— அகரன் —
‘டறில் லூயி ஜெயிலுக்கு போய்விட்டான்’ என்று ஆர்யன்டீனா மாட்டின் முதுகுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து கவனமாக வெட்டப்பட்ட, சுற்றிவர வேகி நடுப்பகுதி சுடு இரத்தம் ஓடத்தயாரக இருக்கும், உலகின் சிறந்த இறைச்சித்துண்டை வாயில் செலுத்திக்கொண்டே “டியே லூயி” கூறினார்.
இறைச்சித்துண்டை முழுமையாக அனுபவித்து சாப்பிட்ட அவர், எதிரே, ஊரில் பலகை அடித்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த உணவுவிடுதிச் சமையலாளனான என் அதிர்ந்த முகத்தைப் பார்த்து சிரித்தார்.
தன் மகன் ஜெயிலுக்கு போனதை கொண்டாட வந்த விசித்திரமான அப்பாவை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பாரிசில் இருந்து 25 மைல் தூரத்தில் இருக்கும் முக்கியமான நகரம் Versailles. பிரான்சின் அழகு அங்கு ஒழித்து வைக்கப்பட்டுள்ளது. மரங்களுக்கு எப்போதும் தலைசீவி, நிலத்துக்கு பச்சை பவுடர் போட்ட அழகு நகரம். அறிவொளிக்காலத்தின் ஐரோப்பிய பெரு அரண்மனை அங்குதான் உண்டு. அந்த நகரத்தின் சிறு சிறு மாளிகை போன்ற வீடுகளின் நடுவிலும், வளர்க்கப்பட்ட காட்டுக்கும் அருகேதான் எட்டாம்பிறை வடிவில் இருக்கிறது அந்த உணவு விடுதி.
1914 இல் இருந்து அந்த உணவுவிடுதி அங்கு ஆட்சி செய்கிறது. “டியே லூயி”யின் தலைமுறை அதற்கு முதலே அந்த நகரை ‘முடிவெடுத்து’ தங்கிவிட்டது.
டியே லூயி ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி (DGSE). கடந்த 5 வருடமாக வாரத்தில் இரண்டு தடவை மாட்டிறைச்சி சுவைக்காமல் ஓய்வெடுக்க அவரால் முடியவில்லை.
தனது மகன் டறில் 14 வயதில் இருந்தபோதே உணவு விடுதியில் வேலை பழக அனுப்பிவிட்டார். ஏனெனில் ஜெயில் தண்டனை பெற்றவர்கள் அரச வேலைகளில் அமரமுடியாது.
டியே லூயியை முதன் முதலில் பார்த்தபோது, பிரஞ்சு சண்டியராக இருக்கும் என்றே நினைத்தேன். காதில் ஒரு வெள்ளிக்கடுக்கண், இடதுகையின் உட்பகுதியில் உருவமில்லாத டாட்டூ (பச்சை). வலது மோதிர விரலில் தங்க நிறத்தில் மண்டையோட்டு மோதிரம். கறுத்த முழி நீலச்சூரியன்போல இருக்கும். பார்வை, எதிரே நிற்பவரின் எலும்பை எண்ணுவதுபோல குத்தும். நீர்ப்பூசணிக்காயை நடுவே கீறிவிட்ட உதடுகள். எப்போதும் சீராக வெட்டப்பட்ட சூளி.
பழக்கப்பட்டதாலோ என்னவோ கேள்விகளை வீசிவிட்டு வேடன்போல மற்றவர்களின் வார்த்தைகளை கண்களால் கேட்டுக்கொண்டிருப்பார். ஓய்வு பெற்ற பின்பும் அவரால் உளவாளி நெடியில் இருந்து விடுபட முடியவில்லை.
என்னை, டியே லூயியிடம் கொஞ்ச மூளையும் நிறைய பணமும் வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என் முதலாளி அறிமுகப்படுத்தியபோது ‘நீ தமிழ்ப்புலியா?’ (tu est tigre Tamoul?) என்று கேட்டார். எனக்கு மின்னல் வரமுன்னர் இடியேறு வந்ததுபோல் இருந்தது. கைலாகு கொடுத்தபோது, விரல்கள் தென்னங்குரும்பை போலாகிவிட்டது. விரல் எலும்புகள் முறியவில்லை என்பதை அவசரமாய் சரி பார்த்துக்கொண்டேன்.
