இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)

இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)

  — அழகு குணசீலன் — 

ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னரான அரசியல் வரலாற்றில் தமிழ் தேசியம் “இணக்க அரசியல்” பற்றி மெல்ல மெல்ல மூச்சு விடத் தொடங்குகிறது. 

எதிர்க்கட்சி என்றால் எதிர்ப்பு அரசியல்தான் செய்ய முடியும் என்ற தமிழர் அரசியல் வரலாற்றில், எதிர்ப்பில் இருந்து இணக்கத்திற்கு திரும்பும் அரசியல் பாதையில் சந்திக்கின்ற வளைவு – “முடக்கு”. 

சமகால அரசியல் என்ற மகுடத்தில் சுமந்திரனும், சாணக்கியனும் மெல்ல, மெல்ல திருவாய்மலரத் தொடங்கி உள்ளனர். ஒரு வகையில் இது தமிழரசின் சந்ததி இடைவெளியின், கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு வெளிப்பாடு. ஆனால் இதனை தமிழ்த்தேசிய சந்ததி இடைவெளியின் வெளிப்பாடாக கொள்ள இன்னும் காலம் கனியவில்லை.  

இணக்க அரசியல் சார்ந்து சுமந்திரனும், சாணக்கியனும் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து தமிழரசு தலைமையோ, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமையோ, அதன் கூட்டாளிக்கட்சிகளோ, இதுவரை எந்தக் கருத்தையும் வெளிப்படையாக கூறியதாக இல்லை. 

அதுமட்டுமின்றி சுமந்திரன் கருத்துக்கு எதிராக எப்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் கஜேந்திரகுமார், அல்லது நீதிமன்ற விசாரணை அறிக்கை- குறுக்கு விசாரணைப் பாணியில் தானே கேள்வியையும் எழுதி, பதிலையும் எழுதி ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்று ஊடகவியலாளர்களின் கைகளில் திணிக்கும் விக்கினேஸ்வரன் கூட இன்னும் இந்த விடயத்தில் “பேனாவுக்கு மை முடிந்த நிலை”யில் உள்ளார். 

இத்தனைக்கும் மத்தியில் இவர்கள் இருவரும் தாங்கள்தான் ஒரிஜினல் தமிழ்த்தேசியவாதிகள் என்று   காட்சிப்படுத்த முனைவதை சுமந்திரன் சாடியிருக்கிறார். இருந்தும் இவர்களின் மௌனத்தை சம்மதம் என்பதா? இல்லை புயலுக்கு முன்னரான அமைதி என்பதா? இரண்டாவதுதான் என்றால்  இணக்க அரசியல் சந்திக்கப் போகின்ற தடை – “இடக்கு” 

இணக்க அரசியல் இடக்குகள் …..! 

சமகால அரசியலில் சுமந்திரன் இனம் கண்ட இடக்குகள் இவை. 

1. பெரும்பான்மை சமூகத்திடம் இழந்த நம்பிக்கை மீட்பு. 

இங்கு இணக்க அரசியல் ஒன்றை வென்றெடுப்தற்கு சிங்கள பேரினவாத அரசியலை வென்றெடுக்க வேண்டும். அதாவது சிங்கள மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற அரசியல் அங்கு தேவை. 

தமிழர் பிரச்சினையை சிங்கள அரசியலுக்கும், மக்களுக்கும் விளக்கி, வன்முறைகள் அற்ற காந்திய – அகிம்சை அரசியலை நூறு வீதம் கடைப்பிடிப்பதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும் என்ற தன் நம்பிக்கையின் ஊடாக சிங்கள மக்களின் நம்பிக்கையை வெல்வது அவரின் அணுகுமுறை. 

அதாவது குதிரை எழுபது ஆண்டுகள் பின்நோக்கி ஓடுகிறது. 

தந்தை செல்வா ஆரம்பித்த இணக்க – ஒப்பந்த அரசியல் புள்ளியில் வந்து நிற்கிறார் சுமந்திரன். 

வேண்டுமானால் இதனை இப்படி மறுவாசிப்புச் செய்யலாம். “கடந்த எழுபது ஆண்டுகால அகிம்சை, ஆயுத அரசியல்” தமிழர் அபிலாஷைகளை தொலைத்து, தமிழரை அரசியல் முகவரி அற்ற ஒரு தேசிய இனமாக நடுவீதியில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. எனவே இணக்க அரசியலுக்கு திரும்புவதைத்தவிர வேறுவழியில்லை என்ற ஜதார்த்தம் இங்கு உணரப்படுகிறது. 

2. தீவிர தமிழ்த் தேசியவாத அரசியல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். 

