அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!

அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!

 — தெய்வீகன் — 

தமிழர்களுக்கு இனிப் பிரச்சினையே இருக்காது என்று, விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றியை அறைகூவிய சிங்கள அரசுக்கு, தமிழர்களது ஆயுதப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்ட பின்னரும்கூட, தமிழ் தேசிய அரசியலின் வழியாக மாதமொரு தலையிடி இருந்துகொண்டுதானிருக்கிறது.  

அதற்கு எதிராக கோத்தபாய அரசு திமிறிக்கொண்ட மிகப்பிந்திய உதாரணம், யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைதும் அதற்கு சர்வ உலகமும் வெளிக்காண்பித்த எதிர்ப்பும் ஆகும்.  

தனக்கு எதிராக அழுத்தங்கள் வருமென்று எதிர்பார்க்காமல், முன்னர் மொக்குத்தனமாக நடந்துகொண்டு அடிவாங்கிய சிங்கள அரசு – இப்போதெல்லாம் விளைவுகளை தெரிந்துகொண்டே உளப்பூர்வமாக தமிழர்களைச் சீண்ட முடிவெடுத்துவிட்டது. அவ்வாறான சீண்டல்கள், தான் குறிவைக்கும் தரப்புக்களுக்கு ஒரு இறுக்கமாக செய்தியாக அமைந்துவிட்டால் போதும் என்றளவில் சிங்கள அரசு தற்போது காய்களை நகர்த்துகிறது. 

இந்த இறுமாப்பும் தடித்தனமும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எங்கிருந்து முளைக்கிறது என்று பார்த்தால், அவர்களது ஆட்சிமுறை என்பது பின்வருமாறுதான் நடைபெறுகிறது. 

அதாவது, அதீத சிங்களப் பெரும்பலத்தோடு ஆட்சிபீடமேறியிருக்கும் கோத்தாபய அரசைப் பொறுத்தவரையில், இன்று நான்கு தரப்பானவர்கள் இலங்கையில் குடியிருக்கிறார்கள்.  

ஒன்று, பிரபாகரனின் தலைமையோடும் தத்துவத்தோடும் இன்னமும் பின்னிப்பிணைகொண்டு புலம்பெயர் சமூகத்தையும் தமிழகத்தையும் முதுகில் கொழுவிக்கொண்டிருக்கும் இயங்கும் ‘பயங்கரவாத சமூகம்’. 

இரண்டாவது, சஹ்ரான் தலைமையோடும் தத்துவங்களோடும் மத்திய கிழக்கின் மத அடிப்படைவாதங்களையும் மூக்குமுட்டக் குடித்துவிட்டு, அதிகாரத்துக்குள் மூக்கை நுழைத்து வாலாட்டப்பார்க்கும் ‘தீவிரவாத சமூகம்’.  

மூன்றாவது, உலகின் மிக உன்னதமான மக்கள் சமூகமான – பௌத்தத்தை பின்பற்றும் – மனிதாபிமானத்தின் மறுவடிவங்களான சிங்களவர்கள்.  

நான்காவது, மேன்மையான சிங்கள சமூகத்தையும்விட ஒருபடி மேல் அனைத்தையும் ரட்சிக்கவல்ல பௌத்த மத பீடத்தவர்கள். அவர்கள் இன்றி இவ்வுலகில் அணுவும் அசையாது என்று அடர்த்தியான நம்பிக்கை கொள்ளப்பட வேண்டியவர்கள். 

இந்த நான்கு தரப்பினரையும் தாங்கள் வைக்கவேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டுதான், தற்போதைய கோத்தாபய அரசு சகல முடிவுகளுக்கும் பேனாவை திறக்கிறது.  

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அண்மைய தீர்மானமானது சிறிலங்காவுக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்காது என்ற உண்மையை, அண்மையில் பிறந்த குழந்தைகூடச் சொல்லும். அவ்வளவுக்கு சிறிலங்காவினை அரசியல் ரீதியாக அசைத்துவிட முடியாதபடி, சீன அத்திவாரத்தில் கட்டிமுடித்து கனகாலமாகிவிட்டது.  

