ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும்

ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும்

    — என்.செல்வராஜா, நூலகவியலாளர் ,லண்டன் — 

லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்’. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்’ பற்றிய நினைவு மீட்டலுடன் கட்டுரைக்குள் செல்லலாம்.  

பீ.பீ.சீ. மற்றும் பிரித்தானிய தொலைக்காட்சி செய்திகளில் கலவரம் தொடர்பாக அடிக்கடி காட்டப்பட்ட ஒரு காட்சி மனதில் இன்னும் படிமமாக உறைந்துகிடக்கிறது. இக்கட்டுரையை வடிவமைக்கத் தொடங்கும்போது ஏனோ அது மீளவும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தது. கலவரபூமியில் உடைக்கப்பட்ட ஒரு ஆசியரின் கடை. அதன் உரிமையாளர் செய்வதறியாது விறைத்த பார்வையுடன் கடையினுள் நிற்கிறார். அவரது கண்களுக்கு முன்னால் அவரது பொருட்கள் போவோர் வருவோரால் சூறையாடப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அவர் சாய்ந்து நிற்கும் அலுமாரியிலிருந்து அவரை நகரச்சொல்லிவிட்டு ஒரு சிறு பெண் அதிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்கிறாள். அவரையும் தங்களில் ஒருவராகக் கருதி தான் எடுத்த பொருட்களிலொன்றை அவரின் கைகளிலேயே திணித்துவிட்டு நகர்கிறாள்.  

இப்பொழுது கட்டுரையினை எழுதத் தூண்டிய கருப்பொருளுக்கு வருகிறேன். இன்று காலை சிறிதுநேரம் சமூக வலைத்தளத்தில் உலாவிக்கொண்டிருந்த வேளை எனது புதிய நூலொன்றின் வெளியீடு பற்றிய அட்டைப் படத்துடனான செய்தியினை பகிர்ந்திருந்த நண்பர் ஒருவரின் பின்னூட்டமொன்றில் ‘இதன் மின்வடிவம் எங்கு பெறலாம்?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். ‘அறிந்து சொல்கிறேன்’ என்று மற்றொருவர் பதில் எழுதியிருந்தார். நூல் வெளியிட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அதன் இலவச ‘பீ.டீ.எப்.’ களையும் ‘மின்நூல்’ வடிவங்களையும் தேடித்திரியும் ஒரு புதிய வாசகர் பண்பாட்டு வெளிக்குள் நாங்கள் புகுந்துவிட்டோமே என்ற ஆதங்கமே இக்கட்டுரைக்குக் காரணம்.  

ஒரு நூலை விலைகொடுத்து வாங்கும் கலாச்சாரத்திலிருந்து இலவசமாக அதனை சிரமமில்லாத நவீன தொழில்நுட்பம் தந்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்நூலை ‘சுடச்சுட’வாசித்துவிட்டுக் கடந்துசெல்லும் மனப்போக்கு எம்மில் பலருக்கும் தோன்றுவதற்கு ‘ஸ்மார்ட் போன்’களும், சமூக வலைத்தளங்களும் இணையத்தில் மலினமாக்கப்பட்டுவிட்ட மின்வருடப்பெற்ற நூல்களும், இணையவழி நூலகங்களும் காரணமாகிவிட்டன.  

ஒரு நூலைத் தனது சொந்த வருவாயிலும், கடன்பட்டும் பிரசவ வலியுடன் அச்சிட்டு வெளியிட்டு, அதன் விற்பனையில் வரும் வருவாயில் அச்சகத்திற்கு செலவிட்ட பணத்தின் ஒரு பங்கையாவது செலுத்திக் கடன்பளுவிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் ஆசிரிய வெளியீட்டாளரின் மனநிலையை இந்த சமூகத்தள வாசகர்கள் எவரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.  

