வடக்கில் இருந்து உதவிக்கு வந்த உறவுகள் — (சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 22))

வடக்கில் இருந்து உதவிக்கு வந்த உறவுகள் — (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 22))

     — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

சூறாவளி நிவாரணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், களுவாஞ்சிகுடியில் ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களும், வெல்லாவெளியில் சி.சடாட்சரசண்முகதாஸ் அவர்களும் உதவி அரசாங்க அதிபர்களாக இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பலர் நினைத்தார்கள். வெளிப்படையாகவே பெருமூச்சுடன், அங்கலாய்த்துப் பேசிக்கொண்டார்கள்.  

அந்த எண்ணம் எனக்கும் வந்தது. ஆ.தில்லைநாதன் அவர்கள் களுவாஞ்சிகுடியில் உதவி அரசாங்க அதிபராக நீண்டகாலம் பணியாற்றியவர். அவரது துணைவியார் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பிரபல ஒலிபரப்பாளராக இருந்த திருமதி யோகா தில்லைநாதன். அவர் மற்றுமொரு பிரபல ஒலிபரப்பாளரான விமல் சொக்கநாதன் அவர்களின் சகோதரி. 

ஆ.தில்லைநாதன் அவர்கள் ஒரு பல்துறை விற்பன்னர். மிகுந்த ஆளுமை கொண்டவர். நான் படிக்கும் காலத்தில் இருந்து என்னை நன்கு அறிந்து வைத்திருந்தவர். இப்பொழுது இலண்டனில் வசித்துவரும் அவர் 

இன்றுவரை என்னிடம் தோழமையான அன்பு செலுத்திவருபவர்.  

களுவாஞ்சிகுடியில் அவர் பணியாற்றிய காலத்தில், சி.சடாட்சரசண்முகதாஸ் அவர்கள், சில வருடங்கள் வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபராக இருந்தவர். மிகவும் நல்ல மனிதர். புயல் அடித்து ஒருவாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து, தனது வாகனத்தில் தனது சொந்தச் செலவில் ஏராளமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கி மக்களுக்கு வழங்கினார். 

———————— 

எங்களுடன் பிரச்சினைப்பட்ட உதவி அரசாங்க அதிபருக்கும் எங்களுக்கும் இடையில் ஏற்பட்ட கசப்புணர்வு மாறுவதற்கு அப்போதைய மேலதிக அரசாங்க அதிபர் எம்.அந்தோனிமுத்து அவர்கள் மிகவும் கரிசனை எடுத்தார். அதன் விளைவாகத் தனது தவறுகளை உதவி அரசாங்க அதிபர் உணர்ந்துகொண்டாரோ இல்லையோ, எங்களைப்பற்றி அவர் கொண்டிருந்த நல்லபிப்பிராயம், புயலுக்கு முன்னர் இருந்ததைவிட மேலும் உயர்ந்தது என்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 1979 ஆம் ஆண்டு, எனது சட்டப்படிப்பிற்காக நான் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும்வரை அவருடன் அதே அலுவலகத்தில் பணியாற்றினேன்.  

அந்தோனிமுத்து அவர்கள் அற்புதமான மனிதர். மாவட்ட கமநலச் சேவை உதவி ஆணையாளர், உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் பின்னர் இறுதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளில் ஏறத்தாழப் பதினைந்து வருடங்கள் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் திறம்படப் பணியாற்றிய அவரைப் பிறப்பாலும் உள்ளூர்வாசியெனவே பெரும்பாலான மக்கள் நினைத்திருந்தார்கள். நேர்மையும், நிர்வாகத்திறமையும், உத்தியோகத்தர்களுடன் தோழமையும், பொதுமக்களுக்கு நல்லது செய்வதில் தாராள மனப்பான்மையும் கொண்டவரான அவர் மட்டக்களைப்பு மாவட்டத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார். மிகச் சிறந்த கலா இரசிகராக விளங்கினார்.  

