கல்முனை வடக்கு நிலைமை:  காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)

கல்முனை வடக்கு நிலைமை: காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)

     — அழகு குணசீலன் — 

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தீப்பற்றி எரிகிறது. கிழக்கின் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ரோமாபுரி எரியும்போது மன்னன் செய்ததை நினைவூட்டி நிற்கிறார்கள்.  

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான அரசியல் பலவீனங்கள், இயலாத்தன்மை, தலைமைத்துவ தீர்க்கதரிசனம், இராஜதந்திரங்கள் குறித்தும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர், அரசியல்வாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் பல ஆண்டுகளாக எந்த நகர்வும் அற்று, பிடித்து வைத்த பிள்ளையார் நிலையில்தான் கிடக்கிறது. 

சகல தரப்பாலும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

அண்மைக்காலங்களில் அபிவிருத்தி, உரிமையைக் குறைகூறுவதும், உரிமை அபிவிருத்தியை குறைகூறுவதும் தொடர்கதையாக தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் வெறும் நிர்வாகம் சார்ந்த, மக்கள் சேவைக்கான அபிவிருத்தி மட்டுமல்ல.   

அந்தப் பிரதேச மக்களின் உரிமை என்பதை இந்த அரசியல்வாதிகள் அறிவார்களா? 

அம்பாறை மாவட்டம் இருபது பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கல்முனை வடக்கு தமிழ்பிரிவும் ஒன்று. 

அன்றைய அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம் 28 புதிய செயலகப்பிரிவுகளை ஏற்படுத்தினார் அதில் கல்முனை வடக்கும் ஒன்று. 

29 கிராம சேவகர் பிரிவுகளையும், சுமார் முப்பதாயிரம் மக்களையும் கொண்டுள்ள இந்தப் பிரிவை தரம் உயர்த்துவதன் மூலம் முஸ்லீம்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு அல்லது நட்டம், இழப்புத்தான் என்ன? இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான பதில் இல்லை. 

ஒரு பிரதேச செயலகத்திற்கு தேவையான சகல தகுதிகளையும் கொண்டிருக்கும் கல்முனை வடக்கை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தீடீரென தரம் இறக்க முடிவு எடுக்கப்பட்டது ஏன்? 

இதற்குப் பின்னணியில் உள்ள தமிழ், முஸ்லீம் அரசியல் என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைமாத்திரமன்றி, முஸ்லீம் காங்கிரஸ் தலைமையும் மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது. தழிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த சம்பந்தர் எவ்வாறு கட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளாரோ அதேநிலையில்தான் ரவூப் ஹக்கீமும் இருக்கிறார்.  

கிழக்கு மாகாணத்தைச் சேராத அவர் கிழக்கின் முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து எதையும் சாதிக்க முடியாத நிலையில் உள்ளார். அது ஹக்கீம் தலைமைப் பதவியை விலைகொடுப்பதாக அமைந்துவிடும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இருபதாவது திருத்தத்தை ஆதரித்தவர்களுக்கு எதிராக அவரால் எதையும் செய்யமுடியாமல் போனதற்கு இதுதான் காரணம். 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருதரப்பும் முட்டுக்கொடுத்தவர்கள். இந்த முட்டின் மூலம் ஹரிஷ்&கோ தரம் உயர்த்துவதை தடுத்து வந்தார்கள். தடுத்ததில் அவர்களுக்கு வெற்றி. தமிழ் தரப்பால் முட்டுக்கொடுத்தும் தரம் உயர்த்த முடியவில்லை தோல்வி. 

ஆனால் அம்பாறைமாவட்ட மக்கள் தமது அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மன்னிக்கவும் முடியாத அளவுக்கு ஒரு தவறு நடந்துள்ளது. தரம் உயர்த்தல் தொடர்பான அமைச்சரவைக்கான பத்திரத்தை கோடீஸ்வரன், சுமந்திரனிடம் காட்ட, சுமந்திரன் சுடுகுது மடியைப்பிடி என்று அவசர அவசரமாக ஹக்கீமிடம் கையளிக்க, அதை கவனித்த ஹரிஷ் கச்சிதமாக தனது கடமையைச் செய்துள்ளார். 