இன்று இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய ‘ஸ்கானிங் அப்ஸ் (Scanning Apps)’கள் இல்லாத ஸ்மார்ட் போன்களை காணமுடியாதுள்ளது. எதிர்காலத்தில் போன் வாங்கும்போது, இத்தகைய Appsகளை பில்ட் இன் அப்ஸ் (Built-in Apps)களாக ஐபோன் தயாரிப்பாளர்கள் வழங்கினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. இத்தகைய வசதிகளின் விளைபொருட்களாக இப்பொழுது எம்மவரின் அண்மைக்கால நூல்களில் பல துல்லியமான PDFகளாக இலத்திரனியல் உலகில் வலம் வருகின்றன. இந்த PDFகளை உருவாக்கிக்கொள்வது ஒருவரது ‘ஆய்வுத் தேவை’ என்ற ஓட்டையின் கீழ் பதிப்புரிமைச் சட்டத்தை மீறாத செயலாக தோன்றியபோதும், அதனை இரண்டாம் நபர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வது அப்பட்டமான சட்டமீறலாகும். 

பதிப்புரிமைச் சட்டம் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினால் 1911ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இது ‘British Copyright Act of 1911’ எனக் குறிப்பிடப்படுகின்றது. கிழக்கிந்தியக் கம்பெனியினர், இங்கிலாந்து எழுத்தாளர்களின் நூல்களின் பிரதிகளை இந்தியாவுக்குக் கடத்தி வந்து அங்கே மீள அச்சிட்டு இந்திய உபகண்டத்தில் விற்பனை செய்யும் ‘கள்ள வேலை’களில் ஈடுபட்டுவந்ததினால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பர் வரலாற்றாசிரியர்கள்.  

இதனை இலகுவில் கண்டறியும் நோக்கில் தான், ஒரு நாட்டில் அச்சிடப்படும் அத்தனை நூல்களை அச்சகச் சட்டத்தின்கீழ் அரசாங்க பதிவாளருக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும், அப் பதிவாளர் தனக்குக் கிடைக்கும் நூல்களை பட்டியலிட்டு மாதாந்தம் அரசாங்க கசட் பத்திரமாக வெளியிட்டு வரவேண்டும் என்றும் ஒரு நியதியிருந்தது. அதுவே இன்று தேசிய நூலகத்தின் நூற்பட்டியலாகப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. 

இந்தியாவில் அறிமுகமான பதிப்புரிமைச் சட்டம் அடுத்த ஆண்டே இலங்கையில் ‘Ceylon Copyright ordinance No.20 of 1912’ என்ற பெயரில் சுமார் 67 ஆண்டுகள் மாற்றமின்றி நடைமுறையில் இருந்தது. இச்சட்டம் பின்னர் 1979இல் புதியதொரு சட்டத்தின்மூலம் இற்றைப்படுத்தப்பட்டது. ‘புலமைச் சொத்துச் சட்டம்’ இல. 52: 1979′ என்ற வழங்கப்படும் ‘Code of Intellectual Property Act No: 52 of 1979’ என்பதே அச்சட்டமாகும். இது இலங்கையிலுள்ள எழுத்தாளர்களினதும் பாவனையாளர்களினதும் உரிமைகளைப் பற்றி விரிவாக வலியுறுத்துவதுடன் அவர்களுக்கு நியாயமான பாதுகாப்பையும் வழங்குகின்றது. இச்சட்டம் மீண்டும் 2003இல் திருத்தங்களை உள்வாங்கி ‘2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டம்’ என்ற பெயரில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.  