வழமையாக என் போன்றவர்களை காணும் பிரஞ்சுக்காரர் ‘நீ பாகிஸ்தானியா?’ என்பார்கள். எனக்கு கோவம் வந்துவிடும். பாகிஸ்தானியரைவிட ‘நாங்கள் சட்டத்தை மீறும் வேலைகளில் கைதேர்ந்தவர்கள்’ என்ற சேதி இவர்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்ற கவலைதான்.
‘தமிழ்ப்புலியா?’ என்றபோது ‘இல்லை புலி சிங்கத்தோடு போரிடுகிறது. நான் ஓடிவந்த தமிழ்ப்பூனை’ என்றேன். கஞ்சத்தனமான பல்லுத்தெரியாத சிரிப்பை பதிலாகத் தந்தார்.
நாட்கள் நகர என் கதைகளை கேட்பதில் வீணான நேரத்தை போக்கிக்கொள்ள ஆரம்பித்தார். நானும் கதைவிடுவதில் ஆர்வக்கோளாறில் இருந்தேன்.
ஒரு கட்டத்தில் விடுதிக்கு வரும் நாட்களில் இரவு உணவை முடித்துவிட்டு சிறந்த, சிவந்த, நீண்ட ஆண்டுகள் சேமித்திருந்த வைனை சுவைத்தபடி நான் வேலை முடித்து வரும்வரை காத்திருப்பார். கண்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் ‘நன்றி chef கோப்பை உணவு அருமை’ என்பார். ஒரு ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியின் வாழ்த்து என் கால்களுக்கிடையில் அவசியமற்ற இடைவெளியை ஏற்படுத்திவிடும். பிரஞ்சுக்காரர் மோசமான உணவானாலும் நன்றி கூறுவதை பின்னர் அறிந்து கொண்டேன்.
அருமையான வைனை ஓசியில் குடித்து, மூளை மிதக்கும் வேளைகளில் அதிர்ச்சியான கேள்விகளை தொடுப்பார். எனக்கும் உளவாளியிடம் அறிவதற்கு பூஞ்சணம் பிடிக்காத கேள்விகள் இருக்கும்.
அப்படிப்பட்ட தருணமொன்றில் குடித்த வைன் பச்சைத்தண்ணீர் ஆகும்படி கேள்வியொன்றை கேட்டார்.
‘ஏன் உங்கள் கொடியை புலி ஆள்கிறது ? மனிதர்களை புலி எப்படி அடையாளப்படுத்த முடியும்?’
என் மூளை தொட்டாச்சினுங்கிபோல சுருங்கிப்போனது. வைனில் ஊறிப்போன உதடுகளால் சற்று போதை கலந்த மோசமான பதிலைத் தயாரித்தேன்.
‘எங்களை ஆக்கிரமிப்பவர்கள் வாளேந்திய சிங்கத்தோடு வருகிறார்கள். அதனால் நாங்கள் ஆயுதமேந்திய புலியோடு எதிர்க்கிறோம்.’ அந்தப்பதில் மோசமானது என்று என் மூளையே தணிக்கை செய்த வெற்றிடத்தில் ஒரு பதில் வந்து நின்றது.
“எங்கள் மொழி பழமையானது. ஆகப்பழமை காட்டின் அடையாளங்களுடன்தானே இருக்கமுடியும்!? 1000 ஆண்டுகள் முன்னர் எங்கள் மொழியை சேர்ந்த மன்னன் ஒருவன் 53 அரசுகளை வீழ்த்தி தென்கிழக்கு ஆசியா எங்கும் கையகப்படுத்தி வந்தான். அவனது கப்பல் படை வலுவானதாத இருந்தது. வங்காள விரிகுடா அவனது “குளம்” என்று போர்த்துக்கேயர் பதிவு செய்து அதிர்ந்திருக்கிறார்கள். அவன் கப்பல்கள் தாங்கிய கொடி ‘புலி’ அந்தப்பெருமையில் நீண்டகாலம் தூங்கிவிட்டோம். அதனால் தான் ‘புலி’யை நினைவுபடுத்துகிறோம். புலி அருகிவரும் விலங்குதானே?” என்றேன்
என் நீண்ட முழக்கத்துக்குப்பிறகு மிக நிதானமாக ஒரு பதில் வந்தது, கேள்வி வடிவில்
‘நீ சோழரை சொல்கிறாயா? ‘
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ‘அதே தான்.. அதேதான்’ என்று முனகினேன்.