முஸ்லீம் அரசியல்வாதிகள் தரப்பில், கல்முனை வடக்கு தமிழ்பிரிவு நிலத்தொடர்பற்றது என்று சொல்லப்படுகிறது. ரவூப் ஹக்கீம் இது விடயமாக குறிப்பிட்டது போன்று முழு இலங்கையிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டும்தான் இனரீதியான நிர்வாக அலகுகள் உள்ளன. 

பல்லின மக்கள் வாழும் ஒரு பிராந்தியத்தில் இன உறவை மேம்படுத்தும் வகையில் இதனை சாதகமாகவே கொள்ள வேண்டும். 

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலரீதியான தொடர்பற்ற கல்வி, நிர்வாக அமைப்புக்களை பெற்றுள்ள முஸ்லீம் சமூகம், கல்முனைத் தமிழர்களுக்கு அதனை அங்கீகரிக்க மறுப்பதில் உள்ள அரசியல் மர்மம் என்ன? மறைந்த முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லீம் மாகாணசபை பற்றியும், அம்பாறை மாவட்டத்தில் நிலத்தொடர்பற்ற முஸ்லீம் யூனியன் பிரதேசம் பற்றி பேசியதையும் காலக்கண்ணாடி நினைவூட்ட விரும்புகிறது. 

முஸ்லீம் மக்கள் கல்முனை வடக்கு தமிழ்பிரிவுக்கு எதிரானவர்கள் அல்ல. சில அரசியல்வாதிககளே தங்கள் அரசியல் இலாபத்திற்காக இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ரவூப் ஹக்கீம் இந்த விவகாரம் அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணக்கூடியது என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். 

இன்றைய சூழலில் ஹரிஷ்ஷை எதிர்த்து அவரால் இதை செய்யமுடியுமா? என்பது கேள்விக்குறி. ஆனால் இன ஐக்கியத்தின் பெயரால் ஆகக் குறைந்தபட்சம் அவர் முயற்சி ஒன்றை மேற்கொண்டால், அநியாயமாக ஒரு பிரிவினரின் உரிமை மறுக்கப்படுவதற்கு ஹக்கீம் உடந்தையாக இருக்கவில்லை என்று வரலாறு கூறும். 

தமிழ் அரசியல் வாதிகளுக்கு…  

கல்முனை வடக்கு பிரதேசசெயலக விவகாரம் தொடர்பாக கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில்  நிதானமாகப் பேசியும் கேள்வியும் எழுப்பி உள்ளார். மறுநாள் ஜனா உள்ளிட்ட சிலர் பேசி இருக்கிறார்கள். 

ஆனால் இந்த விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன? 

வியாளேந்திரன் அவர்களே! 

கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்ததும் மூன்று மாதங்களில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்தவர் நீங்கள்.  

இப்போது அந்த ஜனாதிபதியின் ஆட்சியில் ஒரு இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றுகிறீர்கள். உங்கள் செயற்பாடு ஒரு மாவட்டத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. 

உங்கள் வாக்குறுதியை மக்கள் எப்படி கொள்ள முடியும். வழமையான வெறும் தேர்தல் வாக்குறுதிதானா? வாக்குச்சேகரிக்கும் முயற்சி மட்டுமா?   

ஜனாதிபதியிடம் நீங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் என்று கேட்கமுடியும் அல்லவா? அதைச் செய்வீர்களா? அதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? 

ஜனா, சாணக்கியன் அவர்களே! 

அம்பாறை உங்கள் தேர்தல் மாவட்டம் இல்லை என்பது தெரியும். என்றாலும் உங்களுக்கான கடைமையை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது. 