இலங்கையில் தேசிய புலமைச் சொத்துக்களுக்கான தலைமை அலுவலகம் (The National Intellectual Property Office of Sri Lanka) 3வது மாடி, சமாகம் மெதுர, இல.400, டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு-10 என்ற முகவரியில் உள்ளது. இவ்வலுவலகத்தின் தொடர்பாடலுக்கான தொலைபேசி இலக்கம் (0094) 112 689 368 என்பதாகும். உங்கள் நுலொன்று பொருளாதார ரீதியில் உங்களுக்கு நட்டமேற்படும் வகையில் தனிநபரினாலோ, அச்சகமொன்றினாலோ துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிந்தால், உடனடியாக இவ்வலுவலகத்துடன் தொடர்புகொண்டு வேண்டிய ஆலோசனையினைப் பெறலாம். அண்மைக் காலத்தில் இலங்கையில் சக படைப்பாளிகளுக்கு நேர்ந்த பாரபட்சம் பற்றிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும், இவர்களது இணையத்தளத்தில் தகவல்களை காணமுடிகின்றது. பதிப்புரிமை பெறுவதற்கு எழுத்தாளர்கள் எங்கும் தமது நூலை பதிவசெய்யவேண்டியதில்லை. ஒரு நூல் விற்பனைக்காக பதிப்பகத்தை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அந்த நுலுக்கான பதிப்புரிமை இயல்பாகவே ஆசிரியருக்கு கிடைத்துவிடும். அவராக எழுத்துமூலம் மற்றொருவருக்கோ, நிறுவனமொன்றுக்கோ தனது உரிமையைத் தாரைவார்த்துக் கொடுத்தாலேயன்றி பதிப்புரிமை ஆசிரியருக்கானதே. இதனை ஒவ்வொரு நூலாசிரியரும் தனது நூலில் பதிவுசெய்துவைப்பது நல்லது.  

பதிப்புரிமைச் சட்டம் அல்லது புலமைச்சொத்துச் சட்டத்தில் உள்ள சிறியதொரு ஓட்டை தான் ‘நியாயமான பயன்பாடுகள் (Fair Use)’ எனப்படும் பதப்பிரயோகமாகும். உங்களது நூலை விலைகொடுத்து வாங்கும் ஒருவர் அதனை பலருக்கும் இரவல் கொடுத்துப் பெறுவதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவர் உங்கள் புத்தகத்தை ‘ஸ்மார்ட் போன்’ மூலம் மின்வருடல் செய்து அதனை PDF வடிவில் பிரதியாக்கி பொதுவெளியில் மற்றவரின் பாவனைக்கு இலவசமாகவேனும் விடமுடியாது.  

ஈழத்தவரின் ஆவணங்களைப் பதிவுசெய்யும் நூலகம்.ஓர்க் (Noolaham.Org) இணைய நூலகம் இதன் காரணமாகவே ஒரு நூலை மின்வருடல் செய்தாலும் அதனை பொது வெளியில் இலவசமாக விடுவதற்கு எழுத்தாளரின் எழுத்து மூலமான அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுத்தாளர் மறைந்து 70 ஆண்டுகள் வரை அவரது பதிப்புரிமை சட்டத்தினால் எழுத்தாளரின் சட்டபூர்வ வாரிசுகளுக்காக பாதுகாக்கப்படுகின்றது. ஆசிரியர் மறைந்து 70 ஆண்டுகளின் பின்னர் அப்படைப்பாக்கத்தை எவரும் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் தான் மதுரைத் திட்டம் சங்க இலக்கியங்களையும் பாரதியார் பாடல்களையும் பக்திப் பிரபந்தங்களையும் உள்ளடக்கிய மின்நூல் வடிவங்களை இலவசமாகத் தரவிரக்கம் செய்துகொள்ள வழியமைத்துக் கொடுக்கின்றன. நூலகம்.ஓர்க் ஈழத்தவரின் முழு நூல்களையும் ஆவணப்படுத்திப் பகிரமுனையும் தனது கனவை நனவாக்கமுடியாது உள்ளதும் இத்தகைய சட்டச்சிக்கல்களால் தான்.  

இந்தக் கைங்கரியங்களை அநாமதேயங்களாக பலரும் சுதந்தரமாகப் பிரதியெடுத்துப் பகிர்ந்துகொள்ளும் தவறான ஒரு முயற்சி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையின் வரவாகும்.  

