‘சோபியின் உலகம்’   – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை

‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை

  — அகரன் — 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த அவசியமான ஒரு நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பொதுவாகவே ஒரு பேயைக் கண்ட பயத்தைத் தருவதுண்டு. ஆனால் இந்நூல் ஒரு இனிமையான அனுபவம். 

தேனில் கலந்து வேப்பெண்ணை மருந்து குடிப்பதுபோல.. நாவல் வடிவில் 15 வயது தொட்டு வாழ்வின் கதவுவரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’ மிக எளிய அறிமுகம்.  

உலக அளவில் 50 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்று கருதப்படுகிறது. (உனக்கெப்படித்தெரியும்? ஒரு பிரஞ்சுக்காரர் ஒருவரிடமும் உறுதிப்படுத்தினேன். அவர் இதை வாசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது) 

தமிழ் உலகில் இன்று பணம் சம்பாதிக்கும் பாடத்திட்டங்கள் நோய்போல் நீடிப்பதால் அடர்ந்த அறிவுத்தேடல்கள் அழிந்துகொண்டருப்பது அருவருக்கத்தக்க மனித நீட்சி.  

*** 

ஐ.நாவுக்காக லெபனானில் பணியாற்ற செல்ல இருந்த நோர்வே நாட்டு இராணுவ ஜெனரல் தன் மகளுக்கு ஒரு தத்துவப்புத்தகம் வாங்க புத்தகக்கடைக்குப் போகிறார். அங்கு தனது 14 வயது மகள் இந்த உலகை புரிந்துகொள்ளத்தக்க ஒரு தத்துவ நூலும் கிடைக்கவில்லை. 

லெபனானில் இருந்து தன் மகளுக்கு சோஃபி என்ற அவளது வயதுடைய கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். இறுதியில் பணிமுடிந்து வீடு வரும்போது மகள் பள்ளியில் படிக்கவே முடியாத தத்துவங்களை தந்தை மூலம் கற்றுவிட்டிருக்கிறாள். இளம் பிள்ளைகளின் மனநிலையிலே நாவல் கேள்விகளால் நகர்கிறது. நாமும் சோஃபியின் உலகில் வாழ்ந்துவிடுகிறோம்.  

*** 

  • இந்த உலகம், பூமி, வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன? என்ற கேள்வி ஒலிம்பிக்கில் யார் அதிகம் தங்கப்பதக்கம் வென்றார்கள்? என்பதைவிட முக்கியமானது.  
  • புராணக்கதைகள் தத்துவங்களை விதைத்தன. நம் சமூகம் மூடநம்பிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டது. ஸ்கண்டிநேவிய புராணக்கதைகளுக்கும் இந்திய புராணக்கதைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  
  • இந்த பிரபஞ்சத்தின் தூசிபோன்ற ஒருகோளில் வாழும் உயிர்த்தூசியான மனிதன் யார்? எப்படி வந்தான்? ஏன் சாகின்றான்? ஆன்மாவின் முடிவிடம் எது? கடவுளைப் படைத்தது யார்? இந்த உயிர்க்கோள் நீளுமா? இன்று உயிர்கோளின் கிருமி (மனிதன்) அதையே சம்மட்டியால் அடிக்கிறான். அழிவு யார் கையில்? மனிதப் பரிணாமம் 4.6 கோடி வயதுப் பூமியில் எத்தனை காலம்? இப்படிக் கேள்விகளால் உலகின் 2500 வருடங்கள் சிந்தித்த தத்துவ மேதைகளின் பதில்களை இந்த நூல் உங்களுக்குத்தரும்.  
  • 2500 ஆண்டுகளின் முன் வாழ்ந்த சாக்கிரட்டீஸ் தத்துவத்தின் முழு வரலாற்றுக்கும் புதிரான ஆளுமை. ‘’தனக்கு தெரியாது என்று எவனுக்குத் தெரிகிறதோ அவனே விவேகமானவன்’’ என்று நிரூபித்தவர். ஆனால் ஒரு சொல்கூட எழுதவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஜரோப்பிய தத்துவவியலின் அடிப்படையே அவர்தான்.  
  • சாக்கிரட்டீஸ், யேசு இருவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்கள் காலத்தில். ஆனால் இன்று?  
  • இடைக்காலம் :- மதங்களை வைத்து மனிதரை பூச்சாண்டி காட்டிய காலம்.  
  • மறுமலர்ச்சிக்காலம் :- தெய்கார்த், ஸ்பினோசா, லாக், கியூம், பார்க்கிலி, என்று முன்னர் கிரேக்கத் தத்துவவாதிகளின் பாதையில் தனித்தனியே தத்துவத்தை வளர்த்தெடுத்தனர்.  
  • அறிவொளிக்காலம் :- காண்ட், ஹெகல், ரூசோ கீர்க்ககாட், மார்க்ஸ், டார்வின், ஃப்ராய்ட் என்று எண்ணற்ற தத்துவப் பேரரசர்களால் பூச்சாண்டிகள் மொத்தமும் விரட்டப்பட்டு அறிவின் கண்கொண்ட பார்வை பரவியது. ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மூன்று தேசங்களும் அறிவியலில் உச்சங்கொள்ள அறிவொளிக்கால தத்துவவாதிகளே காரணம்.  
  • இன்றயகாலம் :- இயந்திரவியல், சூழலியலை படுகொலை செய்து ஆபத்தான உயிரியாக மனிதன் நிற்கிறான். உயிர்க்கோளத்திற்கு ஆபத்தில்லாத வாழ்வைக் கட்டமைக்க தத்துவ பேரறிஞனுக்கான தேவையில் நிற்கிறது 17000 அணுகுண்டுகளை வைத்திருக்கிற மனிதம். அந்த ஒப்பற்ற தத்துவத்தை நீங்களும் படைக்கலாம். நீங்கள் செவ்வாய்க்கு போவதைவிட முக்கியமானது தத்துவவியல்.  

