மாமாவின் மண்

மாமாவின் மண்

— அகரன் — 

புத்த பகவானின் காருண்ய படையால் செலுத்தப்பட்ட, பித்தளை நிறகோதுகளை துப்பி வெளியேற்றிய, கச்சான் முத்துக்களைப் போன்ற AK 47 சன்னங்கள், என் அப்பாவை துளைத்த நாட்களில் நான் மாமாவின் பிள்ளையாகிப் போனேன்.  

அப்போது அம்மாவின் வயிற்றுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு பாவித்த ஆயுதங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. 

மாமா கொடுத்துவைத்தவர் ஐந்து சித்திகளும், அம்மம்மாவும், அம்மாவும் என்று ஏழு பெண்களுக்கிடையில் அவர் ஒருவர்தான் ஆண்! என்னை சேர்க்காதீர்கள். நான் அவர்கள் மகிழ்ந்திருக்க கிடைத்த ஒரு சிசு.  

1958இல் இங்கினியாகல இல் முதன்முதல் 150 தமிழரை சிங்கள வெறியர் கரும்பை வெட்டுவதுபோல வெட்டிய ஆண்டில், வவுனிக்குளம் குடியேற்றத் திட்டத்தில் அம்மம்மாவுக்கு விவசாய காணி கிடைத்தது. 

** 

ஆதியில் வவுனிகுளம், பாலிக்குளம் என்று அழைக்கப்படுள்ளது. “எல்லாள மன்னன்” அனுராதபுரத்தை ஆட்சிசெய்ய முதல் பூநகரியின் தென்பகுதியான பாலிக்குளத்தையும் பாதுகாத்திருக்க வாய்ப்புண்டு. (கி.மு 145 முதல்) வவுனிக்குளத்தை  மகாவம்சம் ‘பொலிவாவி’ என்கிறது.  

1886இல் வவுனியா – முல்லைத்தீவு இல் இருந்த 711 குளங்களில் திருத்த அதிக செலவாகும் என்று ஆங்கிலக்காரரால் கைவிடப்பட்ட குளங்களில் வவுனிக்குளமும் ஒன்று.  

முறிந்து கிடந்த குளத்தை 1955இல் நீர்ப்பாசன அதிபர் பி.முத்தையா தலைமையில் ச.ஆறுமுகம் துணையோடு புனரமைக்கப்பட்டதை அடுத்து, இன்றைய வவுனிக்குளம் 2000 ஆண்டுகளின் பின் 6000 ஏக்கர் நெற்காணிகளுக்கும், 4000 ஏக்கர் மேட்டுநில பயிர்களுக்கும் உயிர் வழங்குகிறது. 

‘வவுணம்’ என்றால் வன்னி மரத்தையும், விவசாயத்தையும் குறிக்கிறது. இந்தப் புதுப்பெயரை வைத்த புண்ணியவான் யார்? என்று வரலாறு தேடித்திரிகிறது.  

** 

அந்த தோட்டத்தின் சிவந்த மண்தான் மாமாவை கல்வியை நிறுத்திவிட்டு வருமாறு அழைத்த கண்ணியத்துக்குரிய மண். ஐந்து சித்திகளின் சீதனத்தையும் அந்த மண் தான் ஒளித்து வைத்திருந்தது. தனி ஆளாக மண்கிண்டி வாழ (வைக்க) ஆசீர்வதிக்கப்பட்டுவிட்டார் அந்த மகான். 

என் மூளைப் பதிவேட்டில் முதன்முதல் பதியப்பட்ட உருவம் அவராகத்தான் இருக்கும். எங்கள் வீட்டு முற்றத்தில் நின்ற கறுத்தக்கொழும்பு மா மரத்தின் கீழ், குருவிகள் வந்தடையும் ஒரு அந்தி நேரத்தில், சித்திகளுக்கு முன் தனது வலது உள்ளங்கையில் எனது கால்கள் இரண்டையும் வைத்து, அந்தரத்தில் என்னை நிற்க வைத்து விண்ணில் மிதக்கவைத்தார். எல்லோரும் சிரித்தார்கள் கூடு வந்த குருவிகளும் சிரித்தன.  

மாமாவின் தோற்றத்தை உங்களுக்கு சொல்வது எனக்கு இலகு. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு சாறம் (கைலி) கட்டி, முழுக்கை சட்டை போட்டு, சரியான அளவில் கைகளை மடித்துவிட்டு, இடது தாடையில் குன்றுமணியின் கறுப்பு அளவில் காய் ஒன்றை வைத்துவிட்டால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார். 

சிரிப்பு கூட அதே அளவில்தான் இருக்கும். வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் விவசாயிகளை பற்றிய கதை என்றபோது அதை என் மாமாவின் கதை என்றே படித்து முடித்தேன். 