அவர் அரசாங்க அதிபராக இருந்தபோது, 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி, வந்தாறுமூலையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி அவரும், தலைமையக உதவி அரசாங்க அதிபர் ஜெகநாதன் அவர்களும் உயிரிழந்தனர்.அவர்களோடு சென்றிருந்த உணவுக்கட்டுப்பாட்டு உதவி ஆணையாளர், செல்வின் அவர்கள் தனது வலது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டமை உட்படப் படுகாயமடைந்து, உயிர் தப்பினார். அரசாங்க அதிபர் பயணித்த வாகனத்துடன் தொடரணியாகச் சென்ற மட்டக்களப்பு இராணுவக் கட்டளை அதிகாரியும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். இதில் உயிரிழந்த உதவி அரசாங்க அதிபர், ஜெகநாதன் அவர்கள், இலங்கை நிருவாக சேவையில் இணைந்து,தனது பயிற்சிக்காலத்தில் வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் பணிமனையிலேயே கடமையில் ஈடுபட்டவர். 

ஜெகநாதன் அவர்களோடு, கே. கணேஷ்அவர்கள், எஸ்.கணேஷ் அவர்கள் வாமதேவன் அவர்கள் ஆகிய  மூவருமாக, இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட நால்வர் தமது பயிற்சிக்காலத்தில் வெல்லாவெளி அலுவலகத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கே.கணேஷ் அவர்கள் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் அரச அதிபராக (மாவட்டச் செயலாளர்) கடமையாற்றி இளைப்பாறியவர். இப்போது அமரராகிவிட்டார். எஸ்.கணேஷ் அவர்கள், யாழ்.நகர உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய போது 1980களின் முற்பகுதியில் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் தவறுதலாகச் சிக்குண்டு அகால மரணமானார்.   

பணியாற்றும்போது அவர்கள் நால்வரும்எங்களுடன் மிகவும் நெருக்மாககப் பழகினார்கள். அவர்கள் நிருவாக சேவைக்குப் புதிதாக நியமனம் பெற்று வந்தவர்கள் என்பதுடன், மனிதநேயத்துடன் மக்களின் நலன்விரும்பிகளாகவும் இருந்தமையால், அவர்களுடன் நாங்கள் விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றக்கூடியதாக இருந்தது. 

ஜெகநாதன் அவர்கள், களுவாஞ்சிகுடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றும்போது, களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.  

———————————- 

சூறாவளி இடம்பெற்று ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக மட்டக்களப்பிற்கு வரத்தொடங்கினார்கள். வீதிகளின் குறுக்கே கிடந்த மரங்களை வெட்டி அகற்றி வீதிப் போக்குவரத்தினை ஒழுங்கு செய்தார்கள். வீழ்ந்து கிடந்த தென்னை மரங்களும், முறிந்து கிடந்த பல்வேறு மரக் கிளைகளுமாக  அடர்ந்த பற்றைக் காடுகள்போலக் காட்சியளித்த வளவுகளையும், காணிகளையும் துப்பரவு செய்து செப்பனிட்டார்கள். அவர்களது பணிகள் அப்படியே சில வாரங்கள் நீடித்தன. 

அந்தப்பணிகளைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த. (சாதாரண) தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களுக்குக்கற்பிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்கள்.  

அந்தக் காலத்தில், இப்பொழுது உள்ளவையைப் போலத் தனியார் கல்வி நிறுவனங்கள் (Private Tutorial Centres ) மட்டக்களப்பில் இருக்கவில்லை. கொடுப்பனவு எதுவுமில்லாமல், சில ஆசிரியர்கள் பாடசாலைகளில் விசேட வகுப்புக்களை நடத்தி, தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் மாணவர்களைப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் வழக்கமே பொதுவாக இருந்தது. அதேவேளை, ஒரு பாடத்திற்கு மாதம் பத்து ரூபாய் கட்டணத்தில், சில ஆசிரியர்களும், வேலைக்காகக் காத்திருந்த படித்த இளைஞர்கள் சிலரும் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள். 

எனவே, மாவட்டம் முழுவதும், பரவலாக மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாடசாலைக்கு வெளியிலும், பாடங்களில் பயிற்றுவிக்க வேண்டிய தேவை ஒன்று நிலவியது.அனர்த்த காலத்தில் அது மிகவும் இன்றியமையாததாக இருந்தது. அதனை உணர்ந்துகொண்ட, யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களும், உயர்தரம் சித்தியெய்தியிருந்த இளைஞர்களும், அவரவர் கல்வித் தகைமைக்கேற்பக்  குறிப்பிட்ட சில பாடங்களில் மாணவர்களைப் பயிற்றுவித்தார்கள்.  