ஆனால், மனிதாபிமானம் – போர்க்குற்றம் என்றுகொண்டு சர்வதேச அளவில் சிறிலங்காவின் பெயருக்கு களங்கும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது கோத்தா அரசுக்கு தொடர்ந்து சினமாக இருக்கிறது. ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாருங்கள், நான் புதிய சிறிலங்காவை காட்டுகிறேன்’ – என்று ஜனாதிபதி கோத்தபாய அல்லும் பகலும் அத தெரணில் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும்போது, புலம்பெயர்ந்தவர்கள் ஏன் தொடர்ந்து சப்பாத்துக்குள் கல் போல கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அரச தரப்புக்கு சதா சர்வதேச சிக்கலாகவே இருக்கிறது.  

இதற்குத்தான் ஜெனிவா விவகாரம் முடிவடைந்த கையோடு, புலம்பெயர்ந்த அமைப்புக்கள், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் என்று, சிறிலங்காவுக்குள் தடைசெய்யப்பட்டவர்கள் எனப்பட்ட புதிய இணைப்போடு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது.  

அடுத்ததாக, புலி என்ற சொல்லுக்கும் அதிகாரப்பகிர்வு என்று கேட்பவர்களுக்கும் நாட்டுக்குள் என்ன கிடைக்கும் என்பதை ஒட்டுமொத்தமாக காட்டுவதற்கு – ஒரு தரமான சம்பவமாக – மணிவண்ணனின் கைது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  

இவ்வாறு நடைபெறுவது இது முதல் தடவையொன்றுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  

அதாவது, ‘புலி என்ற சொல் சிறிலங்கா இராணுவம் என்ற சொல்லினால் பிரதியீடு செய்யப்பட்டாயிற்று. இவ்வளவு காலமும் நீங்கள் புலிகளுக்கு கொடுத்த மரியாதையை சிறிலங்கா இராணுவத்துக்கு கொடுக்கவேண்டும்’ – என்பதைத்தான் தமிழர்களிடம் சிங்கள அரசு எதிர்பார்க்கிறது.  

இது கோத்தா ஆட்சியில் அல்ல, கடந்த 2016 இல் ‘காமடியர்கள்’ மைத்திரி – ரணில் காலத்திலேயே ஆரம்பமான ஒன்றுதான். கிழக்கு முதல்வருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலில், முதல்வரின் பக்கம் நியாயமிருப்பதை மொத்த நாடும் வலியுறுத்தியும்கூட, அவரை படையினரிடம் மன்னிப்புக்கோரச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தது மைத்திரி அரசு. போதாக்குறைக்கு, விடயத்தை மந்திரி சபையில் வைத்து பேசுமளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.  

இப்போது கோத்தா ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன்னும் கொஞ்சம் முலாம் பூசப்பட்ட அதே அதிகாரப்போக்கு.  

அதாவது, புலிகளின் நாமத்தை இந்த நாட்டுக்குள் மருந்துக்கும் அனுமதிக்கமாட்டோம் என்பது.  

நகரில் துப்புவதை தடுப்பதற்கு ஆட்களை நியமிப்பதாக இருந்தால்கூட, அந்த அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்போவதாகவுமில்லை. (இதனை இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், வடக்கு – கிழக்கு பூர்வீக நிலம், மாகாண சபை ஆட்சி இவையெல்லாவற்றையும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களோடு சேர்ந்து போதுமானளவுக்கு கனவு காணலாமே தவிர, நடைமுறையில், தமிழர்களின் நகரசபை ஆட்சிகூட சிங்கள தேசத்தின் ஏகாதிபத்திய பிடிக்குள்தான் இருந்துகொண்டிருக்கிறது) 

இந்த நடைமுறைகளை நாட்டிலுள்ள தமிழர்கள் எனப்படுகின்ற பிரபாகர விசுவாசிகளான பயங்கரவாத சமூகத்தினர் மாத்திரம் உணர்ந்துகொண்டால் போதாது. அவர்களுக்கு ஜல்லியடிக்கும் புலம்பெயர்ந்தவர்கள், தமிழகத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு அரசுகள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கோத்தா அரசு, ஜெனிவாவின் மூலம் தனக்கு கரி பூசியவர்களுக்கு திரும்பி சேறு வீசியிருக்கிறது.  

