தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா?

தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா?

   — எழுவான் வேலன் — 

தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம்.  

வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம் கொடுத்து வாக்குக் கேட்பார்கள். நாமும் புதிய வடிவத்துக்கு முன்னையதிலும் பார்க்க அதிக உற்சாகத்துடன் ஆதரவளித்து வாக்குப் போடுவோம்.  

இந்த வகையான ஒரு ஜனநாயகத் தேர்தலைத்தான் நாம் காலாகாலமாக கடைப்பிடித்து வருகின்றோம்.  

வேட்பாளர்களும் எமது இந்த ஜனநாயக முறைக்கேற்பதான் தங்களுடைய அரசிலை நடாத்துகிறார்கள். இதைத் தவிர்த்து வேறு என்ன எங்களால் செய்யமுடியும் என்பதும் அல்லது இந்த நடைமுறையிலிருந்து மாறமுடியாமல் இருப்பதும்தான் எமது ஜனநாயக அரசியலாக இருக்கின்றது. இந்த ஜனநாயக அரசியலில் கடந்த தேர்தலின் போது பேசப்பட்ட பின்வரும் விடயங்கள் தொடர்பாக இப்பத்தி கவனத்தைக் குவிக்கின்றது. 

1. கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல். 

கடந்த தேர்தலின் போது கிழக்கில் அதிகம் பேசப்பட்ட விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதலாகத்தான் இருக்கமுடியும். சென்ற வருடம் இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக நடாத்தப்பட்ட உண்ணாவிரதத்தின் போது எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓடோடி வந்தனர். நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருடன் பேசியிருக்கின்றோம், மிக விரைவில் தரமுயர்த்தப்படும் அதன் முதற்கட்டமாக தனியான கணக்காளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற கதைகளெல்லாம் கூறினார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்வரை கூட்டமைப்பினரால் கூறப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளுமே நடைபெறவில்லை. 

கருணா (முரளிதரன்), வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன் போன்றோர் இவ்விடயத்தில் மக்களை அதிகம் நம்பவைத்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கூட ஜனாதிபதித் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர் வெற்றிபெற்றதும் உடனடியான தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் அவர்கள் கூறிய காரணம் ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவுக்கே அதிகம் வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பின் மூலம் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதை விரும்பவில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை நாம் செய்யமுடியாது அவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம் பாராளுமன்றத் தேர்தலில் எம்மை அவர்கள் வெற்றியீட்ட வைப்பார்களேயானால் அதன் பிறகு தரமுயர்த்தலாம்’  என்று கூறியதாக ராஜபக்ச அணியினருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியதை மெய்ப்பிப்பது போலவே ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இவ்விடயம் தொடர்பாக அவர்கள் எவ்வித நடவடிக்கைகளுமே எடுக்கவில்லை. அம்பாறை மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் கருணா அம்மான் வாக்குக் கேட்பதற்குக் கிடைத்த பலமான காரணங்களில் ஒன்று இவ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் என்பதாகும். இதுவே அவருக்கு கல்முனைத் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவதற்கும் காரணமாகும். இதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தோல்விக்கும் இதுவேதான் காரணமாகும்.  

தேர்தல் முடிந்தது, கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லாத போதும் ராஜபக்சவினரின் வேண்டுகோளை நிறைவேற்றியிருந்தார். அவரை அம்பாறை மாவட்டத்துக்கான பிரதமரின் இணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமனம் வழங்கி கௌரவப்படுத்தினார். ஆனால் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி பற்றி இவ்விருசாராரும் எதுவுமே செய்ததாக அறியமுடியவில்லை.  

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தபோதும் கூட்டமைப்பிலிருந்து விலகி, மகிந்த அணியுடன் சேர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனே தனது கறுப்புச்சட்டை அணியினருடன் களத்தில் குதிப்பவராக இருந்தார். தேர்தல் முடிந்து இராஜாங்க அமைச்சர் ஆனவுடன் அவரை தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளிலும் காணமுடியவில்லை. இராஜாங்க அமைச்சரானவுடன் தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போல அவர் வாகன அணியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்கள் வாகன அணிக்கு மரியாதையுடன் வழிவிட்டு விழிபிதுங்கிப் பார்த்திருக்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்று ஒன்று இருக்கிறதா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது.  

