— முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ —
(தமிழில்: வி. சிவலிங்கம்)
‘நிலமைகள் உகந்ததாக இருக்கும்போது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தலாம்’ எனசமீபத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். மாறாக, மாகாண சபைகளை அகற்றுமாறு அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியிருந்தார். தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் தற்போது இயங்காத நிலையில் அவை யாப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவே கொள்ளப்பட வேண்டுமென தூதுவர். நளீன் டி சில்வா கூறுகிறார்.
இவற்றை அவதானிக்கும்போது 13வது திருத்தம் தொடர்பாக மூன்று ஒன்றுக்கொன்று போட்டியிடும் நிலைப்பாடுகள் புலப்படுகின்றன.
(அ) 13வது திருத்தம் அப்படியே இருப்பதாக பிரதமர் நம்புகிறார்.
(ஆ) கோட்பாட்டு அடிப்படையில் 13வது திருத்தம் இன்னமும் இருப்பதாகவும், அதனை நிச்சயம் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் வீரசேகர கூறுகிறார்.
(இ) 13வது திருத்தம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தூதுவர் சில்வா எண்ணுகிறார்.
பிரதமர் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இவை பற்றிக் குறிப்பிடுகையில் ’13வது திருத்தம் அரசியல் யாப்பின் பகுதியாக உள்ளது. அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகளை ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளால் காலவரையின்றி இயக்க முடியாது’ என்கிறார்.
13வது திருத்தமும், அதன் அமுலாக்க இயங்கியலும்
இப் பின்னணியில் எனது மதிப்பிற்குரிய பேராசிரியர். ஜெரால்ட் பீரிஸின் கட்டுரையைப் படித்தேன்.
(அ) உண்மையான அதிகார பகிர்வு
(ஆ) இலங்கையின் இறையாண்மை/ பிராந்திய ஒருமைப்பாட்டை சட்டபூர்வமாகப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளை ஒழிப்பதையும், அரசியல் யாப்பு வழிமுறைகளால் மாற்றுவதையும் அவர் வலியுறுத்துகிறார். இதற்குச் சான்றாக அவர் டச்சு மற்றும் பிரித்தானிய காலங்களை மறு பரிசீலனை செய்கிறார். அதன் மூலம் மாகாணங்கள் உருவாகிய வரலாற்றினைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வினை அவர் வெளிப்படுத்துகிறார். பேராசிரியர். மத்தும பண்டார மாகாணங்கள் குறித்து வேறு பகுப்பாய்வினைத் தந்துள்ளார்.
இங்கு 13வது திருத்தத்தினை எந்த அரசாங்கமும் முழுமையாகச் செயற்படுத்தவில்லை என்ற போதிலும், பிரதான முன்னணி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இது குறித்து தீர்மானிக்காத அல்லது இத் திருத்தம் குறித்து எதிர் நிலைப்பாடுகளை உடையோர் மௌனமாக இருந்த போதிலும் 1997 மற்றும் 2000ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2009ம் ஆண்டில் 13வது திருத்தத்தினை சர்வதேச மனித உரிமை ஆணைய தீர்மானங்களில் இணைத்ததன் மூலம் ஏற்றுக் கொண்டிருந்தார். அதனையே 2015ம் ஆண்டில் அமைந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் மீண்டும், மீண்டும் தொடர்ந்து இணைத்துச் சென்றனர். எனவே பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் உணர்வுபூர்வ அடிப்படையில் அதனை ரத்துச் செய்யக் கூடாது என நம்புகிறேன்.
இந்த முன்னேற்றங்கள் பேராசிரியர். ஜி. எல். பீரிஸினால் விவாதிக்கப்படவில்லை. அவை முக்கியமான அம்சங்கள் என நம்புகிறேன். ஏனெனில் அவை சர்வதேச ராஜதந்திரம், சர்வகட்சிப் பரிந்துரைகள் மற்றும் பிற தாக்கங்கள், விளைவுகளுடன் இணைந்துள்ளன.
