அது ஒரு பொற்காலம்…

அது ஒரு பொற்காலம்…

   — வேதநாயகம் தபேந்திரன் —  

எமது வாழ்வின் வசந்த நினைவுகளை மனதால் இரை மீட்டுப் பார்க்கும் போது நாம் கூறும் வசனங்களில் ஒன்று “அது ஒரு பொற்காலம்”. 

சின்ன வயதில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஒரே வீட்டில் அடிபட்டுப்பிடிபட்டு வளர்ந்திருப்போம். அந்தச் சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளை நாம் ஒரு குடும்பமாகி வந்த பின்பு நினைத்துப் பார்ப்போம். அப்போது மனதில் வரும் ”அது ஒரு பொற்காலம்” 

தாய், தந்தை, சகோதரர்களுடன் கோயில், குளம், வெளியூரெல்லாம் சுற்றுலா போய் வந்திருப்போம். அதன் குதூகலங்களை எப்போதும் மனது அசைபோடும். அப்போது ”அது ஒரு பொற்காலம்” 

பள்ளிப் பருவத்திலே துள்ளித் திரிந்து கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு, ஒப்பு, பாண்டி, போளையடித்தல், பிள்ளையார் பேணி, கிரிக்கெற் எல்லாம் புழுதி அளைந்து விளையாடி இருப்போம். அதனை இப்போது நினைத்தால் ”அது ஒரு பொற்காலம்” 

மனதும் வெள்ளை உடையும் வெள்ளையாக பள்ளிப் பருவத்தில், ஆசிரியர்கள் வழி காட்டலில் சகமாணவர்களுடன் கீரிமலை, பலாலி விமான நிலையம், நிலாவரை, கசூரினாபீச், காங்கேசன்துறை தொழிற்சாலையெல்லாம் போய் குதூகலமாப் பார்த்து வந்தோம். அதை இப்போது நினைத்தால் ”அது ஒரு பொற்காலம்” 

மின்சாரம் காணாத வாழ்வில் மண்ணெண்ணை லாம்பில் படித்தது. ரியூசன் தெரியாத வாழ்க்கை. வானொலிப்பெட்டியே உலகமாகக் கண்டோம். தேவைகள் குறைந்த சிக்கன வாழ்க்கை. எத்தனை வசதிகள் வந்தாலும் அந்த எளிய வாழ்க்கையே மனதினில் இனிக்கிறது. எப்போதும் ”அது ஒரு பொற்காலம்” 

விடலைப் பருவம் படலை தட்டும் வயதில் கன்னியர்களின் கண்ணசைவுக்குக் காத்திருப்போம். கூரை மரங்களில், சிலாகைகளில் சோடி கட்டிப் பெயரை எழுதியிருப்போம். பள்ளி முடிந்ததும், ரியூசன் முடிந்ததும் பின்னாலே சென்று காவல் காத்து வீடுவரை கொண்டு போய் விட்டிருப்போம். இப்போது அதை நினைத்தால் வெட்கம் வருவதில்லை. ஆனால் ”அது ஒரு பொற்காலம்” 

அமைதிக்குப் பெயர் தான் சாந்தி… மீனா ரீனா… என்று பெயருடன் தொடங்கும் சினிமாப் பாடல்களை அந்தப் பெயர் கொண்டவர்களைக் கண்டவுடன் பாடிப்பரவசம் அடைவோம். பேரப்பிள்ளை காணும் வயதை அடைந்தாலும் அதை நினைக்கும்போது ”அது ஒரு பொற்காலம்” 

மனம் விரும்பியவள் இருக்கும் வரிசை பார்த்து ரியூசனில் இடம்பிடித்து வாங்கிலில் இருக்கும் போது வரும் சந்தோசம் தனித்துவமானது. அந்த வரிசை அடுத்த நாள் பறி போனால் கண்ணிவெடியில் அகப்பட்ட கவசவாகனம் போல மனசு சிதறுமே. இப்போது அதை நினைத்தாலும் ”அது ஒரு பொற்காலம்” 

ஒரு சைக்கிளில் முன் பாரில் ஒருத்தன், பின் கரியரில் ஒருத்தன், பின் கரியரில் இருப்பவன் கால் நீட்டி பெடலைச் சுழட்ட சுமை தாங்கிச் சைக்கிள் ஓடுவோம். எத்தனை வசதிகள் வந்தாலும் ”அது ஒரு பொற்காலம்” 

