சொல்லத் துணிந்தேன் – 67

சொல்லத் துணிந்தேன் – 67

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டமென அழைக்கப்பெற்ற கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் 21.02.2021 அன்று நடைபெற்றுள்ளது. ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தமிழ் ஊடகங்களால் குறிசுடப்பட்டுள்ள பத்துக் கட்சிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) கலந்து கொள்ளவில்லையெனத் தெரிய வருகிறது.  

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்ற கூட்டை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

இச்செய்திகளைப் படித்ததும் என்னுள் எழுந்த ‘தமிழ்த் தேசியக் கட்சிகள் என்றால் எவை?’ ‘தமிழ்த் தேசியக் கட்சி என்று அடையாளப்படுத்தபடுவதற்கான அல்லது பெயரிடப்படுவதற்கான அல்லது குறி சுடப்படுவதற்கான வரைவிலக்கணம் யாது? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்த்தேசிய அரசியலை அதன் ஆரம்பத்திலிருந்து திரும்பிப் பார்க்கவும் வைத்தது. 

இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களை (இலங்கைத் தமிழர்களை) பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது தமிழ்க் கட்சி 1944இல் தோற்றம் பெற்ற அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகும். அமரர் எஸ். ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, 1949இல் ‘இலங்கைத் தமிழரசு’க் கட்சியை நிறுவினார். தமிழ்த் தேசிய அரசியலின் முதலாவது உடைவு இது. அன்றிலிருந்து 1970ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கீரியும் பாம்பும் போலத்தான் அரசியல் செய்தன.  

உதாரணமாகத் தமிழரசுக் கட்சி திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்ட, தமிழ்க் காங்கிரஸ் அதனை எதிர்த்து அல்லது மறுத்து யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகம் கேட்டது. தமிழரசுக் கட்சி சமஸ்டியைக் கேட்க தமிழ்க் காங்கிரஸ் ஒற்றையாட்சிக்குள்ளேயே நின்று கொண்டது. தமிழ்த் தேசிய அரசியலின் முதலாவது முரண்பாடு இது. 

அடங்காத் தமிழன் என அழைக்கப்பெற்ற அமரர் சி.சுந்தரலிங்கம் (எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு முன்னரே தனிநாடு கேட்டவர் இவர்) தலைமையிலான ‘ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி’ என்ற கட்சியும் தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஊர்காவற்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.நவரெட்ணம் அவர்கள் உருவாக்கிய ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் கட்சியும் தமிழரசுக் கட்சியை மேவித் தமிழ் மக்களிடையே மேற்கிளம்ப முடியவில்லை. அவை பின்னர் உறங்கு நிலைக்குச் சென்றுவிட்டன. தமிழ்த் தேசிய அரசியலில் 1956 இல் இருந்து 1970 வரை தனிக்கட்சி என்று பார்க்கும்போது தமிழரசுக் கட்சிதான் கோலோச்சியது.  

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று பரணி பாடியபடி தமிழரசுக் கட்சி தமிழர் அரசியலில் பவனி வந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சியே தனிக்காட்டு ராஜாவாக விளங்கியது.  

1972இல் இலங்கைக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் புதிய கூட்டு 1976 இல் உருவானது. இது கூட்டணியாகக் (Alliance) காட்டப்பட்ட போதிலும் தமிழரசுக் கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தியது. புதியதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான போதிலும் கூட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கலைக்கப்படாமல் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவே தங்களை தக்கவைத்துக் கொண்டன. அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்ற அவரது மகன் குமார் பொன்னம்பலத்திற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையே அவ்வப்போது ‘தனகுவாரங்கள்’ இருந்து கொண்டுதான் இருந்தன.                                 

05.01.2000 அன்று நிகழ்ந்த குமார் பொன்னம்பலத்தின் கொலை மரணம் வரை இந்நிலைமை நீடித்தது. 

தமிழ் அரசியல் கட்சிகளின் விவகாரம் இவ்வாறு இருக்கத் தமிழ்ப் போராளி இயக்கங்களின் விவகாரங்கள் எப்படியென இனிப் பார்க்கலாம். 

