வேர்கள் (கறுப்பு இரத்தப்பாடு) – நூல் அறிமுகம்

வேர்கள் (கறுப்பு இரத்தப்பாடு) – நூல் அறிமுகம்

  — அகரன் — 

இன்று அகதியாக வாழும் மக்கள் மறக்காமல் படிக்கவேண்டிய நாவல்.  

அமெரிக்காவின் பெரு மாற்றங்களுக்கு காரணமான நூல்களில் முக்கியமானது ‘வேர்கள்’. 

அமெரிக்க உருவாக்கத்தின் கறுப்புப் பக்கங்களின் சிவப்புக்கதை இது. 

அடிமை முறையை தன் உயிரைக்கொடுத்தேனும் ஒழித்த ‘ஆபிரகாம் லிங்கன்’ ஒரு மனித திசைகாட்டி.  

1967 இல் வெளியான ‘வேர்கள்’ அமெரிக்க வெள்ளையர்களை கறுப்பினத்தவரிடம் ஆட்சியை கொடுக்கும் அளவிற்கு மனம் மாற்றிய மனம்காட்டி.  

‘அலெக்ஸ் கேலி’ என்ற ஆபிரிக்க அமெரிக்கரின் நாவல். அது அவரின் ஏழு தலைமுறையின் கதை.  

இந்த நாவல் இன்னொரு உலகத்தைக் காட்டும். 

‘அடிமைகள்’ என்ற வார்த்தையின் வலியை, வாழ்வை குருதியின் வெப்பத்தோடு கூறுகிறது இந்த நாவல்.  

ஆபிரிக்க மக்களை ஆரத்தழுவவேண்டும் என்ற ஏக்கத்தை விதைத்தது. 

இந்தப் பூமியில் ஆபிரிக்க அடிமைகளின் ஏழு தலைமுறை வலியை ஒரு நாவலுக்குள் கறுப்பு இரத்தத்தால் வடித்துள்ளார்.  

இந்த நாவலுக்காக அவர் 50,0000 km பயணம் செய்து வேர்களை ஆராய்ந்தார். 

ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவரை அடிமைகளாக பயணம் செய்த தன் மூதாதையரின் வலியை உணர அப்படியான கப்பலில் பயணம் செய்தார்.  

தன் மூதாதை அடிமையாக இறக்கப்பட்ட துறைமுகத்தில் ஆதாரத்தை பெற்று கண்ணீர் வடித்தார்.  

இன்று ஆபிரிக்க மக்களின் இன்னொரு புனித நூல் இந்த நாவல். 

** 

கேம்பியா நதி ஓடிக்கொண்டிருக்கும் மேற்கு ஆபிரிக்காவில் ஜூப்ஃயூர் கிராமத்தில் கின்டே என்ற பதின்ம வயது இளைஞன் தன் தம்பிக்கு ஒரு இசைவாத்தியம் செய்வதற்கான மரம் வெட்ட காட்டுக்குள் செல்கிறான்.  

பதுங்கி இருந்த வெள்ளையர்களாலும், துரோகிகளாலும் பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறான்.  

1767 இல் கேம்பியா நதிக்கரையில் இருந்து புறப்பட்ட கப்பல் சரக்குகளோடும், கறுப்பு தங்கமாக வெள்ளையர் நினைத்த அடிமைகளோடும் அமெரிக்கக் கரையை அடைகிறது.  

கின்டே விலைக்கு விற்கப்படுகிறான். அவன் எப்படியும் தப்பிவிட கடும் முயற்சி எடுக்கிறான். நான்காவது முயற்சியும் தோல்வியில் முடிய, அவன் பாதம் வெட்டப்படுகிறது.  

மருத்துவம் பார்த்த முதலாளி அவனை விலைக்கு வேண்டுகிறார். அந்த வீட்டில் அடிமையாக இருந்த பெல் என்ற பெண்ணை திருமணம் செய்கிறான். 

அவர்களுக்கு கிஸ்ஸி என்ற மகள் பிறக்கிறாள். அந்த மகளுக்கு கின்டே தன் ஆபிரிக்க வார்த்தைகள் சிலவற்றை கற்றுக்கொடுக்கிறார். (ஆபிரிக்க மொழிபேசுவதோ, கல்வி கற்பதோ தடை) 

கிஸ்ஸிக்கு இளம் வயதானபோது அவர்களின் முதலாளி பெற்றோரிடம் இருந்து அவளை பிரித்து வேறொருவருக்கு விற்கப்படுகிறாள். 

அவளை வாங்கிய கொடிய முதலாளியின் பாலியல் வன்மத்தில் அவளுக்கு ஜார்ஜ் என்ற மகன் பிறக்கிறான். 

கிஸ்ஸி தன் தந்தையின் கதையையும் ஆபிரிக்க வார்த்தையையும் தன் மகனுக்கு கற்றுக்கொடுக்கிறாள். 

ஜார்ஜ், மெடில்டா என்ற அடிமையை மணக்கிறான். அவர்களுக்கு எட்டுப்பிள்ளைகள். அவர்களுக்கும் கிஸ்ஸி கூறிய வாய்வழி கின்டேயின் கதை கூறப்படுகிறது. 

கிஸ்ஸியை வைத்துக்கொண்டு மற்றவர்களை விற்றுவிடுகிறார் வெள்ளை முதலாளி.  

அதில் டாம் என்ற மகன் ஐரீன் என்ற ஆபிரிக்க செவ்விந்திய கலப்பு அடிமையை மணக்கிறான். 

அந்த காலத்தில்தான் ஆபிரகாம் லிங்கன் என்ற புதிய ஆண்டவன் அதிபராகி அடிமை முறை ஒழிக்கப்படுகிறது. 

டாம் ஜோடிக்கும் எட்டு பிள்ளைகள்.  

அவர்கள் முதன்முதல் விலங்கு நிலையில் இருந்து ‘தம்மையாரும் விற்கமுடியாது’ என்ற முதல் சுவாசத்தை சுவாசிக்கிறார்கள். 

டாம் குடும்ப பிள்ளைகளுக்கும் ஆபிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டுவரப்பட்ட கின்டே இன் கதை கூறப்படுகிறது.  

அந்த குடும்பத்தின் கடைசிப்பிள்ளையின் மகன்தான் நாவலாசிரியர் அலெக்ஸ்கேலி! 

தன் மூதாதையர் பட்ட இரத்தப்பாடுகளுக்கெதிராக அலெக்ஸ்கேலி செய்த யுத்தம்தான் இது.  

இந்த நாவல், வெள்ளை இனத்தவர் கறுப்பினத்தவருக்காக போராட உந்தித்தள்ளும். வெள்ளை மனங்களை உருவாக்கும்.  

இந்த நாவலை வாசிக்காமல் இறப்பது பிறப்புக்கு நாம் செய்யும் அவமானம் !! 

** 

பெருநன்றி :- தமிழில் இக்கொடையைத் தந்த பொன் சின்னத்தம்பி முருகேசன்.