கிழக்கில் உதித்து மலையகத்தில் மறைந்த ஒரு கவிஞன்

கிழக்கில் உதித்து மலையகத்தில் மறைந்த ஒரு கவிஞன்

   — செங்கதிரோன் — 

கவிஞர் நீலாபாலன் 05.04. 2021 அன்று பதுளையில் காலமான செய்தியை எனது கல்லூரி (வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்) நண்பரும் எழுத்தாளர்/ கவிஞர்/ ஆய்வாளர்/ ஓய்வூ நிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமான சாய்ந்தமருதூர் நண்பர் ஏ.பீர்முகம்மது தொலைபேசி வாயிலாக அறியத்தந்தபோது ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன். அவரது நினைவுகள் நெஞ்சில் எழுந்து அலை மோதின.  

அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பிலிருந்தவர். அவரை நேரில் நான் இறுதியாகச் சந்தித்தது 2013 இல் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மூன்றாவது கண்ணகி கலை இலக்கிய விழாவிலாகும். 2013 யூன் 15ஆம், 16 ஆம் திகதிகளில் நடைபெற்ற இவ்விழாவில் முதலாம் நாள் மாலை அமர்வில் இயல் அரங்கான ‘சேரன் செங்குட்டுவன்’ அரங்கில் நடைபெற்ற ‘ஒருமா பத்தினி வந்தாள்!’ என்ற தலைப்பிலான கவியரங்கிற்குத் தலைமைவகிக்க அவர் அப்போது பதுளையிலிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்திருந்தார். 

அதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர், ஊவா தமிழ் கலைப் பேரவை 31.03.2013 அன்று பதுளை/சரஸ்வதி தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில், பதுளை/பசறை தேசியக் கல்லூரி அதிபர் திரு.P.ஆறுமுகம் தலைமையில் நடாத்திய ஊவா தமிழ்ச்சங்கத்தலைவர்  கலாபூஷணம் கவிமணி நீலாபாலன் அவர்களின், ‘ஜீவநதி’ வெளியீடாக (வெளியீடு – 20) வந்த ‘கடலோரத் தென்னைமரம்’ கவிதைத் தொகுதி வெளியிட்டு விழாவிலே, நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்த என்னை அவர் அழைத்திருந்தார். மட்டக்களப்பிலிருந்து மதன் மற்றும் கதிரவன் ஆகிய கலை இலக்கிய நண்பர்களையும் அழைத்துக்கொண்டுபோய் அந்நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். 

மட்டக்களப்பில் 2008 ஜனவரியில் ஆரம்பித்து 2013 ஜனவரி வரை தொடர்ந்து ஐந்து வருடங்கள் கிரமமாக மாதமாதம் அறுபத்தியொரு இதழ்களை விரித்த ‘செங்கதிர்’ கலை இலக்கிய – பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழில் அதன் பதின்மூன்றாவது இதழிலிருந்து ஆரம்பித்து ‘ஒரு படைப்பாளனின் மனப்பதிவுகள்’ எனும் மகுடத்தின் கீழ் ‘கவிவலன்’ எனும் புனை பெயரில் தற்காலக் கவிதைப் போக்கு பற்றிய தொடர் கட்டுரையில் தனது கருத்துக்களை முன்வைத்தும் இருந்தார். ‘செங்கதிர்’ சஞ்சிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் நான் என்பது இலக்கிய உலகு அறிந்த சங்கதியே. 

கிழக்கிலங்கையில் ஆளுமையுள்ள நல்ல பல கவிஞர்களின் தாயகம் கல்முனைப் பிரதேசம். கல்முனைப் பிரதேசத்தில் அமரர் கவிஞர் நீலாவணன் அவர்கள் ஒரு கவிஞர் பட்டாளமொன்றையே உருவாக்கியிருந்தார். இப்பாசறையில் பயிற்சி பெற்று இலங்கையில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராக விளங்கிய கவிமணி நீலாபாலனுக்கு இன்னுமொரு முகமுண்டு. ‘கல்முனைப் பூபால்’ என்று அப்போது எழுபதுகளில் அறியப்பட்டவர்தான் அமரர் நீலாபாலன். எழுபதுகளில் என்னையும் அவரையும் இலக்கியமும் எழுத்தும் இணைத்து வைத்தன. கவிதை எம்மைக் கட்டிப்போட்டது. கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இருவரும் சம காலத்தில் பணிபுரிந்தோம். ஐம்பது வருடகால நட்பு எமக்கிடையில். கல்முனை அவரது பிறப்பிடம். காரைதீவு எனது ஊர். இரண்டுக்குமிடையில் இடைவெளி மூன்று மைல்களே. 