தமிழ்ப் போராளி இயக்கங்களைப் பொறுத்தவரை குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் இணைந்த தமிழீழ விடுதலைக் கழகம்தான் (ரெலோ) முதலாவதாகக் கொள்ளப்படுகிறது. இந்த மூவரும் 1983 ஜூலைக் கலவரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்குப் பின்னர் ரெலோவுக்குச் சிறி சபாரட்ணம் தலைமையேற்கிறார். ஆரம்பத்தில் பிரபாகரனின் ஊடாட்டம் குட்டிமணி ஆட்களுடன்தான் இருந்தது. 

1977ஆம் ஆண்டு தமிழ்- சிங்கள இனக்கலவரத்தின் பின் உமா மகேஸ்வரன் வன்னியில் ‘காந்தீயம்’ அமைப்புடன் இணைகிறார். காந்தீயத்தை விட்டு உமாமகேஸ்வரன் விலகி பின்னர் உமாமகேஸ்வரன் தலைமையில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் ஒரு குழுவாக இணைகிறார்கள். 

பின்னர் இருவருக்கும் இடையில் பிரிவினை உருவாகி சென்னையில் தியாகராய நகர் பாண்டிபசாரில் வைத்து ஆளையாள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொள்ளும் அளவிற்குச் சென்று பின் பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் (எல்ரிரிஈ) உமா மகேஸ்வரன் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) உருவாகின்றன. 

இடதுசாரிச் சித்தாந்தங்களின் அடிப்படையில் லண்டனில் இருந்த ரத்ன சபாபதியின் சிந்தனையோட்டத்தில் ‘ஈரோஸ்’ இயக்கம் உருவாகிப் பின்னர் ஈரோசில் இருந்து பிரிந்த ஒரு குழுவினரால் பத்மநாபா தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எஃப்), பாலகுமார் தலைமையில் ஈரோஸ் இயக்கமும் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. 

இடையிலே சில சில்லறை இயக்கங்களும் தோன்றி மறைகின்றன. இவற்றிற்கு உதாரணமாக பனாகொடை மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ இராணுவம் (TEA) மற்றும் கிழக்கில் நிமலன் சௌந்தரநாயகம் தலைமையிலான நாக படை போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற அமைப்பும் நீர்க்குமிழி போல் தோன்றி மறைகிறது. 

1980களில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக்களத்தில் பிரதானமாக ரெலோ (TELO), எல்ரிரிஈ (LTTE), புளொட் (PLOTE), ஈரோஸ் (EROS), ஈபிஆர்எல்எப் (EPRLF) என்ற ஐந்து போராளி இயக்கங்கள் மேற்கிளம்புகின்றன. 

1983 இனக்கலவரம் போராளி இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்துகிறது. 

பின் சகோதர இயக்கங்களுக்கிடையே பகைமை உருவாகி சகோதரப் படுகொலைகளும் சில இயக்கங்களுக்குள்ளே உட்கட்சி மோதல்களும் (உதாரணம் புளொட், ரெலோ) ஏற்படுகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தடம் மாறுகிறது/ புரளுகிறது. இது பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளுக்குத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்ரிரிஈ) ஏனைய தமிழ்ப் போராளி இயக்கங்களை போட்டுத் தள்ளியும் ஓரங்கட்டியும் இராணுவ ரீதியாகப் பலம் பொருந்தியதாகிறது. எல்ரிரிஈ இராணுவ மேலாதிக்கம் பெற்று ஆயுத போராட்ட காலத்தில் முன்னணி வகிக்கிறது. 

தமிழ்ப் போராளி இயக்கங்களின் ஐக்கியமின்மையையும் அவற்றிற்கிடையேயான மோதல்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட இலங்கை அரசாங்கம் தருணம் பார்த்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கெதிராக யாழ்ப்பாணத்தில் ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ எனும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கிறது. இது 1987இல் நிகழ்கிறது. 

1987இல் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டினால் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும் இந்திய சமாதானப் படையின் இலங்கை வருகையும் நிகழ்கின்றன. 

இதற்கு முன்னர் ஒரு இடைப்பட்ட காலத்தில் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஐக்கியத்திற்காக பத்மநாபா சென்னையில் வைத்து எடுத்துக்கொண்ட முயற்சியின் பேரால் புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்களான எல்ரிரிஈ, டெலோ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப் ஆகிய நான்கு போராளி இயக்கங்களும் இணைந்து ‘ஈழ தேசிய விடுதலை முன்னணி’ (ENLF) என்ற கூட்டு ஏற்பட்டு அது பின்னாளில் குலைந்துவிடுகிறது. 

