— சி. மௌனகுரு —
மீன்பாடும் தேன் நாடு என்றவோர் பெயரை மட்டக்களப்பு பெற்று விட்டது. அது ஓர் மரபுத் தொடராக மாறி, நம் நாட்டுத் தமிழ் மக்களை மகிழ்வித்தும் வருகிறது.
மீன்கள் பாடுமா?
என்ன ஆச்சரியம். பாடினால் அந்த இசை எப்படி இருக்கும்.?
அது கிராமிய இசையாக இருக்குமா?
செவ்விய இசையாக இருக்குமா?
அல்லது சப்தம் மாத்திரம் எழுப்பும் வெறும் இசையாக இருக்குமா?
இந்த மீன்கள் பாடுகின்றன என்பதனை முதலில் கண்டு பிடித்தவர் யார்?
மேற்கு நாட்டார்,
பின்னர் சுவாமி விபுலானந்தர்
இப்போது பலர்… என சிலரின் பெயர்களைக் கூறுவது வழமை.
ஆனால் இதனை முதலில் கேட்டவனும் அதனை இந்த அறிஞர் குழாத்திற்குச் சொன்னவனும் ஒரு சாதாரண மீனவத் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த முதல் மனிதனை நான் பெருமையோடும் வியப்போடும் நினைவுகூருகிறேன்.
இந்த இசையை முதன் முதலில் கேட்டபோது அவனுடைய முகம் என்ன பாவம் காட்டி இருக்கும்?
அவனுடைய திகைப்படைந்த, வியப்படைந்த அந்த முகத்தை ஒருதரம் நினைத்துப்பார்க்கிறேன்.
அவனையும் அந்த முகத்தையும் அந்தச் சூழலையும் தம் கற்பனைக் கண்கொண்டு வரைந்தளிக்கும் ஓவியர்கள் வரமாட்டார்களா என நான் ஏங்கியதுமுண்டு.
பாடிய இந்த மீன் பற்றிய தகவல்கள் மட்டக்களப்பிலிருந்த மேற்கு நாட்டு பண்பாட்டு மரபில் வந்த பாதிரிமாருக்கு கிடைக்க, அவர்கள் அதன் உண்மை, பொய் அறிய ஆய்வுகளில் இறங்கினர்.
கருவிகள் கொண்டு ஆய்வுகள் செய்தனர்.
ஆய்வுகள் மூலம் அது உண்மைதான் என்பது புலப்பட்டது.
அது என்ன வகையான இசை என அவர்கள் ஆராய்ந்தார்களா என்பது தெரியவில்லை.
அது தமிழிசையும் கர்னாடக இசையும் இசைக்கிறது என தன் கற்பனைக் கண்கொண்டு இலக்கிய நயம்படக்கூறினார் சுவாமி விபுலானந்தர்.
தேனிலவு மலர்ப் பொழிலில்
சிறை வண்டு துயில
செழுந்தாங்கத் தீம்புலனுள்
நந்தினங்கள் துயில
மீனலவன் செலவின்றி
வெண்ணிலவில் துயில
விளங்கு மட்டு நீர் நிலையுள்
எழுந்தது ஓர் நாதம்
என அந்த நாதத்தை குறிப்பிடுவார் சுவாமி விபுலானந்த அடிகளார்.
அதனை அவர் இசை அறிஞர் குழாத்திடம் எடுத்துச் சென்றார்.
அதன் பின் மட்டக்களப்பை மீன்பாடும் தேன்நாடு என அனைவரும் அழைக்கலாயினர்.
“மீன்மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள்
மட்டுநகர் அழகான மேடையம்மா”
என்ற காசி ஆனந்தன் பாடலும் அதற்கான இசையும் பிரபல்யமாயின. அங்கு மீன்மகள் பாட வாவி மகள் ஆடும் காட்சி விரிந்தது…
“மட்டுநகர் வாவியிலே கொட்டமிடும் மீனினங்காள்
தொட்டணைக்கும் வேலனிடம் தூது செல்ல மாட்டீரோ?”
என்ற மட்டுநகர் மீனை கதிர்காம வேலனிடம் தூதுவிடும் வீரமணி ஐயரின் கர்நாடக கீர்த்தனை பரத நாட்டியக்காரர்களிடம் மட்டுநகர் வாவியில் துள்ளிக்குதிக்கும் மீன்களைக்கொண்டு சென்றது.
ஆடும் மீன்கள் என்ற கருத்துருவை இது தந்தது.
திமிலைத்துமிலனின் நீரமகளிர் கவிதை நூலில் இந்த பாடும் மீன்கள் தமிழ் இசைகளாகக் காட்சி தந்தன.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பறங்கியர் என பல மதங்களும் பல இனங்களும் இணைந்து வாழும் மட்டக்களப்பில், பாடும் மீன் அனைவருக்குமான பொதுச்சின்னமும் ஆயிற்று.
இன மத பேதம் கடந்து அது மட்டக்களப்பிற்குரிய பொது அடையாளமும் ஆயிற்று.
