தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)

தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—  

ஞாயிறு. மார்ச். 07, 2021 தினக்குரல் பத்திரிகையில் ‘சர்வதேசத்துடன் முட்டி மோதும் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்’ எனும் தலைப்பிலான நடராஜா ஜனகன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் “முதலாளித்துவ நாடுகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்திருப்பினும் தேசிய இனங்கள் ஒடுக்குமுறை விடயத்தில் அந்த நாடுகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் சீனா, ரஷ்யா, கியூபா தேசங்கள் ஈழத்தமிழர் துயரத்தில் சிறு அளவில் கூட கவனத்தைச் செலுத்தாது பயணிப்பது சோசலிச சித்தாந்தங்களின் எந்த அத்தியாயத்தில் காணப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.  

அதற்கான பதிலைத் தரவேண்டிய தேவைப்பாடும் அதனால் எழுந்துள்ளது. 

ஜனகன் குறிப்பிட்டுள்ள சீனா, ரஷ்யா மற்றும் கியூபா ஆகிய மூன்று நாடுகளும் தத்துவார்த்த ரீதியாகப் பொதுவுடைமைச் சித்தாந்தங்களின் மீது கட்டி எழுப்பப்பட்ட அரசாங்கங்களைக் கொண்டவையாகும். 

இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டமென்பது உண்மையானாலும் கூட அப்போராட்டத்திற்குத் தலைமையேற்று முன்னெடுத்த தமிழர்தம் அரசியல் தலைமை ஏகாதிபத்திய சார்பு நிலைப்பட்டதாகும். அதனால் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காலத்திலிருந்து இன்றைய இரா.சம்பந்தன் காலம்வரை தமிழர் தரப்பின் உரிமைக்கான அரசியல் என்பது யாழ் குடாநாட்டுக்குள் வதியும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பேணுவதற்காக அதற்கு வெளியே வன்னிப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வதியும் விவசாய மனோபாவம் கொண்ட விளிம்பு நிலைத் தமிழர்களின் நலன்களைப் பலிகொடுப்பதாகத்தான் இருந்துவந்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலிலிருந்த தத்துவார்த்தப் பலவீனம் இதுவாகும். 

யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தின் மேலாதிக்கமே தமிழ் தேசிய அரசியலில் ஓங்கியிருந்தது. மொழி மற்றும் இன உணர்ச்சியை ஊட்டி அதன் மூலம் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் வாக்குகளைச் சுவீகரித்துக் கொண்ட அதேவேளை, இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி ஐக்கியப்பட வைத்தாலும் கூட காலவரையில் அந்த ஐக்கியம் கரைந்து போகக் காரணம் இந்த யாழ் மேலாதிக்கமே.  

மேலும், தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் தமிழ்க் காங்கிரஸ் காலத்திலும் சரி, தமிழரசுக் கட்சிக் காலத்திலும் சரி, தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலத்திலும் சரி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் காலத்திலும் சரி பொதுவுடமைச் சித்தாந்தத்தை வரித்துக்கொண்ட- தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்த சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் அதாவது இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் குறைந்தபட்சம் யாழ்குடா நாட்டுக்குள் செயற்பட்ட இடதுசாரிகளுடன் கூட தமிழர் தம் அரசியல் தரப்பு கைகோர்த்துக் கொண்டதில்லை. மாறாக, இடதுசாரிகளுக்கெதிராகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டது. உதாரணமாக 1960களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையினால் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு (சங்கானைப் போராட்டம்) எதிராகவே தமிழரசுக்கட்சி செயற்பட்டது. 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம் எனும் தத்துவார்த்தத் தளத்தில் கட்டியெழுப்பப்படாது, வெறுமனே சிலரின் பாராளுமன்றப் பதவிகளுக்காக மொழி வெறியையும் இனவெறியையும் ஊட்டும் குறுந்தமிழ்த் தேசியவாதமாகவே தமிழர் தம் விடுதலைப் போராட்ட அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழர் தரப்பின் இத்தகைய குறுந்தமிழ்த் தேசியவாதப் போக்கு இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடித்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு ஊக்கியாக அமைந்ததே ஒட்டுமொத்த இலங்கையின் அரசியல் வரலாறாகி நிற்கிறது. பௌத்த சிங்களப் பேரினவாதிகளினால் குறுந்தமிழ்த் தேசியவாதிகளும், குறுந்தமிழ்த் தேசியவாதிகளினால் பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் பரஸ்பரம் தத்தம் பாராளுமன்ற அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பலிக்கடாவாக நிற்பது சாமானிய அப்பாவிப் பொதுமக்களே. தமிழர் தரப்பு அரசியல் இப்படியென்றால் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் அடுத்ததாக நோக்குவோம். 