டியே லூயி, உலக நாடுகள் பலவற்றில் பறவைபோல திரிந்து வேலைபார்த்து 50 வயதில் தான் திருமணம் செய்தார். 50 வருடமாக பல வகைகளில், பல தரங்களில் இருந்த தோழிகள், திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாததற்கு அவர் என்ன செய்வார்? பாவம். அவருக்குப் பிறந்த ஒரேயொரு தவப்புதல்வன் டறில் லூயி. அவன் அவர் அனுபவங்களை தோற்கடித்துக்கொண்டிருந்தான்.
அவன் பல முறை போலீசால் தடுக்கப்பட்டு ‘பெற்றோரை அழைத்து அறிவுறுத்தி’ விடப்படுவான். பதினெட்டு வயதை வைத்திருந்த ஒரு நாளில் அவன் செய்த செயல் ஊடகங்களில் பேசப்படும் அளவு மதிப்பானது.
போலீஸ் வந்திருக்கிறது, தனது புதிய மோட்டார் சைக்கிளில் பயந்து ஓடுபவன் போல ஓடி இருக்கிறான். போலீசார் பீம் போம்.. பீம் போம் என்று கதறியபடி துரத்தினார்கள். அவன் தன் முழுத் திறமையையும் வெளிக்காட்டினான். Versailles நகரப்போலீஸ் மூன்று மணிநேரம் எட்டு போலீஸ் வாகனங்களையும், ஒரு உலங்கு வானூர்தியையும் பயன்படுத்தியது. இறுதியில் ஆடம்பரமாக கைது செய்தார்கள். உண்மையில் அவன் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தீர்ந்துவிட்டது. அந்த இடத்தில் வைத்து தோலைக்கிழித்து பார்க்காமல் மற்றும்படி எல்லாம் பரிசோதித்தார்கள்.
”ஏன் ஒடினாய்?” என்ற நீதிபதியின் கேள்விக்கு உலகப்போலீஸ் எல்லோரையும் அவமானப்படுத்தும் பதிலை டறில் லூயி சொன்னான்.
”போலீசால் என்னை பிடிக்க முடியுமா? என்பதை பார்க்கவே ஓடிப்பார்த்தேன்!” எட்டுக் குற்றச்சாட்டுகளில் நீதிபதி, டறில் லூயியை சிறையை பார்க்க அனுப்பிவிட்டார்.
இந்தச்சம்பவத்தை டீயே லூயி விவரித்தபோது, “உங்களுக்கு கவலை இல்லையா உங்கள் பெயரையும், அவனது வாழ்க்கையையும் அவன் கெடுப்பது?” என்றேன்.
“இல்லையே! அவன் தன் வாழ்க்கையை வாழ்கிறான். என் பெயரை என்னைத்தவிர யாராலும் கெடுக்க முடியாது. அவனை போலீசால் பிடிக்க முடியவில்லையே?” என்றார். Champaigne இல் இருந்து வரும் நுரைபோல் சிரித்தபடி.
**
ஊரில் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசபடைகள் தமிழர் மீது குண்டுகள் போட்டு விளையாடிக்கொண்டிருந்த ஒருநாள் ‘Tamoul tigre'(தமிழ் புலிகள்) கெட்டிக்காரர் என்றார்.
நான் சத்து இல்லாத குரலில் ‘அவர்கள் தானே தோற்றுக்கொண்டு வருகிறார்கள்’ என்றேன்.
“இல்லை, போராட்ட அமைப்பு ஒன்றிடம் விமானம் இருப்பது அதிசயம்” என்றார்.
‘அப்படியா? அது விளையாட்டு விமானமாக இருக்கும்’ என்று சிரித்தேன்.
சில நாட்கள் கழித்து 26/03/2007 நள்ளிரவு புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் இராணுவ இலக்குகளுக்கு குண்டு வீசியதை எனக்கு கியூபா சுருட்டை பற்ற வைத்துக்கொண்டு முதலில் கூறியவர் டியே லூயி தான். அதற்குப்பிறகு எனக்கு இந்த மனுசன் இன்னும் ஓய்வு பெறவில்லையோ? என்ற பீதி இரத்தத்தில் கலந்துவிட்டது.
‘உங்களுடைய பூர்வீகம் எது என்றேன்?’