அடுத்து அங்கஜன் இராமநாதன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்கு ஓடோடி வந்து அந்த மக்களுக்கு பல நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். அவரும் தேர்தலில் வென்றதும் கல்முனையை மறந்து விட்டார்.  

இறுதியாக பிள்ளையான், இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரதப் போராட்டங்களின் போது சிறையிலிருந்தாலும் இந்த விடயங்களைத் தெரியாதவர் அல்ல. அத்துடன் மகிந்த அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை விடுதலை செய்வேன் என்பதாகும். அவர் கூறியது போல பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட கல்முனை பிரதேச செயலக வாக்குறுதிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மகிந்த அணியினருடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்ற பிள்ளையானுக்கு இவ்விடயம் தொடர்பாக ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. அந்த தார்மீகக் கடமையைத்தானும் அவர் செய்வதற்கான எத்தனங்களைக் காணமுடியவில்லை.  

இவற்றைப் பார்க்கின்ற போது அடுத்த தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் களமாடுவதற்கான தளமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல வாக்காளர்களும் கடந்த காலங்களையெல்லாம் மறந்து கட்சியை அல்லது ஆளை மாற்றி அடுத்த ஏமாற்றத்துக்கு தயாராவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.       

2. அபிவிருத்தி அரசியல் 

இன்று அரசுடன் சேர்ந்தியங்குகின்ற மேலே குறிப்பிட்ட அனைவரும் குறிப்பிட்ட ஒரு விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான அரசியல் நடவடிக்கைகளால் தமிழ் மக்களும் அவர்களுடைய பிரதேசங்களும் எவ்வித அபிவிருத்தியுமின்றி இருப்பதுடன் மக்களும் வறுமையில் வாடுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதுடன் தொழில் பேட்டைகளை அமைத்து இம் மக்களுடைய சமூக பொருளாதார அம்சங்களை கட்டியெழுப்புவோம் எனக் கூறினார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிமையில்லாத அபிவிருத்தி எம் மக்கள் விரும்பவில்லை. காபேட், கொங்கிறீட் வீதி அமைப்பதெல்லாம் ஓர் அரசின் கடமையே தவிர அது ஒன்றும் விசேட சலுகைகள் அல்ல எனக் கூறினர். 

இவ்விருவாதங்களையும் செவிமடுத்த மட்டக்களப்பு வாக்காளர்கள் தங்களுக்கு உரிமையும் வேண்டும் அபிவிருத்தியும் வேண்டும் என்பதற்கு இணங்க, உரிமைதொடர்பாக செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இருவரையும் அபிவிருத்தி சார்பாக செயற்படுவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கக் கூடிய இருவருமாக, சரிசமமாகத் தேர்வு செய்து அனுப்பினர்.  

இந்த இரு விடயங்களிலும் மட்டக்களப்பு மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. உரிமைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எதிர்கால அரசியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டு ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை’ போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற காலாவாதியாகிப்போன போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்துவதில் முனைப்புக்காட்டுகிறார்களே தவிர தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி அல்லது தங்களுடைய சட்ட அறிவையும் மும்மொழியாற்றலையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாக எவ்வித கரிசனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் மும்மொழிப் புலவன், கிழக்கின் தலைவன், பாராளுமன்றத்தை கதிகலங்க வைக்கும் ஆளுமையான் போன்ற பட்டங்களை மக்கள் தாராளமாக வழங்குகிறார்கள். இந்தப் பேச்சும் ஆளுமையையும்தான் தமிழ் மக்களுக்கு இல்லாதிருந்தது போலவும் இப்போதுதான் அது கிடைக்கப்பெற்றிருக்கிறது போலவும் சிலர் சிலாகித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமை அரசியலாகும். அதாவது தங்கள் பிரதிநிதி பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் உரையாற்றுவதற்கான அனுமதியாகும். இதை வைத்தே பாராளுமன்றக் காலத்தை ஓட்டிவிடுவார்கள். அந்த உரைகளை முகநூலில் பதிவிட்டு, அதை வெற்றி அரசியலாக்கி தமிழ் மக்களின் நெற்றியில் நாமம் சூட்டி அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிடுவார்கள். 

