— அகரன் —
எனக்கு உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று விடுப்புபார்ப்பது. பார்ப்பதற்கு ஒரு சம்பவமும் இல்லை என்றால் மற்றவர்களின் தனிப்பட்ட கதைகளை விடுத்து விடுத்து கேட்பது.
அதிலும் நான் கேட்காமலேயே எனக்கு சிலர் தேவையில்லாத தங்கள் கதைகளை எல்லாம் சொல்லி என் மூளையை நிரப்பி விடுவார்கள். அந்த அனுபவத்திற்கு பிறகு ஒவ்வொருவரையும் நன்றாக ஆராய்ந்த பின்னர் தான் என் வேலையை ஆரம்பிப்பேன்.
இந்தப் பழக்கம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர்தான் எனக்கு தொற்றிக்கொண்டது.
இது அகதி வியாதியோ என்று ஆராய்ந்தால் இல்லை. அகதிகள் அதிகம் மற்றவருடன் பேச மாட்டார்கள். தாங்கள் யார்? என்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைப்பார்கள்.
என்னோடு படித்தவனே ஒரு நாட்டில் என்னை கண்டுவிட்டு ‘கோழிக்கள்ளன்’ போல ஓடிப்போன கதைகளை நான் வைத்திருக்கிறேன்.
நாடுகள் பார்க்க வேண்டும், புதுப்புது மனிதர்களைப் பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் என்னிடம் இலங்கையில் இருந்தபோது இருந்ததே இல்லை. என் சித்திகளோடும், அம்மம்மாவோடும் வாழ ஆசைப்பட்ட எனக்கு இந்த வாய்ப்பைத்தந்தது இலங்கை அரசாங்கம்தான்.
மற்றவரின் கண்ணூறு பட்டுவிடும் என்று நினைக்கத்தக்க வன்னிக்கிராமம் ஒன்றில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன்னால் போராளிகளின் பச்சை நிற வாகனம், சிகப்பு புழுதிகளின் பாதுகாப்போடு சென்றது. அரை மணி நேரத்தில் இலங்கை அரசாங்கம் அனுப்பிய கிபிர் விமானம் எங்கள் வீட்டுக்கு மேலே தன் முட்டைகளை கொட்டி விட்டுப் போன பின்னர், ‘அகதி’ என்ற சிறப்பு பட்டத்தை இலங்கை அரசாங்கம் எனக்குத் தந்தது. பல ஊர்கள் பார்த்து பல நாடுகள் பார்த்து பிரான்ஸ் வந்து சேர்ந்தேன்.
இலங்கை மீது பிரான்ஸ் நாட்டுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. இலங்கை தந்த அகதிப்பட்டத்தை அது ஏற்க மறுத்தது. ‘சின்னத் தீவு, காட்டுமிராண்டிகளின் கூடாரம்’ என்று உதாசீனம் செய்கிறதோ? என்று எண்ணிக்கொண்டேன்.
கடும் விசாரணைக்கு பிறகு அதை ஏற்று என்னை கௌரவப்படுத்தியது. அவர்களுக்கு என் மீது ஒரு பயமும் இருந்தது. விசாரணையின் போது நான் கடந்து வந்த நாடுகளை ‘கம்பராமாயணப் பேருரைபோல’ சொன்னபோது, அவர்கள் கண்கள் விரிந்ததை அவதானித்தேன். ‘இவனை விட்டால் எல்லா நாட்டுக்கும் சென்று பிரான்சின் மானத்தை வேண்டி விடுவான்‘ என்று நினைத்திருப்பார்கள் போல. மறுபேச்சின்றி அகதிப்பட்டத்ததை ஏற்றுக்கொண்டார்கள். அதில் எனக்கு உண்மையான மகிழ்ச்சிதான்.
**
நோர்வே நாடு எங்கே இருக்கிறது? என்று என்னைத் தேடச்செய்யவும், ஒருமுறை அந்நாட்டை பார்க்க வேண்டும் என்று ஆசை வரச்செய்யவும் முக்கிய காரணம் ‘எரிக் சொல்கைம்’ !