லண்டனில் எனக்கு நன்கு பரிச்சயமான தீவிர வாசகர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடும்போது குறித்த ஒரு புதிய நூல் பற்றிப் பேசிய சிறிது நேரத்தில் 150 பக்கம் கொண்ட அந்நூலின் பீடீஎப் பிரதியை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் படைப்பாளியையும் நான் நன்கறிவேன். அந்த நூலை வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடும் எனக்குத் தெரிந்ததே. உடனடியாக என்னுடன் தொடர்புகொண்ட அந்த ‘நல்ல உள்ளத்தை’ மீண்டும் தொலைத் தொடர்பில் இணைத்து, இந்த மின்நூல் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்றேன். அதற்கு அவர் எவ்வித மனக் கிலேசமுமின்றி, ‘நான் வாங்கும் புத்தகங்களை நேரம் கிடைக்கும் போது, இப்படி பீடிஎப் ஆக்கி வைத்துக்கொள்வேன். தேவைப்படுபவர்களுக்கு தபால் செலவின்றி அனுப்பி உதவலாம் அல்லவா?’ என்றார். அவரிடம் ஏறத்தாழ 70 நூல்கள் வரை மின்நூல்களாக இருக்கின்றன என்ற தகவலையும் போகிற போக்கில் போட்டுடைத்தார். அவருக்கு பதிப்புரிமைச் சட்டத்தின்  இருப்பைப் பற்றியும் அதன் தீவிரத்தையும், நண்பர் அறியாமையால் இழைத்துவரும் சட்டமீறல் பற்றியும் விளக்கமளித்தேன். அன்றிலிருந்து தனது சேகரிப்பிலுள்ள மின்நூல்களில் எதையும் அடுத்தவருக்குப் பகிர்வதை அவர் நிறுத்திக்கொண்டார். 

எம்மவரின் நூல்களை மின்நூல் வடிவில் சமூக ஊடகங்களில் தேடிப்பெற்றுப் பகிர்ந்து கொள்ளும் தமிழகத்து புத்திஜீவி ஒருவருடன் கதைத்தபோது, அவரது கருத்து என்னை சிந்திக்கவைத்தது.  

இந்திய இறக்குமதிக் கொள்கைகளின் கீழ், தனது பிராந்திய மொழிகளில் எழுதப்படும் நூல்களை இறக்குமதி செய்வதில் பலத்த கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட தேசத்து மொழிகளுடன் தமிழ்நாட்டின் தமிழும் இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு பாதகமான இந்தியாவின் இந்த இறக்குமதிச் சட்டத்தினை திருத்தி எழுதுவதற்கு தமிழக சட்டசபையோ, தமிழகத்தின் தமிழ் சகோதர எழுத்தாளர்களோ இன்றுவரை முன்வராமல் கள்ளமௌனம் காப்பதற்கு, தமது பதிப்புத்துறை ஏகபோக உரிமையுடன் நாடுகடந்தும் செழிக்கவேண்டும் என்ற ‘நல்லெண்ணமே’ காரணமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது. வாசகரிடம் வேறு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். இப்பொழுது புரிகின்றதா அன்று ஆறுமுகநாவலரும் பணம்படைத்த யாழ்ப்பாணப் பண்டிதர்களும் தமது படைப்பாக்கங்களுடன் சிதம்பரத்துக்கும், சென்னைக்கும் ஏன் கப்பலேறிப் போனார்கள் என்று? 

ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்தியாவின் இச்சட்டம் செல்லாது. தாங்கள் எழுதிப் பதிப்பிக்கும் எல்லாவித ‘ஆக்கங்களும்’ தாராளமாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று சுதந்திரமாகப் பறந்து செல்லும். இதனால் இலங்கைத் தமிழர்களின் தமிழ் நூல்களை இந்தியாவில் அச்சிட்டாலேயன்றி இந்திய ஆய்வாளர்களுக்கு அவற்றை வாங்கிப் படிக்க வாய்ப்பில்லை. நண்பர்கள் மூலம் தபாலிலும், நேரிலும் தருவித்துக்கொள்வதே அவர்களுக்கெனத் திறக்கப்பட்டுள்ள ஒரே வழியாகக் காணப்படுகின்றது. எஸ்போவும், அ.முத்துலிங்கமும், புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளும் படைக்கும் ஆக்கங்களே பெரும்பாலும் அவர்களின் ஈழத்தவரின் தமிழ் ஆய்வுக்குப் போதுமானதாக உள்ளது. தமிழகத்தில் தனது நூலை அச்சிடும் ஒரு புகலிடத்தின் அறிமுகப் படைப்பாளியை அறிந்துகொண்டுள்ள அளவுக்கு, தமிழக வாசகருக்கு தமிழகத்தில் தமது பதிப்பகத்தைத் தேட முனையாது உள்ளூர் பதிப்பகங்களுடன் நின்று தமது படைப்பாக்கங்களை வெளிக்கொண்டுவந்திருந்த ஈழத்தின் முதுபெரும் படைப்பாளிகளைக்கூட தெரியவில்லை.  

இந்நிலையில் மின்நூல்களே தமிழகத்தவருடனான புலமைத்துவ அறிவுப் பகிர்வுக்கு வழியமைக்கின்றன என்கிறார் என்னுடன் கதைத்த அந்தத் தமிழகப் புத்திஜீவி. நூலகம்.ஓர்க் இணையத்தின் நூல்களை விட மேலதிகமாக சட்டவிரோதமான மின்வருடல்களும் இலவசமாக அவர்களைச் சென்றடைகின்றன எனவும் அறியமுடிகின்றது.  

இந்நிலையில் எதிர்காலத்தில் எமது படைப்பாளிகள், ஈழத்துப் பதிப்பாளர்களை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு, தமது நூல்களை இணையத்தில் இயங்கும் நூல் வெளியீட்டு அறக்கட்டளைகளை நாடி, தமது நூல்களை (பேஜ் மேக்கிங்) வடிவமைத்துக்கொண்டு, மின்நூல் வடிவில் மாத்திரம் அவற்றைத் தயாரித்து உலகத் தமிழ் வலைத்தளங்களில் இலவசமாகப் பரவவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலுள்ளது. இப்பொழுதே புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் எமது படைப்பாளி இ.தியாகலிங்கம் உள்ளிட்ட பலரும் தமது நாவல்களை மின்நூல் வடிவில் வெளியிடத் தொடங்கிவிட்டனர்.  

இத்தகைய குழப்பகரமான, ஈழத்தமிழ்ப் படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் கிட்டியுள்ள ஆரோக்கியமற்ற ஒரு விநியோகச் சூழலில் தான் இந்த பீடீஎப் வாசகர்கள் சமூகவலைத் தளங்களின் வழியாக இலவச வாசிப்புக்கான மின்நூல்களைத் தேடி அலைகின்றார்கள். இத்தகைய பகைப்புலத்தில்தான் தான் இக்கட்டுரையின் ஆரம்பப் பந்திகளில் நான் குறிப்பிட்டிருந்த லண்டன் கலவரத்தில் சிக்கியிருந்த ‘அந்தக் கடைக்காரரின் ஏக்கம் நிறைந்த முகம்’ என் மனதில் ஏனோ வந்து போயிற்று. கையறு நிலையில் நின்றிருந்த அவரின் கண்களில் தெரிந்த அந்த ஏக்கப் பார்வை- எனக்கு ஏனோ எவ்வித அரச ஆதரவும் அற்று சுயம்புகளாக எழுந்து நின்று தமக்கென விதிக்கப்பட்ட பிரசுரகளத்தில் நின்று தனித்துப் போராட விடப்பட்டுள்ள எமது ஆசிரிய/ வெளியீட்டாளர்களின் பார்வையையே ஒத்திருந்தது.