கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை

தம்பியப்பா கோபாலக்கிருஸ்ணன்
தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு


1989ஆம் ஆண்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் தீர்வு இருக்க வேண்டும். எனினும் சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர் மாற்றமடைந்துள்ள தற்போதைய களநிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யவேண்டும்.

1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழ்ப்பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, பாண்டிருப்பு 1, பாண்டிருப்பு 2, பெரியநீலாவணை 1, பெரியநீலாவணை 2, நற்பிட்டிமுனை 1, நற்பிட்டிமுனை 2 மற்றும் சேனைக்குடியிருப்பு என்பனவாகும்.

மேற்குறிப்பிட்டுள்ள பத்து கிராம சேவகர் பிரிவுகளும்தான் பின்னாளில் இருபத்தியொன்பது (29) தமிழ்ப்பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளாகின. பின்வரும் அட்டவணை அதனைத் தெளிவுபடுத்தும்.

நற்பிட்டிமுனை முஸ்லீம்பிரிவும் மருதமுனையும் பின்னாளில் அதாவது 1989க்குப் பின்னர் பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவுடனும் கல்முனை முஸ்லீம் பிரிவுடனும் இஸ்லாமாபாத் மற்றும் கல்முனை நகருடனும் சேர்ந்து பதினைந்து (15) முஸ்லீம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளாயின. அவை வருமாறு.

இந்தப் பதினைந்து முஸ்லீம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்பற்ற முறையிலே கல்முனை தெற்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவற்றில் கல்முனை முஸ்லீம் பிரிவும், இஸ்லாமாபாத் 10 கல்முனை நகர்ப்பிரிவும் 1989 இன் பின்னர் சட்டத்திற்குப் புறம்பாக ஏற்படுத்தப் பெற்ற கிராம சேவகர் பிரிவுகளாகும். இப் பதினைந்து கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்பற்ற முறையிலே கல்முனை தெற்கு முஸ்லீம் செயலகப் பிரிவின் கீழ் இயங்குவது நிர்வாக ரீதியாக ஒரு முரண்பாடாகும்.

கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டால் இவ்வீதிக்குத் தெற்கே உள்ள பகுதி கல்முனை தெற்கும் (கல்முனைக்குடி) வடக்கில் உள்ள பகுதி கல்முனை வடக்கும் (கல்முனை நகர் + பாண்டிருப்பு + மருதமுனை + பெரியநீலாவணை + சேனைக்குடியிருப்பு + நற்பிட்டிமுனை) ஆகும்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு எனும்போது பூகோளரீதியாக அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகள் வருமாறு.


வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லை (பெரிய கல்லாறு கிராமம்).

தெற்கு : கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி (கல்முனைக்குடிக் கிராமம்).


கிழக்கு : வங்காள விரிகுடாக் கடல்
.


மேற்கு : கிட்டங்கி வாவி
.

இந்த எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு என்பது பூகோள ரீதியாக நிலத்தொடர்புள்ள வகையிலே மேற்குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளையும் 15 முஸ்லீம் கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. அதாவது இந்த 44 (2910 15) கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்புள்ள வகையிலேயே அமைந்துள்ளன.

ஆனால், இதன் குடிப்பரம்பல் பின்வருமாறு அமைகிறது.

முஸ்லீம்​:​ 31,338
தமிழர்​​:​ 31,199
சிங்களவர்​:​ 168
ஏனையோர்​:​ 1,083
மொத்தம்​:​ 63,788

இது முஸ்லீம் பெரும்பான்மையாகவும் தமிழர்களும் முஸ்லீம்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்டச் சமனாகவும் அமைவதால் கடந்த முப்பது வருடகால கல்முனைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமாட்டாது. ஆகவே, இது திருப்தியான தீர்வாகமாட்டாது. ஆனால் இதற்குள் பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவும் (KP/72,KP/72A, ஆகிய கிராமசேவகர் பிரிவுகள்) மருதமுனைக் கிராமமும் (KP/67, KP/67A, KP/67B, KP/67C, KP/67D மற்றும் KP/68 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்) இணைந்து மொத்தம் 08 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவும் மருதமுனைக் கிராமமுமம் அருகருகே நிலத்தொடர்புள்ளவை.
இந்தப் பின்னணியில், மேற்குறிப்பிட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதான உபபிரதேச செயலகத்தையே தரமுயர்த்தித் தருமாறு எழுந்தமானமாகத் தமிழர் தரப்புக் (கல்முனை வடக்கு சிவில் சமூகத்தினர்) கோருவது கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு என்பதன் உண்மையான தாற்பரியத்தை உணர்த்துவதாயில்லை.

மேற்படி 29 தமிழ்ப்பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதாக உத்தேச கல்முனை வடக்குப் (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவு தரமுயர்த்தப்பட்டால்; மேலே குறிப்பிட்ட 15 முஸ்லீம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்பற்ற வகையிலே கல்முனை தெற்கு முஸ்லீம் செயலகப் பிரிவின் கீழ் தொடர்ந்திருப்பது ஒரு பிழையான முன்னுதாரணமும் நிர்வாகச் சிக்கல் நிறைந்ததுமாகும். நிலத் தொடர்பற்ற துண்டுகளாக இருக்கும் இவை சீரான நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். இந்த விடயம்தான் தீர்வுக்குத் தடையாகவும் உள்ளது. எனவே நடைமுறைச் சாத்தியமான பின்வரும் தீர்வு யோசனை முன்வைக்கப்படுகின்றது.