ஆட்டிஸ்ட் மணியத்தின் கட்டவுட்டை வாய் பிளந்து பார்த்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் படங்களும் பின்னாளில் கமலஹாசன், ரஜனி படங்களும் அடிபட்டுப் பிடிபட்டுப்பார்த்திருப்போம். மே தினத்தில் இரண்டு ரூபா கொடுத்து விட்டு பல்கனியில் பார்த்த படங்கள். வீட்டுக்கு வீடு டிவிடி, கேபிள் வந்தாலும் அந்த நாளை நினைத்தால் ”அது ஒரு பொற்காலம்” 

ரீவி வந்திட்டுதாம். சின்னப் பெட்டியிலும் படம் பார்க்கலாமாம். “நாடோடி மன்னன்” ஓடோடி வருகிறான். மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், நாம் பிறந்த மண், சங்கிலி, முரட்டுக்காளை இப்படியே படங்கள். சின்னம் சிறுசாக ஒரு ரூபா கொடுத்து ஓடோடிப் பார்த்த  நாள்களை நினைத்தால் ”அது ஒரு பொற்காலம்” 

கொழும்பு என்று சொன்னால் அது எமக்கொரு தேவ லோகம். ரெயினில் கொழும்பு போய் மாநகரம் பார்த்து, கோல்ட் பேஸ், தெகிவளை மிருகக்காட்சிசாலை எல்லாம் பார்த்து வந்து வாழ்நாள் சாதனையாக நினைத்தோம். எப்போதும் அது மனதில் ”அது ஒருபொற்காலம்” 

பல்கலைக்கழக வாழ்வில் பல ஊர், பல மாவட்ட, பல மாகாண மாணவர்களுடன் பழகிய காலங்கள். வெல்கம் பார்ட்டி (Welcome party), கோயிங் டவுண் பார்ட்டி (Going Down Party) நடந்தபோது ஆடிய பாடிய ஆட்டங்கள். பல ஊர்ச்சுற்றுலாக்கள். காலம் முடிந்தது. கடந்து வந்தோம். அது என்றும் மனதில் “அது ஒரு பொற்காலம்” 

தரைப்பாதைத் தடை. கேரதீவு –சங்குப்பிட்டி, கிளாலி, கொம்படி –ஊரியான் என உள்ள பாதையெல்லாம் விழுந்தெழும்பி வடக்கிற்கு உள்ளே வெளியே பயணம். காலச் சகதியினுள் கால்பட்ட நீளப் பயணங்கள். நினைவழியா நாள்கள். இப்போது அதை நினைத்தால் ”அது ஒரு பொற்காலம்” 

கொடிகாமத்துக்கு அங்கால கறுப்பா, சிவப்பா எனத் தெரியாமல் வாழ்ந்த சனங்கள் எல்லாம் வெளிநாடு வந்த பின்பு கொழும்பு பார்த்தார்கள். பிள்ளைகள், சகோதர்கள் அழைப்பில் பிளேன் ஏறி வெளிநாடு போய்ப் பார்த்து வந்தார்கள். அந்த நினைவுகள் மனதில் ”அது ஒருபொற்காலம்” 

போர் முகத்து வாழ்வில் எத்தனையோ இடம் பெயர்வுகள். புதுப்புது ஊர்கள். புதுப்புது உறவுகள். உயிர் காக்க பங்கர் பதுங்கல்கள். என்ன விமானம்?எப்படிக் குண்டு போடுவான்? செல் குத்திட்டான். எத்தனையோ அவலங்கள். துன்பங்கள் துரத்திய போதும் கற்றுத் தந்த அனுபவங்கள் ”அது ஒரு பொற்காலம்” 

மூத்தவன் கனடாவில் இப்ப அங்க என்ன நேரம்? மூத்த மகள் அவுஸ்திரேலியாவில் இப்ப அங்க என்ன நேரம்? அடுத்தவன் சுவிசில் இப்ப அங்க என்ன நேரம்? ரெலிபோன் எடு. ஒரே நாடு, ஒரே நேரமாக மட்டும் பார்த்து நித்திரை கொண்டது ”அது ஒரு பொற்காலம்” 

பொற்கால நினைவுகள் எல்லா மனிதர்களிலும் புதைந்து வாழ்கின்றன. இன்னும் எத்தனை எத்தனையோ… உங்கள் மனங்களிலும்……