‘பூபால் கவிதை புனைவான்: அவன் கவிதை சாவாத பேறுடையதாம்’ என்று கவிஞர் நீலாவணனால் பாராட்டப் பெற்றவர். பூபாலின் இயற்பெயர் பூபாலரத்தினம். கல்முனையில் 14.04.1948 இல் பிறந்தார். தந்தை நல்லதம்பி, தாய் பூரணிப்பிள்ளை. இவரது தாய்வழிப் பாட்டனார் பிரபல சித்தாயுர்வேத வைத்தியர் நாகமணி தமிழ்மொழிப் புலமை மிக்கவர். அவரது கந்தபுராண, மகாபாரத வாசிப்புத்தான் கவிதையை – கவிதையின் வடிவத்தைத் தனக்குப் போதித்ததாக நீலாபாலனே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். கல்முனை உவெஸ்லிக் கல்லூரியில் கல்வி கற்றார். மாணவனாக இருக்கும்போதே கவிதை எழுதத் தொடங்கினார். ‘சுதந்திரன்’ பத்திரிகையின் மாணவர் பகுதியில் பிரசுரமான ‘அன்னை’ என்ற கவிதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். கல்முனை  என்.பூபாலரத்தினம் எனும் பெயரில் ‘சுதந்திரன்’, ‘தினகரன்’. ‘கலைச்செல்வி’, ‘தேசிய முரசொலி’, ‘மல்லிகை’ ஆகிய பத்திரிகைகளில் ஆரம்பகாலத்தில் எழுதினார். ஆனால் பின்பு இவரது கவிதைகள் வெளிவராத பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இலங்கையில் இல்லை என்றாகிவிட்டது. 

‘தாய்மொழிக்கு வந்ததடா கேடு – பச்சைத் 

தமிழனுக்கு இருக்கிறதா சூடு – எந்த 

நாய்மொழிக்கும் நம்நாடா வீடு – எங்கே 

நசுக்கி அதைக் குழிதோண்டிப் போடு’ 

என்று உணர்ச்சி பீறிடும் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த பதினான்கு வயதுச் சிறுவனான இவரது ஆற்றலையும், ஆளுமையையும் இனங்கண்டு ‘கல்முனைப்பூபால்’ எனும் பெயரில் உற்சாகமூட்டி இவரை ஊக்கியும் உயர்த்தியும் விட்டவர் அப்போதைய ‘சுதந்திரன்’ ஆசிரியரும் பத்திரிகை உலகில் ‘ஜாம்பவான்’ என வர்ணிக்கப்பட்டவருமான அமரர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களே. 1967 தொடக்கம் 1975 வரை ‘கல்முனைப்பூபால்’ எனும் பெயரில் எழுதிக் கொண்டிருந்த இக்கவிஞர் யாப்பறிந்தவர். கலிப்பாவா – வெண்பாவா – விருத்தமா – அகவலா – கட்டளைக் கலித்துறையா அனைத்தையும் அனாயாசமாகக் கையாளுகின்ற ஆற்றல் படைத்தவர். தனது சமகால எழுத்தாளர்களை இணைத்து கல்முனைப் பிரதேசத்தில் ‘கல்முனை இலக்கிய வட்டம்’ எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராவிருந்து பல கவியரங்குகளில் பங்குபற்றியும் தலைமை வகித்தும் இலக்கியப் பணியை எடுத்துச் சென்றவர். இக்கவியரங்குகளிலேயே கல்லூரன், வீ. ஆனந்தன் போன்ற கவிஞர்கள் அறிமுகமானார்கள். பின்னர் 1970களில் பாலமுனை பாறூக், அன்புடீன், முல்லை வீரக்குட்டி, பாண்டியூர் தட்சணா ஆகிய இலக்கிய நண்பர்களை இணைத்துக் கொண்டு, 

‘இந்த யுகத்தின் இருள்கள் இறக்க 

எங்கும் இனிய வசந்தம் பிறக்க 

எங்கள் உழைப்பே எருவாய் அமைக.’ 

