பெருநாள் உடுப்பு (சிறுகதை)

பெருநாள் உடுப்பு (சிறுகதை)

 — பியாஸா தாஹிர், எலமள்தெனிய,கெலிஓய — 

“அக்கா, ஒரு கறி ரொட்டி தாங்கோவன்.” 

பாடசாலை சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்து ‘ப்ளேன் டீ’ குடித்துக்கொண்டிருந்த எங்களின் கவனம் திரும்புகிறது அவளின் பக்கம். ஒரு கையில் ‘ஸ்கூல்பேக்’, மறுகையில் இரண்டு வயது மதிக்கத்தக்க சின்னப் பையன். அவளைப் பார்க்கும்போது இன்னும் படிப்பு முடிக்கிற வயது கூட ஆனமாதிரித் தெரியவில்லை. இந்த வயதிலேயே இரண்டு பிள்ளைகளோடு அவளைப்பார்க்கப் பாவமாக இருக்கிறது. நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு இலேசான புன்னகை. அந்தப் புன்னகையில் எந்த நோக்கமும் இல்லை. எந்த ஈர்ப்பும் இல்லை. அவளின் சிந்தனை எல்லாம் வேறு எங்கோ லயித்திருக்கிறது…. முடிவில்லாத ஒரு தொலைதூர வினாவில்… விடையே இல்லாத வினாவில்… அவளது இந்தப் புன்னகை கூட இப்போது அந்த சிந்தனையில் தான் போய் முடிந்தது.. 

கறிரொட்டி கிடைக்கிறது. இரண்டாகப் பிரித்து கையில் இருக்கும் சிறுவனுக்கு ஒரு துண்டு கொடுத்து விட்டு மற்றதை எடுத்துக்கொண்டு வெளியே போகிறாள். நான் வாசலை எட்டிப் பார்க்கிறேன். கீர்த்தி நிற்கிறாள். பக்கத்திலிருந்த சக ஆசிரியத்தோழி “கீர்த்தியோட அம்மாதான்” என்கிறாள், என்னைப் பார்த்து. ஓ…அப்போ கையில் இருந்த ஸகூல்பேக் கீரத்தியுடையது போல…” சரி, இப்பத்தானே இன்டர்வல். அதுக்குள்ள ஏன் கீர்த்தி போறாள்? ஏதும் சுகமில்லையா?” அவளைக் கேட்டேன். “தெரியேல்ல. ஆனால் கன நேரமா அவங்கட அம்மா அதிபர்ட ஓபிஸ்ல நிண்டு கதச்சிட்டு இருந்தத கண்டேன்” என்கிறாள். நான் வெளியே எட்டிப் பார்க்கிறேன். என்னைப் பார்த்தும் கீர்த்தி கையைக் காட்டிவிட்டு கறி ரொட்டியைக் கடித்துக்கொண்டே ஸ்கூல் கேட்டைத் தாண்டுகிறாள். 

நாங்கள் ப்ளேன்டீ குடித்துவிட்டோம். டைம் டேபிளைப் பார்க்கிறேன். அடுத்து 7ம் வகுப்புக்குக் கணித பாடம். ஒரு நிமிடம் பிந்தி விட்டாலும் அவ்வளவுதான். இரண்டு பேர் கைய கால ஒடச்சிட்டு நிப்பான்கள். இன்றைக்கி பின்னங்கள் ஆரம்பிக்க வேணும். ஏற்கனவே தயாரித்து வைத்த சில செயலட்டைகளை எடுப்பதற்காக ஆசிரியர் ஓய்வறையை நோக்கி விரைகிறேன். உள்ளே நுழையும் முன்னே தமிழ் பாட ஆசிரியையின் குரல் 

“இப்பத்தான் எனக்கு என்டால் நிம்மதி. இல்லாட்டில் உந்தப் பிள்ளையோட வகுப்பில் இருந்து படிப்பிக்க எனக்கேலாது. ஒவ்வொரு நாளும் காலையிலேயே ஏதாவது ஒரு குழப்பம்…. படிப்பிக்கும் போதும் வேறு ஏதாவது நோண்டிக் கொண்டிருக்கும். நாம சொல்வதைக் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டு தான் ஸ்கூல் வருது போல..”  

