புலம் பெயர்ந்த சாதியம் – 5

புலம் பெயர்ந்த சாதியம் – 5

      ­ — அ. தேவதாசன் — 

இலங்கை யுத்தம் பல இலட்சம் தமிழர்களை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்து வாழ வழி செய்தது. இதற்கான வாய்ப்பு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் கிடைத்தது. பொதுவாக புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு வருவதென்பது எல்லோராலும் முடியாது. பொருளாதார பலம் உள்ளவர்கள் மட்டுமே வரமுடியும்.

வடபகுதி மக்களில் பெரும்பகுதியானவர் நடத்தர வர்க்க மக்களாக இருப்பதனால் காணி, நிலம், நகை, சீட்டு என சேமிப்பு இருந்தது. இவர்களால் மட்டுமே மேற்கத்தைய நாடுகளுக்கு பயணிப்பது பற்றி யோசிக்க முடியும். நானும் எனது பெற்றோர்கள் குடியிருந்த வீட்டை ஈடு (அடகு) வைத்தே பிரான்ஸ் பயணித்தேன். என்னைப் போன்றே ஓரளவுக்கு வளமுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் மேற்குலக நாடுகளை நோக்கி வந்து சேர்ந்தனர். உயர்ந்த சாதியினர் எனச்சொல்லப்படுவோர் வெளியேறியதால் ஒரு நன்மை உண்டு, அது யுத்த ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் வெளியேறியதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று யுத்த ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது, இரண்டாவது சாதிய தீண்டாமையிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவது.

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகம் இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில் கல்வி நிலையில் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எம் தேசத்தில் பொருளாதார நெருக்கடியும், பெற்றோரின் ஊக்கமின்மையும், பாடசாலைகளின் பாரபட்சமான செயற்பாடும் “ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர்” கல்வி கற்பதும், அதில் முன்னேறுவதும் வெகு தூரமாகவே இருந்தது. பல சவால்களை எதிர்கொண்டு கல்வித்தகுதியில் முன்னேறினாலும் சாதித்தகுதி கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம் இடம்பெயர்ந்த மேற்குலக நாடுகளில் மருத்துவம், பொறியியலாளர், சட்ட வல்லுநர்கள் இவ்வாறு பலதரப்புகளிலும் வளர்ச்சி பெற்று வரும் வாய்ப்பு பிந்தங்கிய சமூகங்களுக்கும் கிடைத்திருக்கிறது.

அதற்கும் மேலாக அவர்கள் வாழுகின்ற நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அரசியலில் பங்கு கொண்டு பிராந்திய அளவிலும் மாவட்ட அளவிலும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு அரச அதிகாரத்திலும் பங்காளர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.   

பிரான்சில் நான் வசிக்கும் பிராந்தியமான கார்ஜு பகுதி உதவி மேயராக ஒரு இளம் பெண்ணும் நோர்வே தலைநகரான ஒஸ்லோவில் உதவி மேயராக ஒரு இளம் பெண்ணுமாக இச் சமூகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் பதவி வகித்து வருகின்றனர். இலங்கையில் அதிலும் வட மாகாணத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க இதுவரை எந்த சாத்தியங்களும் இல்லை. தமது திறமைக்கும் முயற்சிக்கும் தடைபோட இது தமிழ் தேசமும் இல்லை. தமிழர் நிர்வாகமும் இல்லை.  

ஒஸ்லோவில் உதவி முதல்வராக பதவியில் இருந்த பெண் யாழ்ப்பாணம் சென்றபோது தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டார். சாதி வெறி பிடித்தவர்கள் எழிய சாதிகள் எங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை எனக்கூறி அவமானப்படுத்தப்பட்டார். தனது தேசத்திற்கு நல்லது செய்யலாம் எனும் ஆர்வத்துடன் சென்றவர் அவமானத்தோடு நோர்வே திரும்பினார். இத்தனைக்கும் அந்தப் பெண் தமிழ்த்தேசிய பாலை உண்டு வளர்ந்தவர். இருப்பினும் அறிவுரை சொல்வதற்கான தகுதி ஆதிக்க சாதிக்கு மட்டுமே உரித்தானது என்பது எழுதப்படாத விதியாகவே  உள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எனச்சொல்லப்படுவோர் கல்வியில் வளர்ந்த அளவு இன்றுவரை பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறவில்லை. அதற்கான காரணம் பணத்தை சேமிக்க தெரியாமை. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அது அறவே தெரியாது. பணத்தை சேமித்து பணத்தை வைத்து பணம் உழைக்கும் வித்தை தெரியவில்லை. அன்றாடம் உழைத்து அன்றாடம் சாப்பிட்டு வளர்ந்த சமூகம். பணத்தின் ஆளுமை பெரிதாக புரியாத சமூகம்.