என்ற வரிகளைக் கொள்கையாக வரித்துக் கொண்டு ‘கல்முனை புதிய பறவைகள் கவிதா மண்டலம்’ என்றதோர் அமைப்பை ஏற்படுத்தி இதன் தலைவராகவும் செயற்பட்டார். அக்காலத்தில் கல்முனைப் பிரதேசத்தில் கவியரங்குகளில் கல்முனைப்பூபாலுக்குத் தனியான மவுசு இருந்தது. கல்முனைப் பிரதேசத்துக் கவியரங்குகளிலெல்லாம் கல்முனைப்பூபாலே கதாநாயகன். இதற்குக் காரணம் இவரது குரல்வளம். அங்கதச் சுவையோடு கருத்துக்களை அழுத்திச் சொல்லும் இவரது பாணியால் கவியரங்குகள் களைகட்டும். எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட மேடைக் கவியரங்குகளிலும், சுமார் பதினைந்து வானொலிக் கவியரங்குளிலும் பங்குபற்றியும் தலைமை வகித்தும் உள்ளார். இவற்றில் ஐம்பது கவியரங்கிற்குமேல் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். 1978 இல் பெருந்தோட்டத்துறையில் உத்தியோகம் பெற்று மலையகம் சென்ற பின்னர் நீலாதேவி என்ற தன் மனைவியின் பெயரையும் தன் பெயரையும் இணைத்து ‘நீலாபாலன்’ ஆனார். இறக்கும் வரை இப்பெயரே நீடித்தது.  

இந்திய சஞ்சிகைகளான ‘இந்திய தீபம்’, ‘கலைமகள்’, ‘செம்மலர்’ ஆகியவற்றிலும் மலேசிய ‘தமிழ் தேசனிலும்’ பூபாலுடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. 1990 இலிருந்து 1996 வரை இலங்கை வானொலியில் ‘நீலாபாலன்’ தொகுத்து வழங்கிய ‘கவிதைக் கலசம்’ இலக்கிய உலகில் பிரசித்தமானது. மேலும், வானொலியில் ‘முத்துப்பந்தல்’ எனும் மகுடத்தில் பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர். இலங்கையின் மூத்த கவிஞர்களான அம்பி, நாவற்குழியூர் நடராஜன், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் பங்குபற்றிய புத்தாண்டுக் கவியரங்கிற்கு 1995இல் வானொலியில் தலைமை தாங்கி நடாத்திப் பாராட்டுப் பெற்றவர். பல கவிதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற இவர் கவிதை மட்டுமல்ல சிறுகதை, உருவகம், நாடகம், விமர்சனம், மெல்லிசைப் பாடல்கள் போன்ற துறைகளிலும் தடம் பதித்தார். பதினைந்து நாடகங்களுக்குமேல் எழுதி இயக்கி அரங்கேற்றியுள்ளார். ‘விதியின் விளையாட்டு’, ‘மதிமயக்கம்’, ‘பிள்ளைமனம்’, ‘தியாகத்திடல்’, ‘மனமாற்றம்’, ‘சந்தனச் சிலை’, ‘சிலம்பு’, ‘நிழல்கள்’, ‘மாமனார் பறந்தார்’ ஆகிய நாடகங்கள் பல இடங்களில் மேடையேற்றப்பெற்றுப் பலராலும் பாராட்டுப் பெற்றவை. ஐந்து வில்லுப் பாட்டுகளும் எழுதி அரங்கேற்றியுள்ளார். தமிழ்க் கவிதை இலக்கியப் பரப்பில் அரை நூற்றாண்டுக் காலம் பேசப்பட்ட கவிஞர் கல்முனைப் பூபால் – கவிமணி நீலாபாலன் – அவர்களின் முதலாவது கவிதை நூல் ‘இலந்தைப் பழத்துப் புழுக்கள்’ என்ற பெயரில் 2010இல் ‘புரவலர் புத்தகப்பூங்கா’ வின் 25வது வெளியீடாக வந்தது. ‘ஜீவநதி’ வெளியீட்டின் இருபதாவது நூலான ‘கடலோரத் தென்னைமரம்’இவரது இரண்டாவது நூற்பிரசவம். ‘மல்லிகை’, ஜுலை – ஆகஸ்ட் 2012 இதழின் அட்டைப் படத்தை கவிமணி நீலாபாலன் அலங்கரித்திருந்தார். இவர் பற்றிய குறிப்புகளைக் கவிஞர் பாலமுனை பாறூக் கொடுத்திருந்தார். 

கவிமணி நீலாபாலன் அவர்கள் தனது ‘கடலோரத் தென்னைமரம்’ கவிதைத் தொகுதியைத் தனது மூத்தப்பா (அன்னையின் தந்தையார்) நாகமணி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலின் முதற்கவிதை ‘அக்கினிப் பாவலன்’ எனும் தலைப்பிலானது. கவிமணி நீலாபாலனின் கொள்கைப் பிரகடனம் இது. 

பசியோடு உலவிடும் மனிதனின் துயரினைப் 

பாடிடும் பாடகன் நான். 

பாவையர் சதையினிற் காவியம் தேடிடும் 

பாவலர் வைரியும் நான். 