“ஓம்… படிப்புத்தான் வராது என்றால் கொஞ்சம் ஒழுங்கா ‘டிரஸ்’ பண்ணிட்டு சரி வாரது தானே… அதைப் பார்த்து அடுத்த பிள்ளையலும் கெட்டுப் போறாங்கள்…” -அந்தப் பகுதிக்குப் பொருப்பான பகுதித் தலைவர்.  

“அவ்வளோ தூரம் இருந்து இங்க டவுன் ஸ்கூலுக்கு வாரதுக்கு ஊர் ஸ்கூலுக்குப்போனா தான் என்ன” -அவளது வகுப்பாசிரியை. 

ஏதோ பெரிதாக சாதித்து விட்ட திருப்தி அவர்களுக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை . 

************************************************************* 

இந்தப் பாடசாலைக்கு கட்டுரு பயில்வுக்காக வந்த ஓரிரு நாட்களிலேயே கீர்த்தியைக் கண்டு கொள்கிறேன் நான். அவளின் தோற்றமும் நடத்தைகளும் அவளை எல்லோருக்கும் காட்டிக்கொடுத்துவிடும். அவள் வித்தியாசமானவள். அவளது வறுமையும் இயலாமையும் அவளது தோற்றத்திலேயே தெரியும். அவள் படிப்பிலும் பின்னடைவையே காட்டினாள். அவளுக்கென்று நண்பர்களும் இல்லை.. இந்த ஆறு வருடப் பாடசாலை நாட்களால் அவளுக்கு எழுத்துக்களை மட்டுமல்ல ஒரு நல்ல நட்பைக் கூடக் கொடுக்க முடியவில்லையே. அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். இறைவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆற்றலை, அறிவை வழங்குவது இல்லையே…. அதனால் அவளால் பாடத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்குள் இருக்கும் ஆற்றலை இவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 

எனக்கு அவளது வகுப்புக்கு பாடம் இல்லை. ஆனாலும் பக்கத்திலுள்ள வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் அவளை பார்த்து இருக்கிறேன். பின்வரிசையில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கும் கதிரையும் மேசையும்தான் அவளது இடம் அந்தவகுப்பில். அந்தக்கதிரை அநேகமான நாட்களில் காலியாகத்தான் இருக்கும். அவள் பாடசாலைக்குவரவில்லை என நினைத்துக்கொள்வேன். ஆனாலும் பிறகு அநேகமான நாட்களில் அவளை வகுப்பிற்கு வெளியே காணும் போதுதான் புரிந்து கொண்டேன் அவளுக்கு வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை என்று. அப்படியே அவள் வகுப்பில் இருந்தாலும் அவளை வெளியே அனுப்ப எல்லோருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். வீட்டு வேலை செய்யவில்லை, பாடத்தை கவனிக்கவில்லை என்று..  

நான் அடுத்த வகுப்பிற்கு செல்லும் போதெல்லாம் அவளின் வகுப்பில் ஆசிரியர் இல்லாவிட்டால் அவளை அழைத்துச் சென்று எனது மேசை அருகிலேயே அமரச் செய்து ஏதாவது வரையும் படி சொன்னால் வரைவாள். அவளின் வாழ்க்கையைப் போலன்றி அவளின் சித்திரங்கள் வண்ணமாக இருக்கும். அவளுக்கு விரும்பியபடி பார்த்து எழுதக் கொடுத்தால் மெதுமெதுவாக எழுதுவாள். அப்போதெல்லாம் எந்தக் குழப்பமும் செய்வதில்லையே… பாடம் முடிந்து வெளியே போகும்போது அடுத்த பாடத்துக்கும் உங்க கூடவே வரவா என்று கேட்பாள்…  

நான் அவளை எந்தளவு ஆழமாக நேசித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எப்போதும் எனது பார்வை அவள் பக்கமாக இருந்திருக்கிறது… அவளின் கள்ளங்கபடமற்ற பேச்சு, எந்தப் பொய்கழுமற்ற அவளது செயற்பாடுகள், சில தனிமையான பொழுதுகளில் அவளின் புன்னகை கூட என்னை ஈர்த்திருந்ததை பின்னாட்களில் தான் நான் உணர்ந்து கொண்டேன்.  

