“நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி”
(இந்த பதிவை பொறுமையாய் வாசியுங்கள் நண்பர்களே முடிந்தால் உங்கள் பக்கத்தில் பகிருங்கள்)
நான் பிரித்தானிய நாட்டுக்கு வந்து பதினைந்தாவது ஆண்டை எட்டப் போகிறது.
வனவாசத்தை முடிக்க முயற்சிகள் எடுத்தும் முயற்சி கை கூடாமல் முட்டி, மோதி நின்றேன்.
இலங்கையில் நல்லாட்சி காலம் தொடங்கிய ஒரு சூழ் நிலையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இணைய என் விருப்பத்தை தெரிவித்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு கடிதம் அப்போது கிழக்குப் பல்கலைக் கழக நிறைவேற்று அதிகாரியாக இருந்த பேராசிரியர் உமா குமாரசாமி அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவரோடு தொலைபேசியிலும் பேசி இருந்தேன், அதே போலவே பதில் பதிவாளராயிருந்த திரு. பகீரதனுடனும் கதைத்தேன். என் விருப்பத்தை தெரிவித்தேன்.
2016ல் புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டமையும் புதிய பேரவை அமைக்கப்பட்டமையும் ஒரு நம்பிக்கையைத் தர துணை வேந்தருக்கும் பேரவைக்கும் என் மீள் நியமனத்தை கோரி கடிதம் அனுப்பினேன். மின்னஞ்சல் மூலமாகவும் பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பியிருந்தேன். எந்த பதிலும் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கவில்லை.
பின்னர் ஒரு மூன்று மாதம் கடந்த பின் பேரவை உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். எந்தப் ஒரு பேரவை உறுப்பினரும் பதில் அனுப்பவே இல்லை. பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பீடாதிபதிகள் என எல்லோருக்கும் என் மீள் நியமனம் பற்றி எழுதினேன். எவரிடமிருந்தும் சாதகமாகவோ பாதகமாகவோ பதில் வரவில்லை.
பின்னர் ஒரு ஆறு மாதத்துக்கு பின், என் மீள் நியமனம் கோரல் கடிதத்தை மட்டக்களப்பில் ஒரு நண்பருக்கு அனுப்பி, பேரவை உறுப்பினர்களுக்கு தனித் தனியாக அவர்கள் சொந்த முகவரிக்கு துணை வேந்தர் உட்பட அனைவருக்கும் அனுப்பினேன். இது வரை யாரிடமிருந்தும் எனக்கு பதில் வரவில்லை.
ஜனாதிபதி, பிரதமர், உயர் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மீள் நியமனம் தொடர்பாய் கடிதம் அனுப்பினேன். இருவரும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவை தொடர்பு கொள்ளும்படி கேட்க, நான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவரோடு பேசினேன். அத்தோடு மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டேன். உடனடியாகவே பதில் வந்தது கிழக்குப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு தாங்கள் அனுப்பிய கடிதத்தின் பிரதியையும் அனுப்பியிருந்தனர்.
தொடர்ச்சியாக அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். மீண்டும் மீண்டும் அவர்கள் மின்னஞ்சலில் துணைவேந்தரிடமிருந்து பதில் இல்லை என குறிப்பிட்டிருந்தனர்.
தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனாய் உயர்கல்வி அமைச்சரோடு தொடர்பு கொண்டேன். உயர் கல்வி அமைச்சின் செயலாளர் என் கடிதத்துக்கு உடனடியாகவே பதில் அளித்திருந்தார். அவரது கடிதத்தின்படி மீள் நியமனத்துக்கு நான் தகுதியானவன் என்றும் அவர்கள் உங்கள் தரத்திலான வெற்றிடத்துக்கு விண்ணப்பம் கோரும் போது அதற்கு விண்ணப்பித்தால் உங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும்கூறி, அதன் பிரதியை கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பியிருந்தனர்.
