சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! (23)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (23)

 — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை” 

பிரிவுக் காரியாதிகாரி (DRO) என்ற பெயரிலும் பின்னர் உதவி அரசாங்க அதிபர் (AGA) என்ற பெயரிலும் பிரதேச செயலாளர்கள் (Divisional Secretaries) பெயர் குறிக்கப்பட்டிருந்த  காலத்தில், பிரதேச கலாசாரப் பேரவை என்ற பெயரிலான அமைப்பு ஒன்று மிகவும் காத்திரமான கலை, கலாசாரப் பணிகளைச் செயற்படுத்தி வந்தது.  

அதில் கலை, கலாசாரப் போட்டிகளை நடத்துவதும் ஒரு பணியாக இருந்தது. பிரிவுக் காரியாதிகாரி அல்லது உதவி அரசாங்க அதிபர் பதவி வழியாக, பேரவையின் தலைவராக இருந்தார். பெரும்பாலும் அப்பிரதேசத்திற்குட்பட்ட எல்லா ஊர்களிலிருந்தும் உறுப்பினர்கள் அங்கம் வகித்தார்கள். குருக்கள்மடம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பெரியநீலாவணை கவிஞர் நீலாவணன், துறைநீலாவணை, கவிஞர் ஜீவாஜீவரெத்தினம், பெரிய கல்லாறு (தாடி) சபாரெத்தினம் ஆசிரியர், கோட்டைக்கல்லாறு கணபதிப்பிள்ளை ஆசிரியர், களுவாஞ்சிகுடி, கோ.பாக்கியராசா ஆகியோர் உட்படப் பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். 1973 ஆம் ஆண்டிலிருந்து நானும் உறுப்பினராக இருந்தேன். 

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
கவிஞர் நீலாவணன்
கவிஞர் ஜீவாஜீவரெத்தினம்

மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவுப்பற்று இரண்டு நிலப் பரப்புக்களும் ம.தெ.எ.போ. பற்று என்ற பெயரில், களுவாஞ்சிகுடியில் இருந்த ஒரே பிரதேச செயலகத்தின் கீழ் ஒன்றாக இயங்கிவந்த காலத்திலிருந்து, பின்னர் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, ம.தெ.எ.பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இயங்கத்தொடங்கிய காலத்திலும், பிரதேச கலாசாரப் போட்டிகள், களுவாஞ்சிகுடியிலேயே நடத்தப்பட்டு வந்தன. பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் தெரிவுப் போட்டிகளும், பின்னர் விளையாட்டு மைதானத்தில், திறந்த வெளியரங்கில் இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெறுவது வழமையாக இருந்து வந்தது. 

ஆனால், 1979 ஆம் ஆண்டு கலசாரப் போட்டிகளின், தெரிவுப் போட்டிகளைப் பெரிய கல்லாறிலும், இறுதிப்போட்டிகளையும் பரிசளிப்பு விழாவையும் களுவாஞ்சிகுடியிலும் நடாத்துவதென்று ம.தெ.எ.பற்று பிரதேச கலாசாரப் பேரவை தீர்மானித்தது. அதன் தலைவராக பதவி வழியாக, உதவி அரசாங்க அதிபர் அ.கி.பத்மனாதன் அவர்கள் இருந்தார்.  

களுவாஞ்சிகுடியில் இயங்கிவந்த எங்களது இளம் நாடக மன்றம், குமரன் கலாமன்றம், கண்ணன் கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் அந்தப்போட்டிகளில் பங்குகொண்டிருந்தன. தேற்றாதீவில் இருந்து வழமைபோல, கூட்டுறவுப்பரிசோதகர் கனகசூரியம், ஆறுமுகம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஆசிரியர் தெய்வநாயகம், ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும், அந்நாளில் காணி அபிவிருத்தி அலுவலராக இருந்து பிந்நாளில் ஆசிரியரான கோபாலபிள்ளை முதலிய பண்பட்ட கலைஞர்களைக் கொண்டிருந்த பாரதி கலாமன்றம், மற்றும் கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு முதலிய ஊர்களில் இருந்து சில கலை மன்றங்களும் போட்டிகளில் கலந்துகொண்டன.  