சர்க்கரை போடாத கஞ்சியை அம்மா ஊட்டிய பொழுதுகளில், சர்க்கரைக்காக சாமங்களில் நான் சதிராட்டம் நடத்தி அழுத கண்களோடு மாமாவின் மார்பில் தூங்கிவிடுவேன். 

பகலெல்லாம் சூரியனுக்கும், சிவந்த நிலத்துக்கும் நடுவில் வியர்வை நீர் பாய்ச்சிய மாமாவின் ஆழ்ந்த தூக்கத்தின் போது, என்னை அறியாமல் சாமங்களில் சீச்சாவை அவர் மார்பில் பெய்த போதெல்லாம் அவர் ஒரு முறைகூட சினந்ததில்லை. சாமத்தில் துலாக்கிணற்றில் குளிக்கும் பேற்றை அவருக்குக் கொடுத்தவன் நான். 

அவர் நிலத்துக்கு ஓய்வு கொடுத்தது இல்லை. சூரியனைப் போலவே காலை உதித்து மாலை வீடு வருவார். காலை எழுந்ததுமே முகச்சவரம் செய்து விட்டு, மண்வெட்டி தோளில் தொங்க, நடக்கும் நடை ராஜ நடைதான். அவருக்கான ஒரே ஓய்வு இரவு ஒன்பது பதினைந்துக்கு மிதிவண்டி மோட்டாரில் இயங்கும் வானொலியில் வரும் ‘இது பிபிசியின் தமிழோசை’. அதை அவர் நம்பினார். அவர்கள்தான் உண்மையைச் சொல்வார்கள் என்பது அவர் நம்பிக்கை.  

மாமா, அந்த ஊரில் மதிக்கப்படுபவராக இருந்தார். அதற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. மிக அமைதியாக தன் வேலையை உச்சபட்சமாக செய்தார். அவ்வளவுதான்! அவரின் நண்பர் தேவராஜன் மாமா போராளியாகி இறந்த பின்னர், அவர் இன்னும் பேசுவதை குறைத்து கொண்டார்.  

நான் பள்ளிக்கூடம் சென்று வர ஆரம்பித்த நேரத்தில் மாமாவை கோபப்படுத்தும் காரியத்தை சிறப்பாக செய்தேன். எங்கள் ஊரில் வயல் விதைப்பு காலங்களில் வாய்க்காலில் அதிக நீர் ஓடும். ஒருநாள் சகபாடிகளின் உசுப்பேத்தலில், உடைகள் எல்லாவற்றையும் கழற்றி கரையில் வைத்துவிட்டு, வாய்க்காலில் இறங்கி அது கிறக்கும்படி, நிலத்தில் விளையாட வேண்டிய விளையாட்டு எல்லாவற்றையும் நீரில் விளையாடினோம். நேரம் கரைந்தது தெரியவில்லை. அம்மாவின் ஆர்ப்பாட்டத்தால் மாமா தேடி வந்துவிட்டார். மாமா வருவதை முதலில் பார்த்துவிட்ட என் சகபாடி முதலைகள் ஓடி ஒளிந்து விட்டார்கள்.  

‘உடுப்பப் போடடா’ 

ம்… ம்… ம்.. அழ ஆரம்பித்துவிட்டேன். அதுதான் புத்திசாலித்தனம்.  

தோல்வி உற்ற மன்னன் தேரில் ஏற்றப்படுவதுபோல சைக்கிளில் ஏற்றப்பட்டேன்.  

மாமா ஒன்றும் பேசாமல் வீட்டுக்கு வந்ததும் தன் இடக்கையால் என் இரண்டு கைகளையும் தூக்கியபோது, நான் கூரைக்கு மேல் இருந்தேன். பிஞ்சுபிருட்டத்தில் விட்டாரே அடி அது இப்போதும் புளித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த மாபெரும் சம்பவத்துக்குப் பிறகு மாமாவின் கைகளுக்கு நான் வேலை கொடுப்பதில்லை. அவர் முகத்தை நேருக்கு நேர் இன்று வரை பார்க்க தயங்குவேன். அவர் அழைத்தாலும் கைகளை கட்டி, தலையை செத்த கோழி போல் ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து விடுவேன். அவர் பேசி முடித்ததும் ராணுவ மரியாதை செய்யும் வீரன் போல் திரும்புவேன். இன்னொரு முறை கூரை பார்க்கும் தகுதி என்னிடம் இல்லை. 

மாமாவின் தோட்டம், திருமணம் முடித்த வாசனை மாறாத பெண் வைக்கும் குங்கும பொட்டுப்போல பெரிய கிணற்றை சுற்றி இருந்தது. அதன் தண்ணீர் தேன் கலந்தது போல இருக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு பயிர்கள் ஆட்சியை பிடிக்கும். வெங்காயம், மிளகாய், கத்தரி, வெண்டி, பயிற்றை, கோவா, பாகல். 

