தைக் கெடுத்தது அப்போது ரெலோ‘ வைச் சேர்ந்தவரும் திகாமடுல்ல பா.உறுப்பினருமான கோடீஸ்வரனும், சுமந்திரன் பா.உ உம்தான் எனும் தொனிப்படச் சமூக ஊடகமொன்றிற்கு நேர்காணலும் வழங்கியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இன்னும் பலர் வாய்திறப்பார்கள், பாராளுமன்றத்தில் விட்டேனா பார்‘ என்று விளாசித்தள்ளுவார்கள், பத்திரிகைகளிலும் அறிக்கை விடுவார்கள். இவை எல்லாமே வாக்குப்பெட்டி அரசியலுக்கான வெறும் சிலுசிலுப்புகளே தவிர பலகாரம் எதுவும் இந்த வெற்று வேட்டுக்களால் வரப் போவதில்லை.  

இது ஒரு புறமிருக்கஇன்னொரு விடயமென்னவெனில்இவர்களில் எவருக்குமே கல்முனை வரலாறு தெரியாது. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயத்திலுள்ள தாற்பரியமும் புரியாது. கல்முனை வடக்கின் புவியியலும் சரிவரத் தெரியாது. கேள்வி ஞானத்தையும் தமது கட்சிக்காரர்களால் வழங்கப்பட்ட தகவல்களையும்ஆவணங்களையும் வைத்துக்கொண்டுதான் இவர்கள் அனைவரும் தங்கள் பாராளுமன்ற உரையை – பத்திரிகை அறிக்கையை – ஊடக நேர்காணலைச் சோடிக்கிறார்கள். 

எனவேசில உண்மைகளை இங்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

1988 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும் பதில் செயலாளருமான காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்ண அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவ்வேளை அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் அப்போதைய தலைவரும் முன்னாள் நாவிதன்வெளி – அன்னமலைக் கிராமசபையின் தலைவருமான வீ. சின்னத்துரை அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் குழுவொன்று அப்போது பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திருமதி. ரங்கநாயகி பத்மநாதனின் உதவியுடன் ரஞ்சன் விஜயரட்ணவைச் சந்தித்துக் கல்முனைத் தொகுதியில் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனை வடக்குக்கு என தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகு மற்றும் சம்மாந்துறைத் தொகுதியில், முன்னாள் மல்வத்தை கிராமசபைப் பிரதேசத்தையும் முன்னாள் நாவிதன்வெளி – அன்னமலைக் கிராமசபைப் பிரதேசத்தையும் அவற்றுடன் வீரமுனை மற்றும் வீரச்சோலைக் கிராமங்களையும் இணைத்ததான ஒரு தனியான தமிழ்ப் பெரும்பான்மை அலகு என இரு புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உருவாக்கித் தரும்படியான கோரிக்கைகள் அடங்கிய – ஜனாதிபதிக்கு முகவரியிட்ட – 22.06.1988 திகதியிட்ட மகஜரைக் கையளித்தனர்.  

கொழும்பு திரும்பிய ரஞ்சன் விஜயரட்ண அவர்கள் அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே.டபிள்யு.தேவநாயகம் அவர்களினூடாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கரவாகு (கல்முனை) வடக்கிலும், நாவிதன்வெளியிலும் இரு சுற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைத் (Circuit A.C.A Division) திறப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் அவர்கள் தனது அமைச்சின் 12.01.1989 திகதியிட்ட M/UA6/89 இலக்கக் கடிதத்தின் மூலம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்குப்  பணிப்புரை விடுத்திருந்தார். எனினும்அப்போது கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற ஏ.ஆர்.மன்சூர் மற்றும் சம்மாந்துறைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற எம்.ஏ.அப்துல்மஜீத் ஆகியோரின் அரசியல் தலையீட்டினால் அவை நடைபெறாமல் தடுக்கப்பட்டன. 

பின் 1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலையடுத்து, அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் உப தலைவர் காலஞ்சென்ற கே. கணபதிப்பிள்ளை (அதிபர்கவிஞர் பாண்டியூரன்இவர் பின்னர் 1990 கலவரத்தில் காணாமல் போனார்) அவர்களின் தலைமையில் கல்முனை வடக்கில் தனியான தமிழ்ப்பெரும்பான்மை நிருவாக அலகை– உதவி அரசாங்க அதிபர் பிரிவை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலக வாயிலை மறித்துக் கல்முனைத் தமிழர்கள் சாத்வீகப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். இதனால் கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தின் நாளாந்த அலுவல்கள்  ஸ்தம்பித்தன. 