அவற்றிலிருந்து, களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த மூன்று கழகங்களுடைய ஏழு நிகழ்ச்சிகள் இறுதிப்போட்டிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டன.    

நான் அங்கம்வகிக்கும், இளம் நாடக மன்றத்தின் சமூக நாடகம், சரித்திர நாடகம், நாட்டுப்பாடல், வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகளும், குமரன் கலா மன்றத்தின் சமூக நாடகமும், கண்ணன் கலைக்கழகத்தின் சரித்திர நாடகம் மற்றும், நாட்டுப்பாடலுமே அந்த நிகழ்ச்சிகளாகும். கோட்டைக்கல்லாறு, தேற்றாத்தீவு முதலிய இடங்களைச் சேர்ந்த கலைமன்றங்களும் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. இறுதிப்போட்டிகளும், கலைவிழாவும் நடைபெறுவதற்குச் சில நாட்களே உள்ள நிலையில், திடீரென அவை பெரிய கல்லாற்றில் நடத்தப்படும் என்று அறிவித்தல் வந்தது.  

எங்களுக்கு அது பிடிக்கவில்லை. பெரிய கல்லாறில் நடத்தப்படக்கூடாது என்பதோ அல்லது களுவாஞ்சிகுடியிலேதான் நடத்தப்பட வேண்டும் என்பதோ எங்களது கருத்து அல்ல. ஆரம்பப்போட்டிகளும், அரை இறுதிப் போட்டிகளும் இரண்டு நாட்கள் பெரிய கல்லாறில் நடந்தன. நாங்கள் பங்குபற்றியிருந்தோம். இறுதிப்போட்டியையும், விழாவையும் அங்கேயே நடத்தலாம். அதில் தவறில்லை. ஆனால், அந்தத் தீர்மானத்தைப் பிரதேச கலாசாரப் பேரவைதான் எடுக்க வேண்டும். அதன் தலைவர் என்பதால் உதவி அரசாங்க அதிபர் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவசரமாகத் திடீரென்று, அவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான எவ்வித முகாந்திரங்களோ, சூழ்நிலைகளோ இருக்கவுமில்லை. இதுபற்றி நாங்கள் உதவி அரசாங்க அதிபரிடம் சென்று கேட்டோம். அவர் மிகவும் இறுகிய குரலில், அப்படித்தான் நடக்கும் என்றும், போட்டிக்குத் தயாராகும்படியும் சொன்னார். காரணம் கேட்டோம் அது எங்களுக்குத் தேவையில்லாத விடயம் என்று  கூறினார். 

உதவி அரசாங்க அதிபரும் பிரதேச கலாசாரப் பேரவையின் தலைவருமான அ.கி.பத்மநாதன் அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். எந்த விடயத்தையும் சட்டதிட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு அமையவே செய்பவர் என்று அறியப்பட்டவர். ஆனால், மிகவும் பிடிவாத குணம் உடையவர். சமரசத்திற்கு அவரிடம் இடமில்லை. சரியாக ஒரு விடயத்தைச் செய்யும்போது, தளர்ச்சியற்ற பிடிவாதம் போற்றத்தக்கது. ஆனால், இந்த விடயத்தில் அவர் தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை எடுத்தமையும், பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் புறந்தள்ளியமையும், தனது நிலைப்பாட்டுக்கு எவ்வித காரணத்தையும் கூறாமல் தவிர்த்ததையும் எங்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 

களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த மூன்று கழகங்களின் உறுப்பினர்களும் இந்த விடயத்தைப்பற்றி ஆராய்வதற்காக ஓரிடத்தில் கூடினோம். கலந்தாலோசித்தோம். இறுதிப்போட்டிகளில் கலந்துகொள்வதில்லை என்று, மூன்று கழகங்களும் ஏகமனதாகத் தீர்மானித்தன. எங்கள் தீர்மானத்தைப்பற்றி முன்கூட்டியே உதவி அரசாங்க அதிபருக்குத் தெரிவித்தோம். அவர் கடும் கோபமடைந்தார். அப்போதும் நாங்கள், அவரிடம் கூறியது இதனைத்தான். “கலாசாரப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டுங்கள், அதில் உங்களது தீர்மானத்தை வையுங்கள், பேரவை ஏற்றுக் கொண்டால் நாங்கள் கலந்துகொள்கிறோம்” என்று சொன்னோம். கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவசியமும் இல்லை, அவகாசமும் இல்லை என்றும், அப்படிக் கூட்டினாலும் தனது தீர்மானத்தைப் பேரவையிலும் எடுக்க வைக்கத் தன்னால் முடியும் என்றும் கூறினார். “அப்படி நடந்தால் நல்லதுதான், அதன் பின்னர் நாங்கள் போட்டிகளில் கலந்து கொள்வோம்” என்று பதிலிறுத்தோம். எப்படியும் நாங்கள் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டித்தான் வரும் என்றும், அதற்குக் கூட்டத்தைக் கூட்டவேண்டியது வீண் வேலை என்றும் அழுத்தமாகக் கூறித் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதற்குமேல் பேசிப் பயனில்லை என்று நாங்கள் வந்துவிட்டோம். 

அதன் பின்னர், இறுதிப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மூன்று கழகங்களின் நிகழ்ச்சிகளையும் வீரபத்திரர் ஆலய வீதியில் அரங்கேற்றுவதென்ற ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்கவேண்டியதாயிற்று. அதனை ஒருகலை விழாவாக நடத்துவதென்று முடிவாகிற்று. 

அதற்கான வேலைகளில் மூன்று கழகங்களின் உறுப்பினர்களும் மும்முரமாக ஈடுபட்டார்கள். மூன்று கழகங்களினதும் இணைப்பாளராகப் பணிபுரியும் பொறுப்பு என்மேல் சுமத்தப்பட்டது.   

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

கலை விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், எம்.அந்தோனிமுத்து அவர்களையும், சிறப்பு விருந்தினர்களாக பட்டிருப்பு பா.உ,  பூ.கணேசலிங்கம் அவர்கள், களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர்கள் ஆகியோரையும் அழைப்பதென முடிவு செய்யப்பட்டது. கணேசலிங்கம் அண்ணன் வருவதாக என்னிடம் வாக்களித்தார். ஆனால், மற்றைய மூவரும் வருவார்களா என்ற கேள்வியைப் பலர் எழுப்பினார்கள். உதவி அரசாங்க அதிபரின் தீர்மானத்தை ஏற்காமல், அவர் ஒழுங்குசெய்திருக்கும் போட்டிகளிலும், விழாவிலும் கலந்து கொள்ளாமல், ஏறத்தாழ அவற்றுக்கெதிராக நடத்தப்படும் விழாவுக்கு அவரே வருவாரா, அவரது கருத்தை அறியாமல் மேலதிக அரசாங்க அதிபர் வருவாரா, இவரின் வருகைக்கெதிரான கருத்தை அவர் தெரிவிக்காமல் இருப்பாரா, இவற்றுக்கு மத்தியில் இந்த விடயங்களில் எவ்வித தொடர்பும் இல்லாதவரும், ஏற்கனவே என்னுடன் தன் நெஞ்சிலே எனக்கெதிராக ஓர் எதிர்ப்புணர்வை வைத்திருக்கக்கூடியவருமான வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அவர்களும் வருகை தருவாரா என்றெல்லாம் பலகோணங்களில் எனது சிந்தனையும் ஓடியது. இருந்தாலும், நெஞ்சிலே ஓர் ஓரத்தில், நேர்மையுடனும், நல்லெண்னத்துடனும் நாம் இறங்கும் செயற்பாடுகளைப் புரிந்துணர்ந்து கொள்ளும் அறிவும், ஆற்றலும், பெருந்தன்மையும் உள்ளவரான எ.அந்தோனிமுத்து அவர்கள், தானும் வருவார், மற்றவர்களையும் வரச்செய்வார் என்ற நம்பிக்கை பூத்து மணந்துகொண்டேயிருந்தது. நேரிலே சென்று அழைப்பு விடுத்தபோது மூவரும் வருவதாகவே கூறினார்கள்.   

