‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)

‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)

— அழகு குணசீலன் — 

சமகால அரசியல் என்ற மகுடத்தில் சுமந்திரனும், சாணக்கியனும் கடந்த வாரங்களில் தொங்கு ஓட்டமும் நடையுமாகத் திரிகிறார்கள். 

யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் சமகால அரசியல் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

யாழப்பாணத்தில் இளைஞர்கள் வெளியிட்ட கருத்துக்களும், எழுப்பிய கேள்விகளும் தமிழ்த்தேசிய அரசியலுக்கும், தமிழ் மக்களின், இளைஞர், யுவதிகளின் தேவைகளுக்கும், அபிலாஷைகளுக்குமான இடைவெளியைக் கோடிட்டுக் காட்டுகின்றன. 

இங்கு காலக்கண்ணாடி இளையோரால் எழுப்பப்பட்ட சில கேள்விகளையும், பகிரப்பட்ட கருத்துக்களையும் வகைப்படுத்தி காட்சிப்படுத்த முனைகிறது. 

* பொருளாதாரம் அற்ற  வெறும் தமிழ்த்தேசியம் ஒரு  நோயுற்ற அரசியல். தமிழ்த்தேசிய அரசியலில் தொழில் வாய்ப்பு தொடர்பான ஒரு பாரிய இடைவெளி நிலவுகின்றது. நாங்கள் உரிமை கேட்கிறோம். வேலைவாய்ப்பு கேட்டால் சிங்களம் சிரிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பல்கலைக்கழக மாணவர்கள் தேசியக் கட்சிகளை நெருங்குகின்றனர். 

* சகோதர இனத்தவர்களுக்கு எங்கள் தேவைகள், பிரச்சினைகள் தெரியுமா? இலங்கை என்ற ஒரு வீட்டில் வாழப்போகிறவர்கள் நாங்கள். சிங்கள இளைஞர்களுக்கு புரிதலை ஏற்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் எவை? சிங்கள மக்களை உள்வாங்கிய அரசியல் காலத்தின் தேவை. 

* உசுப்பேத்தும் உணர்ச்சி அரசியலில் எங்களுக்கு உடன்பாடில்லை. இளைஞர்களை தமிழ்த்தேசிய அரசியலில் உள்வாங்குவதற்கு உங்களிடம் உள்ள திட்டம்தான் என்ன? ஒற்றுமை இல்லாமல் உங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு இளைஞர்களை எப்படி உள்வாங்க முடியும்? 

* சமகால அரசியலில் சமஷ்டிக் கோரிக்கையின் நிலைப்பாடு என்ன? மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பெற என்ன செய்தீர்கள்? 

* காணாமல் போனவர்கள் தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? இல்லாதவர்களை மீட்டுத்தருகிறோம், மீட்டுத்தருகிறோம் என்று உறவுகளை ஏன்? ஏமாற்றுகிறீர்கள்? 

* மீண்டும் மீண்டும் அதே தேர்தல் விஞ்ஞாபனம். எத்தனை தேர்தல்கள் கடந்தும் அதே பல்லவி. எதிர்காலம் அற்ற அரசியலில் நாங்கள் — இளைஞர்கள் ஏன் இறங்கவேண்டும்? சாணக்கியன் பத்தாயிரம் இளைஞர்களை சேர்ப்பதாக சொன்னார் இதுவரை அவர் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? 

* எங்களுக்கு பதில் வேண்டும். மற்றைய கட்சிகளின் குறைபாடுகள் எமக்கு தேவையில்லை. எங்கள் அறியாமையைப் பயன்படுத்துகிறீர்கள். ஊடகவியலாளர்கள் எங்களை முட்டாள்களாக்குகிறார்கள். 

* தமிழ்த் தேசியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. பசு வரும், பசு வரும் என்று காத்திருக்க முடியாது. பசு வரும்வரையும் மக்களுக்கு பால் வேண்டும். 

* தேர்தல் பிரச்சாரத்தின் போது மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு வசை பாடியதைத் தவிர வேறென்னத்தை செய்திருக்கிறீர்கள்? எங்கள் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை இனம்கண்டு, நீங்கள் செயற்பட்டதுண்டா? எத்தனை பிரச்சினைகளை தீர்த்து இருக்கிறீர்கள்? 

* பிரித்தானிய வரைபு சரியா? மோடி தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா?  சர்வதேசத்தினால் என்ன செய்து விட முடியும்? மியான்மாரில் சர்வதேசத்தினால் என்ன செய்ய முடிந்தது? 

* தமிழ்த் தேசிய அரசியலில் பெண்களின் வகிபாகம் என்ன? அவர்கள் தமிழ் தேசிய அரசியலில் எதிர்நோக்கும் சமத்துவமின்மை, சவால்களை போக்க வழி என்ன? இங்கு ஒரேயொரு இளம் பெண்தான் கலந்து கொண்டுள்ளார். 