1987 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் போராளி இயக்கங்கள் எல்லாம் (எல்ரிரிஈ உட்பட) ஜனநாயக வழிக்குத் திரும்புவதாகத் தம்மை அரசியல் கட்சிகளாக இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுகின்றன. போதாக்குறைக்கு எல்லாப் போராளி இயக்கங்களிலிருந்தும் உட்கட்சி மோதல்களால் வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைந்து “பரந்தன் ராஜன்” என்பவரின் தலைமையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)-‘ஈ.என்.டி.எல்.எப்’ என்ற அரசியல் கட்சியொன்றும் மேலதிகமாக உருவாகிறது. 

ஈபிஆர்எல்எஃப் இல் இருந்து பிரிந்துசென்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈபிடிபி (EPDP) 1990 இல் உருவாகிறது. ஈரோஸ் இரண்டாக உடைகிறது. 

பிரபாகரனிலிருந்து கருணா அம்மான் பிரிகிறார். பின் கருணா அம்மானிலிருந்து பிள்ளையானின் விலகல் நிகழ்கிறது. பிள்ளையான் தலைமையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‘ரி.எம்.வி.பி’. (TMVP) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சி கிழக்கில் உருவாகிறது. கருணா அம்மான் தலைமையில் தமிழ் மக்கள் சுதந்திர முன்னணி (இன்னும் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பெறவில்லை) தோற்றம் பெறுகிறது. 

இடையில் கலாநிதி கா.விக்னேஸ்வரன் தலைமையில் அகில இலங்கைத் தமிழர் கூட்டணி என்ற கட்சி பதிவாகிய பின் பெயர் மாற்றம் பெற்று ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ எனும் கட்சியாக இன்று அரசியல் அரங்கில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. தமிழரசு கட்சி போன்ற மரபுவழி அரசியலும் இல்லாமல் ஆயுதப்போராட்ட இயக்கப் பின்னணியும் இல்லாமல் அரசியலை அறிவு பூர்வமாக அணுகும் ஒரு மாற்று அணியாக அகில இலங்கை தமிழர் மகாசபை தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. 

பத்மநாபாவின் மரணத்திற்குப் பின்னர் ஈபிஆர்எல்எஃப் உடைந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அணி, வரதராஜப்பெருமாள் அணி என இரண்டாகி இறுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற கட்சியும் வரதராஜ பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் இரண்டு தனித்தனி கட்சிகளாகத் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈபிடிபி யிலிருந்து பிரிந்துசென்ற சந்திரகுமார் தலைமையில் இப்போது ‘சமத்துவக் கட்சி’ பதிவாகியுள்ளது. இது வட மாகாணத்தில் கிளிநொச்சியை மையமாக வைத்து இயங்குகிறது. 

இவை ஒரு புறமிருக்க 2001 இலே புலிகளின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC), தமிழீழ விடுதலை கழகம் (TELO), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) என்பவற்றைப் பங்காளிக் கட்சிகளாக கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகாலத் தலைவராகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரிதான் விளங்கினார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி நீக்கப்பட்டு, அந்த இடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி புகுத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்களே பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானார். அதன் பின்னர் பல வெட்டி ஒட்டுதல்களும் குத்துவெட்டுகளும் நடந்து இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எஃப் என்பன வெளியேறிவிட்டன. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படாத புளொட் இப்போது உள்ளீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளை மட்டுமே பங்காளிக் கட்சிகளாக கொண்டுள்ளது. 

ரெலோவிலும் உடைவு ஏற்பட்டு சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சி என்னும் பெயரில் ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே ரெலோவிலிருந்து பிரிந்து வந்த உதயராசா தனது தலைமையில் சிறிரெலோ என்ற கட்சியை வைத்திருக்கிறார். செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான பாதி அல்லது மீதி ரெலோதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது தொங்கிக் கொண்டிருக்கிறது. புளொட் அவ்வாறு இல்லாவிட்டாலும் அதன் நிலைமையும் தொங்கு நிலைமைதான். 

இடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் வடமாகாண முதலமைச்சராகிப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியிலிருந்து) ஒதுங்கிய சி.வி.விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், அனந்தி சசிகரன் ஆகிய ஐவரும் பிரதானமாகச் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி எழுகதமிழ் என்றெல்லாம் எடுப்புக் காட்டிவிட்டு இறுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் மாற்றி (பூச் சின்னத்திலிருந்து மீன் சின்னத்திற்கு) அது மறுவடிவம் எடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கட்சியின் தலைவராகி விட்டார். அதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி என்ற பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியொன்றின் தலைவராகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். தமிழ் மக்கள் பேரவையின் தலைவராகவும் அவரே உள்ளார். ஆக சி .வி .விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையினதும், தமிழ் மக்கள் கூட்டணியினதும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினதும் (மீன் சின்னத்தினதும்) தலைவராக ஏகாலத்தில் உள்ளார். ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராக ஏககாலத்தில் இரா.சம்பந்தன் விளங்கினார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் நிலைமை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிவிட்டது. சி.வி.விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் தாரை வார்த்தது மட்டுமன்றி சி.வி.விக்னேஸ்வரனின் கூட்டில் ஒதுங்க இடமுமின்றி இப்போது தனிப்பட்டுப்போயுள்ளார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அவரது வகிபாகம் என்னவென்று தெரியவில்லை. ஈபிஆர்எல்எஃப் என்ற கட்சி தனது பெயரையும் சின்னத்தையும் மாற்றிக்கொண்டு விட்டதால் தேர்தல்கள் திணைக்களத்தைப் பொறுத்தவரை ஈபிஆர்எல்எஃப் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்று உத்தியோகபூர்வமாக இப்போது இல்லை. ஆனாலும், சில தமிழ் ஊடகங்கள் ஈபிஆர்எல்எஃப் கட்சித்தலைவர் என்று சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தொடர்ந்து சுட்டுவது ஏனென்று விளங்கவில்லை. யாரின் தலையில் யார் பூச் சுற்றுகிறார்கள். இறைவனுக்குத்தான் வெளிச்சம். அனந்தி சசிதரனும் தனது தலைமையில் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற பதிவு செய்யப்படாத கட்சியை வைத்திருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் பெயரில் கூட்டணியாக (Alliance) தோற்றம் காட்டினாலும் அது இப்போதும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான். அதன் சின்னம் இப்போதும் ‘வைசிக்கிள்’தான். 

கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னாள் ‘ரெலோ’ -இந்நாள் தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஆகியோரும் தமிழர் சுயாட்சிக் கழகம் வைத்திருக்கும் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் பேரவையினதும் தமிழ் மக்கள் கூட்டணியினதும் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் ஈபிஆர்எல்எஃப் இன் சுரேஷ் பிரேமச்சந்திரன் எல்லோரும் கூட்டிணைந்துதான் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் (பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எஃப்) மீன் சின்னத்தில் போட்டியிட்டனர். இவற்றைவிட ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி என்று அவை வேறு. வடமாகாணத்தில் இருக்கிற தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை போதாதென்று ஐங்கரநேசன் தலைமையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமென்று இன்னொன்று.  

வடக்கிலே நிலைமை இப்படியென்றால் கிழக்கிலே அருண் தம்பிமுத்து, வியாழேந்திரன், கணேசமூர்த்தி தலைமையில் பதிவு செய்யப்படாத முறையே ‘மக்கள் முன்னேற்ற கட்சி’, ‘தமிழர் முற்போக்குக் கட்சி’, மற்றும்’ இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி’ போன்ற புதிய கட்சிகளும் பெயரளவில் உள்ளன. ஒப்பீட்டளவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் வடக்கை விட கிழக்கு திருப்திகரமானது. கிழக்கைத் தளமாகக் கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ‘ரி எம் வி பி’ (TMVP), ‘அகில இலங்கை தமிழர் மகாசபையும்’என இரண்டு பதிவு செய்யப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளே செயற்படுகின்றன. இவையிரண்டும் புரிந்துணர்வுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.  