இது கஜேந்திரகுமாரும், விக்கினேஸ்வரனும் பேசும் வெறும் வார்த்தையாடல் அரசியல். இலக்கை அடைவதற்கான எந்த வழிவகைகளும் பலமும் அற்ற வாய்ச்சொல் வீரம். 

அதுதான் ஒரு நாடு இரு தேசம். சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு.  

இந்த உசுப்பேத்தும் அரசியல், சிங்கள அரசியலின் நம்பிக்கையை தமிழர் பெற்றுக் கொள்வதற்கு ஒரு தேவையற்ற “இடக்கு”, அதாவது “தடை” என்பது சுமந்திரன் வாதம். 

ஆக, விக்கினேஸ்வரன் வரலாற்று பேராசிரியர் பத்மநாதனின் புத்தகத்தை பாராளுமன்றத்தில் பார்த்து வாசிப்பதும்,,,  

கஜேந்திரகுமார் பாட்டனாரின் 50:50ஐயும் திரும்பிப் பார்ப்பதும் நல்லது. 

இவர்களின் அணுகுமுறை இணக்க அரசியலுக்கு வர மறுதரப்பிற்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று சுமந்திரன் கூறுவதையும் நிராகரிக்க முடியாது. 

3. புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் அரசியல்: 

புலம்பெயர்ந்த தமிழர்களின் டயஸ்போரா அமைப்புக்கள் ஜதார்த்தத்திற்கு முரணான அரசியலில் ஈடுபடுகின்றன. களத்தில் உள்ள மக்களின் அபிலாஷைகளை அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை. டயஸ்போராக்கள் ஜதார்த்த அணுகுமுறையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளன. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகளாவிய ரீதியில் பரந்து கிடக்கின்ற அனைத்து டயஸ்போரா அமைப்புக்களும் அடக்கி வாசிக்கவேண்டும் அல்லது கலைக்கப்பட வேண்டும்.  

இது தென் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக் காணும் இணக்க அரசியலுக்கு அவசியமாகும். நாடுகடந்த அரசாங்கம் ஒன்று வெறும் கடிதத்தலைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தனிநாடு போன்று ஒரு பிரதமரும், அமைச்சர்களும் தமக்கு தாமே பதவிகளைப் பங்கு போட்டுக் கொண்டு இருக்கும் வரை சிங்கள மக்களை தீர்வு நோக்கி நகர்த்துவது கஷ்டமானது. ஏனெனில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் புரையோடிப்போய் இருக்கின்ற அச்சத்தை இந்த செயற்பாடுகள் அதிகரிக்கும். 

இவை சும்மா கிடந்த சங்கை ஊதித் கெடுக்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. 

4. தமிழ்நாட்டு ஈழ ஆதரவு அரசியல்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் அங்கீகாரம் இன்றி, தங்கள் கட்சி அரசியலுக்கு அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

இது சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால பல நிகழ்வுகள் இதற்கு காரணம். 

ஈழத்தமிழர்களின் அழிவில் அரசியல் செய்து குட்டையை குழப்புவதை தமிழக அரசியல் நிறுத்த வேண்டும். 

தமிழகம் இதை உணர்கின்றபோது வெறும் தமிழ் உணர்வு இணக்க அரசியல் சார்ந்து அமையாது, மாறாக ஒரு இடக்காக குறுக்கே கிடக்கிறது என்பதை அது உணரும். மறுபக்கத்தில் சிங்கள சமூகத்தின் ஆதரவை இணக்க அரசியலுக்கு பெற அது உதவியாக இருக்கும். 

5. சுமந்திரன் கூறியிருப்பது போன்று ஒன்றுபட்ட, பிரிக்கபடமுடியாத இலங்கைக்குள் அரசியல் அமைப்பு ஊடாக ஒரு தீர்வை எட்டுதல். 

இதற்கு சிறிலங்கா பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு தேவை. 

அந்தப் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்தில் விட்டுக் கொடுப்பு மற்றும் புரிந்துணர்வுடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டே அடையமுடியும். 

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு தேவை. தீர்வு யாருக்குத் தேவை? தமிழ்மக்களுக்கா? சிங்கள மக்களுக்கா? தமிழ்மக்களுக்குத்தான் அது அவசியமானது. எனவே தீர்வை நோக்கி நகர்வதும், இராஜதந்திர ரீதியாக செயற்படவேண்டியதும் தமிழ்த்தரப்பைச் சார்ந்தது. 