கொழும்பிலிருந்து வருவோர் பிள்ளையாரடியில் பாடுமீன் இலச்சினை பொறித்த வாயிலைக் கடந்துதான் மட்டுநகருள் பிரவேசிப்பர்.
கிழக்குப் பல்கலைக்கழகம், விபுலனந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் போன்ற உயர் கல்வி நிறுவன முகப்புகளிலும் பிற கல்விக் கூடங்களிலும் கச்சேரி முதலான அரச நிறுவனங்களிலும் “மீன் சின்னம்—- பாடும் மீன் சின்னம்” பொறிக்கப்பட்டது. மட்டுநகரை பாடும்மீன் கவர்ந்துகொண்ட கதைச் சுருக்கம் இது.
இந்த பாடும் மீன் எப்படியிருக்கும்?
இந்த பாடும் மீன்களுக்கு உருவம் தந்த முதல் ஓவியர் யார்? 1960களில் வித்துவான் வீ.சீ. கந்தையா எழுதிய மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலுக்கும், மகாவித்துவான் எப்.எக்.ஸி.நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியம் எனும் நூலுக்கும் வரைந்த அட்டையில்தான் முதன் முதலில் ஓவியமாக பாடும் மீன் வருகிறது.
அந்த கற்பனை பாடும் மீனை வரைந்தவர் ஓவியர் குமார் என்பது ஞாபகம்.
அதனையொட்டி கையில் யாழுடன் பாடும் மீன் ஓவியப்பெண்ணாள் எங்கும் அறிமுகமானாள்.
பாடும் ஆண்மீன் இருக்க மாட்டாதா? என்ற சிந்தனை அன்று யாருக்கும் வரவில்லைப்போலும்.
இந்த பாடும் மீன்கள் ஆடமாட்டாதா? என யாரும் எந்த ஓவியரும் சிந்திக்கவில்லை.
நம் காலத்தில் நம்மோடு வாழும் நமதூர் ஓவியரான குலராஜுக்கு அப்படி ஓர் சிந்தனை வந்துள்ளது.
அவர் பற்றி முன்னரேயே அரங்கத்தில் நான் அறிமுகம் செய்துள்ளேன்.
ரேகைகளை நளினமாக வரைவதும் வர்ணங்களை அள்ளி வீசி நம்மையும் ஓவியத்தையும் பிரகாசப்படுத்துவதும் அவர் இயல்பு.
அவர் ரேகைகளே நாட்டியமாடும்.
அடையாறு கலாசேத்ராவில் மரபுவழி ஓவியம் பயின்ற அவர் ஓவியக் கலைஞராகவே வாழ்பவர்.
அமைதி
அடக்கம்
ஆழம்
தார்மீகக் கோபம் நிறைந்தவர்.
அவரது பாடும் மீன் பற்றிய சில கோட்டோவியங்களை அவரது முகநூலில் கண்டேன்.
அவரது இந்த பாடும் மீன்கள் ஆடுகின்றன.
ஆடுவது மாத்திரமல்ல
மத்தளம்
புல்லாங்குழல்
பறை
வீணை
முதலான வாதியங்களையும் வாசிக்கின்றன.
ஆண் மீன்களும் ஆடுகின்றன. பாடுகின்றன, வாத்தியம் இசைக்கின்றன.
அண்ணாவியராக ஒரு ஆண் மீன் மத்தளம் கட்டி அடிக்க, இன்னொரு ஆண்மீன் கதாயுதம், வாள் தூக்கி மட்டக்களப்பு கூத்தை ஆடுகின்றது.
கல்லடியிலும்
புளியடிக்குடாவிலும்
உப்போடையிலும்
அமிர்தகளியிலும்
சீலாமுனையிலும்
ஆடிய கூத்துக்களின் மத்தள, சல்லரி, சலங்கை ஓசையும் நயமிக்க பாடல்களும் கேட்டு வளர்ந்த மீன் பரம்பரை அல்லவா அது.
ஓவியர் குலராஜின் கற்பனையில் பாடும் மீன்கள் கூத்திசையும் இசைக்கும்.
அதற்குத் தக கூத்தும் ஆடும் என்ற தொனி வருகிறது.
கல்லடி பாலத்தினடியில் ஒரே மீன்கள் கொண்டாட்டம், மீன்களின் திருவிழா அது.
காட்டுக்குள்ளே திருவிழா போல ஆற்றுக்கடியில் திருவிழா. பாடிய மீன்கள் ஆடுகின்றன.
நம்மத்தியில் வாழும் பழம்பெரும் மரபு ஓவியர்களுள் முக்கியமானவரான இவரை எப்போது நாம் கண்டுகொள்ளப்போகிறோம்?
புரிந்துகொள்ளப்போகிறோம்?
கொண்டாடப்போகிறோம்?
கையில் வெண்ணையை வைத்துகொண்டு நெய்க்கு அலைகிறோமா?
விபுலானந்த அழகியற் கற்கைகள் இவரை எப்போது பயன் படுத்தப்போகிறது?
இனி இங்கே படங்களில் அவரது கற்பனையில் உதித்த அந்த மீன்களின் கும்மாளத்தைப் பாருங்கள்.