நான் நீல காற்சட்டையும், வெள்ளை சட்டையும் நிறைய சிவப்பு மண்ணுடனும் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மதியப் பொழுதில், சுதந்திரத்துக்காக இரத்தம் பாச்சிக்கொண்டிருந்த போராளிகளின் தலைவரை சந்திக்க அவர் வந்தபோது; புற்றுக்குள் இருந்து நாக்கை நீட்டும் உடும்பு போல எட்டி எட்டி அவரை நான் பார்த்தேன். பிறகு பல ஆண்டுகளாக நோர்வேயும், சொல்கெய்மும் இலங்கை ஊடகங்களில் வெள்ளித் தலையங்கம் ஆகிப் போனார்கள்.
இந்த சிறப்புக்காக மட்டும் நோர்வேயை பார்க்க விரும்பவில்லை. கபடி போட்டிக்கு நடுவராக வந்தவன், பார்க்க வந்தவன் எல்லாம் ஒருபக்கம் சேர்ந்து விளையாடிய போது, மூச்சை கொடுத்தவர்களுக்கு எதிராக விளையாடிய போது ஓடி ஒளிந்து விட்டானே! அவன் நாடு எப்படிப்பட்டது? என்ற ஆவல் தான் காரணம்.
நோர்வேயைக்காண விமானப்பயணச்சீட்டை மின் வலையில் தேடிக்கொண்டே இருந்தேன். கொக்குக்கு மீன் சிக்கியது போல 50 யூரோவுக்கு அது சிக்கியது. இந்தக் கசவாரத்தனத்தால் நான் 300€ செலவழிக்க வேண்டி வரும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
நான் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையம் 200 கிலோ மீட்டரில் இருந்து. அதற்கான பயண செலவு 60€. பயணப்பைக்கான கூலி 40€. இப்படி என் கண்கள் ஈரமாகும்மளவு எனக்கு சேவை செய்தது அந்த நிறுவனம்.
« யேசுவே உன் பிள்ளைகள் எப்படித் திருடுகிறார்கள் பார்த்தாயா? « என்று பச்சாதப்பட்டுக்கொண்டேன். யேசு சொன்னார் ‘சின்ன எழுத்தில் எழுதி இருப்பார்கள் பார் சிவன் மகனே ‘என்றார். அவருக்கும் இந்த அனுபவம் இருப்பதை இட்டு மகிழ்ந்துபோனேன்.
அந்தப் புண்ணியவானின் (எரிக் சொல்கெய்ம்) நாடு அழகாகத்தான் இருந்தது. அங்கிருந்து எனது 50€ பயணச்சீட்டில் பாரிசுக்கு திரும்பிவந்து கொண்டிருந்த போதுதான் நாகம்மாளை சந்தித்தேன்.
நாம் அருகருகே இருந்த போதும் பேசிக்கொள்ளவில்லை. அவரின் நெற்றியில் பொட்டு இல்லை. ஆறடிக்கு அதிகமில்லாத உயரத்தில் வாழ்வின் எல்லா ஆழங்களையும் பார்த்த கண்கள். எப்போதும் சிரிப்பையும் சோகத்தையும் குழைத்த உதடுகள். ஐம்பது வயது கடந்த தோற்றம் என்றாலும் தலை மயிரின் அடர்த்தியும் நீளமும் 30 வயதைத் தாண்டாமல் அடம்பிடித்தன. நான் பேச தயங்கியதற்கு காரணம் விமான பணிப்பெண்களிடம் அவர் பேசிய நொஸ்க் பாசை அவரை தமிழ்ப்பெண்ணோ? என்று ஐயம்கொள்ள வைத்தது.
பணிப்பெண்கள் உணவு கொண்டு வந்தார்கள். நான் என் விசித்திரமான ஆங்கிலத்தில் பேசியது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் நான் 30 ஆயிரம் அடி உயரத்தில் புதுமொழியை கண்டுபிடித்து விட்டதாக விழிபிதுங்கி நின்றார்கள். அப்போதுதான் எனக்கு உதவும் உதடு தமிழில்..
