— அ. தேவதாசன் —
எனது இளம் வயதில் சாதியை மறைக்க முயற்சித்துள்ளேன். எனக்கு அழகான பெண்கள் எனத்தெரிபவரோடு பேச வேண்டுமெனில், பழக வேண்டுமெனில், காதல் கொள்ள வேண்டுமெனில் சாதி மிகப்பெரிய தடையாக இருக்கும். இதனால் ஊர்களை மாறிச் சொல்லும் பழக்கம் இருந்தது. சாதி தெரிந்தபின் அத்தான் அண்ணாவாகிய அனுபவங்களும் உண்டு.
பிரான்ஸ் வந்த பின்னரும் பலர் என்னை அறிந்துகொள்ள முயற்சி செய்வர்.
(என்னை அறிந்து கொள்ளல் என்பது எனது சாதியையும் அறிந்து கொள்ளல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.)
‘யாழ்ப்பாணத்தில் எவ்விடம்?’
‘வேலணை. _வேலணையில் எவ்விடம்?’
‘வேலணை மேற்கு_ மேற்கில் எவ்விடம்?’
‘பஸ் கொம்பனி’ _ ‘பஸ்கொம்பனியெண்டால் கிழக்கா? மேற்கா?’ ‘பஸ்கொம்பனியக் கடந்து புங்குடுதீவு போற றோட்டு’_ ‘அந்த முதலாளியைத் தெரியுமா? இந்த வாத்தியாரைத் தெரியுமா?’ (இந்தக் கேள்வியில் தனது சாதியின் பெருமையை தெரியப்படுத்திக்கொண்டார் என்பதை அறிக).. என்னால் இனியும் ஏலாது “கள்ளுத்தவறணைக்கு பின்னால” பிரச்சினை முடிஞ்சிது நானும் எவ்வளவு நேரமெண்டுதான் அடிய வாங்கிறது.
அதன்பிறகு அவர்களுக்கு தெளிவாக விளங்கிவிடும்.
நான் ஒரு வாகனம் திருத்தும் கடை (கார் கறாஜ்) நடாத்தி வந்தேன். அங்கு தமிழர்கள் அதிகம் வருவார்கள் அவர்கள் கறாஜ்க்குள் வாகனத்தை விட்டதும் தம்பி எந்த ஊர் என்பதே முதல் கேள்வியாக இருக்கும். இதற்கு விளக்கம் சொல்வதென்பது பெருந்துன்பமான காரியம். இதனால் எனது ஊரை விசாரிப்பவர்களுக்கு நான் அம்பாறை எனச்சொல்லி விடுவேன். எந்தத் தெரு, எந்த வட்டாரம், அவரத்தெரியுமா, இவரத்தெரியுமா போன்ற கேள்விகள் வரமாட்டாது. எனக்கு நேரம் மிச்சம். அதில் ஒருவர் மட்டும் “ஓ…அங்கயிருந்தும் வாறீங்களா” எனக்கேட்டார். நான் எதிர் பார்க்கவே இல்லை. அந்தக்கேள்வி லேசான கோபத்தையும் உண்டாக்கியது. நான் சொன்னேன் அம்பாறைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பில் தான் விமான நிலையம் என்றேன். நான் சொன்னது அவருக்கு கேட்காததைப்போன்று நகர்ந்தார்.
சாதியம் பற்றிய தெளிவும், சுயமரியாதையின் அவசியமும் புரிந்தபின்னர் என்னைப்பார்த்து யாரும் கேட்பதில்லை. நானாகவே சொல்லிவிடுவேன்.
இந்த தைரியம் பல வாசிப்புக்கள் உரையாயாடல்களென ஐரோப்பிய அளவில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. ஐரோப்பா எங்கும் நடைபெறும். இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்ளும் பலரும் சாதி அழிந்து விட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருப்பதினால் சாதியம் பற்றிய உரையாடல்கள் ஒவ்வொரு சந்திப்புக்களிலும் தவறாது இடம்பெறும்.
பெரியார், அம்பேத்கர் ஆகியோரது சாதியம் பற்றிய பார்வைகள் விவாதிக்கப்படும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலிருந்து வரவிக்கப்பட்ட நிறப்பிரிகை, தலித் முரசு, புதிய கோணங்கி போன்ற சிறு பத்திரிகைகள் வாசிக்க நேர்ந்தது. அத்துடன் அ மார்க்ஸ், குணசேகரன், திலகவதி போன்றோர் தமிழ்நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்தபோது பல சந்திப்புகள், உரையாடல்கள் நிகழ்ந்தது. இவைகள் எல்லாமே எனது சிந்தனைப் போக்கை புரட்டிப் போட்டது. என்னை மட்டுமல்ல என்போன்ற பல தோழர்களையும்.
சிலர் ஒருவரைப் பற்றி கிண்டிக் கிளறி விசாரிக்க விரும்புவது அவரது சாதியை அறிவது தனது சாதிப்பெருமையை தெரியப்படுத்தவே!
ராகுலன் என்கிற நண்பர் பாரிசில் சிறு தேநீர்க்கடை வைத்திருந்தார். அவரிடம் தேநீர் குடிக்க வந்த ஒருவர் ஊரை விசாரித்திருக்கிறார். அதற்கு அவர் யாழ்ப்பாணம் என்றார்_ யாழ்ப்பாணம் எவிடம்? றெயில் ஸ்டேசனுக்கு அருகில் _அருகில் எண்டால்? நான் யாழ்ப்பாணம் முலவை நளவன் போதுமா?
