— அ. தேவதாசன் —
‘கனடாவில் ஒருவர் தனது மகளை விரும்பியதற்காக தனது சொந்த வாகனத்தால் ஒரு இளைஞனை மரத்தோடு மோதி கொலை செய்ய முயற்சித்தார்.’ – இது அன்றைய நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காளியாக இருந்த ஒருவர் தனது மகளை விரும்பிய குற்றத்திற்காக அவளது காதலனை கொலை செய்து காட்டில் புதைத்தார். இதை தேசிய சக்திகள் மூடி மறைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் பல வருடங்களின் பின்னர் ஜேர்மனிய புலனாய்வு பொலிசார் மேற்படி நபரை கொலைக் குற்றவாளியாக கண்டுபிடித்தனர். இப்படி பல சம்பவங்கள் ஐரோப்பா முழுவதும் மற்றும் வட அமெரிக்காவிலும் நடைபெற்றுவருகின்றன. வெளிவந்தவை சில, வெளிவராதவை பல….
தமிழீழத்தின் பெயரில் தமிழர்கள் மத்தியில் நடாத்தப்படும் நிகழ்வுகளில் ஒலிவாங்கிக்கும், பொன்னாடைகளுக்கும் மயங்கிய சில கலைஞர்கள் தமது சாதியை மறைப்பதற்கு படாத பாடுபடுவதை பார்த்திருக்கிறேன். இப்படியானவர்களில் ஒருவர் என்னோடு பேசும்போது “நான் சாதிய மறைச்சு கனகாலம் வாழ்ந்திட்டன் நான் ஆரிட்ட போய் மாப்பிள கேக்கிறது, நீங்கள் எங்கட ஆக்களெண்டு அறிஞ்சன் பிள்ளைக்கு முப்பது வயதாகுது எங்கட ஆக்களுக்க மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கோ ஐரோப்பாவில் எந்த நாடெண்டாலும் பரவாயில்லை. மகனுக்கு பிரச்சினை இல்லை அவன் ஒரு வெள்ளைய புடிச்சிட்டான்” என்றார். இப்படியாகச் சிலர் மனச்சிக்கலுக்குள்ளானதை பார்க்க முடியும்.
உயர் சாதியினர் எனச்சொல்லப்படுவோர் ஒரே நாட்டில், ஒரே ஊரில், ஒரே மொழியில், ஒரே இனத்தில் ஏற்படும் காதலை சாதி பார்த்து ஏற்க மறுப்பார்கள். அதேவேளை வேறு நிறம், வேறு இனம், வேறு நாடு என்றாலும் வெள்ளை நிறத்தவர்கள் எனில் காதலை ஏற்றுக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இதுவே சாதிய விசம் நம்மவர் மனங்களில் ஊடுருவிச் கிடக்கிறது என்பதற்கு சான்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் ஒரு தமிழ் அமைப்பு குறும்பட போட்டி நடாத்தியது. அதில் வெற்றி பெற்ற குறும்படத்திற்கு ஆறுமுகநாவலர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நாவலருக்கும் குறும்படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஒரு பாலுமகேந்திரா நினைவாக, சார்லி சாப்ளின் நினைவாக இன்னும் சினிமாவில் சாதனை படைத்த பலர் இருக்கிறார்கள் அவர்கள் நினைவாக சின்னம் வழங்குவது பொருத்தமானது. அவைகளைப் பற்றி யோசிக்காமல் நாவலர் நினைவாக வழங்குவதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு குறும்பட சினிமாவை அளவிடுவதற்கே சாதித்தடிப்பின் பிதாமகர்களை தேடுவது நமது இனத்தின் சாபக்கேடு.
சாதிய படிநிலைக்குள் உட்பிரிவுகள் என்கிற ஒரு விடயம் உண்டு. அது மிக விசித்திரமானது. ஒரே சாதிக்குள்ளேயே பல பிரிவுகள் இருக்கும். பிராமணர் தொடக்கம் கடைசிப் படிநிலையில் உள்ள சாதிகள் வரை இப்பிரிவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒரே ஊருக்குள்ளேயே திருமண உறுவுகளை தவிர்த்துக்கொள்வார்கள்.
வடமாராட்சியை பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளாளர் தீவுப் பகுதி வெள்ளாளரை குறைவாகவே மதிப்பிடுவர். எந்தத்தராசை வைத்து இவ்வளவு நுணுக்கமாக நிறுக்கிறார்களோ தெரியவில்லை. இது அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும்.