அவர்களது முயற்சிகளுக்கு உள்ளூர் இளைஞர்களின் உதவியும், பொது மக்களின் ஆதரவும் ஊக்கமாக அமைந்தன.  

இவ்வாறு புயலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திறங்கிய இளைஞர்களோடு மட்டக்களப்பு இளைஞர்களுக்கு ஏற்பட்ட நட்புறவும், தொடர்புகளும், பின்னர் இயக்கங்கள் மட்டக்களப்பில் கால் ஊன்றவும், களம் அமைக்கவும் பாதை வகுப்பதை எளிதாக்கின என்றும் சொல்லலாம். 

அதுவரை, “குதிரை ஓடுவது” என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் “குதிரைகள்” பற்றி மாணவர்களுக்குத் தெரிய வந்ததும், குதிரைகள் ஓடத்தொடங்கியதும் 1978 ஆம் ஆண்டுச் சூறாவளியின் பின்னர்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

—————————— 

கொக்கட்டிச்சோலை சுற்றுலா அலுவலகம் பற்றிய ஒரு விடயத்தையும் இங்கு பதிவுசெய்தல் பொருத்தமென நினைக்கிறேன். 

வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகம், கொக்கட்டிச்சோலையில் வாரத்தில் ஒருநாள், புதன்கிழமைகளில் சுற்றுலா அலுவலகமாக இயங்கியது. அரசாங்க அதிபரும் எங்களில் மூன்று நான்கு பேரும் ஜீப் வண்டியில் 9.00 மணியளவில் அங்கு சென்று பிற்பகல் 4.00 மணிவரை மக்களின் குறை கேட்டு, அவர்களது தேவைகளை முடிந்தளவு நிறைவேற்றி வருவது வழக்கம். காணி சம்பந்தமான அலுவல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தமையால், ஒவ்வொரு புதன்கிழமையும் நான் அங்கு செல்லவேண்டியிருந்தது. கொக்கட்டிச்சோலையில் ஒரு பெரியவர் இருந்தார். அவரது பெயர் ஏலேலசிங்கம் என்று நினைக்கிறேன். (தவறு என்றால் யாருக்காவது சரியான பெயர் தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள்) அப்போது அவருக்கு எழுபத்தியைந்து வயதுக்கு மேல் இருக்கும் என்பது எனது கணிப்பு. ஊர் மக்கள் அவரைச் சேர்மன் என்று அழைப்பார்கள். கிராமச்சபைத் தலைவராக அவர் பணியாற்றியிருக்க வேண்டும். வண்டியில் இருந்து நாங்கள் இறங்கும்போதே அவர் அங்கே வரவேற்று நிற்பார். எத்தனைபேர் வந்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்த்துவிட்டுச் சென்றுவிடுவார். எங்கள் அனைவருக்கும் அவரது வீட்டில் மதிய உணவு வழங்குவது அவரது வழக்கம். எத்தனையோ வருடங்களாக ஒரு தொண்டாக அவர் அதனைச் செய்து வந்தார். வாழை இலையில் பாரம்பரியத் தமிழ் உணவு பரிமாறப்படும். அவரது மகளும், மருமகனும் பசுத்தயிர், வாழைக்காய்ப் பொரியல், முருங்கைக்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்குக் கறிகள், கீரை சுண்டல் என்றிப்படிப் பல்சுவை உணவைப் பரிமாறுவார்கள். பெரியவர் உடனிருந்து ஒவ்வொருவரையும் அன்போடு கவனிப்பார். 

அதிகாரிகளுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதற்காக அவர் அந்தப் பணியைச் செய்கிறார் என்று நான் நினைக்கவில்லை. படுவான்கரைப் பகுதி மக்களுக்குப் பணிசெய்ய வந்தவர்களைப் பசியாற வைப்பது தனது கடமை என்பதும், அந்தக்கடமையை தான் செய்வதன்மூலம் ஒவ்வொரு புதன்கிழமையும் சுற்றுலா அலுவலகம் தவறாது செயற்படும் என்பதும், மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதும் அவரது நம்பிக்கைஅதுதான் நான் உணர்ந்துகொண்ட உண்மை. 

(நினைவுகள் தொடரும்)