எவ்வாறிருந்த போதிலும் கருத்தியல் அடிப்படையில் அதிகார பகிர்வு எம் அரசியலிற்குள் இருப்பிடத்தைப் பெற்றுள்ளது. இது உள்ளடக்கத்தில் இணைந்துள்ளதோடு ஓர் அரசியல் இயங்கியலையும் தோற்றுவித்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள், இந்தியா, சர்வதேசம், புலம்பெயர் மக்கள் மற்றும் பிளவுகளுக்கு அப்பால் செயற்படும் அரசியல் தலைவர்கள் (ஜனாதிபதி கோத்தாபய நீங்கலாக, அவர் அரசியலற்ற ஒருவராக தம்மை வெளிப்படுத்துவதால்) பலரும் இந்த நிலையை உருவாக்குவதில் கணிசமான அளவு பங்களித்துள்ளார்கள். இருப்பினும் தொடர்ச்சியாக தேவை காரணமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுள்ளார்கள் அல்லது பாராட்டுகிறார்கள்.
இந்தியாவின் வலிமையான செல்வாக்கு
இங்கு இப் பிரச்சினையில் வலிமையான செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இந்தியா உள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எங்கள் அதிகாரப் பகிர்வில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளனர். பிரதமர்கள் ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங், தற்போது நரேந்திர மோடி ஆகியோரின் கொள்கைகளிலிருந்து அவை தெளிவாகின்றன. அத்துடன் தமது நிலைப்பாட்டைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோருக்கும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தத் தலையீடுகள் அதிகாரப் பகிர்வை அதிகரிப்பதில் முக்கிய பங்கைச் செலுத்தியிருப்பதை எமது தலைவர்கள் மறந்துள்ளனர் போலும். அவ்வாறான தலையீடுகள் பற்றி நாம் அவர்களிடமிருந்து கேள்விப்படுவதில்லை.
13வது திருத்தத்தினை ஆதரித்த வரலாறுகளை இன்று பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக வந்துள்ள இளைய தலைமுறையினர் இவ்வாறான கடந்த காலத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது இணங்கிச் செல்கிறார்கள்.
ஏற்கெனவே குறிப்பிட்ட தலைவர்கள் அதிகாரப் பகிர்வை இணைக்க உதவினார்கள் என்பது அதனைக் குறைத்து மதிப்பிடும் விரோத நகர்வுகள் என்பது அர்த்தமல்ல. மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸவின் அதிகார பரிமாற்றச் சட்டம் (Transfer of Power Act) மாவட்ட நிர்வாகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மாகாணசபைகளின் அதிகாரங்களின் சில பிரிவுகள் மத்தியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதன் காரணமாக சில பிரிவுகளின் இழப்புகள் (Divisions were institutionally brought under direct central control at the expense of the powers of the PCs.) ஏற்பட்டன. இதேபோல் கிராம அளவில் குறைக்கப்பட்ட அளவிலான செயற்பாட்டாளர்கள், உதாரணமாக கிராம சேவையாளர்களை முன்னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க உள்துறை அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.
அதிகாரப் பகிர்வை மீள் வலுப்படுத்தல்
அதிகாரப் பகிர்வை மேலும் மேம்படுத்தும் வகையில் 1997ம் ஆண்டில் ‘அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான முன் மொழிவுகள்’ (Proposal for constitutional reforms) என்ற தலைப்பில் ஜனாதிபதி சந்திரிகா முயற்சித்தார். அப்போதைய அமைச்சர்களான மகிந்த ராஜபக்ஸ, சாமல் ராஜபக்ஸ, நிமல் சிறீபால டி சில்வா, ஜி எல் பீரிஸ், சுசில் பிரேம் ஜயந்த் என்போர் அதற்கு ஆதரவாக செயற்பட்டனர். ஆனால் அவர்கள் இன்று அவைபற்றிப் பேசமாட்டார்கள்.
அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் நோக்கில் இரண்டாவது முயற்சியாக 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த வேளையிலும் மேற்குறிப்பிட்ட நபர்கள் அதிகாரத்திலிருந்தனர். அத்துடன் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஆதரித்து ஏற்றிருந்தனர். இப்போது அவர்கள் அவைபற்றிப் பேசாது மௌனமாக உள்ளனர்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள முன்னாள் முதலமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த், சாமர சம்பத், ஷான் விஜயலால் டி சில்வா, சி வி விக்னேஸ்வரன் மற்றும் நஜிர் அகமட்,முன்னாள் ஆளுநர் சீதா அரம்பே போலா ஆகியோர் அதிகார பகிர்வை வலுப்படுத்த தற்போது ஆதரவாக உள்ளார்களா? என்பதை அறிய எனக்கு ஆவலாக உள்ளது.