இல : 01 மேற்குறிப்பிட்ட கல்முனை வடக்குப் பிரதேசத்திலே அமைந்துள்ளதும் தற்போது கல்முனை தெற்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் நிலத் தொடர்பற்ற முறையிலே இயங்குவதுமான பதினைந்து (15) முஸ்லீம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுள், பெரியநீலாவணையில் அமைந்துள்ள இரண்டு (02) முஸ்லீம் கிராம சேவகர் பிரிவுகளும் மருதமுனையில் அடங்கியுள்ள ஆறு (06) முஸ்லீம் கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்புள்ளவையாக அதாவது அயலிலுள்ளவையாக இருப்பதனால் இந்த எட்டு (08) கிராம சேவகர் பிரிவுகளையும் இணைத்து ‘மருதமுனைப் பிரதேச செயலகப் பிரிவு’ (இல:01) எனும் பெயரில் புதிய தனியான பிரதேச செயலகப் பிரிவொன்றினை உருவாக்கலாம்.

இல : 02 அப்படி ஆக்கும் போது கல்முனை வடக்குப் பிரதேசத்தில் எஞ்சிய 36 (44 – 08) நிலத் தொடர்போடு கூடிய கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் குடிம்பரம்பல் பின்வருமாறு அமைகின்றது. இதனை உத்தேச வடக்குப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தலாம் (இல:02). இதன் குடிபரம்பல் பின்வருமாறு அமையும்.

தமிழர்​​​:​ 31,999
முஸ்லீம்​​:​ 13,895 (31, 338 – 17,433 = 13, 895)
சிங்களவர்​​:​ 168
ஏனையவர்கள்​: 1,083
மொத்தம்​​: ​46,345 (63,788-17,443 = 46, 345)

தமிழர்​​​:​ 31,999
முஸ்லிம்​​:​ 13,895
சிங்களவர்​​:​ 168
ஏனையவர்கள்: ​1,083
மொத்தம்​​: ​46,345

குறிப்பு : இவற்றில் KP/59(கல்முனை முஸ்லீம் பிரிவும்), KP/59A (இஸ்லாமாபாத் 10 கல்முனை நகரம் பிரிவும்) எனப் பெயரிடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகள் சட்டரீதியற்றவை. இவை முறையே, கல்முனை – 01 அல்லது KP/61/1 மற்றும் கல்முனை – 03 அல்லது KP/59/1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் பகுதியாகவே கருதப்படவேண்டும்.

இது நிலத்தொடர்புடையதாக இருப்பதனாலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் தமிழ், முஸ்லீம், சிங்களவர் என (பறங்கியர்களும் அடங்குவர்) மூவின மக்களைக் கொண்டதாகவும் இருப்பதனாலும் இதனையும் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக (இல 2) உருவாக்க (தரமுயர்த்த) முடியும். இது தமிழர்களுக்குத் திருப்பதியான தீர்வாகும். இப்பிரிவில் தமிழர்கள் சுமார் 70% ஆக இருப்பர்.

இல 03 அப்படி ஆக்கும்போது கல்முனை தெற்கு முஸ்லீம் பிரிவில் எஞ்சியிருக்கின்ற 14 கிராம சேவகர் பிரிவுகளையும் அதாவது கல்முனைக்குடியை இன்னுமொரு தனியான பிரதேச செயலகப் பிரிவாக (இல 03) உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும் போது இந்த உத்தேச மூன்றாவது பிரிவின் மொத்த சனத்தொகை (100% முஸ்லீம்) 23,830 ஆகும்.

குறிப்பு : தேவையேற்பட்டால் இதனை அயலிலுள்ளதும் முன்பு முழுக் கரவாகுப்பற்றுப் (கல்முனை) பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 2002இல் பிரிக்கப்பட்டதுமான தற்போதைய சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுடன் இணைத்தும் விடலாம்.

இதுவே, தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதிலுள்ள (நிலத்தொடர்பற்ற பிரச்சனை உட்பட) பிரச்சினைகளைத் தீர்த்துப் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும். மேற்கூறப்பட்ட இல 01 (உத்தேச மருதமுனை பிரதேச செயலகப் பிரிவு), இல 02 (உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு – தரமுயர்த்தப் படவேண்டியது), இல 03 (உத்தேச கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு) என மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமானது.
அப்படி உருவாக்கும்போது, முஸ்லீம்களுக்கென்று 100% முஸ்லீம்களைக் கொண்ட இரு பிரதேச செலயகப் பிரிவுகளும் (இல 01, இல 03), தமிழர்களுக்கென்று தமிழ், முஸ்லீம், சிங்களவர்களைக் கொண்ட தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் (70%) பிரதேச செயலகப் பிரிவொன்றும் (இல 02) அமைய வாய்ப்புள்ளது.