‘தம்பி உங்களுக்கு என்ன வேணும் ? ‘
‘நான் வெள்ளிப்கிழமை விரதம். எனக்கு சைவச்சாப்பாடு வேணும் எண்டு சொல்லுங்கோ’
‘’தம்பி, வெள்ளிக்கிழமை விரதம் அவங்களுக்கு அவசியமில்லை. உமக்கு மரக்கறி சாப்பாடு அவ்வளவுதான?‘’
‘ஓம்… ஓம்.. ‘ என்று வானத்திலும் அவமானப்பட்டேன்.
அந்தச் சம்பவம் எனக்கு நல்ல வாய்ப்பாய் போய்விட்டது.
‘’அன்ரி நீங்கள் ஊரில எந்த இடம்?
-என்று என் விளையாட்டை ஆரம்பித்தேன்.
‘’நீங்கள் நோர்வேயில் கன காலமாய் இருக்கிறீர்களோ?
‘’19 வருடம்.‘’
‘’என்ன அருமையாய் நொஸ்க் பேசுறிங்கள்!’’
– ஒரு மெல்லிய அலட்சியமான சிரிப்பு-
‘’அப்ப எத்தனை பிள்ளைகள்?‘’
‘இரண்டு.’
‘’விசேசம் ஏதுமோ பாரிசுக்கு போறீங்கள்?
‘’இல்ல தம்பி என்ர பொறாமகன் இப்பதான் பரிசுக்கு வந்து சேர்ந்தவர். அவன் பிறந்த போது ஆமி தேப்பனை சுட்டுட்டாங்கள். நாங்கள்தான் அவனை வளர்த்தனாங்கள். அது தான் பாக்க போறேன்.‘’
‘ஓ.. ஓ.. சரி.. சரி’
(நான் இத்தோடு நிறுத்தி இருக்கலாம். என் கெட்ட குணம் வேகமாய் வேலை செய்தது)
‘’அப்ப உங்கட பிள்ளைகள் படிக்கினமோ?‘’
நீண்ட மௌனம்.. கண்களுக்குள் புல்லின் நுனியில் நிற்கும் பனிபோல் துளியொன்று நின்றது.
‘’மன்னித்துக்கொள்ளுங்கள் அன்ரி நான் உங்களை வருந்தவைச்சிட்டன் போல’’
‘இல்ல பறவாய் இல்ல பிள்ளைகளைப் பற்றி யாராவது கேட்டால் நான் என்ன சொல்வது? அதனாலேயே யாருடனும் பேசுவது குறைவு. என் பிள்ளைகள் என்னிடம் இல்லை. என் பிள்ளைகளை நோர்வே அரசாங்கம் பறித்துவிட்டது. அவர்கள் தனித்தனியே நோர்வே குடும்பங்களிடம் வளர்கிறார்கள்’
‘ஐயோ… ஏன் அன்ரி?‘’ (இன்னும் இரக்கம் இல்லாமல் கேட்டேன்)
சில கண்ணீர் துளிகளை வெள்ளைத் தாள்களால் ஒற்றியபோதும், கிணறு வெட்டும் போது தண்ணீர் ஊறி வருவது போல கண்ணீர் ஊறிவந்தது. கண்ணீர் சிந்துவதை விரும்பாத அவரது முகம் சற்று இறுகி, மழை விட்டவுடன் சிலவேளை வெயில் இருக்குமே அப்படி மாறியது.
‘’தம்பி நான் ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண். எங்கள் குடும்பத்தில் ஐவரும் பெண்கள். எட்டாம் ஆண்டோடு பள்ளியை விட்டு விட்டு, வீட்டுப்பொறுப்பை எடுத்தேன். என் தங்கை நன்றாகப் படித்தாள். அவள் அளவுக்கு அதிகமாக அழகோடு இருந்ததால் காதலும் விரைவாக வந்தது. அவளுக்கு குழந்தை பிறந்து சில நாட்களில் மனுசனை ராணுவம் சுட்டு இறந்து போனார். அப்ப இன்னும் பொறுப்பு கூடியது.
