— என்.செல்வராஜா, நூலகவியலாளர்—
கடந்த 2018 இல் எனது வருடாந்த இலங்கைப் பயணத்தின்போது மட்டக்களப்பு பொது நூலகத்தில் ஒரு வாரகாலத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. எனது “நூல் தேட்டம்” என்ற ஈழத்தமிழரின் தேசிய நூற்பட்டியல் தொகுதிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிவந்த பழைய தமிழ் நூல்களை பதிவு செய்யும் நோக்கத்துடனேயே அங்கு சென்றிருந்தேன். ஒரு பிரதேசத்தின் அறிவுத் தேட்டத்தை ஒரே இடத்தில் பார்ப்பதாக இருந்தால் எவரும் முதலில் நாடுவது அப்பிரதேசத்தின் பிரதான பொது நூலகத்தையே என்பது பொதுவானதொரு நியதியாகும். அந்த எதிர்பார்ப்புடனேயே அன்று மட்டக்களப்புப் பொது நூலகத்தை சென்றடைந்தேன்.
என்னை அன்று எதிர்கொண்டது பொதுச் சந்தையையும் மிஞ்சிவிடும் பேரிரைச்சல் கொண்ட மக்கள் கூட்டத்தால் சூழப்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் பொது நூலகக் கட்டடமாகும். அன்று நீதிமன்றம் கூடும் ஒரு நாளாக இருந்ததும், நூலகக் கட்டிடத்தை அண்மித்ததாகவே நீதிமன்றமும் அமைந்திருந்ததும் அன்றைய இரைச்சலின் காரணமாக இருந்திருக்கவேண்டும். கோர்ட்டடியில் சந்திக்கும் மனுதார்களும், எதிர்மனுதார்களும் வாக்குவாதம் செய்வதும், அவர்கள் தத்தமது சட்டத்தரணிகளை சந்தித்துக்கொள்வதும் நூலக வாசலில் இருந்த மரங்களின் நிழலிலேதான் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. நூலக வாசலில் ஏராளமான சைக்கிள்கள் விடப்பட்டிருந்தன. நூலக பாவனையாளர்களுடையதாக இருக்கலாம் என எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் நூலகத்தின் வாசகர் பகுதியைச் சென்றடைந்தபோது அது வெறிச்சோடிக் கிடந்தது.

பொது நூலகம் என்பது ஒதுக்கமாக, அமைதியான, மனோரம்யமான சூழலில் இருப்பதே பொருத்தமானதாகும். (அந்த வகையில் புதிய நூலகம் அமைக்கத் தேர்வுசெய்யப்பட்ட பிரதேசம் மட்டக்களப்பு மாவட்ட நூலக வாசகர்களுக்கு எதிர்காலத்தில் புதிய அனுபவத்தினை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.)
மட்டக்களப்பு பொது நூலகத்தில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் எழுந்த நூல்களைத் தேடிச் சென்ற எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே நூலகம் அளித்திருந்தது. ‘மட்டக்களப்பு சார்ந்த நூல்கள்’ என்ற குறிப்புடன் காணப்பட்ட அலுமாரியில் ஏனோ தானோ என்று அடுக்கிவைக்கப்பட்டிருந்த சிறிய எண்ணிக்கையிலான நூல்களே இருந்தன. அவற்றில் கணிசமான இடத்தை அமரர் ஈழத்துப் பூராடனார் க.தா.செல்வராசகோபால் அவர்களின் நூல்கள் தம்வசமாக்கிக்கொண்டிருந்தன. நான் அறிந்த வகையில் அவரது ஒட்டுமொத்த வெளியீடுகளின் 30 சதவிகிதம் கூட அங்கு இருக்கவில்லை. எனது “நூல் தேட்டம்” தொகுதிகளின்படி பார்த்தால் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் நூல்கள் அனைத்தையும் தேடிச் சேகரித்து நூலத்தில் பாதுகாத்திருப்பின் ஆகக்குறைந்தது மூன்று அலுமாரிகளை விட அதிகமாகத் தேவைப்பட்டிருக்கும்.

இந்தச் சிந்தனை ஓட்டத்தின் பின்னணியில் புதிதாக கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய நூலகக் கட்டிடத்தில் இடம்பெறவுள்ள நூல் ஈட்டல் செயற்பாடுகள் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பெற்ற ஒரு நீண்டகால வேலைத்திட்டத்தினூடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தினை உரியவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டியது எனது சமூகப் பணியாகின்றது.