இணக்க அரசியல் என்பது இருதரப்பு அரசியல் பேரம்பேசலில் எட்டப்படும் சமநிலை அன்றி வேறில்லை. இதனூடாக அதிகாரப்பகிர்வுக்குரிய 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோருவதும், அதற்கான சூழலை உருவாக்கி ஒத்துழைப்பு வழங்குவதும் தமிழர் அரசியலுக்கான பொறுப்பாகும். 

இணக்க அரசியல் சந்திக்கும் முடக்கு…! 

இணக்க அரசியல் பாதையானது எந்த வளைவுகளும் – முடக்குகளும் அற்ற நேர்பாதையாக இல்லை. இணக்க அரசியல் இலக்கை நோக்கிய பயணத்திற்கு இந்த முடக்கு நிமிர்தப்படவேண்டும் அல்லது ஒரு பை றோட் போடப்படவேண்டும். (BY ROAD). அந்த முடக்கை கடந்தால்தான் தொலைதூரம்  -எதிர்காலம் தெரியும். 

அந்த முடக்குக்கு அப்பால் ஏற்கனவே இணக்க அரசியல் பாதையில் பயணித்து சென்று கொண்டிருக்கின்ற தரப்பை, பின்னால் இணக்க அரசியல் பேசும் தரப்பு சந்திப்பதற்கும், கூட்டாக பயணித்து இலக்கை நோக்கி செல்வதற்கும் வாய்ப்பு  உண்டு. 

ஆக, சுமந்திரன் அடையாளம் கண்ட இடக்குகள் போன்று, காலக்கண்ணாடி இனம்கண்ட முடக்கு  இனி……….! 

இணக்க அரசியலில் மாற்றுச் சக்திகளை அணிதிரட்டல் 

சுமந்திரன் கூறுவது போன்று இணக்க அரசியல்தான் இறுதி வழி என்றால் அந்த வழியில் சந்திப்பவர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய தேவை தமிழர் அரசியலுக்கு உண்டு. 

இங்கு ஈ.பி.டி.பி. கட்சியும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பேசப்படவேண்டியவர்கள். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த முப்பது ஆண்டுகளாக தன்னந்தனியாக நின்று இணக்க அரசியல் பேசிவருபவர் அவர். ஒற்றறைப் பனையாக அவர் நின்றபோதும் இணக்க அரசியலில் அவரும் அவரது கட்சியும் உறுதியாக உள்ளனர். இப்போது யாழ்.எம்.பி. அங்கயனும் வந்து சேர்ந்துள்ளார். 

வடக்கில் டக்ளஸ் தேவானந்தா போன்று கிழக்கில் இணக்க அரசியல்தான் தீர்வு என்று கடந்த பதினைந்து ஆண்டுகளாக குரல் கொடுப்பவர் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன். 

டக்ளஸ் தேவானந்தாவும், சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஆரம்பத்தில் இருந்தே 13வது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து பேசிவருகின்றவர்கள். தற்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் அவரோடு இணைந்துள்ளார்.  

இவர்கள் இணக்க அரசியலில் பயணிப்பவர்கள் அதற்கு எதிரானவர்கள் இல்லை. எனவே, இலக்கில் இணக்க அரசியல் பாதையில் பயணிப்பவர்கள் இணைந்து செயற்படுவதற்குள்ள தடை என்ன? 

தமிழரசு மட்டுமன்றி, கூட்டமைப்பின் கூட்டாளிக்கட்சிகளும், ஏற்கனவே பல தசாப்தங்களாக இணக்க அரசியல் பேசும் கட்சிகளும் ஏன் சேர்ந்து செயற்பட முடியாது? பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள அமைப்புக்களும், கட்சிகளும் கூட இணைந்து செயற்படமுடியும். இந்த விடயத்தில் கடந்தகாலங்களில் ஒரு வெற்றிடம் நிலவியது. 

அதிகாரப் பகிர்வுக்கான  இயக்கம் 

இந்த வெற்றிடம் அதிகாரப்பகிர்வுக்கான அமைப்பினால் நிரப்பப்படுகிறது. இது சமாந்தரமாக இடம்பெறும் ஒரு நகர்வு. 

அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கவேண்டும் என்ற கருத்து பல தரப்பாலும் பேசப்படுகிறது. 

இந்த நிலையில் அதிகாரப்பகிரவுக்கான இயக்கத்தின் தோற்றத்தை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. 

பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சிகள் இதில் இணைந்து இருப்பது கருத்துருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சாதகமான மாற்றமாகும். 

கருணா அம்மான் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை ஒருகாலத்தில் எதிர்த்தவர். 

இன்றும் அந்த நிலைப்பாட்டில் இருக்கமாட்டார் என்று நம்புவோம். 

