அமெரிக்கா அழைக்கிறது: சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? (காலக்கண்ணாடி – 36)

அமெரிக்கா அழைக்கிறது: சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? (காலக்கண்ணாடி – 36)

       — அழகு குணசீலன் —

இலங்கை தமிழ் டயஸ்போராவுக்காக “வெள்ளை மாளிகை” மட்டுமல்ல “பென்ரகொன்”னும் தனது கதவை திறந்து வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதவுக்கு பின்னால் மூலைக்குள் உதவி ஜனாதிபதி கமலா ஹரிஷ்  அமெரிக்க தேசிய கொடியில் ஒளிந்து நிற்கிறார். தமிழ் டயஸ்போரா உள்ளேபோக கதவு மூடப்படும். பின்னர் உள்ளே போனவர்கள் வெளியே வரமுடியாது. இது அமெரிக்க வெளியுறவுக்கொள்கை வரலாறு. ஆக, ஆப்பிழுத்த குரங்கின் கதை..!

“TAMILS 4 OBAMA”, “TAMILS  4 KAMALA” என்று அமெரிக்க தமிழ் டயஸ்போரா தேர்தலில் செயற்பட்டது. இதில் இலங்கை தமிழ் டயஸ்போராவும் ஒரு சிறுபகுதியினர். ஏனெனில் அமெரிக்க தமிழ் டயஸ்போராவில் இந்தியர்கள், கிழக்காசியாவைச் சேர்ந்த தமிழர்கள்தான் அதிகம். இப்படி நிலைமை இருக்க, இந்த அழைப்பை சில ஊடகங்கள் தமிழீழம் கிடைத்த மாதிரி ஊதித்தள்ளுகின்றன. 

இங்கு எழுப்பப் படவேண்டிய கேள்விகள் பல.

அமெரிக்காவுக்கு திடீரென இலங்கை தமிழ் டயஸ்போரா மீது காதல் வரக் காரணம் என்ன?  

அமெரிக்கா யாருடைய நலனுக்காக இந்த அன்பு அழைப்பிதழை அனுப்பி இருக்கிறது?

அது ஏன் தன் ஆசிய பசுபிக் பிராந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பில் இலங்கை தமிழ் டயஸ்போராவை உள்வாங்கி இருக்கிறது?

கிளின்டன், ஒபாமா காலத்திலும் டயஸ்போரா இருந்ததுதானே, இப்போது மட்டும் ஏன் இந்தக் கரிசனை?

நோர்வேயின் சமாதான முயற்சிகள் உண்மையில் நோர்வேயினுடையதா? 

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வேலையைத்தானே நோர்வே செய்தது. இல்லையேல் வாஷிங்டனுக்கும், டெல்லிக்கும் எரிக்சொல்கைம் ஒவ்வொரு பேச்சுக்கும் பின்னர் ஆலாவாய்ப் பறந்ததேன்?

அமெரிக்காவுக்கு உலகின் பல டயஸ்போராக்களை கையாண்ட அனுபவம் உண்டு. இந்த பட்டியலில் இரண்டாம் உலகப்போரின் பின்னரான யூத டயஸ்போரா முதல் இன்றைய சிரியா டயஸ்போரா வரை குறிப்பிட முடியும்.

இந்த வரிசையில் கியூபா, வியட்நாம், ஈரான், துருக்கி- குர்திஸ்தான், சீனா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா, ஆப்கானிஸ்தான், இந்திய -பஞ்சாப்/சீக்கியர் போன்ற பல டயஸ்போராக்கள் அடங்கலாக உள்ளன.

இந்த நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலாவது அமெரிக்கா அந்த நாட்டு மக்களின் நலன்கள்சார்ந்து செயற்பட்ட வரலாறு கிடையாது. மாறாக இந்த நாடுகளில் எல்லாம் தனது நலன் சார்ந்து, இருந்ததையும் இல்லாது அழித்து, அந்த நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்த வரலாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இலங்கைத் தமிழ் டயஸ்போராவை நோக்குவதற்கு முன் மற்றைய டயஸ்போராக்களை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என்ற அனுபவங்களை பெறுவது அவசியமாகும்.

துருக்கியும் குர்திஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையும்!

குலான் என்ற இஸ்லாமிய மதக் கல்வியாளர் தனது குரான் பாடசாலைகள் ஊடாக இஸ்லாமிய ஷரியா சட்டத்தை தழுவிய இஸ்லாமிய அரசை துருக்கியில் அமைக்க முயற்சிக்கிறார் என்று துருக்கி அரசு அவர் மீது குற்றஞ்சாட்டியது. குலான் துருக்கியில் இருந்து தப்பி அமெரிக்கா சென்றார். குலானை அமெரிக்கா வரவேற்றது. அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியதுடன் சி.ஐ.ஏ.யின் முக்கிய புள்ளிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. துருக்கி அரசுக்கு எதிரான டயஸ்போராவுக்கு குலான் தலைமை தாங்கினார்.