இந்த நிலைதான் இலங்கையில் இன்னும் தொடரவும் போகிறது. அதாவது,தன்னைச் சீண்டும்போதெல்லாம், தான் அடிமைகளாக வைத்திருக்கும் மக்களை சீண்டுவதை தான் தொடரப்போவதாக சிறிலங்கா அரசு கிட்டத்தட்ட பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.  

நாடு பொருளாதார ரீதியில் படுகுழியில் சென்றுகொண்டிருக்கும் இந்தவேளையில்கூட, மணிவண்ணன் விவகாரத்தை பாதுகாப்பு கமிட்டியைக் கூட்டி பேசுகிறது. வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்களில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் இறந்திருக்கிறார்கள். போருக்காக படையில் சேர்ந்து வயிறு பெருத்த படையினரை, இந்த வீதிப்பாதுகாப்பு – மக்கள் வழிப்புணர்வு போன்ற விடயங்களில் கொண்டுபோய் நிறுத்தலாம் என்ற முன்னேற்றகரமான சிந்தனை எதுவுமின்றி, மணிவண்ணனை விசாரிப்பதற்கும் பிரபாகரனின் படம் வைத்திருப்பவர்களை பிடிப்பதற்கும்,புலனாய்வுத்துறையினரை வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அனுப்பி, கலைத்து விளையாடுகிறது.  

ஆனால், இந்த அடக்குமுறைகளை சுமந்திரன் போன்றவர்கள் சட்டத்தினால் உடைத்து, நுட்பமாக கையாளுவதுதான் இப்போதைய ஒற்றை வழிமுறையாக இருக்கமுடியும். பொதுமக்கள் தங்களுக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்துவது, நீண்ட தொடர்ச்சியான அறப்போராட்டமாக முடியும். 

ஆனால், இவை இரண்டுமின்றி, மக்களுக்கு அதைத் தருவோம், இதைப்பிடுங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியளித்துவிட்டு, எல்லா பிரச்சினைகளுக்கும் காலையில் எழுந்து அறிக்கை மாத்திரம் விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த மாதிரியான அடக்குமுறை – ஆட்சிச் – சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான பெருஞ்சாபங்களாக காணப்படுகின்றனர். 

கட்சியில் பிடுங்குப்பாடு, கதிரைகளில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை என்றவுடன் குறுக்கும் மறுக்கும் ஓடியோடி கூட்டம் போடுபவர்கள், வீதிக்கு வருபவர்கள், பத்திரிகைகளில் ஓடிப்போய் தங்கள் தரப்பினை கவி பாடுபவர்கள் – மக்கள் பிரச்சினைக்கு – மணிவண்ணன் பிரச்சினைக்கு – வாக்கெடுத்த பொறுப்புள்ளவர்களாக வீதிக்கே வராமல் அறிக்கைகளில் கோத்தாபயவை பார்த்து “கூ” அடிக்கிறார்கள்.  

மணிவண்ணன் விவகாரத்தின் ஊடாக, சிங்கள ஆட்சித்தரப்பு சொல்லவருகின்ற செய்தி கிட்டத்தட்ட எல்லோருக்கும் மங்கலாக முன்னமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், அதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறும்போது, அதன் வலி அதிகமாக உணரப்படுகிறது.  

ஆனால், மணிவண்ணன் விவகாரத்தின் ஊடாக தமிழர் தரப்பு உணர்ந்துகொள்ளவேண்டிய அதி முக்கிய செய்தி, தங்களுக்கானவர்களை அவர்கள் இனிமேல் தரம்பிரித்து அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்பதே.  

தங்களுக்கானவர்களாக அடையாளம் காட்டியபடி முன்வருபவர்கள், எவ்வளவு தூரம் ஓடுவார்கள்? எவ்வளவு பாரம் தாங்குவார்கள் என்பதை தமிழ் மக்கள் இனியாவது புதிதாக அடையாளம் கண்டுவிடவேண்டும். 

அதிகாரத்தின் குரூர கரங்களை மாத்திரமல்ல, அரிதாரங்களின் அரூப கரங்கள் குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கவேண்டும். 

(முற்றும்)