சந்திரிகா குமாரதுங்க மேற்கு மாகாணத்தின் முதல்வராக செயற்பட்ட வேளையில் மாகாணசபைத் தீர்மானத்தை நிறைவேற்றிய வேளையில் அதற்கு ஆதரவாக சுசில் பிரேம் ஜயந்த், பீலிக்ஸ் பெரேரா என்போர் பொலீஸ் அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க வேண்டுமென மிகவும் கடுமையாகக் கோரினர். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியான பின்னர் மாகாணசபைகளுக்கு பொலீஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றிக் கவலைப்படவில்லை. தற்போது விடுதலைப்புலிகளுடனான முரண்பாடுகள் இல்லை என்பதால் மாகாணங்களுக்கு பொலீஸ் அதிகாரங்களை வழங்குமாறு இவர்கள் இப்போது கோருவார்களா? என்பதை அறியவும் எனக்கு ஆவலாக உள்ளது.
தற்போது புதிய அரசியல் யாப்பினை உருவாக்க ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழு நியமிக்கப்படுவதற்கு முன்பதாக அரசியல் யாப்பினைத் திருத்துவதற்கான சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதிகாரப் பகிர்விற்கான 13வது திருத்தத்துடன் 17வது, 18வது, 19வது திருத்தங்களில் நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தும் நோக்கில் மீளாய்வு செய்யப்பட்டன. ஆனால் 13வது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிக்கவில்லை.
1997, 2000ம் ஆண்டுகளில் அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வை நோக்கிய சீர்திருத்தத் திட்டங்கள் 2015 இற்குப் பின்னரான வழிநடத்தல் குழு முன்மொழிவுகள் காத்திரமான ஒரு கருத்திற்கு வழி வகுக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சியில் காணப்படும் முக்கிய வேறுபாடு என்னவெனில் நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பு சபையில் வழிநடத்தல் குழு (Steering Committee) செயற்பட்டது. ஆனால் தற்போதைய முயற்சிகள் யாவும் பாராளுமன்றத்தின் பங்களிப்பு இல்லாமல் யாப்பு வரைதல் என்பது அரசாங்கத்தின் விவகாரமாக மாற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மிக மோசமான வழிமுறையாகும். இதற்கு நியாயங்களாக அரசாங்கத்திற்குத் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் அதனடிப்படையில் இவை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட ஆறு துணைக் குழுக்களில் தற்போதைய அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த் (பொது சேவை திருத்தங்கள்) பந்துல குணவர்த்தன (நிதி) போன்றவற்றையும் இன்றைய எதிர்க் கட்சியைச் சேர்ந்த சாகல ரத்னாயக்க (பொது பாதுகாப்பு) தர்மலிங்கம் சித்தார்த்தன் (மைய – சுற்று உறவுகள்) போன்ற இவை யாவும் அதிகார பகிர்வு தொடர்பானவை. ஏனைய இரண்டு துறைகளான நீதித்துறை, அடிப்படை உரிமைகள் என்பனவாகும். புதிய அரசியல் யாப்பினை வரைய முயற்சிக்கும் போது புதிய அச்சுகளைத் தேடி அலையாமல் தற்போதைய குழு இத் துணைக்குழு அறிக்கைகளிலிருந்து போதிய தகவல்களைப் பெற முடியும்.
1997 மற்றும் 2000ம் ஆண்டின் அதிகார பகிர்வு முன்மொழிவுகள்
1997ம், 2000ம் ஆண்டின் முன்மொழிவுகள் அச்சில் கிடைக்கின்றன. மிகச் சமீபத்தில் பேராசிரியர். ஜெரி பீரிஸ் மாகாணங்களின் பரிமாணங்கள் பற்றி விபரித்துள்ளார். அவர் வரலாற்றின் காலவோட்டத்தின்போது மாகாணங்களின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படும் எனக் கருதியதால் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான யோசனைகளில் சில தேர்ந்தெடுக்கபட்ட அம்சங்களை இப்போது பார்க்கலாம். ஏனெனில் 1997 இலும், 2000ம் ஆண்டிலும் தரப்பட்ட அதிகாரப் பகிர்வு திட்டங்கள் மிகவும் புரட்சிகரமானவை. 1997 இல் வழங்கப்பட்ட ஆவணம் உட்சுற்றுக்கானது. ஆயினும் 2000ம் ஆண்டு ஆவணத்தில் கே என் சொக்ஸி போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுனர்களால் எதிர்க்கட்சி தரப்பிலிருந்தும் உள்ளீடுகள் (Inputs) வழங்கப்பட்டன.