ஏனெனில் அவரை தேர்தலில் ஆதரித்த அகில இலங்கை தமிழர் மகாசபை இணக்க அரசியல் களத்தில் அதிகாரபரவலாக்கல் அமைப்பில் முக்கிய ஒரு பங்காளியாக உள்ளது. 

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி என்பன இணைந்து இவ்வமைப்பை ஆரம்பித்துள்ளன. 

2021 ஏப்ரல் 9ம் திகதி கொழும்பில் கூடிய இக்கட்சிகள் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. 

1. அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு பிரதமரைச் சந்தித்து 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரும் மனு ஒன்றைச் சமர்ப்பித்தல். 

2. மாகாணசபைகள் அமைச்சுக்கும், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கும், ஆளுனர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கும் ஒரு அமைப்பாக அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தை அங்கிகரிக்கக் கோரல். 

இந்த இயக்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரி, வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் முன்னாள் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் முன்னாள் ஆலோசகரும், அதிகாரப்பகிர்வு இயக்கத்தின் இணைப்பாளருமான கலாநிதி கே.விக்னேஸ்வரன், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிநிதியாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோருடன், அகில இலங்கை தமிழர் மகாசபையின் முன்னாள் செயலாளர் த.கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் ஆரோக்கியநாயகம், பொருளாளர் கத்தரின் சேவியர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சிறிதரன், தங்கன், சமத்துவக் கட்சியின் எஸ்.மனோகரன், கந்தையா ரங்கன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

இந்த அணுகுமுறை தமிழர் பலத்தை அதிகரிக்கும். சிறிலங்கா பாராளுமன்றத்தினதும், மக்களினதும் நம்பிக்கையையும் இணக்க அரசியல் பெறும். டக்ளஸ், பிள்ளையான், வியாழேந்திரன், அங்கயன் போன்றவர்கள் ஏற்கனவே ஓரளவு சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் இணைந்த செயற்பாடு இணக்க அரசியலை இலகுபடுத்தும். 

பேரினவாதத்தின் பிரித்தாளும் கொள்கையும் அம்பலமாகும். இந்த அணுகுமுறையில் மலையக மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதும் தென் இலங்கை முற்போக்குச் சக்திகளின் ஆதரவைப் பெறுவதும் இலகுவானது. 

தமிழர் அரசியலில் பலகட்சி ஜனநாயகத்தையும், பல்லினத்தன்மையையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், பிராந்திய தனித்துவங்களையும், வேறுபாடுகளையும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு புதிய அரசியல் பாரம்பரியத்தை உருவாக்க முடியும். ஆயுதக்கலாச்சாரத்தில் மறுக்கப்பட்ட இவற்றை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க வேண்டிய தேவை ஜனநாயக அரசியலுக்கு உண்டு. 

இந்த நடவடிக்கை ஆகக் குறைந்தது சிறிலங்கா அரசுக்கும், பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் ஒரு சைகையை வழங்குவதாக அமையக்கூடும். தமிழர் அரசியல் தனக்குள் இருந்த ஒரு முடக்கை நிமிர்த்தி மேலாகவும் அமையும். 

கடும்போக்காளர்களாக தம்மைக் காட்டிக் கொள்கின்ற கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் போன்றவர்களுக்கு ஒரு அழுத்தமாகவும் மாறும். 

இவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

சிறிலங்காவில் ஏற்படுகின்ற இவ்வாறான ஒரு மாற்றம் தானாகவே டயஸ்போராக்களை முக்கியமிழக்கச் செய்து, அவற்றின் செயற்பாட்டை மட்டுப்படுத்திவிடும். 13வது திருத்தம் தொடர்பான கருத்து ஒருமைப்பாட்டை எட்டுவதற்கு இந்த அக, புறச்சூழல்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முக்கியமானவை. 

இணக்க அரசியல் கருத்தொற்றுமைக்கு ஊறு விளைவிக்கும், நம்பிக்கையை இழக்கச்செய்து சந்தேகங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தவிர்த்தலும் முக்கிய ஒன்றாகக் கொள்ளப்படவேண்டும்.  

தமிழர் அரசியலை யாராவது ஒரு தரப்பு மட்டும் குத்தகைக்கு எடுப்பதும் தவிர்க்கப்படும். குத்தகை அரசியல் ஆரோக்கியம் அற்றது. ஏக போக ஆயுத அரசியல் எமக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் – மிச்சங்கள் என்ன என்பது மக்களுக்கு தெரியும். 

“நடக்கும் என்பார் நடக்காது………” 

“நடக்காது என்பார் நடந்துவிடும்……” 

இணக்க அரசியலில் பூனைக்கு மணிகட்டுவது இலகுவானது…!