அரங்கம் பத்திரிகையின் அரசியல் ஆய்வாளர்கள் தமிழ்தேசிய அரசியல் குறித்தும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குறித்தும், கடந்த காலங்களில் எழுப்பிய சமூகம், பொருளாதாரம், அரசியல் சார்ந்த ஜதார்த்த நோக்குகளின் உண்மைத் தன்மையை யாழ். இளையோரின் ஆதங்கம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.   

இந்த வகையில் ஒரு ஊடகத்திற்கான கடமையை “அரங்கம்” அறிந்தே செய்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. “அரங்கம்” என்ற தண்டவாளத்தில் மக்களின் அபிலாஷைகளை சுமந்த ரயில் இலக்கு நோக்கி ஓடுகிறது. 

இளையோர் எழுப்பிய சமூக, பொருளாதார, அரசியல் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் வகுப்பு எடுக்க வந்த சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் ஏற்பட்டது. 

தலைமைச் சட்டம்பியாரும், வகுப்பு வாத்தியாரும் பாராளுமன்றத்தில் உறுமுவதற்கு முற்றிலும் மாறாக,  சற்று ஜதார்தமாகவும், கொஞ்சம் மளுப்பலும், தவிர்த்தலும் கலந்தும், சுட்டுவிரலை வேறு திசைக்கு திருப்பியும் பதிலளித்திருக்கிறார்கள். 

 சாணாக்கியனின் சறுக்கல் ..! 

தான் இலகுவான கேள்விகளை எடுத்துக்கொண்டு கஷ்டமானவற்றை சட்டம்பியாரின் தலையில் கட்டி விட்டார் சாணக்கியன். 

ராஜபக்சாக்களின் அரசியல் வீட்டில் பிறந்து, தமிழ்த்தேசிய வீட்டுக்கு தத்தெடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு தான் பலதடவைகள் பதில் அளித்திருப்பதால் தவிர்த்துக் கொள்வதாக நழுவி விட்டார் அவர். 

காலக்கண்ணாடியின் பார்வையில் யாழ். இளைஞயோர் அவரின் நழுவலால் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏனெனில் இதற்கான சரியான பதில் யாழ். இளையோரை எட்டியிருந்தால் அவர்கள் இக் கேள்வியை மீண்டும் கேட்க வேண்டிய தேவை என்ன? விடை தெரிந்த ஒரு கேள்வியை மாணவர்கள் வாத்தியாரிடம் கேட்பதற்கு இளையோர் என்ன முட்டாள்களா? 

இந்தக் கேள்விக்கு பதில் அளித்தால் ராஜபக்சாக்களிடம் அவர் மாட்டிவிடுவார். ஏனெனில் சிங்கள பேரினவாத அரசுகளிடம் தழிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு இல்லை என்றும் அதனால்தான் தமிழ்த்தேசியத்தை தேர்வு செய்தேன்,  கட்சி தாவினேன் என்றும் சாணக்கியன் சொல்ல வேண்டிவரும்.  

அப்படியென்றால் இன்னும் ஏன் சிங்கள பாராளுமன்றத்தில் தொங்குகிறீர்கள் என்று இளையோர் கேட்பார்கள். 

இதை அவர் கச்சிதமாக தவிர்த்துக் கொண்டார். பின்னால் வரும் கேள்விகளுக்கு சுமந்திரனும் ‘சிங்கள அரசு மீதான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியாது’ என்றதும் மற்றொரு பூச்சுத்தல். 

சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை எடுத்துச் சொல்வது தொடர்பான கேள்விக்கு தான் அதைச் செய்வதாக சொன்ன அவர். கட்சியின் மூத்தவர்கள் அதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார். 

சிங்களத்தில் பேசக்கூடாது என்றும், ராஜபக்சாக்களை சந்திக்க கூடாது என்றும், சிங்கள பாராளுமன்ற அரசியல் வாதிகளோடு தொடர்புகளை பேணக்கூடாது என்றும் நிர்பந்தங்கள் கட்சிக்குள் ஒருதரப்பால் தனக்கு உண்டு, என்ற உட்கட்சிப் பூசலை போட்டுடைக்கிறார் சாணக்கியன். தனது தேர்தல் மேடையில் ஏறி தனக்கு எதிராக பேசியவர்களும் இருக்கின்றனர் என்றும் கவலைப்பட்டார். 

கட்சியில் இளையோர் சேர்க்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், பழையவர்கள் அதற்கான வெற்றிடங்களை வழங்கவேண்டும் என்று சொல்லி சம்பந்தனுக்கும், மாவைக்கும், செல்வராசா போன்றோருக்கும் சால்வை போட தவறவில்லை. 

