“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப்  பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…

“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…

   — சு.கமலேஸ்வரன் — 

மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான கிராம் “Elders garden” (இதை பற்றி பின்னர் எழுதுகிறேன்) ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதற்கான நிலம் ஒன்றை பெறும் முயற்சியாக அன்று வாகரைக்கு சென்று இருந்தேன். அன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்… 

அதன் பின்னரான நாட்கள் பகுதி நேர மற்றும் முழு நேர ஊரடங்கு சட்டத்தால் முடங்கிப் போயின. அன்றைய நாட்கள் மிக நீண்ட, எதிர்கால நாட்கள் பற்றிய நம்பிக்கை இன்மையால் சோர்ந்து போக வைத்த நாட்கள். அத்தகைய சூழ்நிலையில் எனது வெலிக்கடை சிறை நண்பர்கள் மூன்று பேர் மற்றும் முகநூல் நண்பர் ஒருவர் ஆகியோர் எனது உணவு தேவைக்காக என்று 60,000 ரூபாவை எனக்கு கிடைக்க செய்தனர். 

நான் தனிநபர் என்பதாலும் எனது உணவு சகோதரிகளுடன் என்பதாலும் அந்தப் பணத்தில் ஒரு இயற்கை முறையிலான நாற்று மேடைப் பண்ணை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன். “DENS”-இதுதான் அந்த பண்ணையின் பெயர். டொமினிக், ஈசன், நாதன் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத நண்பரின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் பண்ணையின் பெயரானது.  

DENS பண்ணை எதிர்காலத்தில் மூத்த குடிமக்களுக்கான கிராமத்தின் ஒரு அங்கமாக செயல்ப்படும். இந்த பண்ணையின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால்; இது வரை 100% உள்ளூர் உற்பத்தியை மட்டுமே கொண்டுள்ளமை (எதிர்காலத்தில் சில மாற்றங்கள் இருக்கும்). அடுத்தது 100% இயற்கை முறையில் மட்டுமே தாவரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.  

என்னால் ஆனது… 

அடுத்ததாக இந்த முயற்சி எத்தகைய சாதக பாதகங்களை கொண்டு இருக்கிறது மற்றும் இத்தகைய முயற்சியில் ஈடுபட விரும்பும் நண்பர்களுக்கு எனது ஆலோசனைகள் மற்றும் உதவிகள் எத்தகையதாக இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் எல்லா பெரிய மரக் கன்றுகள் விற்பனை நிலையங்களும் வெளி மாகாணங்களை நம்பி மட்டுமே இயங்குகின்றன. ஆனாலும் மாகாண மட்டத்தில் மரக்கன்றுகளின் உற்பத்தியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதே எனது அனுபவமாகும். தற்போது என்னிடம் 300க்கும் அதிகமான வகையைச் சேர்ந்த தாய் மரங்கள் உள்ளன. அவற்றில் அலங்கார தாவரங்கள், பூ மரங்கள், பழ மரங்கள் என்பன அடங்கும். பண்ணை ஆரம்பித்து ஒரு வருடம் மட்டுமே ஆவதாலும், கன்றுகளை பெறுவதாலும் அவைகளில் பெரும்பாலானவை கத்தரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த 300க்கும் அதிகமான தாய் மரங்களில் இருந்து 200க்கும் அதிகமான வகையான கன்றுகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. பல தாய் மரங்களில் இருந்து இந்த மாவட்டத்தின் மாறுபட்ட காலநிலை காரணமாக உடனடியாக கன்றுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனினும் நீண்ட கால இடைவெளியில் பெரும்பாலான வகைகளில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.  

இதை ஒரு வெற்றிகரமான தொழிலாக முன்னெடுக்க தனிப்பட்ட ஒரு பாரிய பண்ணையில் பல ஆயிரம் தாய் மரங்களை வளர்ப்பதன் மூலம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குடிசைக் கைத்தொழில் பாணியில் பலரை ஊக்கிவிப்பதன் ஊடக அந்தப் பிரதேசத்தை மரக் கன்றுகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக பிரதேசமாக மாற்ற முடியும்.  

ஏற்கனவே நான் வாழும் பகுதியில் பகுதி நேரத் தொழிலாக பல குடும்பங்கள் மரக் கன்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. அத்தகைய பலருக்கு தாய் மரக் கண்றுகளை ஏற்கனவே வழங்கி உள்ளேன். அது பண்டமாற்று அடிப்படையில் நான் செய்த போதிலும் எனது தரப்பில் இருந்து அதிகமாகவே வழங்கி உள்ளேன். எதிர்காலத்திலும் இதை ஒரு தொழிலாக மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய தயாராகவே இருக்கிறேன். 

ஒரு விவசாய முயற்சியில் நவீன முறைகளை பின்பற்றுவது பற்றி எனக்கு முரண்பாடுகள் கிடையாது. ஆனால் எல்லா துறைகளையும் போலவே விவசாய துறையிலும் நவீன உத்திகள் என்பது வியாபார தந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. “DENS” பண்ணையில் எந்த விதமான நவீன உத்திகளும் மற்றும் இரசாயன ஊக்கிகளும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு கிறீன் கவுஸ் கூட கிடையாது. மர நிழல் போதுமான அளவு இருப்பதால் தேவைப்படவில்லை. அதிக வெயிலில் இருந்து பாதுகாக்க கிறீன் கவுஸ் பாவிக்கலாம். இரசாயன ஊக்கிகளை பொறுத்தவரை, இத்தகைய ஊக்கிகளை பாவித்து வளர்க்கப்பட்ட விற்பனை நிலையங்களில் காணப்படும் கன்றுகளை விடவும் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்பட்ட DENSஇன் கன்றுகள் செழிப்பானவைகளாகவே உள்ளன. ஆனால் செயற்கை ஊக்கிகள் அளவிற்கு பூக்கும் வீதம் இல்லாத நிலை இருக்கிறது. இதை நிவர்த்தி செய்ய எதிர்வரும் நாட்களில் எலுமிச்சை தோலில் இருந்து தயாரிக்கப்படும் மற்றும் தேமோர் எனப்படும் இயற்கை ஊக்கிகளை பயன்படுத்த உத்தேசித்து உள்ளேன்.  

குறைந்த முதலீட்டில் வளர்ச்சி அடையக் கூடிய ஒரு வளர்ந்து வரும் தொழிலை நீங்களும் ஆரம்பிக்க முடியும்! வாழ்கையில் ஆக்கப்பூர்வமான மற்றும் விருப்பமான ஒரு தொழிலை ஆரம்பித்த, அத்துடன், எனது நண்பர்களின் உழைப்பின் பயனைப்பார்த்து அவர்களும் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு செயலை செய்த மகிழ்ச்சியுடன்…!