இவ்விடயம் பொது நிருவாக மாகாணசபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு இவ்விடயம் பற்றி அப்போதைய பொது நிருவாக மாகாணசபைகள்உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் யூ.பி.விஜயகோன் அவர்கள் அப்போதிருந்த ஏ.ஆர்.மன்சூர் (வர்த்தக கப்பல்துறை அமைச்சர்), பீ.தயாரத்தன(காணிநீர்ப்பாசன மகாவலி அபிவிருத்தி அமைச்சர்)பியசீலி ரத்நாயக்க (உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்) அ.அமிர்தலிங்கம் (பா.உ)சந்திரதாச கலபத்தி (பா.உ,) நிகால் வக்மீவெப (பா.உ), எம்.எச்.எம்.அஷ்ரப் (பா.உ), ஜே.திவ்வியநாதன் (பா.உ) ஆகியோருடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானத்தின்படியே 12.04.1989 அன்று கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் திறக்கப்பட்டது. 

பின்னர் 28.07.1993 இல் கூடிய அமைச்சரவையினால் அமைச்சரவைப் பத்திர இல.93/600/034(1) – இலங்கை முழுவதும் நாடளாவிய ரீதியில் 28 உப அலுவலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சின் இராஜாங்க செயலாளர் என்.ஏ.ஓவடகே என்பவரால் ஒப்பமிடப்பெற்ற 1993.09.03ம் திகதியிட்ட அறிவித்தல் இதனை உறுதிப்படுத்துகின்றது. 1990ஆம் ஆண்டிலிருந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் சார்பில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் முன்னாள் செயலாளர் து. இராமகிருஷ்ணன்இணைச் செயலாளர் காலஞ்சென்ற ஆர்.அம்பலவாணர் மற்றும் இப்பத்தியாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஓயாமல் தொடர்ந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பெறுபேறுதான் இந்த அமைச்சரவை அங்கீகாரமாகும். 

இவ்வாறு தரமுயர்த்தப்பட்ட இருபத்தியெட்டு உபஅலுவலகங்களில் வடக்குக்கிழக்கு மாகாணங்களில் வெருகல் (ஈச்சிலம்பத்தை), ஒட்டிச்சுட்டான்காரைதீவுகல்முனை (தமிழ் பிரிவு)கந்தளாய் ஆகியன அடங்கியிருந்தன. இதில் கல்முனை (தமிழ் பிரிவு) தவிர்ந்த ஏனைய இருபத்தியேழு உப அலுவலகங்களும் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. கல்முனை (தமிழ் பிரிவு) தரமுயர்த்தல் அமுலாக்கம் பெறாமைக்குக் காரணம் முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரப் பா.உ மற்றும் அமைச்சர் காலஞ்சென்ற ஏ.ஆர்.மன்சூர் ஆகியோரின் அரசியல் விருப்பமின்மையும் தலையீடும் ஆகும். 

இந்தப் பின்னணியில் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தை நோக்கும் போது, 12.04.1989 அன்று உருவான கல்முனை வடக்கு (உப) பிரதேச செயலகம்தான் கடந்த முப்பத்தியிரண்டு வருடங்களாகத் தரமுயர்த்தப்படாமல் இயங்கி வருகிறது. 

ஒரு பிரதேச செயலகம் எல்லைகள் வகுக்கப்பெற்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரு முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்படும்வரை அச்செயலகம் ஒரு உபபிரதேச செயலகம் தான். ஆனால், கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தைப் பொறுத்தவரை இவ் உபபிரதேச செயலகத்திற்குக் கடந்த முப்பத்தியிரண்டு வருட காலத்தில் கட்டம் கட்டமாகச் சில கூடுதல் அதிகாரங்களும் ஆளணிகளும் பௌதீக வளங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுஅது இன்று எல்லைகள் வகுக்கப்பெற்று பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் விடுவிக்கப்படவில்லையென்பதைத் தவிரமற்றப்படி பௌதீக ரீதியாக நடைமுறையில் ஒரு பிரதேச செயலகமாகவே இயங்கி வருகிறது.  