பொதுவாக தீவார் என்றால் தீவைக்கடந்த பலரும் ஒரு ஏளனமாகப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். யாழ்நகரில் உள்ள எனது அம்மாவின் உறவுக்காரரே நான் சிறு வயதில் அங்கு போனால் “இந்தா தீவான் வாறான்” எனப் பகிடியாக அழைப்பர். அது ஒருவகையில் பகிடி மாதிரி தெரியும், அதற்குள் ஏளனமும் கலந்திருக்கும். அதோடு சாதியும் சேர்ந்தால் அது பெருங்கொடுமை.
வல்வெட்டித்துறையிலும் கரையார் என்கிற சாதி உண்டு, யாழ்நகரிலும் கரையார் என்கிற சாதி உண்டு. வல்வெட்டித்துறை கரையார் மேலோங்கிக்கரையார் (பிரபாகரன், பேராசிரியர் சிவத்தம்பி இதற்குள் அடங்குவர்) யாழ்நகர கரையார் கீழோங்கி கரையார். இதில் மேலோங்கி கரையார் தாங்கள் வெள்ளாளர்களுக்கு அடுத்த படிநிலை என்பதாக பெருமை கொள்வர்.
ஒரு நண்பரோடு சாதிகள் பற்றி பேசுகையில் இலங்கையில் முக்குவர் சாதிதான் பெரிது எனவும் யாழ்ப்பாணத்தில் தங்களை குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் மாட்டக்கிளப்பில் தாங்களே பெரிய சாதி எனவும் கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார்.
பிரான்சில் அண்மையில் ஒரு நிகழ்வு நடந்தது. இரண்டு இளசுகள் ஒருவரை ஒருவர் விரும்பினர் திருமண நேரம் வரும்போது பெற்றோரால் சாதிகள் அலசப்பட்டன. ஒருபகுதி கரையார் ஒருபகுதி நளவர். நளவர் பகுதி சொன்னார்கள் “எங்களைவிட குறைந்த சாதியாக இருந்திருந்தால் எங்கட பிள்ளைய கட்டி வைச்சிருக்க மாட்டோம்” என்றனர்.
பத்து வருடக்காதல் பெண்ணின் பெற்றோர்கள் இணையவிடாமல் இழுத்துக்கொண்டே வந்தனர். உற்றாரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தியா சென்று மாந்திரிகம் மூலம் காதலை மறக்க வைக்க முயற்சிகள் செய்தனர். அவளோ அவனை மறப்பதாக இல்லை. பிள்ளை படித்து ஒரு வேலையும் பெற்றுக்கொண்டு சிறிதளவு பணமும் சேமித்துக்கொண்டாள். இனியும் பெற்றோர் இணைத்து வைப்பார்கள் என்கிற நம்பிக்கையை இழந்து, தனது முடிவை தானே எடுக்கும் நிலைக்கு வந்தாள். எட்டு வருடங்கள் முன்பு அத்தாயார் மகளின் காதலனின் சாதியை மறைத்துக்கொண்டு என்னிடம் பேசினார். அவன் பொறுப்பற்றவன் மிகவும் குழப்படி, தாங்கள் ஓரளவு வசதியாக இருப்பதனால் அவன் தனது மகளை மயக்கிவிட்டான் நாளைக்கு இவன் கைவிட்டால் இவள் நிலை என்ன என்றெல்லாம் தொடர்ந்தார். இருபது வயதில் அந்தப் பையனின் பொறுப்பை அளவிட முடியுமா? படிப்பு முடித்து சுயமாக வாழும் சூழல் வரும் போது அவர்கள் காதல் தொடருமெனில் இணைத்து வைத்து விடுங்கள் என்றேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களை பிரிக்கும் உத்திகள் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருப்பார். அது என்னிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதனால் அப்பிரச்சனை பற்றி என்னோடு பேசவதை நிறுத்திக்கொண்டார்.
காதலர்கள் இருவரும் படிப்பை முடித்துக்கொண்டு சுயமாக வாழும் நிலையை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் இணைந்தனர். இந்திய மாந்திரிகம் ராசி பலன் என அனைத்தும் தோற்றுப்போனது. காதல் வென்றது. பெண் பிள்ளையின் தாயாரின் நண்பி என்னைக் கண்டபோது “அவள் ஏதோ தாங்கள் நாவலர் பரம்பரை எண்டு தடிப்பு பேசினாள் உங்களுக்கு தெரியுமே அவளின்ற மகள் இப்ப ஆரைக் கட்டியிருக்கிறாளெண்டு” என்று சொன்னார். நண்பிக்கு இச்சம்பவம் அற்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.
தொடரும்….