உயர்ந்த சாதி எனச்சொல்லப்படுவோர் அப்படியல்ல. வியாபாரத்தில் பணம், பொருள் சேர்ப்பதில் மிகப் பெரிய அனுபவம் பெற்றவர்கள். வெள்ளைக்காரன் ஆட்சி காலத்திலேயே இலங்கையின் மூலை முடக்குகளிலும் சிறு கடைகள், வியாபார நிறுவனங்கள் என நடாத்தி வந்தவர்கள். அந்தத் தொழில்நுட்பம் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு அது சார்ந்த தந்திர மந்திரங்களை அறிந்து கொண்டவர்கள். 1982 காலப்பகுதி வரை இலங்கை முழுவதும் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு உறுத்தலாக இருந்தாலும் ஜெயவர்தனா ஆட்சிக்காலத்தில்தான் தென்னிலங்கையில் இவர்ககளின் போருளாதார முகாம்களை அழிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அதிகமான வியாபாரிகள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தனர். இந்த நாடுகளின் பொருளாதார முறைமை அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான நிலையை ஏற்படுத்தியது. இன்று சர்வதேச வியாபாரிகள் வரிசையில் வளர்ந்துள்ளார்கள் என்பது மிகையல்ல. இந்த வியாபார வளர்ச்சி இலங்கை தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.

ஒரு சில மனிதர்களின் (குழுக்களின்) வன்முறைச் சம்பவங்களுக்கும் அதற்கான தூண்டுதலாக இருப்பவற்றுக்கும் குறிப்பிட்ட ஒன்றே புறக்காரணியாக இருந்துவிட முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த வகையில் சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தான் எதிர் கொள்ளும் சமூக அவமானங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது வன்முறை வழியாகவே எதிர் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் அப்படி ஒரு சந்தர்ப்பமாகவே சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அமைந்ததாகவே என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.

இதனை தர்க்க ரீதியாக நாம் நியாயம் செய்ய முடியாது. இதை சமூக உளவியல் பார்வையூனூடாகவே அணுகி அறிய முடியும். அந்த வகையில் புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்கு கிளைகள் உருவானது போல் இளைஞர் குழுக்களும் பல உருவாகின. குறிப்பாக பிரான்சில் முக்காலா, வெண்ணிலா, பாம்பு இப்படி பல குழுக்கள் உருவாயின. இதில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வந்த இளைஞர்கள் கணிசமாக இணைந்து கொண்டனர். சீட்டு, வட்டி, காதல் போன்ற விடயங்களில் தலையிட்டு அவைகளை அதிகளவு வன்முறை மூலமே தீர்த்துவைப்பவர்களாகவே இவர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அடி, தடி சம்பவங்களையும் தாண்டி பல குத்து, வெட்டு, கொலைகள் வரை சென்றிருக்கின்றன.  

பிரச்சினைகள் தீர்ந்திருக்கிக்கிறதோ இல்லையோ பல குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் பகைமையை வளர்ந்திருக்கிறனர். இவர்களது உளவியலை புரிந்து கொண்ட சிலர் தமது அரசியல் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருவதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. அவர்களில் பலர் முக்காலா, வெண்ணிலா போன்ற குழுக்களில் இணைந்ததை எண்ணி கவலைப்பட்டேன். தொடர்ச்சியான பிரெஞ்சு அரசின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால் அவ்வாறு செயற்படும் காரியங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. முன்பு இவ்வாறு செயற்பட்ட பெரும்பாலானவர்கள் இன்று குடும்பமாகி அமைதியாக வாழ்ந்து வருவதுடன் முன்னேற்றகரமான தொழில்களை நோக்கி நகர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
( தொடரும்……)