இவற்றையெல்லாம் பார்த்தால் சாதாரண வடக்குக்-கிழக்குத் தமிழ் மகன் ஒருவனுக்குத் தலை சுற்றுகிறது. தமிழ்த் தேசிய அரசியலில் எத்தனை உடைவுகள்- கீறல்கள்- சிராய்ப்புகள்- வெடிப்புகள்- விரிசல்கள்- வேற்றுமைகள்- பகைமைகள்- முரண்பாடுகள். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், தமிழனைப் பிறப்பிலிருந்தே பீடித்திருக்கும் தலைமைத்துவ ஆசை- அதிகார மோகம் – தன்முனைப்பு- தன்னலம் -விளம்பர விருப்பம்- புகழ் நாட்டம் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிரபாகரனின் தன்முனைப்பான செயற்பாடுகள்தான் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்த நியாயங்கள் மேலெழும்பாததற்குக் காரணமாகும். தமிழ்த் தேசியப் போராட்டத்திலுள்ள நியாயங்கள் அத்தனையும் புலிகளின் ‘பாசிச’ப் பாதணியின் கீழ் நசுங்குண்டு போனமைதான் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் இதுகால வரையிலான வரலாறு. அதேபோன்றுதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினதும்- இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும்- தமிழர் விடுதலைக் கூட்டணினதும் -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் (தற்போது இவற்றுடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் சேர்த்துக்கொள்ளலாம்) வர்க்கக் குணாம்சம்தான் தத்துவார்த்த ரீதியாகத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கான தடத்தில் பயணிக்காது போனமைக்குக் காரணம். 

தமிழ்த் தேசிய அரசியலையும் ஆயுதப் போராட்டத்தையும் நுணுகி ஆராய்ந்தால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் (அது அகிம்சைப் போராட்டமாக இருக்கட்டும் அல்லது ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும் அல்லது இராஜதந்திரப் போராட்டமாக இருக்கட்டும்) தமிழ்த்தேசிய அரசியலுக்கு இன்றுவரை தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் யாழ் மையவாத மேட்டுக்குடி வர்க்கத்தின் குணாம்சமும் ஆயுதப் போராட்டத்திற்கு இறுதிக்கட்டத்தில் ஏகத் தலைமை ஏற்றிருந்த பிரபாகரனின் தன்முனைப்புமேயாகும். 

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு துப்பாக்கியை வைத்து ஏக பிரதிநிதித்துவ இராணுவ மேலாதிக்கம் பெற்றார்களோ அதுபோலவே தமிழரசுக் கட்சியும் வாக்கு வங்கியை வைத்து ஏகப் பிரதிநிதித்துவ அரசியல் மேலாதிக்கம் பெற முனைப்புக் காட்டுகின்றது. அதாவது சுருக்கமாக விடுதலைப்புலிகளின் வேட்டுகளும் தமிழரசுக்கட்சியின் ‘வோட்டு’களும் என்று கூறலாம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் கருவிகள்தான் வித்தியாசமானவையே தவிர கருத்தியல் அதாவது மனப்போக்கு ஒன்றேதான். இது மக்களுக்கு உதவமாட்டாது. 

எனவே, சுய விமர்சனங்களின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட பிற்போக்கு அம்சங்கள் களையப் பெற்று தமிழ்த்தேசிய அரசியல் சீர்செய்ய பெறாமல் இப்பத்தியின் ஆரம்பத்திலே குறித்துக் கூறப்பட்ட ‘தமிழ்த் தேசியப் பேரவை’யின் உருவாக்கம் ஏற்கெனவே பன்றி குட்டி போட்டது போல் பல அரசியல் கட்சிகள் உருவாகி இடியப்பச் சிக்கலாய்ப் போயுள்ள தமிழ்த்தேசிய அரசியலை மேலும் சிக்கலாக்குமே தவிர உருப்படியான எந்த நேர் விளைவையையும் தரமாட்டாது. 

தமிழ்த் தேசிய அரசியல் புதிய அரசியல் கலாசாரமொன்றை நோக்கித் திசை திரும்ப வேண்டும். அதற்குப் புதிய அரசியல் வியூகமொன்று தேவை. அதற்கு முதற்படி என்னவெனில் ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்தல்’ என்ற ஒற்றைப் பரிமாணப் பொது வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் வடக்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் தனித் தனியாகக் கூட்டிணைவதாகும். இது தீர்க்க முடியாத நோயொன்றைக் குணப்படுத்துவதற்கு வேறுவழியின்றி மேற்கொள்ளும் அறுவைச்சிகிச்சை போன்றதாகும். என்றாலும் இதுதான் இப்போது தமிழ் மக்களுக்குத் தேவையானது.