2011 இல் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பின்னரும் குலானின் மதவாத அமைப்பை சி.ஐ.ஏ அல்கைடாவில் இருந்து வேறுபடுத்திப் பார்த்தது. அல்கைடா இஸ்லாமிய தீவிரவாத்திற்கு மாற்றான ஒரு அமைப்பாக குலானின் இயக்கத்தை அடையாளப்படுத்தி சான்றிதழ் வழங்கியது.

2016 இல் துருக்கியில் ஏர்டோகான் ஆட்சியை கவிழ்த்து, தமக்கான கைப்பொம்மை அரசை நிறுவ குலான் இயக்கத்தின் ஊடாக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவச் சதி முயற்சி தோல்வியில் முடிந்தது.

இலங்கையில் தமிழர்கள் போன்று குர்திஷ் மக்கள் துருக்கியில் தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள். குர்திஷ் விடுதலை இயக்க தலைவர் ஒச்சலானை அமெரிக்க சி.ஐ.ஏ ஆபிரிக்க நாடொன்றில் வைத்து கைது செய்து அன்றைய துருக்கி நட்பு  அரசிடம் ஒப்படைத்தது. 

ஒச்சலான் இராஜதந்திர பயணம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா செல்வதற்காக ஆபிரிக்காவில் இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். இவரின் கைதுக்குப் பின்னர் குர்திஷ் விடுதலை இயக்கம் பாரிய பின்னடைவைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் போராடிவருகிறது.

அமெரிக்காவில் உள்ள குர்திஷ் டயஸ்போராவைப் பயன்படுத்தி சிரியாவில் ஐ.எஸ்க்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா மேற்கொண்டது.

குர்திஷ் மக்கள் துருக்கியில் மட்டுமன்றி சிரியா, ஈராக் நாடுகளிலும் வாழ்கின்றனர். இவற்றை இணைத்த “குர்திஸ்தான் தனிநாடு” அவர்களின் கொள்கையாக உள்ளது. 

சிரியா யுத்தத்தில் குர்திஷ் விடுதலை இயக்கம் அமெரிக்காவுக்கு உதவினால் குர்திஸ்தான் தனிநாடு அமைக்க உதவுவதாக கூறியே இவர்களின் ஆதரவைப்பெற்றது. இதற்கு அமெரிக்க குர்திஷ் டயஸ்போராவை அமெரிக்கா பயன்படுத்தியது.

இப்போது அவர்களை நடுத்தெருவில்விட்டுச் சென்றுள்ளது. குர்திஷ் போராளிகள் தமது விடுதலைக்காக துருக்கி, சிரியா, ஐ.ஸ். இராணுவங்களுக்கு எதிராக தனித்து நின்று போராடுகின்றனர்.

இது அமெரிக்கா டயஸ்போராக்களை தனது நலன் சார்ந்து இயக்கும் கறிவேப்பிலை அரசியல் என்பதை ஈழத்தமிழ் டயஸ்போரா உணர்ந்தால் சரி.

இஸ்ரேலும் பலஸ்தீன விடுதலைப்போராட்டமும் !

இரண்டாம் உலகயுத்தத்தை தொடர்ந்து அதிகளவான யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினர். இவர்கள் பொருளாதார வளம் கொண்ட சமூகமாக இருக்கின்றமையால் மற்றைய டயஸ்போராக்களை விடவும், அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். இதனால் தான் குடியரசு அல்லது ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யூத டயஸ்போராவை தவிர்த்து பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியாமல் உள்ளது.

வெளிப்பார்வைக்கு ஜனநாயக கட்சி அவ்வப்போது பாலஸ்தீனம் சார்பாக பேசினாலும் பாரிய மாற்றம் ஒன்றை செய்ய முடியாமல் உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் கண்மூடித்தனமான ஆதரவு அமெரிக்க யூத டயஸ்போராவினால் நிர்ணயிக்கப்படுகிறது.

அப்பட்டமாகவே பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகிறது.

இரு தேசங்கள் என்ற கொள்கை அடிப்படையில் ஐ.நா.வினால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையிலும் இஸ்ரேலையும், அமெரிக்காவையும், அமெரிக்க யுத டயஸ்போராவையும் மீறி பலஸ்தீனம் விடுதலை அடையப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து அத்துமீறல்களையும், எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. போதாக்குறைக்கு பலஸ்தீனர் மீது முழுப்பழியையும் போடுகிறது, பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டுகிறது.