‘தன் பூர்வீகம் இதே நிலம்’ என்றார்
“versaillais! என் தலைமுறை எல்லோரும் இங்கேதான், இது 14ம் லூயியால் உருவாக்கப்பட்ட நகரம், 16ம் லூயி 01/02/1793 இல் (கழுத்து துண்டிக்கப்பட்டவர்) இருந்த அரண்மனை. இங்கு உள்ள தோட்டத்தில் 210,000 பூக்கள் பூக்கின்றன, நெப்போலியன் போனபாட் தன் கோடைகாலத்தை இங்கு கழித்திருக்கிறார். 1ம் உலக யுத்தம் முடிந்தது இங்கேதான், 2ம் உலக யுத்தத்துக்கான வேரும் இங்கேதான்!” என்று மோனாலிசா புன்னகை புரிந்தார்.
”உள்ளூர் பத்திரிகையில் 16ம் லூயிக்கு அரண்மனை முன்றலில் துக்கம் அனுட்டித்ததாக செய்தி வந்ததே?மன்னர் பரம்பரை இப்போதும் இருப்பார்களா ? ” என்றேன் அப்பாவியாக.
‘தெரியவில்லை’ என்ற மிகச்சிறிய பதிலை தந்துவிட்டு. பெரிய புகையை இழுத்துக்கொண்டிருந்தார். பனிமூடிய மௌனத்துக்கு பிறகு புகையை மூக்காலும், வாயால் அதிர்ச்சியான செய்தியொன்றையும் வெளியிட்டார்.
“இந்தியாவில் திப்புசுல்த்தான் ஆங்கிலேயருக்கெதிராக போராடிபோது, 16ம் லூயி அவருக்கு உதவினார். திப்புவின் தூதுவர்கள் 11 மாதங்கள் கடற்பயணம் செய்து Versailles கோட்டையில் மன்னனை சந்தித்தார்கள். (1877) 10000 பிரஞ்சு வீரர்களையும், பீரங்கி தயாரிக்கும் வல்லுநர்களையும் மன்னர் அனுப்பி வைத்தார். பின்னர் பிரஞ்சுப்புரட்சியால் மன்னர் படுகொலையோடு எல்லாம் மாறிப்போனது.” என்றார்.
எனது வாய்க்குள் அப்போது வண்டு ஒன்று அனுமதி இன்றி உள்ளே நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.
அதிலும் ’16ம் லூயி படுகொலை’ என்பதை அவர் உரக்கச் சொன்னார். புரட்சியில் மன்னர் கொலையை அவர் வெறுத்தது முகச்சுருக்கத்தில் தெரிந்தது.
***
சென்ற ஆண்டு கிறிஸ்மஸ் விழாவுக்கு திரு டியே லூயி என்னை அழைத்திருந்தார். என்னிடம் இருந்த உச்சபட்ச உடையலங்காரத்தோடு அவர் வீட்டை அடைந்தேன். அது Versailles கோட்டையில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது. என்னை தன் வீட்டுக்கு அழைத்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
அப்படி ஒரு வீட்டை திரைப்படங்களில் கூட காணவில்லை. வெளியே அழகிய பாட்டிபோலவும், உள்ளே இளமை அரும்பிய அணங்கு போலவும் இருந்தது.
அங்கிருந்த சீமான்களும், சீமாட்டிகளும் ஒரு வானவில்லில் கறுப்பு நிறம் சேர்ந்ததுபோல பார்த்து, விலைகூடிய உதடுகளை செலவளித்தனர். டியே லூயி எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்தார். இலங்கைத்தீவின் அரசன் என்பதுபோல அழகாக புழுகினார். என்னிடம் திடீரென்று உற்பத்தியாகிய நடிப்புணர்வை நான் வேட்டையாடினேன். என்னை கறுப்பரசனாக எண்ணிக்கொண்டேன்.
டியே லூயியிடம் “உங்கள் வீடு மெனிபிக் (பேரழகு)” என்றேன்.
விநோதமான சிரிப்பை தூவிக்கொண்டே விசேட அறைக்கு அழைத்துச்சென்றார். அது இருண்டிருந்தது. அங்கு ‘ஒலிம்ப்பே த கூசே’ என்ற பெண் போராளியின் ஓவியமும் ’16ம் லூயின்’ ஓவியமும், இன்னும் பலர் ஓவியங்களும் சிவந்த வெளிச்சத்தால் தெரிந்தன.
எதிர் சுவரில், இறுதி வரிசையில்.. டியே லூயி! தொடர் புள்ளியாக சிறைக்குள் வாழும் ‘டறில் லூயி’ சிரித்துக்கொண்டிருந்தான் இளவரசன் தோற்றத்தில்.