இதில் எனது கவலைக்குரிய பிரச்சனை என்னவெனில் அரசாங்கத்திலுள்ள மூத்த தலைவர்களின் மௌனம் என்பது அதிகார பகிர்விற்கான வெவ்வேறு அணுகுமுறைகளை ஆதரித்துச் செல்வதாகும். பல்வேறு கேள்விக்குரிய பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் உதாரணமாக, காணி அதிகாரம் சம்பந்தமாக பிரச்சனைகள் உள்ள போதிலும் அவை பற்றித் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. 1997இன் முன்மொழிவுகளில் தேசிய காணி ஆணைக்குழுவை ஒழிப்பதற்கான ஓர் முயற்சியாக இது திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் 2000ம் ஆண்டு திட்டங்களில் அவை சரி செய்யப்பட்டன.
மாகாண சபை எல்லை நிர்ணயம்
இங்கு மாகாண சபை எல்லைகளை அவதானிப்பின் சில விமர்சகர்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற காரணங்களைக் காட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை மறுத்து வருகின்றனர். ஆனால் 1997ம் ஆண்டு அன்றைய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களை வடக்கு மாகாணத்துடன் இணைக்க முன்மொழிந்தது. இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள மக்களிடம் ஒப்புதல் வாக்களிப்பு நடத்துவதாகவும் கூறப்பட்டது. 2000ம் ஆண்டு முன்மொழிவுகளில் அவ்வாறான வாக்கெடுப்பின் பின்னர் வடகிழக்கு மாகாணத்தை உருவாக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதனை இன்னொரு தெரிவாக இந்தியர்கள் முன்வைத்தனர். ஆனால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
முஸ்லீம் மக்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் தென்-கிழக்கு பிராந்திய சபையை நிறுவ அவர்கள் தயாரானார்கள். அதாவது அம்பாறை தொகுதியில் பெரும்பான்மையான சிங்களப் பகுதியைப் புறம் ஒதுக்கி அதனை ஊவா பிராந்தியத்துடன் இணைத்து இரண்டு பிராந்தியங்களிலுமிருந்த மக்கள் குடிப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தினர். இவ்வாறான முயற்சியின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள மீதமுள்ள 40 சதவீத தமிழ், சிங்கள மக்கள் சிறுபான்மையினராக மாறுவர் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
இதேபோன்ற நிலையே அதாவது அம்பாறை – ஊவா இணைப்பின் போது ஏற்பட்டது போலவே திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் நிலையும் ஏற்பட்டது. அந்த மக்களை வட –மத்திய பிராந்தியத்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமையால் அதே விதியையே இந்த மக்களும் அனுபவித்தார்கள்.
கிழக்கின் ஆளுநராக நான் செயற்பட்ட வேளையில் அந்த உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். வடக்கு, கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் மீட்பர்களாக தம்மைக் கருதும் அரசியல்வாதிகளால் இதனையே செய்ய முடிந்துள்ளது. ஒரு வகையில் கிழக்கில் பூர்வீகமாக வாழும் முஸ்லீம் மக்களுக்கு அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு வாக்களித்தமையால் தென் -கிழக்கு அலகு வழங்கப்படலாம் என பெருமிதமடையக்கூடும்.
ஆளுநர்கள்
13வது திருத்தத்தின் பிரகாரம் ஆளுநர்களை நியமிப்பது ஜனாதிபதியின் உரிமையாகும். ஆனால் 1997இல் தெரிவிக்கப்பட்ட முன்மொழிவுகள் முதலமைச்சரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் மூலம் ஜனாதிபதியின் உரிமையைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இங்கு பொலீஸ் அதிகாரங்களை ஒரு மாகாண பொலீஸ் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு எதிராக இந்த அரசியல்வாதிகள் பயன்படுத்திய ஆயுதம் இதில் முதலமைச்சரின் பங்களிப்பு தொடர்பான அம்சமாகும். இதனால் 2000ம் ஆண்டின் முன்மொழிவுகளில் முதலமைச்சரின் ஒப்புதல் மற்றும் அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் போன்றவற்றில் மேலும் நிபந்தனைகள் விதித்துத் தடை செய்தனர். அந்த முன்மொழிவு நடைமுறைப்பட்டிருந்தால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டிருக்கும்.