************************************************************* 

என்னை அறியாமலேயே எனது பார்வை அவளது கதிரைக்குச் செல்கிறது. இடம் காலியாக இருக்கிறது. நெஞ்சில் ஏதோ ஒரு நெருடல். இனி ஒருபோதும் அவள் அந்தக் கதிரையில் அமரப்போவதில்லை என நினைக்கும்போது மனதில் ஏதோ ஒரு வலி. அவளின் ஊர் ஸ்கூலில் போயாவது அவள் விரும்பியவாறு ஒழுங்காகப் படிக்க வேண்டும் என அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்வேன். 

கல்லூரியில் விடுமுறை தருவது என்றால் உலகின் அதியுச்ச சந்தோஷங்களில் ஒன்றாகவே நாங்கள் பார்க்கிறோம். ஏப்ரல் மாத விடுமுறைக்காகப் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வருவதற்காக பஸ் ஸ்டான்டை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த பஸ்ஸை விட்டால் இன்னும் அரை மணித்தியாலத்துக்கு மேல காத்திருக்க வேணும். நண்பிகள் எல்லாரும் இந்த பஸ்ஸில் தான் போறாங்கள். பிறகு நான் தனியத்தான் போக வேண்டி வரும். எல்லாத்துக்கும் மேல இதுல வீட்டிற்குப் போனா அரைமணித்தியாலம் கூட வீட்டில் இருக்கக் கிடைக்கிமே.. அதுதான் பெரிய விசயமே… 

“அக்கா.. மல்லிப்பூ வாங்கிக்கோக்கா… இன்னும் இரண்டு முழம் தான் இருக்கு வாங்கிக்கோ… மல்லிப்பூ… ”  

எங்கேயோ கேட்ட குரல். கீர்த்தி!  

“ஏய் கீர்த்தி… இங்க என்ன பண்றீங்க? ஸ்கூல் போகலையா?” 

“இல்ல டீச்சர்… பூ தரவா? மல்லிப் பூ? வைச்சா நீங்க வடிவா இருப்பீங்க டீச்சர்..” 

நான் ஹிஜாப் போட்டிருக்கிறேன். எனக்கு எதற்கு பூ… நாங்கள் பூ வைப்பதில்லை என்றெல்லாம் யோசிக்க தெரியாத வெள்ளை உள்ளம் அவளுக்கு.. அவளின் கையில் உள்ள பூவைப் போலவே… உண்மையில் எனக்கு பூ தேவையில்லையே.. சரி.. ஆனாலும் அந்த இரண்டு முழத்தை வாங்கிக்கொள்கிறேன் … 

“கீர்த்தி.. ஏன் ஸ்கூல் போகல்ல? தனியாவா இங்க நிக்கிறீங்க?”  

“இல்ல டீச்சர்… அதோ அம்மா….” கையால் காட்டுகிறாள்.  

அவளின் கையிலும் வெண்ணிற வாடா மல்லிகைப் பூக்கள் தான் … 

என் மனது வாடி விடுகிறது. மனம் தவிக்க நடக்கிறேன் பஸ் ஸ்டான்டை நோக்கி. இப்போது என் நடையில் இருந்த வேகம் எங்கே போயிற்று… ஏன் என் கால்கள் நடக்க மறுக்கின்றன… நான் இந்த வழியால் வராமல் இருந்திருக்கக்கூடாதா…. அல்லாஹ்வே….!! 

நாட்கள் நகர்கின்றன. கட்டுறுப்பயில்வு பயிற்சியின் இறுதி நாட்கள். இந்த முறை ரமலான் மாத நோன்புடனேயே பாடசாலை செல்ல வேண்டியிருக்கிறது. பெருநாளைக்கு இன்னும் ஒருகிழமை மாத்திரமே இருக்கிறது. 

இன்றோடு பயிற்சி நிறைவு பெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ். இனி வீட்டில்தான் இன்ஷாஅல்லாஹ். நினைக்கவே ஆசை ஆசையாக இருக்கிறது. இந்த மூன்று வருடங்களும் எப்போது தான் முடியும் என்று காத்து காத்து இருந்து ஒரு மாதிரியாக இப்போதுதான் இந்த நாள் வந்திருக்கிறது.  