காத்திருந்த எனக்கு காலம் கனியுது என்று நினைத்திருந்தேன். 2017 ஒக்டோபரில் “நாடகம் அரங்கியலுக்கு” சிரேஸ்ர விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்ப்பட்டது. நான் அப்போது பதிவாளராயிருந்த ஜகுபர் சாதிக்கோடு பேசி, என் விண்ணப்பத்தை கல்வி உயர் கல்வி அமைச்சு அனுப்பிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன். ஆனால் அது பற்றிய நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
காலம் கடந்தது மற்றுமொரு துணை வேந்தர் காலம். 2019 புதிய துணை வேந்தர் பொறுப்பேற்றார். என் மீள் நியமனக் கோரிக்கையை அனுப்பினேன். துணை வேந்தரிடம் இருந்து பதில் வந்தது. மேல் நடவடிக்கை எடுப்பதாக சந்தோசப்பட்டேன். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதுதான் மிச்சம். கடந்த வருடம் நவம்பர் மாதத்தோடு என் ஓய்வு காலத்துக்கான வயது இப்போது 65 வயதைக் கடந்தாயிற்று. கடவுள் வரம் கொடுத்தாலும் இடையில் உள்ள பூசாரிகள் விரும்புவதில்லைப்போலும்.
நம்மவர்களே நமக்கு எதிரிகளா?
நான் 2006 ஆம் ஆண்டு இனம் தெரியாதவர்களால் கடத்தப் பட்டேன் அதன் பின்பே நாட்டை விட்டு நான் வெளியேறினேன்.
நான் வெளிநாட்டுக்கு சுக போகம் அனுபவிக்க வந்தவனல்ல.
அரச துறையில் வேலை செய்து இதே காலத்தில் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்த பலருக்கு மீள் நியமனம் வழங்கப் பட்டமை பலரும் அறிந்தது. என் நண்பர்கள் பலர் பெற்றிருக்கின்றனர்.ஆனால் தன்னாட்சி அதிகாரம் உள்ள ஒரு பல்கலைக் கழகம் என் வாழ்வை வஞ்சித்தது உண்மை.
“நல்லாட்சி” பல்கலைக் கழகத்தில் கேள்விக் குறியாய் பொல்லாட்சியாய் இருந்தது.
என்னை நியமிக்க சட்டத்தில் இடமிருந்தும் ……?
யாரிடம் போய் சொல்ல?, எம்மவர்களே எமக்கு, நாமே நமக்கு வஞ்சகம் செய்யும் போது மற்றவன் உரிமை தர மறுக்கிறான் என எப்படி குற்றம் சாட்டமுடியும்.
கடந்த பதினான்கு ஆண்டுகள் என் வேதனையையும் மன உளச்சலையும் சொல்வதானால் அது இன்னொரு பாரதாமாய் நீளும். அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாய் பின்னர் வரும் சந்தர்ப்பங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
என்ன வரினும் நான் சோர மாட்டேன் என் சமூகத்துக்கான சமூக அரசியல் கலாசார உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டே இருப்பேன்.
செத்த சவமாய் நான் இல்லை.
“வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி”
நான் 65 வயதைக் கடந்து விட்டேன், இனி நான் சேவையில் இணைய முடியாது.
சமகாலத்தில் பலர் நெருக்கடிகளினால் பல்கலைக்கழக சேவையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களில் பலர் இப்போது மீண்டும் சேவையாற்ற மீள் நியமனத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் விண்ணப்பங்களும் என் விண்ணப்பம் போல குப்பைக் கூடைக்குள் வீசப்படுமா அல்லது கவனத்தில் கொள்ளப்படுமா? கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பல கல்வியாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களது அனுபவங்களை உள் வாங்குவதன் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகம் பன்மைத்துவ ஆளுமைகளை அவர் அறிவுசார் புலமையை பயன்படுத்த முடியும் செய்வார்களா?
இவன்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்