அந்த மக்களிடம் உங்கள் கட்சிக்காக வாக்கு கேட்டு இருபதாயிரம் வாக்குகளைப் பிரித்து அவர்கள் பிரதிநிதிதித்துவம் இழந்து, அரசியல் அனாதையாக நிற்பதற்கு நீங்களும் பொறுப்புக்கூறவேண்டும். 

பிரதேச செயலக தரமிறக்கத்திற்கு எதிராக இதுவரை நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? ஜனா அவர்களே! உங்கள் கட்சியின் கோடீஸ்வரன் தான் அமைச்சரவைப் பத்திரத்தை சுமந்திரனிடம் கொடுத்துள்ளார். இதுதான் இங்கு நடந்துள்ள முதற்கோணல். இந்த வகையில் தவறான அணுகுமுறை என்ற வகையில் ரெலோவுக்கு பாரிய பொறுப்புண்டு. இதற்கு உங்கள் பதில்தான் என்ன? 

உங்கள் கட்சியின் ஊடகச் செயலாளர் ‘அரசியலாக்கியதுதான் தவறு, தவறு’ என்று திருமபத் திரும்பக் கூறுகிறார். சுத்தமாக நிர்வாக ரீதியில் கையாள்வதற்கான வாய்ப்பு இலங்கை அரசியலில் உண்டா? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எத்தனை நிர்வாகரீதியான விடயங்களை அரசியல் ஆக்கி இருக்கிறது.? 

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இந்த விவகாரத்தில் பெரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். வன்னியில் தான் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் தன்னால் உணர்வு பூர்வமாக இதனை புரிந்து கொள்ள முடிகிறது என்று தனது உள்ளக்கிடக்கையை அம்பாறை தமிழ் மக்களுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் பாங்கு பாராட்டத்தக்கது. 

தமிழரசன் போன்ற தமிழரசின் பலவீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவரின் முயற்சிகள் முக்கியமானவை. ஆனால் இந்த விடயத்தில் கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிவாசிப்பது அரசியல் அபத்தம். 

இந்த தவறை நல்லாட்சி காலத்தில் இருந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் விட்டிருப்பதாக சார்ள்ஸ் கூறுவதில் பெரும் உண்மை உண்டு. இதற்கான கணக்கை மக்கள் கடந்த தேர்தலில் தீர்த்துவிட்டார்கள். சுமந்திரனும், சம்பந்தனும் ஹக்கீம் உடனான நட்பை முறிக்க விரும்பவில்லை என்கிறார் சார்ள்ஸ். மக்கள் கணக்குத்தீர்ப்பார்கள். அப்போது இவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் தேசியப் பட்டியலில் இடம்பெறட்டும். 

அதேவேளை ரெலோ தமிழரசையும், கூட்டமைப்பையும் தாண்டி தனித்து ஓடுவதிலும் ஒரு அரசியல் இல்லாமல் இல்லை. பகிரங்கமாக தமிழரசையும், கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுகிறார் சார்ள்ஸ். கோடீஸ்வரன் விட்ட தவறுக்கு பிராயச்சித்தம் தேடுகிறார்கள் இவர்கள். 

திவ்வியநாதன் காலம் முதல் ரெலோவின் கால் அம்பாறையில் பதிந்திருக்கிறது. இதனை மீளப்பெற முயற்சிக்கின்றது ரெலோ. இதற்காகவே ரெலோவினால் விடயம் அம்பலப்படுத்தப்படுகிறது. இதை ரெலோ எப்பவோ செய்திருக்க வேண்டும். 

இவ்வளவு காலமும் வாளாவிருந்துவிட்டு வெள்ளம் தலைக்கு மேல் வந்தபின் மக்களை தத்தளிக்க வைத்திருக்கிறார்கள். எது எப்படியோ அம்பாறை -கல்முனை வடக்கு தமிழர்களைக் பொறுத்தவரை யார் குத்தினாலும் அரிசியானால் சரி. தமிழ் தேசியம் இன்னொரு பாடத்தை படித்திருக்கிறதா? கடந்த கால அனுபவத்தில் பதில் “இல்லை” என்பதுதான். 