1977இல் இலங்கையில் நடைபெற்ற பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான யூ.என். பி அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட  தமிழர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியிலான இனக்கலவரத்தின் பின்னர் தமிழர்களிடைய ஆயுதக்குழுக்கள் தோற்றம்பெறத்தொடங்கின. 

இடதுசாரித் தத்துவங்களை வரித்துக்கொண்ட ஆயுதக்குழுக்களும் தோற்றம் பெற்றன. தங்கள் இராணுவ ரீதியான மேலாண்மை காரணமாகப் பலம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் ஆரம்பத்திலேயே தத்துவார்த்த ரீதியாகப் பொதுவுடைமைச் சித்தாந்தங்களின் அடிப்படையில் செயற்பட்ட தனிநபர்களையும் குழுக்களையும் வேட்டையாடினர். விரிவஞ்சி இதனை விபரிக்க முற்படவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) ஐப் புலிகள் தடை செய்ததும் ஈரோஸ் இயக்கத்தை நிராயுதபாணியாக்கித் தங்களுடன் இணைத்துக் கொண்டதும் புலிகளின் பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கெதிரான வன்முறை நடவடிக்கைகளே. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில் புலிகள் சக போராளி இயக்கங்களின் மீது நிகழ்த்திய சகோதரப் படுகொலைகள், மாற்றுச் சிந்தனையாளர்களைப் போட்டுத்தள்ளியமை, அப்பாவிச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், இறுதியில் புலிகள் முன்வைத்த ஏக பிரதிநிதித்துவக் கோட்பாடு எல்லாமே மனித விழுமியங்களைக் குழி தோண்டிப் புதைத்தன. தமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கைகளிலிருந்த அடிப்படை நியாயங்கள் மேலெழாதவாறு புலிகளின் பாசிசப் பாதணியின் கீழ் அவை நசுங்குண்ட போது அச்சூழல் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச நாடுகளுக்குப் ‘பயங்கரவாதம்’ ஆகக்காட்டி முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நியாயப்படுத்தவும் அதற்குச் சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை. வரலாறு அதனை விளக்கி நிற்கிறது. 

மேலும், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்தது மட்டுமல்ல, ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கை வந்து இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையினர் மீது போர் தொடுத்த புலிகள் தங்கள் பிரச்சாரத் தந்திரங்கள் மூலமும்- எந்திரங்கள் மூலமும் அதனை நியாயப்படுத்தினார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. 

ஏற்கெனவே இந்திய மண்ணில் இருக்கும் போதே புலிகள் இயக்கம் இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. அதன் காரணமாகவே புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை இந்தியாவிலிருந்து நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசாங்கம் ஒரு கட்டத்தில் பிறப்பித்தது. 

இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் முழுமையாக அமுலானால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் செல்வாக்கு மேலோங்குவதை விரும்பாத அமெரிக்க ஏகாதிபத்தியமே அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் புலிகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேண்டிய சன்மானங்களைத் திரைமறைவில் வழங்கி இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பியது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக விருப்பமில்லாமல் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்தவரென்பது உலகறிந்த விடயம். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா+பிரபாகரன் கூட்டு இந்தியாவுக்கெதிரானதாகும். இந்தியா பொதுவுடமை நாடாக இல்லாவிட்டாலும்கூட ரஷ்யாவும் கியூபாவும் அதன் நட்பு நாடுகள். இந்தப் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்தும்- இந்தியாவுக்கு எதிரானதும்- ‘பாசிச’க் குணாம்சம் கொண்டதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைமையேற்றிருந்த ஒரு போராட்டத்திற்கு பொதுவுடமை நாடுகள் ஆதரவு வழங்குமென எதிர்பார்ப்பது தத்துவார்த்த அறியாமை அல்லது பலவீனமாகும்.  

அதுபோலவே, இந்தியாவுடன் ஒப்புக்காக ‘ஓடும் புளியம் பழமும் போல’ உறவை வைத்துக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ரஷ்யாவும் கியூபாவும் செயற்படுமென எதிர்பார்ப்பதும் தத்துவார்த்த அறியாமை அல்லது பலவீனமாகும்.