தந்தை செல்வா இப்படிச் சொன்னாரா?

தந்தை செல்வா இப்படிச் சொன்னாரா?

  — எஸ் .எம். வரதராஜன் – நியூசீலாந்து —

தந்தை செல்வா சொன்னார் – என்று சொல்லி ஓர் ஒளிப்படம் பகிரிகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், 

“அகிம்சைப் போராட்டம் தோல்வியடையும் நிலையில் என்னுடைய அடுத்த தலைமுறை ஆயுதம் ஏந்திப் போராடும்” என்று தந்தை செல்வா சொன்னார் – எனப் பொறிக்கப்பட்டுள்ளது.   

தந்தை செல்வா அப்படிச் சொன்னார் என்பதும் அவர் சொல்லித்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது என்றும் இது பொருள்படுகிறது. 

இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட மறுப்புத் தெரிவித்ததாக இல்லை.  

சிலவேளை தந்தை அப்படிச் சொல்லவில்லை – என்று தாம் சொன்னால், அவரைத் துரோகிப் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமோ தெரியவில்லை.  

தந்தை செல்வாவினதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் வரலாற்றை நன்கு தெரிந்தவர்கள் தந்தை செல்வா அப்படிச் சொல்லியிருப்பார் என்பதை ஏற்கமாட்டார்கள். 

1983 இன வன்செயலுக்குப் பின்னரும் கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இந்திய இராணுவம் இலங்கை வந்து விடுதலைப் புலிகள் மோதிய வேளையிலும் தந்தை செல்வா சொன்ன வழியிற் தான் கூட்டணித் தலைவர்கள் அகிம்சை வழியில் பேச்சுவார்த்தை மூலமேயே தொடர்ந்து படிப்படியாகத் தீர்வைப் பெறுவதில் முயன்று கொண்டிருந்தனர். 13 ஜூலை 1989ஆம் ஆண்டு பௌத்தாலோக மாவத்தையில் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் அகிம்சைப் போர் முடிவுக்கு வந்தது. 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976இல் நிறைவேற்றப்பட்டவேளை இளைஞர்கள் ஆயுதமேந்தத் தொடங்கிவிட்டனர். 1975ஆம் ஆண்டு முதலே தங்கத்துரை குழுவும் (டெலோ) பிரபாகரன் குழுவும் (புதிய தமிழ்ப் புலிகள்) இயங்கத் தொடங்கிவிட்டன. 

ஆனாலும், அதன் பின்பும்- தந்தை செல்வா அன்றைய ஶ்ரீமாவோ அரசின் அமைச்சர் செல்லையா குமாரசூரியரினூடாக பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க (இன்று சிலர் குறிப்பிடும் அன்றைய பசில் ராஜபக்ச), கே பி ரத்னாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

எதற்கும், இது தொடர்பாக தந்தையுடன் பழகியவர்கள், அவர் காலத்தவர்கள்  சிலரிடம் கேட்டபோது,  

அவர் அப்படிப் பேசவில்லை. கூட்டமைப்புக்காரர் யாராவது அப்படிக் கோட்பண்ணியிருப்பார்கள்” 

அவர் ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை”  

அவரது கடைசி உரைபேட்டி என்பவற்றில் ஆயுதப் போராட்டம் தொடர்பாக ஏதும் சொன்னாரோ என்னவோ அதை மாற்றி யாரும் இப்படிச் சொன்னார் என எழுதியுள்ளனர் போலும். ஆனால் அவர் இப்படிப் பேசவில்லை”  

இப்படி அவர் சொல்லவில்லை. சிலர் அவரது கடைசி பாராளுமன்ற பேச்சை மேற்கோள் காட்டி பேசுவதை கேட்டிருக்கிறேன். அதை நான் வாசிக்கவில்லை. அவரது கடைசி பாராளுமன்றப் பேச்சை எடுத்தால் பார்க்கலாம். ஆனால் நேரடியாக இப்படி அவர் பேசவில்லை. நம்மவர்கள் சிலருக்கு கற்பனை வளம் அதிகம்” 

– என்ற பதில்களே வந்தன. 

 நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தோழர் சண்முகதாசன் இந்துமதத் தெய்வங்களிடம் ஆயுதங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி “தமிழ் மக்களின் தெய்வங்களே ஆயுதங்களை வைத்திருக்கும்போது கூட்டணியினரிடம்  கேட்கிறேன். தலைவர்களில்  எவராவது துணிந்து ஆயுதப் போராட்டம் தான் எமக்கு வழிசமைக்கும் என்று கூறட்டும் பார்ப்போம்” என்று சவால் விடுத்துப் பேசியிருந்தார். அந்தக் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். 

இனித் தந்தை செல்வா ஆற்றிய கடைசிப் பாராளுமன்ற உரை, அவரது கடைசிப் பேட்டி என்பவற்றைப் பார்ப்போம். 