அசைகிற உலகினில் பணமொரு பசையெனும் 

முதலைகட்(கு) அக்கினி நான். 

ஆர்ப்பரித்தெழுகிற கீழ்த்திசைக் கடலென 

பாத்தொடுக்கின்றவன் நான். 

பனிமலைக் குளிரினில் தினமுடல் பொடிபட 

உடலுழைப் பீந்திடுவோர் 

படுகிற துயரினைக் கவிதையில் பொழிகிற 

பாக்கவி மேகமும் நான். 

இனி ஒரு விதி இது என ஒரு புது விதி 

எழுதிடும் பாவலன் நான். 

ஏழைகள் உழைப்பினைச் சுரண்டிடும் மாடியை 

எரித்திடும் தீப்பொறி நான். 

மெலியவர் உழைத்திட வலியவர் சுகித்திடும் 

பிழைகளைப் பொசுக்கிடவே 

பெருநெருப்பேந்திய ஒருதனிக் கவியென 

பிறப்பெடுத் துள்ளவன்நான் 

அழிபவர்…… துயரினில் நெழிபவர்……. வெயிலெனும் 

அனலினில் சரிபவர்க்கே…… 

அருமருந் தெனநறுந் திருமருந் தாய்க்கவி 

ஆக்கிப் படைப்பவன் நான். 

காலமென் கன்னியின் தோல், சதை எலும்பினைக் 

கலையொடும் படம் பிடிப்பேன். 

கண்டவை என்னுள்ளே கருத்தரித்தால் அதைக் 

கவிதையாய்த் தொகுத்தளிப்பேன். 

ஏழைகள் உழைப்பினை எடுத்தெடுத் துறிஞ்சிடும் 

எத்தரைத் தொலைத்தொழிப்பேன். 

இனி ஒரு விதி இது என ஒரு புது விதி 

எழுதி நான் பாவிசைப்பேன். 

யாப்பை முற்றாகவே உதறித் தள்ளிவிட்டு இக்காலத்தில் எழுதப்படுகின்ற புதுக்கவிதைகளைப் போல் அல்லாது யாப்பை அறிந்து கொண்டு –அதனைப் புரிந்து கொண்டு – அதனை அவசியம் கருதி மீறுகின்ற அல்லது நோகாமல் உடைக்கின்ற அல்லது தனக்கு ஏற்றாற்போல் வளைக்கின்ற வித்தை கவிமணி நீலாபாலனுக்கு நன்கு வாய்த்திருந்தது. இலக்கியத்தின் வெற்றி அந்த இலக்கியம்  படைக்கப்படுகின்ற மொழியை நுட்பமாகக் கையாளும் வித்தையிலேயே தங்கியிருக்கின்றது. கவிமணி நீலாபாலன் அந்த வித்தையிலே விற்பன்னராக விளங்கினார். ‘புரிந்து கொள்வதற்கானதல்ல கவிதை. உணர்ந்து கொள்வதற்கானது. அப்படி உணர்ந்து கொள்வதற்கான கவிதையை  மரபு, புதிதென்ற வடிவங்கள் செப்பனிடா. உள்ளடக்கப் பருமனில்லாத எந்த வார்ப்பும் கவிதையாகி விடாது’ என்பதே கவிதை பற்றிய அவரது கூற்றாக இருந்தது.  

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்து கவிஞர் ‘கல்முனைப் பூபால்’ஆக எழுத்துலகில் அறிமுகமாகிப் பின் மலையகம் சென்று ‘கவிமணி நீலாபாலன்’ ஆக உயிர் நீத்த அன்னாரின் மலையகம் பற்றிய அவரது கவிதைப் பதிவு இது. 

‘அப்பன் உரம் போட 

ஆயி கொழுந்தெடுப்பாள் 

அதுதானே இதுவரை எம் சரித்திரம் 

ஆண்டு முழுதும் உடல் ஆடி 

உழைத்தாலும் என்ன 

அடுக்களையில் படுத்திருக்கே தரித்திரம். 

மேலும், 

‘இடறி விழுந் தெழுந்து வழி 

தொடர்ந்து நடந் தடர்ந்த வடு 

இறந்துபட பிறந்த நடை தொடர்கிறேன். 

அடவி தொடர் வழியெனினும் 

இடர்கள் பல தடை வரினும் 

உடைகள் அனுபவம் அணிந்து போகிறேன் 

பயணம் போகிறேன்.’ 

என்று பாடிய கவிமணி நீலாபாலன் தனது இவ்வுலகப் பயணத்தை 05.04.2021 அன்று முடித்துக் கொண்டார். நெஞ்சிருக்கும் வரை அவரது நினைவுகள் நிலைத்திருக்கும்.