இதில், வெங்காயத்தின் மீது மாமா அதீத நம்பிக்கை வைத்தார். தீவையும் வெங்காயங்கள் ஆட்சி செய்ததால் உழைப்பு வீணாகிக்கொண்டே இருந்தது. 

வெங்காயப் பிடிகளை, வடக்கன் மாடுகள் வண்டியில் கொண்டு வந்து சேர்க்கச் சேர்க்க வெங்காய கொட்டில் நிறைந்து தொங்கும். அது காயக்காய அவை சிவந்து நாலுமணிப்பூக்கள் போலமாறிவிடும். 

எனக்கு வீட்டில் ஆபத்தொன்று காத்திருக்கும்.  

அம்மம்மா, ஒவ்வொரு மதியமும் வெங்காய கறி வைக்க ஆரம்பித்து விடுவார். என் கோபங்கள் எல்லாம் திரட்டி அவர் கழுத்தை பிடித்து ‘கிளவி வெங்காயக்கறி வேண்டாம்’ என்று அசுரன் ஆவேன். என் சத்தத்தை யூகித்த மாமா அம்மம்மாவிடம் ‘அவனுக்கு கோழிக்கறி வைத்து கொடுங்கோவன்’ என்று சொன்னதை எல்லாம் என் காதுகளில் களவாடி வைத்திருக்கின்றேன். 

அந்த நேரங்களில் ஒரே இலக்கு மாமா போல வந்துவிடவேண்டும். அவர் போலவே மீசை வைத்து, சாரம் கட்டி, வீர நடைபோட்டு தோட்டத்திற்கு போக வேண்டும். அவரை எல்லோரும் மதிப்பது போல் என்னையும் எல்லோரும் மதிக்க வேண்டும். வேறொன்றும் தேவையில்லை. 

ஆனால், தன்னால் தொட முடியாமல் போன கல்வியை தொடர்ந்து பல்கலைக்கழகம் போய்விட வேண்டும் என்று அவர் மனதுக்குள் நினைத்தால் எனக்கெப்படித்தெரியும்? அது எவ்வளவு கடினம் என்பது பின்னர் எனக்கு தெரியவந்தது. 

மாமா நினைத்தாலே செய்துவிடுவேன் ஏனெனில் அவர் எனக்கு இன்னொரு தாய். 

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தோட்டத்தில் நிற்க மாமாவிற்கு சாப்பாடு கொண்டு செல்வேன். வாய்க்கால் கடந்து வயல்களில் நடந்து செல்லும் போது என் வாயில் வரும் பாடல்களை எல்லாம் பாடுவேன். அப்போது எனக்கு தெரிந்த பாடல் ; 

“எதிரிகளின் பாசறையை தேடிப் போபோகிறோம்… , இந்த மண் எங்களின் சொந்தமண்..” 

தெரியாத வரிகளை நானே இயற்றிப்பாடுவேன். புல்வெளிகள் என்னை பார்த்து நகைக்காது. தலையாட்டும். நீர் கலந்த காற்று, கற்பனைகளை கொண்டல் பூக்கள் வாசத்தோடு கொண்டுவரும். 

அந்த நேரத்தில் தலைவரும், மாத்தையாவும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் என் கைகளுக்கு கிட்டி இருந்தது. எனக்கு உடனே வரும் கற்பனை மாமா போராளிகளின் உடுப்பில் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதுதான்.  

ஒரு நாள் கூட எனக்கு மாமா ஆலோசனை கூறியது கிடையாது. அவர் பார்த்தாலே ஆலோசனை தான். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் அவரை ஏற்றி அவரின் மிதிவண்டியில் ஓடக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. ‘தன்னைத் தாங்கும் பிள்ளை வளர்ந்து விட்டான்’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். 

சித்திகளுக்கு சீதனம் கொடுத்து விட்டு மாமா நின்றபோது, அவருக்கு 40 வயது கடந்து விட்டிருந்தது. அவருக்கான வயது பெண்கள் திருமணம் முடித்துவிட்டிருந்தார்கள். 

கடந்த பத்து வருடமாக மாமாவை நான் பார்க்கவில்லை. திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். மாமா வளர்க்க ஒரு பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டும். 

இப்படி என் சிந்தனை இருந்த நாள் ஒன்றில் தான், A9 வீதியில் சென்று கொண்டிருந்த என் மாமாவை, மூளைக்குள் பெற்றோலை ஊற்றித்திரியும் ஒருவர் வாகனத்தால் மோதிவிட்டு ஓடிவிட்டார். அவருக்கு என்ன அவசரமோ? தெரியவில்லை. வேகமாய் எங்கு போனாரோ தெரியவில்லை. பாவம். 

ஆனால், என் மாமாவின் விலா எலும்பு முறிந்து விட்டது. 

8600km தூர தேசத்தில் இருக்கும் என்னால் அவரை பார்க்க முடியாது. மாமாவின் சிவந்த நிலத்தை அடைய எனக்கு அனுமதி இல்லை!