திருமலையில் ஒருவர் “இன்னும் இருபது ஆண்டுகளில் எமது பிள்ளைகள் உம்மா, வாப்பா என்றுதான் பெற்றோரைக் கூப்பிடுவார்கள்” என்று சொன்னாராம். 

அதற்குத்தான் “உம்மா வாப்பாவும் இல்லை. அம்மா அப்பாவும் இல்லை. இருபது ஆண்டுகளுக்கு பின் அம்மே தாத்தே” என்றுதான் கூப்பிடுவார்கள் என்று சொன்னதாகச் சொன்னார். 

ஒருபுறம் இன உறவில் மொழி — தொடர்பாடல் பற்றி பேசும் இவர் மறுபுறம் முன்னுக்குப்பின் முரணாக இப்படி பேசுகிறார்.  

இத்தனைக்கும் மத்தியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே “அம்மே தாத்தே” என்றும் “மம்மி டடி” என்றும் தான் பேச ஆரம்பித்ததை மறந்து அரசியல் செய்கிறார் சாணக்கியன்.  

சுமந்திரனின் சுத்துமாத்து : தீர்வு 2050இல்..! 

சட்டம்பியார் சுமந்திரனின் கருத்துக்கள் இனப்பிரச்சினை சார்ந்தும், சட்டரீதியான அணுகுமுறைகள் சார்ந்தும், புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் குறித்தும் அமைந்திருந்தது. சிங்கள அரசின் நம்பிக்கையை பெற சாணக்கியனையும் இணைத்துக்கொண்டு  எதையும் செய்ய தயாராய் உள்ளார். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள், பிரிக்கப்படமுடியாத இலங்கைக்குள் அடையப்பட வேண்டியது என்று அடித்துச் சொல்கிறார் சுமந்திரன். ஆக, இங்கு சமஸ்டி என்பது வெறும் செப்படிவித்தை.  

இந்தத் தீர்வை அரசியல் யாப்பின் மூலம் அடையமுடியும் என்பது அவரின் நம்பிக்கை. இதற்காகத்தான் நல்லாட்சிக்கு தாம் கொடுத்த முட்டை நியாயப்படுத்துகிறார் அவர். 

சிங்கள மக்களினதும், சிங்கள அரசியலினதும் ஆதரவுடன்தான் இந்த இலக்கை அடைய முடியும் என்று இணக்க அரசியல் பேசுகிறார் சுமந்திரன். இது  தமிழ்த்தேசியம் மேடைகளில் முழங்கும் எதிர்ப்பு அரசியலுக்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கு பேசுவது யார்? சுமந்திரனா? டக்ளஸ்சா? என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. 

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு காலக்கெடு விதிக்கிறார் சுமந்திரன். தீர்வு 2050 இல் கிடைக்கலாமாம். இன்னும் 30 ஆண்டுகள். இருவரும் அரசியல் செய்து விட்டு தந்தை செல்வா, சம்பந்தன் வழியில் வைக்கோல் இழுத்த வழியாக மறைந்து விடுவார்கள்.   

ஐரோப்பாவில் நத்தார் பண்டிகை நெருங்கும் போது சிறுபிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பொறுமை இழந்து எப்போது நத்தார்? இன்னும் எத்தனை நாளில் நத்தார் அன்பளிப்பு கிடைக்கும் என்று வளர்ந்தோரைக் கேட்டு அன்புத் தொல்லை செய்வார்கள்.  

அப்போது சிறுபிள்ளைகளுக்கு விளங்கக்கூடியதாக வளர்ந்தோர் அளிக்கும் பதில் இது: இன்னும் 5 தடைவை நித்திரை கொள்ளவேண்டும், இன்னும் நான்கு தடவை நித்திரை கொள்ளவேண்டும், இன்னும்……. 

இப்படி ஒவ்வொரு இரவும் பிள்ளைகள் நித்திரைக்கு போகும்போது ஒரு நாளைக் குறைத்துக் கொள்வார்கள். இறுதியில் இங்கு நத்தார் வரும். 

ஆனால் சுமந்திரனின் காலக்கெடுவில் தீர்வு வருமா? 

ஈழத்தமிழர்களே ! 

இன்னும் 30 பொங்கல்…………………. இன்னும் 30 தீபாவளி……………… இன்னும் 30 ஹஜ் பெருநாள்……………. இன்னும் 30 நத்தார்……… இன்னும் 30 சித்திரைப் புத்தாண்டு…….. இன்னும் 30 வெஷாக்……… ஏன்…..? ஏன்…….? இன்னும் குறைந்தது ஆறு தேர்தல்கள்……. 

ஐயகோ…..! தமிழினமே…….!! யாரைச் சொல்லி அழ….? 