பாலஸ்தீன, குர்திஷ் விடுதலைப் போராட்டங்களை தனது நலனுக்கு பயன்படுத்தும் அமெரிக்க மேலாதிக்கத்திடம் இருந்து தமிழ் டயஸ்போரா எதிர்பார்ப்பது என்ன? அடையப்போவது என்ன?

இலங்கையும் தமிழீழ விடுதலைப்போராட்டமும்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான பங்களிப்பில் அமெரிக்காவுக்கும் கணிசமான பங்கு உண்டு. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து காரியத்தை கவனமாக முடித்து விட்டு, தீடீரென தமிழ் டயஸ்போராவை அழைத்திருப்பதன் பின்னணி என்ன?

போராட்ட காலத்தில் தமிழ் டயஸ்போரா ஒருவரையறுக்கப்பட்ட சுய வேலிக்குள் நின்று செயற்பட்டது. நிதிசேகரிப்பு, தமிழ் சமூகத்தை கண்காணித்தல், விடுதலைப்புலிகளின் யுத்த வெற்றியை கொண்டாடி பரப்புரை செய்தல் மற்றும் கல்வி, கலாச்சார, மத செயற்பாடுகளூடாக தமிழ் டயஸ்போராவை வழிநடத்தல்.

அதாவது தமிழ் டயஸ்போரா ஒரு துணைப்பாத்திரத்தையே வகித்தது.

தீர்மானம் எடுக்கின்ற அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. தீர்மானம் எடுக்கும் மத்திய நிலையமாக – சர்வசக்தியாக புலிகளின் தலைமையே இருந்தது. மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் மௌனிக்கவேண்டி இருந்தது.

2009 க்கு பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சர்வதேச தலைமைச் செயலகத்தில் அதிகாரப்போட்டி ஏற்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டபோது இன்னும் ஒரு படி பிளவு ஏற்பட்டது. பின்னர் காலப்போக்கில் பல்வேறு டயஸ்போரா அமைப்புக்கள் தோன்றின. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பலம் இழந்தது.

மறுபக்கத்தில் டயஸ்போராவில் முதலாம் தலைமுறைக்கும், இரண்டாம் தலைமுறைக்கும் இடையிலான சந்ததி இடைவெளி அதிகரித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டி எழுப்புவதில் டயஸ்போரா அமைப்புக்களுக்கிடையில் நிறையவே கருத்து முரண்பாடுகள் உண்டு.

தாயக மக்கள் ஆயுதப்போராட்டம் அற்ற அன்றாட வாழ்வியலுக்கான உரிமையையும், அபிவிருத்தியையும் வேண்டி நிற்கின்ற நிலையில், டயஸ்போராவில் ஒரு பகுதியினர் ஆயுதப்போராட்டத்திற்கு மீளத்திரும்ப  விரும்புகிறார்கள்.

தமிழ் இளையோர் அமைப்பு, கனடா தமிழர்களின் தேசிய சபை என்பன இதற்கு சிறந்த உதாரணம். இந்த அமைப்புக்கள் சிறிலங்கா அரசுடன் ஒற்றையாட்சிக்குள் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றை புறந்தள்ளி ஒத்துழைக்கும்  அமைப்புக்களை பகிஷ்கரிப்பதாக அறிவித்தன.

இதை அமெரிக்கா நன்கு அறிந்து வைத்துள்ளது. தாயக மக்கள் விரும்பும் இணக்க அரசியலில் தான் அதிகம் மூக்கை நுழைக்க முடியாது. ஆனால் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டுள்ள டயஸ்போராக்களுக்கு ஏதாவது பொய்யான நம்பிக்கைகளை வழங்கி தன்பக்கம் இழுக்க முடியும் என்பது அமெரிக்காவின் அரசியல் தூண்டில்.

மூன்றாகப் பிரிந்து நிற்கின்ற தமிழ்த் தேசியத்தில் அரசியல் செல்வாக்குள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணக்க அரசியல் பேசும்போது அவர்களை தன்பக்கம் வழிக்குக் கொண்டுவருவது இலகுவானதல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவில் தொங்குகின்ற அளவுக்கு அமெரிக்காவில் தொங்காது.

இந்தியாவும் இதை விருப்பவும் போவதில்லை.

இந்த நிலை மேலாதிக்க அரசுகளுக்கு தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இவ் அமைப்புக்களை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை வழங்கியது. இதன் வெளிப்பாடாகவே அமெரிக்கா தனது கதவை தமிழ் டயஸ்போராவுக்கு திறந்து வைத்துள்ளது. போராட்டகால தமிழ் டயஸ்போராவை விடவும் பல துண்டுகளாக உடைந்து கிடக்கின்ற இன்றைய டயஸ்போராவை கையாள்வது அமெரிக்காவுக்கு இலகுவானது.