எல்லாவற்றிலும் முந்திக்கொண்டு வாயைத்திறக்கும் சாணக்கியன் இது விடயத்தில் அடக்கிவாசிப்பது ஏன்? முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பாக சிங்கம் போல் கர்ச்சித்த நீங்கள் இப்போது ஏன் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனீர்கள்? 

P2Pக்கு கொடி பிடிக்க அம்பாறை தமிழர்கள் தேவை,  ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது உங்கள் வீரம் எங்கே போனது. 

பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை P2Pயின் கோரிக்கையாகவும் கொண்டிருக்கமுடியும் அல்லவா? அன்று முஸ்லீம் கிராமங்களில் உங்களோடு நின்று படம் எடுத்த முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்கே? 

இது விடயத்தில் அவர்களின் கருத்தை அறிய விரும்புகிறார்கள் மக்கள். 

கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள்  கிழக்கு மாகாண தமிழ் மக்களை அடகு வைப்பதற்காகத்தான் இந்த மௌனம் என்று விமர்சனங்கள் எழுகின்றன. 

தமிழ் அரசன் பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. அவர் ஒரு போடுகாய் அவரின் உரிமை அரசியலை மக்கள் நிராகரித்தே இருந்தார்கள். 

மாவை வாய்திறக்கும் மட்டும் காத்திருக்கிறார் போலும். 

கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு! 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் என்பதுதான் கருணாவின் ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபனம் என்று சொல்லுமளவுக்கு தேர்தல் பிரச்சாரம் இருந்தது. உங்கள் மீது அம்பாறை தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை முப்பதாயிரம் வாக்குகளை அளித்து வெளிப்படுத்தி இருந்தார்கள். 

உங்களுக்கு சிங்கள பாராளுமன்ற அரசியல்வாதிகளோடு மட்டுமன்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களோடும் நெருங்கிய தொடர்புண்டு. நீங்கள் பிரதமரின் இணைப்பாளராகவும் இருக்கிறீர்கள். 

இந்த வகையில் மக்கள் அளித்த முப்பதாயிரம் வாக்குகள் உங்கள் கௌரவத்தை காப்பாறியது. உங்களிடம் தமிழ்த்தேசியம் தோற்றுப்போனது. தோற்கடித்தது நீங்கள் அல்ல அந்த மக்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய கைமாறு, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது… செய்வீர்களா? 

தேர்தல் காலத்தில் பிள்ளையான் சிறையில் இருந்தவர். குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக அவருக்கு நேரடித் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. தரமுயர்த்தல் தொடர்பாக வாக்குறுதிகள் எதையும் அவர் வழங்கவில்லை. 

என்றாலும் நீங்கள் கிழக்கின் தனித்துவமான, அபிவிருத்திக்கான தலைமைத்துவமாக அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் அம்பாறை மாவட்ட தமிழர்களதும், கல்முனை வடக்கு மக்களதும் தேவைகளை அறிந்தவர், உணர்ந்தவர். கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் உங்களை எதிர்பார்க்கிறார்கள். 

இந்த நிலையில் ஜனாதிபதியை அடுத்தமாதத்தில் மட்டக்களப்பிற்கு அழைத்திருக்கிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்முனை வடக்கு தமிழ் மக்களின் துயரை துடைக்க முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறோம். இதை நீங்கள் சாதித்தால் அதற்கான நன்றியை மக்கள் மாகாணசபைத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு வழங்குவார்கள்.  

ஆக, கோடீஸ்வரன் இந்த விவகாரத்தை கையாண்ட விதமும், சுமந்திரன், ஹக்கீம் ஊடாக அமைச்சரவைப் பத்திரம் ஹரிஷ் கைக்கு எட்டியதும்,,,  

தமிழ்த்தேசிய அரசியலில் காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு…! 

அல்லது 

பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதை …..!