புதிய நவீன கட்டடம் கட்டியெழுப்பப்பட்ட பின்னர் அவசர அவசரமாக நூல்களை வாங்கிக் குவிப்பதென்பது அர்த்தமற்றதும் இடத்தை நிரப்பும் செயற்பாடாடாகவுமே பார்க்கப்படும். நூலகக் கட்டிடம் படிப்படியாக வளரும் அதேவேளையில் அந்தப் புதிய நூலகத்திற்கான நூல்களும் தேடிச் சேகரித்துப் பாதுகாக்கப்படவேண்டியதும் அவசியம். அதனை எவ்வாறு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கலாம் என்று இத்தொடரில் பார்ப்போம்.
இலங்கையில் தேசிய நூலகம் 27.04.1990 அன்று கொழும்பு சுதந்திரச் சதுக்கத்திற்கு அருகாமையில் (Independence Avenue) சம்பிரதாயபூர்வமாக பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது என்பதை நாம் அறிவோம். 866 மீட்டர் நீளமான நூல்தட்டுகளில் 6,00,000 நூல்களுடன் அமைந்துள்ள இந்தத் தேசிய நூலகம் ஓரிரவில் உருவாக்கப்பட்டதல்ல என்பதை முதலில் நாம் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். 1970களிலேயே அதற்கான நூல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1970இல் இலங்கைப் பாராளுமன்றத்தின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை ஒன்று முதலில் நிறுவப்பட்டது. இலங்கையிலும், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்தும் இலங்கை தொடர்பானதும் இலங்கையர் தொடர்பானதுமான நூல்களும் ஆவணங்களும் அறிக்கைகளும் இச்சபையினால் 1970ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாகச் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டுவந்தன. அவை பேராதனைப் பல்கலைக்கழகம், கண்டி பொது நூலகம், கொழும்பு தேசிய சுவடிச்சாலை போன்ற பல்வேறு இடங்களில் தற்காலிகமாக அறைகளில் சேகரித்துவரப்பட்டன. இவற்றை பட்டியலாக்கம் செய்யவும், பகுப்பாக்கம் செய்யவும், மட்டைகட்டி தயார்படுத்தவும் என தேசிய நூலக சேவைகள் சபை சிறியதொரு சுறுசுறுப்பான ஆளணியைக் கொண்டிருந்தது. அதற்கான முக்கிய திட்டமிடலை அமரர் எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் முன்னின்று செயற்படுத்திவந்தார். இவை சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அக்கால வேளையில், சுதந்திரச் சதுக்கத்தில் தேசிய நூலகக் கட்டிடம் உருவாக்கப்படும் என்ற எண்ணமே உருவாகியிருக்கவில்லை. இருபது ஆண்டுகளின் பின்னர் 1990இல் தனக்கென ஒரு கட்டிடத்தை 11250 சதுர மீட்டர் தளப்பரப்பில் ஐந்து மாடிகளில் அமைத்துக்கொண்டதன் பின்னர் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை, தான் சேகரித்துப் பாதுகாத்து வந்த நுல்கள் அனைத்தையும் அங்கே கொண்டுவந்து குவித்தது. தனது ஆரம்பப்பணியை செவ்வனே செய்துமுடித்த தேசிய நூலக சேவைகள் சபை பின்னர் 1998 இன் 51ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் தேசிய நுலகமும் ஆவணக்காப்பகமுமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது, அதுவே இன்றைய இலங்கைத் தேசிய நூலகமாகப் பரிணமித்துள்ளது.