1976 நவம்பர் திருமலைக் கடைசிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்: 

எனக்கு இப்போது வயது 78 ஆகிவிட்டது. நான் இன்னும் கனகாலம் இருப்பது ஐமிச்சம். சாகுமுன்பு தமிழினத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டுச் சாகவிரும்புகிறேன்.” 

1976 நவம்பர் 19 இல் தமிழர் பிரச்சினை பற்றிப் பாராளுமன்றில் பேசினார். அதுவே அவரது கடைசிப் பாராளுமன்ற உரையாகும். 

தமிழ் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்கு நாங்கள் ஒரு காலத்தில் சமஷ்டி இயக்கத்தை ஆரம்பித்தோம்.  

ஆனால்சமஷ்டி மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியப்படாது என்பதைக் கடந்த கால அனுபவங்கள் மூலம் இப்போது உணர்ந்துள்ளோம். இந்த அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழ்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ளமுடியாது.  

தனித் தமிழ் ஈழம் நிறுவுவது இலகுவான காரியமல்ல என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் நாம் ஒன்றில் சிங்களவர்களின் அதிகாரத்திலிருந்து விடுபட்டு வெளியேறவேண்டும். அல்லது அழிந்து போகவேண்டும். எனவேநாங்கள் போராடிதனித் தமிழ் ஈழத்தை நிறுவியே தீருவோம். நாங்கள் சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளோம்.  

எங்கள் தனிநாட்டுக்கான இயக்கம் அகிம்சை அடிப்படையிலேயே நடைபெறும்“  

– இப்படித் தான் செல்வா பாராளுமன்றத்தில் கடைசியாகப் பேசினார். 

1976 இல், அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்குத் தந்தை செல்வா பேட்டியளித்திருந்தார். 

அதில் – தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைக்கும் நீங்கள் சிங்கள ஆட்சியாளர் சமஷ்டி அமைப்பை இலங்கையில் நிறுவச் சம்மதித்தால், ஏற்பீர்களா எனக் கேட்டதற்கு  

தமிழ் ஈழத்துக்கான போராட்டம் மிக நீண்டதாகவும் கடினமானதாயுமிருக்கும் என்பதை உணருகிறோம். சமஷ்டி தொடர்பாக சிங்களத் தலைமைகள் எம்மோடு பேசி இணக்கத்துக்கு வரின் நாம் அதனை ஏற்பதற்குத் தயாராக இருப்போம் என்றே நினைக்கிறன்.” 

இன்னொரு வினா கேட்கப்பட்டது. அதுவே முக்கியமானது, 

உங்கள் பாராளுமன்ற உரையில் தனித் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் அகிம்சை அடிப்படையிலேயே நடைபெறும் என்று உறுதியாகக் கூறியுள்ளீர்கள். ஆயுதப் போராட்டத்தைச் சில தமிழ் இளைஞர்கள் தொடங்கியுள்ளனரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் தந்தை சொன்ன பதிலில், 

தமிழ்ச் சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனாற்தான் உணர்ச்சி மிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கியுள்ளனர் என்ற செல்வா,  

ஆயுதங்கள் அழிவுக் கருவிகள். ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைத் தரும். அகிம்சை அப்படியல்லபோராடுவோரின் தார்மீக உணர்வை வளர்க்கும். அகிம்சைப் பாதையில்தான் எமது போராட்டம் அமையும். அதிலிருந்து நாம் சற்றும் விலகமாட்டோம்” – என்று உறுதிபடக் கூறினார். 

1977 இல் தேர்தல் வரப்போகின்ற செய்திகள் வந்த வேளை 1976 கடைசியில் இடம்பெற்ற பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அகிம்சையில் அவர் எவ்வளவு உறுதியாகவிருந்தார் என்பதையும் அவரது ராஜதந்திரத்தையும் காட்டும். 

பேட்டியாளர் அவரிடம் – “தனித் தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை நடத்தப் போகிறீர்களா? என்று கேட்டார். 

அதற்கு தந்தை செல்வா, உரிமைப் போராட்டம்  என்பது வெறுமனே நடத்தப்படுவதில்லை. மக்கள் சமுதாயத்தில் நடத்தப்படுவது. எனவே அகிம்சைப்  போராட்டத்தை நடத்துபவர்கள், சமுதாய அரசியற் சூழலையும் கணக்கிலெடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு (1977) தேர்தல்  நடைபெறவுள்ளது உங்களுக்குத் தெரியும். தேர்தல் வரும் சமயத்தில் நாங்கள் தமிழீழப் போராட்டத்தைத் தொடக்குவது நல்லதல்ல. சிங்கள தீவிரவாதத்தைப் பலப்படுத்த அது உதவும். தேர்தல் முடிந்த பின்னர் வரவிருக்கும் புதிய அரசாங்கத்தின் போக்கையும் கணக்கிலெடுத்தே எமது அகிம்சைப் போராட்டத்தைத் துவக்குவோம்” என்றார். 

பொதுத்தேர்தல் 1977 ஜூலையில் நடைபெற்றது. ஆனால் தந்தையோ ஏப்ரலில் போய்விட்டார்!