1997, 2000ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சிறுபான்மைக் கட்சிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கும். 2000ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்களின் பெயர்கள் பாராளுமன்றக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அபிப்பிராயங்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மேலும் வலுவை அளித்திருக்கும்.
ஆளுநர்களை நீக்குவது தொடர்பான அம்சங்கள் 13வது திருத்தத்தில் காணப்பட்டவை போலவே 2000ம் ஆண்டு முன்மொழிவுகளிலும் இருந்தன. அதுவே 1997ம் ஆண்டு முன்மொழிவுகளிலும் இருந்தது. ஆனால் 2000ம் ஆண்டு முன்மொழிவுகளில் மேலும் ஒரு விசாரணைக்குழு அம்சம் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அது ஆளுநரின் செயற்பாட்டை அளவீடு செய்வதாக அமைந்திருந்தது.
மாகாண நிறைவேற்று அதிகாரங்கள்
நிறைவேற்று அதிகாரங்கள் சம்பந்தமான விபரங்கள் 13வது திருத்தத்தில் ஒரு தனியான பிரிவாகத் தரப்பட்டுள்ளது. பின்னர் அவை 1997, 2000ம் ஆண்டு முன்மொழிவுகளில் மேலும் விரிவாக்கப்பட்டன. அதில் ஒப்பந்தங்களுக்கான கூடுதல் பொறுப்புகள் பிரிவு 130(2) இலும், ஒப்பந்தங்களின்போது ஏற்பட்ட தனிப்பட்ட பொறுப்புகளுக்கான விதிவிலக்கு 130(2)(6) இலும் வழங்கப்பட்டுள்ளன.
1997, 2000 ஆண்டு முன்மொழிவுகளில் நிறைவேற்றுக்குழு (Executive committee system) முறையும், அதன் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலுக்கு அதிகார இடமளிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட பிரிவில் அங்கத்தவரின் செயற்பாடுகளை விட அவரது தெரிவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில் இக்குழுமுறை மிகவும் சக்தி வாய்ந்தவை. மசோதாக்களைப் படிப்பதற்கான கால அவகாச கட்டுப்பாடுகள் காரணமாகவே இக் குழு அமைப்பு முறை அதிகம் விரும்பப்படுகிறது. இதன் மூலம் மசோதாக்கள் தொடர்பான பரந்த விவாதத்திற்கு வாய்ப்பை வழங்குகிறது. இக் குழு முறை என்பது சட்டங்களை ஆராய்வதைத் தவிர பல்வேறு திணைக்களங்கள், அவற்றின் கொள்கைகள் மற்றும் வரவு– செலவுத் திட்ட ஒதுக்கீட்டையும் ஆராய்கின்றன. இவை ஒரு வகையான ‘மினி- பாராளுமன்றங்கள்’ எனலாம். இவை சட்டமியற்றுவதில் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும், அதில் பங்குபற்றுபவர்கள் தமது குடி மக்களுடன் முறைப்படி ஈடுபடுவதற்கும், சம்பந்தப்பட்டவர்களின் உள்ளீட்டு அறிவாற்றலைத் தேடுவதற்கும் அதன் மூலம் பல்வேறு அம்சங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும், அதற்கான வலுவான தளத்தை வழங்குவதற்கும், கொள்கைகளை முகாமைத்துவப்படுத்தி பலப்படுத்துவதற்குமான ஓர் மேடையைத் தருகிறது.
இத்தகைய ஏற்பாடுகள் என்பது பாராளுமன்றத்தில் சட்டங்களை ஆழமாகக் காண விரும்பாதவர்களுக்கு வெறுக்கத்தக்கவையாக இருக்கலாம். எவ்வாறாயினும் இக் கலந்துரையாடல்கள் நேர்மறையான, ஆக்கபூர்வமான முன்மொழிவுகளைத் தர முயற்சிக்கப்பட்டுள்ளன என்ற உண்மைகளை முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது.