பாராளுமன்ற உறுப்பினர் பூ.கணேசலிங்கம்

விழாவுக்கு முதல் நாள் எங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. வருவதாக வாக்களித்த, பாராளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கம் அவர்கள் வரமாட்டாராம் என்ற அந்தச் செய்தியால் ஒருவகையில் நாங்கள் நிலைகுலைந்துதான் போய்விட்டோம். உடனடியாக அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அவர் அம்பிளாந்துறைக்குச் சென்றிருப்பதாகவும், அன்றிரவு அவர் கொழும்பிற்குச் செல்லவிருப்பதாகவும், திருமதி.கணேசலிங்கம் அவர்கள் என்னிடம் சொன்னார். இப்போதையைப்போலச் செல்லிடத்தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் அவரை நேரில் சென்று காண்பதைத்தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை. மறுநாள் விழா என்பதால் எனக்கு ஊரைவிட்டு அசையமுடியாதபடி வேலைப்பழு மிகுந்திருந்தது. “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்” என்ற வள்ளுவர் வாய்மொழிக்கமைய இந்த விடயத்திற்கு அரங்கநாதன் அண்ணன் பொருத்தமானவர் என்று நினைத்தேன். எங்கு சென்றாயினும், கணேசலிங்கம் அவர்களை நேரிலே கண்டு அவரை விழாவுக்கு வரச்செய்ய வேண்டும் என்று, பா.அரங்கநாதன் அண்ணனை வாடகைக் காரொன்றில் அனுப்பிவைத்தேன். அம்பிளாந்துறைக்கு இவர் சென்றபோது, அவர் சின்னவத்தைக்குச் சென்றுவிட்டாராம். பின்னாலேயே துரத்திச் சென்று, அவரைக்கண்டு, பேசிய அரங்கநாதன் அண்ணன் ஊருக்கு வந்துசேர இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், கணேசலிங்கம் அவர்களது வருகையின் நிச்சயமில்லாத தன்மை இறுதிவரை எங்களுக்குச் சஞ்சலத்தைக் கொடுத்துக்கொண்டேயிருந்தது.  

பா.அரங்கநாதன்

விழா தொடங்குவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னரே, மேலதிக அரசாங்க அதிபர் அந்தோனிமுத்து அவர்களும், உதவி அரசாங்க அதிபர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சொல்லிவைத்தது போல (சிலவேளை சொல்லி வைத்துக்கொண்டுதானோ என்னவோ) வருகை தந்தார்கள். கலை விழாவில் அவர்கள் கலந்துகொண்டமை, எங்கள் பக்கம் இருந்த நியாயத்தை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதற்கும், எங்களது செயற்பாடுகளை அங்கீகரித்துவிட்டார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்தது. 

சிண்டு முடிக்கும் சில மனிதர்களைச் சில மணிநேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்திப் பின்னர் அதிர்ச்சியில் உறையவைத்த மற்றும் ஒரு வருகை, விழா தொடங்கி அரைமணி நேரத்தில் இடம்பெற்றது. ஆம்! பாராளுமன்ற உறுப்பினர் பூ.கணேசலிங்கம் அண்ணனின் ஜீப்வண்டி, வேகமாகப் பிரதான வீதியில் இருந்து இடப்பக்கம் திரும்பி, மணல் வீதியில் இறங்கி, வம்மி மரத்தடியில் திரளாக நின்று விழாவைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களை விலத்திக்கொண்டு, மேடையருகே வந்து நின்றது.

(நினைவுகள் தொடரும்)