தேசிய நூலகங்களினதும், பிராந்திய நூலகங்களினதும் உருவாக்கம் உலகெங்கும் இவ்வாறுதான் நிகழ்ந்துவந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் பொது நூலகத்திற்கான சேர்க்கைகளும் க.மு.செல்லப்பா அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பையும், USIS என்ற ஐக்கிய அமெரிக்க தகவல் நிலையத்தின் யாழ்ப்பாண நூலகத்தின் சேகரிப்புகளையும், கொண்டே வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று 2,50,000 நூல்களைக் கொண்ட பொதுமைப்பாடமைந்த பிரதான நூலகமாக யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றது. இலங்கையில் மட்டக்களப்புப் பிரதேசத்துக்கான மாநகர சபையின் பொதுசன நூலகமும் இவ்வாறுதான் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும். கட்டிடம் கட்டியபின் தான் நூல்களைச் சேர்க்கத் தொடங்கவேண்டும் என்ற கருத்தியலை நம்மவர்களில் பலர் இன்றும் கொண்டிருப்பதால் இங்கு இதனை வலியுறுத்தவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையினர், கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து இத்தகையதொரு நூல் சேகரிப்பு வேலைத்திட்டத்தை இப்பொழுதே உருவாக்க முன்வரவேண்டும். முதலில் அதற்கென ஒரு தொகை நிதியை ஒதுக்கி, ஒரு சிறு செயற்குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் எதுவுமற்ற அக்குழுவிற்கான வழிகாட்டிகளாகவும், வளவாளர்களாகவும் நூலகத்துறை அறிஞர்களும் இலக்கிய அறிஞர்களும் கல்வியியலாளர்களும் நூலகர்களும் இடம்பெறவேண்டும்.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பொதுசன நூலகம், மட்டக்களப்பு மாநகரசபை எல்லையுடன் தனது சேவைப் பரப்பை மட்டுப்படுத்திக்கொள்ளாது என்றே நான் நம்புகின்றேன். அதனை மட்டக்களப்பு மாவட்டத்துக்குரியதாகவோ, கிழக்கு மாகாணத்துக்குரியதாகவோ விரிவாக்கம் செய்யும் தீர்மானத்தை தமது வரையறைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கென சில அடிப்படை நியமங்கள் உள்ளன. சனத்தொகை, நிலப்பரப்பு, வாக்காளர் எண்ணிக்கை என்பன இதனைத் திர்மானிக்கும் காரணிகளாகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் விஸ்தீரணம் 68 சதுர கி.மீற்றராகும். இது 63,914 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மேலும், காத்தான்குடி நகரசபை (6 ச.கி.மீ), ஏறாவூர் நகரசபை (3 ச.கி.மீ), கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை (589 ச.கி.மீ), கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை (31 ச.கி.மீ), கோரளைப்பற்று பிரதேச சபை (663 ச.கி.மீ), ஏறாவூர்பற்று பிரதேச சபை (695 ச.கி.மீ), மண்முனை மேற்கு பிரதேச சபை (352 ச.கி.மீ), மண்முனைப்பற்று பிரதேச சபை (37ச.கி.மீ), மண்முனை தென்மேற்கு பிரதேச சபை (157 ச.கி.மீ), போரதீவுப் பற்று பிரதேச சபை (190 ச.கி.மீ), மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை (63 ச.கி.மீ) ஆகிய உள்ளூராட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கினால் மொத்தம் 2854 ச.கி.மீ. பரப்பளவையும், 3,98,301 வாக்காளர் எண்ணிக்கையையும் கொண்டதாக அமையும். (மூலம்: 2019 புள்ளிவிபரக் கைநூல், மட்டக்களப்பு மாவட்டம்).
யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆதரவுடன் செயற்படுவதுடன், சர்வதேச மட்டத்தில் பொது நூலக நியமங்களை வரையறுக்கும் நிறுவனமாக IFLA (International Federation of Library Associations) என்ற நூலக நிறுவனம் இயங்கிவருகின்றது. ‘கல்வி கலாசாரம் தகவல் அகியவற்றுக்கானதொரு சனநாயக நிறுவனமாக’ பொது நூலகத்தை அது குறிப்பிடுகின்றது. பொது நூலகங்களுக்கான நியமங்களை வரையறுத்திருக்கும் IFLA நிறுவனம், ஒரு பிரதேசத்தில் அமையவிருக்கும் பொது நூலகம் பற்றிய நியமங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நூல்களும் ஏனைய சாதனங்களும் நூலக அலுவலர்கள் தேவைகள் கிட்டுவதற்கான நிலை வசதிகளும் வாய்ப்புக்களும் நூலகக் கட்டிடம் ஆகிய அம்சங்களையிட்டு விரிவான விளக்கத்தினை வழங்கியுள்ளது. இக்கட்டுரைத் தொடரில் இடைக்கிடையே தேவைக்கேற்ப இந்நியமங்கள் பற்றி குறிப்பிடவிருக்கின்றேன்.