அடுத்த பொங்கல் என்று சுற்றுவதை விடவும் ஒரே சுற்று மூன்று தசாப்தம். எப்படிச் சுத்துகிறார் சுமந்திரன்? வைகுந்தவாசன் முதல் அமிர் வரை வென்றவன். தமிழருக்கு தலையைச் சுற்றுகிறது. 

இதைத்தான் கஜேந்திரகுமார் சுமந்திரன் திருந்தமாட்டார் என்றாரோ? சந்தித்தால் யாராவது கேட்டுப்பாருங்கள். 

சுமந்திரனுக்கு எதற்கு இந்த 30 ஆண்டுகள் என்று நீங்கள் கேட்பதற்கு முன் காலக்கண்ணாடி உங்களுக்கு அதை காட்டுகிறது. 

புலம்பெயர்ந்த தமிழர்களும், அவர்களின் அமைப்புக்களும் தீர்வுக்கு பெரும்தடையாக இருக்கிறார்கள் என்பது சுமந்திரன் வாதம். 

அரசாங்கத்தால் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அழிய….! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்….. ஒழிய….!   

அவருக்கு இந்த முப்பது ஆண்டுகள் தேவை. புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களைத் தடை செய்ய ஜனாதிபதி சட்டத்தரணி ஆ…லோ……ச…..னையா? 

நாடுகடந்த அரசாங்கம் இயங்கும் வரையும், கஜந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் பாடும் வரையும், விக்கினேஸ்வரனின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்புக் கனவு கலையும் வரையும் சிங்களவர்களின் சந்தேகம் கலையாது தீர்வும் கிடையாது என்பது சுமந்திரன் கருத்து.  

இந்தக் கருத்தை வடக்கு, கிழக்கு எங்கும் மேடைபோட்டு போலித்தேசியத்தின் முக்காட்டை அகற்ற சுமந்திரன் தயாரா? 

அப்போது அந்த மேடையில் சாணக்கியன் மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவே ஏறும்.  

இன்றைய தலைமுறை இன்னும் முப்பது ஆண்டுகளில்  முதுமை அடையவும். இன்றைக்கு பிறக்கின்ற புதிய தலைமுறை முப்பது வயதை அடையவும் சரியாக இருக்கும். சுமந்திரனின் தீர்வு கிடைக்கும்.(?) 

ஆக, இப்படியே தமிழ்த்தேசியம் பேசி இன்னும் முப்பது ஆண்டுகள் சாகும்வரை உண்ணாவிரதம் போன்று சாகும்வரை பாராளுமன்ற கதிரை. 

பெண்களை தமிழரசில் சேர்ப்பதற்கு சட்டரீதியான கட்டாயப்படுத்தல் தேவையாம். ஆக, சிங்கள பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு சட்டவாதம். 

கட்டாயப்படுத்தல் ஜனநாயக மறுப்பு, இராணுவ அடக்குமுறை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் ……… பேசி மீண்டும் தமிழர் காதில் பூ..! 

சுமந்திரன் அவர்களே ! 

சிங்களக் கட்சிகளில் உள்ள பெண்களின் வீதாசாரம் என்ன? பாராளுமன்ற பிரதிநிதித்துவ வீதாசாரம் என்ன? அமைச்சர்களின் எண்ணிக்கை என்ன? 

எந்தச் சட்டம் கட்டாயப்படுத்தி இந்தச் சிங்களப்  பெண்கள் அரசியலுக்கு வந்தார்கள்?  

தமிழரசில் பெண்களை கட்சியில், மத்திய குழுவில், வேட்பாளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உங்களுக்கு எதற்கு சிறிலங்கா அரச சட்டம்? 

ஜனாதிபதி சட்டத்தரணி அவர்களே ! 

தமிழரசின் யாப்பில் மாற்றம் செய்து இதைச் செய்வதற்கு வக்கில்லாமல், தமிழ் மக்களுக்கு வடை சுடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்! 

தமிழரசு தீர்மானம் எடுப்பதற்கு சிங்கள பாராளுமன்ற சட்டம் எதற்கு? 

முதலில் இருக்கிற உரிமையை பயன்படுத்துங்கள். பின்னர் இல்லாததற்கு வழமைபோல் வாயால் போராடுங்கள். 

உங்களைப் போன்றவர்களுக்கு அரசியல் தலைமை வழங்கியது, ஈழத்தமிழர்களின் தலை எழுத்தா?  இல்லை விதியா….? அல்லது அவர்களின் கதியா……? 

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். 

“மதி”. சுமந்திரன் அவர்களே! 

ஈழத்தமிழர்களின் அவலங்களில் குளிர்காய்வதை நிறுத்துங்கள். 

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை உங்கள் அரசியல். 

யாழ். இளையோரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. 

ஒரு சமூகத்தை எப்போதும் ஏமாற்ற முடியாது ..!. 

பாதைதவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று அடைவதில்லை.