தூர நாடுகள் போவது விருப்பம் இல்லாமல்தான் இருந்து. எனக்கு ஒரு திருமண பேச்சு நோர்வேயில் இருந்துவந்தது. அதை மறுக்க என்னால் முடியவில்லை. ஏனென்றால் நான் போனால் எல்லோரையும் வாழ வைக்கலாம் என்று இங்கு வந்து சேர்ந்தேன். என் கணவர் நல்லாத்தான் இருந்தார்.
மகன் பிறந்தபோது அவர் தன் புகை பழக்கத்தை நிறுத்தினார். அவரின் நடவடிக்கைகள் மாறியது ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் என் நகைகளை ஜன்னலால் வீசி எறிந்து கத்த ஆரம்பித்தார். எனக்கும் அடித்தார்.
அயலவர் யாரோ காவல்துறைக்கு சொல்லிவிட அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்தனர். இரண்டு வயது நிறைவு பெறாத என் மகளையும், இரண்டு மாதம் ஆன என் மகனையும் எடுத்து போனதுடன் என்னை தனியாகவும் மனுசனை தனியாகவும் அழைத்துப் போனார்கள்.
எனக்கு மொழியும் புரியாது. உதவ யாருமில்லை ஊரில் யுத்தம். யாரை அழைக்க? என் மனம் பேதலித்து போனது.
« கணவனுக்கு மனநிலை சரியில்லை உனக்கு கணவன் வேண்டுமா? பிள்ளைகள் வேண்டுமா? « என்று மோசமான கேள்வியை நீதிமன்றம் கேட்டது.
கணவனைத்தவிர அன்று எனக்கு யாரையும் தெரியாது கணவன் இருந்தால் பிறகு பிள்ளைகளை வேண்டலாம். என நினைத்து ‘கணவன்!‘ என்றேன்.
பின்னொருநாள் « கணவனை உன்னோடு விடமுடியாது அவர் வைத்தியசாலையில் இருக்கவேண்டும் » என்று அழைத்துச்சென்றனர்.
‘’என் பிள்ளைகளைத் தாருங்கள் ! ‘என்று நீதிமன்றத்தில் அழுது முடித்தேன். அவர்கள், « பிள்ளைகளை வளர்க்க உனக்கு வேலை, வீடு, மொழி வேண்டும் » என்றனர். அவை அன்று என்னிடம் சுத்தமாக இல்லை.
இப்போது நான் தமிழைப்போல நொஸ்க் பேசுவேன், வைத்தியசாலையில் வேலைசெய்கிறேன், வீடும் சொந்தமாக வேண்டிவிட்டேன். என் பிள்ளைகளுக்காக.
(இப்போதுகூட நிறுத்தி இருக்கலாம்)
நான் தூங்கவிடாமல் கத்தும் சேவல்போல கேட்டேன்-
‘’அப்ப, இப்ப பிள்ளைகள் உங்களிடம் வந்திட்டார்களா ? ‘’
‘’இல்லதம்பி.. மகளுக்கு 18 வயது ஆகிவிட்டது. நோர்வேயின் பெற்றோர் வளர்த்ததால் அவள் தனியாக இருந்து படிக்கிறாள். வருடத்துக்கு ஒரு தடவை மனம் வந்தால் பேசுவாள்.
மகனுக்கு 16 வயது. அவன் என்னிடம் வருவதாகச் சொல்கிறான். அவர்களுக்கான அறை என் வீட்டில் காத்திருக்கிறது. நானும்தான்.’’ – என்று நாகம்மாள் எங்கோ ஒழித்து வைத்திருந்த பெருங்காற்றை வெளியில் விட்டாள்.
அதேநேரம் விமானம் தரையிறங்கி அடக்கி வைத்திருந்த நீண்ட பெருமூச்சை வெளியிட்டது. என்னால் மூச்சு விட முடியவில்லை.
நாட்டுப்பிரச்சினையை தீர்க்க வந்த ‘எரிக் சொல்கைம்’ உடைய நாடு ஒரு அகதித்தாயின் பிள்ளைகளை பறித்துவிட்டது. இது என் கெட்ட பழக்கத்தால்தான் தெரியவந்தது.
***