IFLA வரையறை செய்துள்ள நியமத்தின் படி ஒரு பொது நூலகம் குறைந்தபட்சம் 1,50,000 சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்கிறது. அப்பொழுது தான் அந்நூலகத்தின் முழுமையான சேவை வழங்கல் என்பது பொருளாதார ரீதியில் நிறைவான பயனுள்ளதாக இருக்கும் என்கின்றது. அவ்வகையில் 2012 இல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 5,26,600 என அறியமுடிகின்றது. இவர்கள் அனைவரும் 2854 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்கின்றார்கள். 2012ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி ஒரு சதுர கி.மீட்டருக்கு சராசரி 185 பேர் என்ற ரீதியில் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஆண்கள் 2,50,700, பெண்கள் 2,75,900 ஆக உள்ளனர். சதவிகிதத்தில் ஆண்கள் 47.6 வீதமும் பெண்கள் 52.4 வீதமுமாக அமைகின்றனர். IFLA வரையறையின் கீழ் முழு மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள சனத்தொகைக் கணிப்பீட்டின் படி முழுமையான சேவைப் பரப்பினை உள்ளடக்கிய பொதுமைப்பாடெய்திய மூன்று பொது நூலகங்களாவது இருக்கவேண்டும். இன்றைய சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குகின்ற எத்தனை பொது நூலகங்கள் இத்தகைய உயர் தரத்தில் உள்ளன என்பதை நிர்வாகத்தில் உள்ளோர் மதிப்பீடு செய்வது அவசியமாகின்றது.
எனது இந்தக் கட்டுரைத் தொகுதியில் நான் குறிப்பிடும் கருத்துக்கள் அனைத்தும் இத்தகைய பொதுமைப்பாடெய்திய ஒரு முழுமையான நூலகத்தின் உருவாக்கத்தை மனதில் இருத்தியே குறிப்பிடப்படுகின்றது என்பதை வாசகர்கள் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். அந்த பொதுமைப்பாடெய்திய தராதரம் மிக்கதாக மட்டக்களப்பு நகரில் எழுகின்ற பொது நூலகம் அமையவேண்டும் என்பதே இக்கட்டுரை ஆசிரியரின் வேண்டுகோளாகும்.
ஒரு பொது நூலகத்தின் வளங்களின் அளவுகள் தனிப்பட்ட பாவனையாளர்களின் தேவைக்கு இயைந்ததாகவே அமைந்திருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு பொது நூலகம் தனிப்பட்டவர்களுடன் தான் தொடர்பு கொள்கின்றது. தபால்சேவை மூலமோ அல்லது ஒரு பெரும் நகர நூலக அமைப்பின் மூலமோ ஒரு தனிமனிதர் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவையினையொட்டியே ஒரு நூலகத்தின் சேவைத்திறன் கணிக்கப்படுகின்றது. எமது நூலகத்தினால் எவ்வாறான சேவை வழங்கமுடியும் என்பது அத்தகைய சேவையை அடையக்கூடிய ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பிலேயே பெருமளவில் தங்கியுள்ளது என்பது தெளிவு. எனவே பொது நூலகத்தில் சிறிய அளவிலான சேவை முனையங்கள் விசாலமான சேவைகளுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்டால்தான் தனிப்பட்ட வாடிக்கையாளருக்கு (வாசகருக்கு) ஆகச்சிறந்த சேவையை அந்நூலகத்தினால் வழங்கமுடியும். சிறந்த சேவையை வழங்க முடியாத, அதற்கான விரிவான திட்டங்கள் எதனையும் கொண்டிராத ஒரு நகரசபையின் பொது நூலக கட்டிடம் பிற்காலத்தில் ஒரு வெள்ளை யானையை கட்டி வளர்க்கும் நிலைக்கே அந்த நகரசபையையோ, மாகாண சபையையோ கொண்டுவந்து நிறுத்திவிடும்.
அடுத்த இயலில் பொதுமைப்பாடடைந்த மட்டக்களப்பு பொது நூலகத்தில் அமைந்திருக்கவேண்டிய நிர்வாகப் பிரிவுகள், சேவை முனையங்கள் பற்றியும், குறிப்பாக நூற்சேர்க்கைப் பிரிவு பற்றியும் விரிவாக நோக்குவோம்.
(இக்கட்டுரையை வளர்த்துச் செல்வதற்கு உதவியாக, மட்டக்களப்பு பொது நூலகத்தின் தளவரைபடத்தினை அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து எனக்குப் பெற்றுத் தரமுடிந்தால் இக்கட்டுரை சிறப்பாக அமையும்).
(தொடரும்)