அவசரப்படாமல் அவசியம் சோஃபியின் உலகத்தை படியுங்கள்.  

*** 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்லோ சென்றிருந்தேன். அந்த அமைதியும், அழகும் கொண்ட நகரில் ஒரு புத்தகக்கடையை கண்டேன். அழகாக இருந்தது. அங்கு தமிழ்ப்புத்தகம் இருக்காது என்பதை தெரிந்தும் அந்த அழகை அனுபவிக்க நுழைந்தேன். புத்தகங்கள் அழகிய இருக்கைகளில் வைத்திருந்தார்கள். அரச இருக்கைபோன்ற ஒன்றில் இந்த ‘சோபியின் உலகம்’ என்ற புத்தகம் இருந்தது. உள்ளே பார்த்தேன் ஒரு படமும் இல்லை.  

அந்தப் புத்தகத்தை தமிழில் வாசிக்க கிடைத்ததும் அதிசயம். அண்மைக்காலத்தில் உலகின் நல்ல படைப்புக்களை தமிழில் எந்த எதிர்பார்ப்புமற்று தமிழை மட்டும் வாசிக்கக்கூடிய என்னைப்போன்றவர்களுக்காக மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்?.  

கடந்த ஆண்டு வெளியாகிய ’குமிழி‘யின் ஆசிரியர் திரு ரவி அவர்களே எளிய நடையில் ஒரு முழுமையான தத்துவ நூல் வெளியாகி இருக்கிறது என்றார். அந்த நூல் சென்னையில் இருந்து கொரோனாவின் அனுமதியுடன்  வந்து சேர்ந்தபோதுதான் அது ஒஸ்லோவில் கையில் எடுத்துப்பார்த்துவிட்டு ‘வாய்ப்பே இல்லை’ என்று வைத்துவிட்டு வந்த நூல் என்பது தெரிந்தது. சில ஆழ்மனப்படிமங்கள் எப்படியும் சாத்தியமாகிவிடுமோ என்னவோ?  

« நான் ஒன்றைப் பார்த்தால் நம்புவேன் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனால், பார்ப்பதையும் நீங்கள் நம்பாதீர்கள் » -கான்ற்- 

பகுத்தறிவும், கல்வி அறிவும் பரவலாக நடைமுறையில் வந்துவிட்டால் மனித குலம் மாபெரும் வளர்ச்சி அடையும். -அறிவொளிக்கால அறிஞர்கள்-