அடுத்து அபிவிருத்திக்காக தேர்வு செய்யப்பட்ட இரு உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பது எமது அடுத்த கேள்வியாகும். வீதி அமைத்தல்,பாலம் கட்டுதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கப்பால் விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற எமது நாட்டில் விவசாயத்தை ஒரு கைத்தொழில் மட்டமாக மாற்றுவதும் அவற்றுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதுவும் முக்கியமாகின்றது. இது தொடர்பாக எவ்வகையான திட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக தெளிவில்லாமலே இருக்கின்றது. அத்துடன் 1980களில் எல்லைக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இதுவரை தங்களுடைய விவசாய நிலங்களுக்கு திரும்ப முடியாதநிலையே காணப்படுகின்றது. தங்களுடைய காணிக்கான சகல ஆவணங்களும் அவர்களிடம் இருந்தும் அந்த மக்களுடைய காணிகளை பெரும்பான்மையினத்தவரே குறிப்பாக ஊர்காவல் படையினைச் சேர்ந்தவர்களே அந்தக் காணிகளை ஆட்சிபுரிகின்றனர். காணிகளை இழந்த தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முற்படுகின்றபோது அரச பயங்கரவாதம் அவர்களை அச்சுறுத்துகின்றது. எனவே கிட்டத்தட்ட 40 வருடங்களாக இம்மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டு கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். அமைக்கப்படும் வீதிகளையும் வாய்க்கால்களையும் இந்த மக்களும் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் போதே அங்கு உண்மையான அபிவிருத்தி ஏற்படுகிறது என்று கூறமுடியும். 

இதுபோன்றே, அண்மைக்காலமாக மேச்சல் தரைப்பிரச்சினை மட்டக்களப்பில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. எனக்குத் தெரிந்த சிலர் தங்கள் கால்நடைகள் மேச்சலுக்குப் போய் திரும்பிவராததால் இருக்கின்ற கால்நடைகளையும் அறாவிலைக்குக் கொடுத்து விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மேச்சலுக்காக கால்நடைகளைக் கொண்டு சென்றால் மேச்சல் தரையற்ற வனவிலங்குப் பகுதிக்குள் நுழைந்ததாக வனவிலங்கு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுகிறார்கள். எதுவுமறியா அந்த கால்நடை மேய்பவர்களின் குடும்பத்தினர் அவரை பிணையில் எடுப்பதற்காகவும் வழக்குகளுக்காகவும் அம்பாறை நீதிமன்றத்துக்கு அலையவேண்டி ஏற்படுவதுடன் இனி இந்தத் தொழில் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்கின்றனர்.  

இவ்வாறு இந்த அடிமட்ட மக்களின் ஜீவனோபாயம் இருக்கின்ற பட்சத்தில் நாம் இந்த மக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அபிவிருத்தி என்று பேசிக் கொள்வது ஒரு சிலருக்கான அபிவிருத்தியாகத்தான் இருக்கமுடியுமே தவிர உண்மையில் கஸ்டத்தை எதிர்நோக்கும் மக்களுடைய அபிவிருத்தியாக இருக்க முடியுமா எனும் கேள்வி எழுகின்றது.  

ஆகவே அரசாங்கத்துடன் இணைந்திருப்பது என்பது அந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல அந்த அரசாங்கத்தினைப் பயன்படுத்தி சமூகத்தின் கடைநிலையிலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்குமாகும். இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தங்களுடைய அரசியல் செயல்பாட்டினை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தேர்தலுக்கு காட்சியினை மாற்ற வாக்காளர்கள் தயாராவார்கள்.