இப்பத்தி எழுப்பும் கேள்வி என்னவெனில்

12.04.1989 அன்று உபபிரதேச செயலகமாக ஆரம்பிக்கப்பெற்ற இவ்வலுவலகம் கடந்த முப்பத்தியிரண்டு வருடங்களுக்கூடாக பௌதீக ரீதியில் ஒரு பிரதேச செயலகமாகவே வளர்ச்சி பெற்றுவிட்ட பிறகு கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை எவ்வாறு இப்போது மீண்டுமொரு உபபிரதேச செயலகமாகத் தரமிறக்கம் செய்வது?இது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. இது பற்றி இதனுடன் சம்பந்தப்பட்ட சில அரச உயரதிகாரிகளுக்கும் தெளிவில்லை, இது குறித்துப் பேசுகின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தெளிவில்லையென்றல்லவா ஆகிவிடுகிறது.  

உண்மையில் இப்போதாவது அரசாங்கம் செய்யவேண்டியது என்னவெனில்கடந்த முப்பத்தியிரண்டு வருடகால இடைவெளியில் கல்முனை வடக்குப் பிரதேசத்தில் பல இன விகிதாசார மாற்றங்கள் நிகழ்ந்துள்ள காரணத்தால் தற்போதுள்ள இனவிகிதாசாரக் களநிலையையும் தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையையும் கல்முனையின் வரலாற்றையும் கவனத்திலெடுத்து தற்போது இயங்கி வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழு அளவிலான பிரசே செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு முதற்படியாக எல்லைகள் மீள் நிர்ணயக்குழுவின் மூலம் எல்லைகளை வகுத்துப் பின்னர் அதற்கமைய உரிய வர்த்தமானி அறிவித்தலையும் காலதாமதமின்றி வெளியிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பிரதேச செயலகம் முறைப்படி எல்லைகள் வகுக்கப் பெற்று வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படும்வரை காலத்திற்குக் காலம் ஏதாவது பிரச்சினைகள் எழுந்து கொண்டேயிருக்கும். இப்பிரதேச செயலகம் முறைப்படி எல்லைகள் வகுக்கப்பெற்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டரீதியாகத் தரமுயர்த்தப்பட்டுவிட்டால் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் கணக்காளர் நியமனம் உட்பட சகல வளங்களும் அதிகாரங்களும் தானாகவே வந்துவிடும். இதுவே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். அதனைச் செய்வதை விடுத்து இப்போது எழுந்துள்ள தரமிறக்கம் விவகாரத்தைப் பூதாகரமாக்கி ஆனை அடிக்க முதல் தானே அடித்துச் சாவது போல‘ சில தமிழ்த் தேசிய‘(?) அரசியல்வாதிகள் சத்தமிடுவது வெறுமனே விளம்பரத்திற்காகவும் தேர்தல் நோக்கங்களுக்காகவும் மக்களுக்குத் தவறான சமிக்ஞைகளைக் கொடுப்பதற்காகவுமே தவிர வேறு நல்லெண்ணமெதுவும் கிடையாது. எனவே நிரந்தரத் தீர்வுதான் இப்போது தேவை.   

இதனைச் சாத்தியப்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ (தமிழரசுக் கட்சி) அல்லது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாலோ (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) முடியவே முடியாது. நான்கரை வருட காலம் கடந்த நல்லாட்சி‘ அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்த விவகாரத்தை வெற்றிகரமாகக் கையாளத் தெரியவில்லை. இப்போது தமது பரமவைரியாகக் கருதும் இராஜபக்ச அரசாங்கத்தில் எதனைச் சாதிக்கப் போகிறார்கள். 

கிழக்கில் அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனோ (பிள்ளையான்) அல்லது கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகா சபையில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பைத் தவற விட்டாலும்கூட சுமார் முப்பதினாயிரம் தமிழ் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவரும் தற்போது பிரதமரின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளீதரனோ (கருணா அம்மான்) தனித்தோ அல்லது கூட்டாகவோ அரசாங்க உயர் மட்டத்தை அணுகி இதனைச் சாத்தியப்படுத்த வேண்டும். இது இம்மூவருடைய அரசியல் கடப்பாடு ஆகும். இதனைத்தான் இன்று கல்முனைத் தமிழர்கள் குறிப்பாகவும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ்ச் சமூகம் பொதுவாகவும் இவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். பந்து இப்போது இவர்களின் பக்கம்தான் உள்ளது. இதனைச் செய்து கொடுத்தால்தான் மக்கள் இவர்களின் பக்கம் தொடர்ந்து இருப்பார்கள்.