பாடசாலை விட்டு விடுதி செல்ல ஆட்டோ வரும் வரை காத்திருக்கிறேன் .  

“டீச்சர்… டீச்சர் …” சட்டென்று திரும்புகிறேன் -கீர்த்தி.  

“நாளையோடு நீங்க போய் விடுவீங்களா உங்க ஊருக்கு? இனிமேல் இங்கு வர மாட்டீங்களா …” அவளது கண்கள் கலங்குகின்றன. அவள் தான் இப்போது ஸ்கூலிற்கே வருவதில்லையே… பிறகு நான் இருந்தால் தான் என்ன.. போனால் என்ன..? 

“யாரு உனக்கு சொன்னாங்க? ” 

“தனு தான் சொன்னாள். நான் அவளிட்ட ஒவ்வொரு நாளும் உங்களப் பத்தி கேப்பேன் டீச்சர். டீச்சர் இன்னக்கி என்ன சாரி போட்டாங்க…. எப்படி இருந்தாங்க… எல்லாமே…” 

அவள் சிரித்துக் கொண்டே சொல்கிறாள்… எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை.  

இவ்வளவு நாட்களாக, நாட்களையும் மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் இங்கு இருக்க வேண்டும் போலிருக்கிறது… கீர்த்திக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவள் ஒழுங்காப் படிப்பத் தொடர வேணும். இதற்கு என்னால எதுவுமே செய்ய ஏலாதா? இவ்வளவு சீக்கிரம் பயிற்சி முடிய வேண்டுமா என்பது போல் ஆகிவிட்டது எனக்கு….. அல்லாஹ்வே… 

“டீச்சர்… இந்தாங்க… உங்களுக்கு..  

அம்மாட்ட சொல்லி நான் வாங்கினது..” 

என் கையில் திணிக்கிறாள் ஒரு பார்சலை..  

“கீர்த்தி… எடுத்துட்டு போங்க.. நல்ல பிள்ளை தானே.. ப்ளீஸ்.. இது எனக்கு வேணாம்மா… அம்மாக்கிட்டவே கொண்டு போய் குடுங்க…” – நான் கெஞ்சுகிறேன். 

“ஏலாது.. நான் உங்களுக்கென்டு தான் வாங்கினேன்.. வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க …” 

அவள்  கேட்பதாக இல்லை. ஓடி விட்டாள்.  

பெருநாள் தொழுவதற்காகப் பள்ளிக்குச் செல்ல பெருநாள் உடுப்பை எடுக்கிறேன். என் மனதில் இனம் புரியாத ஒரு வலி. அவளின் சின்ன முகம் என் கண் முன்னே வந்துபோகிறது. கண்கள் கலங்க பள்ளிக்குச் சென்று தொழுதுவிட்டு வெளியே வருகின்றேன். வழமையாக சந்தித்துக் கொள்ளும் நண்பிகள் கூட்டம்.   

“என்ன… இந்த முறை பெருநாளைக்கு ‘நோர்மலா ‘வாங்கிக்கிறாய்…. கொலேஜ்ல இருந்ததால செலக்சனுக்கு டைம் கிடக்கல போல….”  

வழமையாக லேட்டஸ்ட் மொடல் பெஸ்ட் சல்வாரை வாங்கும் நான், இம்முறை கீர்த்தி தந்த பரிசிலே ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாக இருப்பது அவர்களுக்கு வித்தியாசமாகத்தானே இருக்கும். 

இதுவரை கொண்டாடிய எத்தனையோ பெருநாட்கள் என் கண்முன்னே வந்து போகின்றன. எந்தப் பெருநாளிலும் உணராத ஒரு வலியுடன் கூடிய திருப்தியை எனக்குள் உணர்கிறேன். 

இந்த ‘நோர்மல்’ பெருநாள் உடுப்பின் பின்னால் இருக்கும் பெறுமதிமிக்க அந்த பிஞ்சின் சின்ன உழைப்பு கண்களில் தோன்றி மறைகிறது. பெருநாள் உடுப்பைப் பிடித்து பார்க்கிறேன் மீண்டும் ஒருமுறை. இப்போது மல்லிகை பூ வாசம் வீதி எங்கும் வீசுவதாய் உணர்கின்றேன்….