சட்டவாக்கம்
13வது திருத்தத்தில் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லை. எனவே மாகாண சபைகள் சட்ட மா அதிபரின் தயவில்தான் தங்கிச் செயற்பட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள இரண்டு மாகாண சபைகளும் ஓர் பொருத்தமற்ற ஏற்பாட்டின் அடையாளமாக இருப்பதைக் காண முடிகிறது. இதனாதால்தான் சட்டங்களை உருவாக்குவதில் மெதுவான போக்கினையே காண முடிகிறது.
சட்டங்களை உருவாக்குவதற்கான நிபுணத்துவம் பொதுவாகவே மாகாண சபைகளில் இல்லை. எந்தவொரு நிறுவனங்களிலும் சட்ட ஏற்பாட்டிற்கான தெளிவுபடுத்தல்கள் மிகவும் தாமதமாகவே நிகழ்கின்றன. இதன் காரணமாகவே பிராந்தியங்களுக்கான சட்ட அதிபர் பற்றிய யோசனைகள் 1997 இன் முன்மொழிவுகளிலும், அட்வகேட் ஜெனரல் (Advocate General of the Region) நியமனம் 2000ம் ஆண்டு முன்மொழிவுகளிலும் முன் வைக்கப்பட்டது. இந்த இரு முன்மொழிவுகளுடன் சட்டத்தை உருவாக்கும் வலுவை 13வது திருத்தத்திற்கு வழங்கியுள்ளது.
தேர்தல்களுக்கான ஆரவாரங்கள்
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமா? மாகாண சபைகள் தேவையா?தேவையில்லையா? என்ற வாதங்களுக்குள் நான் செல்லவில்லை.
இங்கு அதிகார பகிர்வு என்ற கருத்தியல் 13வது திருத்தத்திலிருந்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதனையே இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இதே கருத்தினை உடையவர்களே புதிய அரசியல் யாப்பிற்காக காத்திருக்காமல் 19வது திருத்தத்திற்குப் பதிலாக 20வது திருத்தத்தைக் கொண்டு வந்த போது ஏற்கெனவே இவ்வாறான வர்ணனைகளை முன் வைத்தவர்கள் அமைதியாக இருந்தனர்.
முடிவுரை
இக் கட்டுரை 13வது திருத்தம் என்பது அதிகார பகிர்வு தொடர்பாக எதிர் காலத்தில் முடிவு செய்வதற்கான அடிப்படை என மட்டும் கருதக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
இரண்டாவதாக, 1987 (13 A) முதல் 2020 (20 A) வரை தொடரும் பிரச்சனைகளில் குறைந்த அளவில் விவாதிக்கப்பட்ட சிக்கல்கள் பற்றிய விபரங்களை முன்னிலைப்படுத்துகிறது. இவை இன்னமும் பொது வெளியில் உள்ளன. இவற்றை அரசியல்வாதிகளும், அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குபவர்களும் தமது தீவிர கவனத்திற்கு எடுத்தல் வேண்டும்.
மூன்றாவதாக, தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் சிலர் அதிகாரப் பகிர்வின் ஆதரவாளர்களாக இருந்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்திருந்தனர். இவர்கள் நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டுமானங்களின் வளர்ச்சிக்கு வழங்கிய நன்மைகளை நினைவில் கொள்ள வேண்டும். அதைவிட அவற்றை மேலும் சிறப்பிக்க உதவ வேண்டும். இவை அரசியலில் மட்டுமல்லாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் கிடைக்கும் ஓர் பயிற்சி ஆகும். அத்துடன் நாட்டின் நல்வாழ்விற்கும் அவசியமாகும்.
நான்காவதாக, இத்தகைய முயற்சிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத் தலைவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்று மேற்கொண்ட நடவடிக்கைகளும் அங்கு உள்ளன என்பதால் அவற்றை நேர்மறையாக அணுகி அரசியல் வாதங்களை முன்வைத்து மேலும் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும்.
இறுதியாக நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பில் ஈடுபடும் அரசாங்கம் உண்மையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவையே ஜெனீவாத் தீர்மானங்களுக்கு உதவும்.