அமெரிக்காவுக்கு இலங்கையில் அரசியல் தளம்பல் நிலையை ஏற்படுத்த ஒருதரப்பு தேவை. முதலாளித்துவ சார்பு ஆட்சி மாற்றம் அதன் குறி. அதற்கான அமெரிக்க தேர்வு தமிழ் டயஸ்போரா. ஒரு குழு சிக்காது விட்டால் மறு குழு வலையில் விழும் என்பது அமெரிக்க யுக்தி. இதற்கு தமிழச்சி என்ற போர்வையில் கமலா ஹரிஷ்ஷை கொண்டு தமிழ்தரப்பை இலகுவாக வலையில் வீழ்த்தவும் முடியும்.

இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு கேந்திர முக்கியத்துவ பூகோள அமைவிடத்தைகொண்டது. தென்மேற்கு வங்கக்கடலும், தென்கிழக்கு அரபிக் கடலும் அதன் அமைவிடத்தை மேலும் முக்கியப்படுத்தகின்றன.

சீனாவின் பட்டுவீதி என்றும் இல்லாதவாறு விரிவாக்கம் பெறுகிறது.

இன்றைய சுழலில் சீன, இந்திய முக்கியத்துவத்தை பிராந்தியத்தில் குறைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உண்டு.

இலங்கை சீனாவுக்கும், இந்தியாவுக்கும் வழங்கும் முக்கியத்துவம் அமெரிக்காவின் தூக்கத்தை கலைப்பதாக உள்ளது. எனவே டயஸ்போராவை தனது கைக்குள் போட்டு ஏதாவது ஒரு தீர்வை தீனியாக தூண்டிலில் போட்டு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் சமநிலையை தளர்த்த முயற்சிக்கப்படுகிறது.

மேலாதிக்க வல்லரசு அரசியல் பலம், ஆயுத பலம் என்பவற்றை உலகமயமாக்கம் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளிவிட்டது.

பொருளாதார வலிமையே முதன்மை பெறுகிறது. இதை இந்தியாவும், சீனாவும் பிராந்தியத்தில் கொண்டுள்ளன. இலங்கை இதற்காக இந்த நாடுகளில் தங்கி இருக்கின்றது.

எனவே பொருளாதார ரீதியில் போட்டி போடமுடியாத அமெரிக்கா அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதன் மூலம் பொருளாதார, அரசியல் உறுதியை தளர்த்த முயல்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களான இந்தியாவையும், சீனாவையும் பொருளாதார உறுதியற்ற தன்மையூடாக பாதிப்படையச் செய்வது நோக்கம். இதன்மூலம் இலங்கையை சற்று தன்பக்கம் இழுக்கவும்  முடியும்.

அதற்கான அரசியல் கருவியே தமிழ் டயஸ்போரா.  கியுபா, வியட்நாம், ஈரான் டயஸ்போராக்களும் இதேவழியில் தான் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டன. இந்த நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

சீக்கிய டயஸ்போராவை அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியதையும் இங்கு நோக்கமுடியும். இந்திராகாந்தி காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இருதுருவங்களாக செயற்பட்டன.

அணிசேரா இயக்கத்தில் ஃபிடல்கஸ்ரோ, டீட்டோ, இந்திராகாந்தி, சிறிமாவோஆகியோர் மிகப்பலமான தலைமைத்துவமாகவும், சோவியத் சார்பாளர்களாவும் இருந்தனர். சீக்கிய டயஸ்போராவை பயன்படுத்திய அமெரிக்கா இந்திராகாந்தியின் கதையைமுடித்தாக இந்திய புலனாய்வு அமைப்பான றோ சந்தேகம் எழுப்பியது.

இங்கு ராஜீவ்காந்தியின் கொலைபற்றியும் பேசவேண்டி உள்ளது.

தோழர் தா.பாண்டியன் குறிப்பிட்டிருந்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்த தமிழ் டயஸ்போராவை பயன்படுத்தியே அமெரிக்கா ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

தோழர் தா.பாண்டியன் தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர், ராஜீவ் காந்தியை மேடைக்கு அழைத்துச் சென்றவர். புலிகளை அழித்தே தீருவோம் என்று வாஜ்பாஜ் இந்திய பாராளுமன்றத்தில் சந்தித்த போது தன்னிடம் சொன்னதாக வெளிப்படையாகவே தெரிவித்தவர் தோழர்.தா.பாண்டியன்.

ஈழவிடுதலைப் போராட்டத்தை தோற்கடித்த முக்கிய நிகழ்வு ராஜீவ்காந்தியின் படுகொலை. இது தமிழ் டயஸ்போரா கற்க வேண்டிய பாடங்களில் ஒன்று.

 ஆக, அமெரிக்கச் சோழியனின் குடும்பி சும்மா ஆடாது ….!