— தம்பியப்பா கோபலகிருஸ்ணன் —
அண்மையில் மட்டக்களப்பில் ஊடகச் சந்திப்பொன்றை நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ச அவர்கள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையெனக் குற்றம்சாட்டியிருந்தார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை ஆதரித்து 29.10.2019 அன்று மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தருகில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் வைத்தே மகிந்த ராஜபக்ச அவர்கள் இவ்வாக்குறுதியைப் பகிரங்கமாக அறிவித்தார். அத்தேர்தலில் கோட்டபாய அவர்களை ஆதரித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மேடையில் வைத்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய அவர்களிடம் கையளித்தும் இருந்தது. அம்மகஜரில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லையென்பது உண்மைதான். அதேவேளை இத்தேர்தலில் கல்முனைத் தொகுதியிலும், அம்பாறை மாவட்டத்திலும், முழுக் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களுடைய கூடுதலான வாக்குகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கே அளிக்கப்பட்டன என்ற விடயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்குத் தமிழர்களின் பெருவாரியான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் அவரை ஆதரித்த தமிழர் தரப்பினருக்கு இவ்வாக்குறுதியை நிறைவேற்றித் தரும்படி தட்டிக்கேட்கக் கூடியமாதிரி இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்பதையும் சிறிநேசன் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், வியாழேந்திரனும் இது குறித்து வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சிறிநேசன் குற்றம் சாட்டியிருந்தார். ஆம்! வியாழேந்திரனுக்கு அந்தக் கடப்பாடு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதேபோல் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தமிழ் மக்களின் சுமார் முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற கருணா அம்மானும், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்று அவர் மீதும் சிறிநேசன் குற்றம் சுமத்தியிருந்தார். உண்மைதான். கருணா அம்மான் (அகில இலங்கை தமிழர் மகாசபை) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிக முக்கியமாகக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடக் கருணா அம்மான் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தும் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டமை எல்லோரும் அறிந்ததே. எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் அவர் வென்று அவருக்கு அமைச்சர் பதவியொன்றும் கிடைத்திருக்குமாயின் நிலைமை வேறாக அமைந்திருக்கும். அதாவது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் சற்று இலகுவாக இருந்திருக்கும். இது விடயத்தில் கருணா அம்மானுக்குக்கூட நேரடியான அரசியல் கடப்பாடு உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது விடயமாகக் கருணா அம்மான் அண்மையில் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்சவைச் சந்தித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றே ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, சிறிநேசனிடம் இப்பத்தியெழுப்பும் கேள்வி என்னவெனில், இப்படியெல்லாம் ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்களே? உங்கள் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் 2018 ஆம் ஆண்டு கல்முனைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து விட்டீர்களா?
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் சம்பந்தமாகப் பல்வேறு சவால்களை கல்முனைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்த அக்காலப்பகுதியில் இலங்கையின் பதினைந்தாவது பராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பதினாறு உறுப்பினர்களைக் கொண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தம்வசம் கொண்டும் அப்போதிருந்த ‘நல்லாட்சி‘ அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்துக் கொண்டும் பலம் பொருந்தியதாக வலம் வந்து கொண்டிருந்த தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பிடம் கல்முனை நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் 01.02.2018 அன்று நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் கல்முனைப் பொது மக்களின் சார்பாகக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தரும்படி கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிந்து பத்து நாட்களுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாகப் பகிரங்க மேடையில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவேயில்லை.
அதன்பின்னர், கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியம் 22.03.2019 அன்று பொதுமக்கள் கலந்துரையாடலொன்றை நடாத்தி, அக்கலந்துரையாடலில் எடுக்கப்பெற்ற முடிவுகளுக்கமைவாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் தொடர்பாகக் கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பத்தியிரண்டு பொது அமைப்புகளின் வேண்டுகோள் கடிதங்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் கொண்டு சேர்ப்பதனூடாக ‘நல்லாட்சி‘ அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது ஓர் அழுத்தத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசாங்கத்திற்குக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு, பதின்மூன்று பேர் கொண்ட குழுவுடன் 28.03.2019 அன்று பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்திகள் மீதான குழுநிலை விவாதம் இடம் பெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தைப் பாராளுமன்றத்தில் சந்தித்தது. ஆனால் 05.04.2019 அன்று வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் கல்முனைத் தமிழர்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியது.
இதனைச் சிறிநேசன் வழமைபோல் தனது வசதிக்காக மறந்துவிட்டார் போலும். தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழரசுக்கட்சியில் சேர்ந்து ‘தமிழ்த்தேசியம்‘(?) பேசும் சிறிநேசனைப் போன்றவர்களிடம் ஒரு விநயமான வேண்டுகோள். தேர்தல் மைய அரசியலுக்காகத் தமிழ்த் தேசியம் பேசாதீர்கள். மக்கள் மைய அரசியலுக்காகப் பாடுபடுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்படுங்கள். அரசியல் முழுக்க முழுக்க மக்களுக்கானது. அது தனிநபர்களுக்கானதோ அல்லது தனிப்பட்ட கட்சியொன்றிற்கானதோ அல்ல.