கேட்டவர் வாயடைத்துப்போனார்.
தோழர் புஷ்பராஜா அவர்களிடமும் முகத்திற்கு நேரே தன்னை அறிமுகப்படுத்திவிடும் தைரியம் உண்டு. இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் சாதியை மறைத்து மறைத்து பழகும் போது அது ஒரு கள்ள உறவாகவே தொடரும். ஒரு அடிமை மனநிலை எம்மனதுக்குள் உழன்று கொண்டே இருக்கும். அது காலம் கடந்த பின் மனதில் கவலையை ஏற்படுத்தும். நேரடியாக நம்மை இனம்காட்டிவிட்டால் பிடித்தவர் பழகுவார் பிடிக்காதவர் நழுவிவிடுவார்.
சாதியை மறைத்து பழகும் போது வீட்டிற்கு வந்து மச்சி, மச்சான் போட்டு பழகுவவர்கள் அவர்களுக்கு குழந்தை பிறந்து பெண்பிள்ளைக்கு பதின்மூன்று வயதும் ஆண்பிள்ளைக்கு பதினைந்து வயதும் வரும்போது சிறிது சிறிதாக உறவை துண்டித்துக்கொள்வர். அதற்கான ஆயிரம் காரணங்கள் சொல்லிவிடலாம். வேலைப்பளு, உடல் நிலைக்கோளாறு இப்படி பல. உறவைத் துண்டிப்பதற்கான உண்மைக் காரணம் சாதி மட்டுமே. இரண்டு குடும்பங்கள் நெருங்கிப்பழகும் பொது சிலவேளைகளில் பிள்ளைகளுக்கு பருவத்தில் வரும் காதல் சாதி அறியாமல் வந்துவிட்டால் சாதியால் பின்னப்பட்ட குடும்ப மானம் என்னாவது. அதனால் முன்கூட்டியே முடிவெடுத்து செயற்படும் செயற்திறன் நமது இனத்தின் பிரத்தியேக நுண்ணறிவு.
சமூக மாற்றத்தை விரும்புவோரும், மாற்றுக் கருத்தாளர்களும் சாதிய சமூகத்தை இல்லாதொழிப்பதற்கான காரணங்களை கண்டறிய பலதரப்பட்ட விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர இடதுசாரிக் கருத்துடைய சிலர் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதியை அழிக்க வல்லது எனவும் மார்க்சியம் அதற்கான மருந்து என்பதிலும் விடாப்பிடியாக உள்ளனர். இதற்கு நேர் எதிராக திறந்த பொருளாதாரக் கொள்கையே கிராமங்களை உடைக்கும் சாதியை அழிக்கும் என்கிற கருத்தும் உண்டு.
தமிழ் கலாச்சாரம் சாதியோடு பின்னப்பட்டுள்ளது. எனவே கலாச்சாரப் புரட்சி அவசியம் என்கின்றனர். மற்றும் சாதிய மறுப்புத்திருமணம், சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது, கல்வி பொருளாதாரத்தை மேம்படுத்துவது. இப்படி பலர் பலவகையான காரணங்களை முன்வைக்கின்றனர். இவைகளில் நடைமுறைச் சாத்தியம் எது என்பதை நாம் கண்டறிய வேண்டியவர்களாக உள்ளோம்.
இன்றைய உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவது என்பது தனி ஒரு நாட்டில் சாத்தியப்படும் சூழல் இல்லை. அதிலும் இலங்கை போன்ற சிறிய நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டில் சுயமாக முடிவெடுக்கும் சக்தி இல்லாத நாட்டில் வர்க்கப் போராட்டம் மிக தூரத்திலேயே உள்ளது.
தமிழ் கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க இந்துக் கலாச்சாரமே. தமிழர்களுக்கு என தனித்துவமான கலாச்சாரம் எதுவுமே இல்லை. இந்துத்துவா வர்ணாசிரம கோட்பாட்டில் கட்டப்பட்டது. நாலு வர்ணங்கள் உருவாக்கப்பட்டு பிராமணன் தலையில் இருந்து பிறந்தவனென்றும், சத்ரியன் தோளில் இருந்தும், வைசியன் தொடையில் இருந்தும், சூத்திரன் காலில் இருந்தும் பிறந்தவன் என மனித உயிரை சாதிகளாக பிரித்து வைத்துள்ளது. மனித உயிரை மதிக்காத மதத்தில் இருந்து சமத்துவம் மலரும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய பொய்.
ஆகவே இந்துத்துவம் அழியாமல் சாதி அழியவே முடியாது. மாறாக இன்று இந்தியாவில் பாஜக கட்சி இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் முன்னதை விட இந்துத்துவம் வலுப்பெற்று வருகிறது. இது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தவே வழி செய்யும்.
சாதிய மறுப்புத் திருமணங்கள் இலங்கையைவிட புலம்பெயர் தேசத்தில் ஒரளவு அதிகமாகவே நடைபெறுகின்றன. அதற்கான காரணம் கல்விச் சுதந்திரம், சட்டரீதியான பாதுகாப்பு, பதினெட்டு வயதைக் கடந்த சுதந்திர உணர்வின் செயலாக்கம்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்தாலும் புறச்சூழல் பெற்றோர்களின் எண்ணங்களுக்கு மாறாகவே காணப்படுகிறது. இந்த புறச்சூழலில் இருந்து பிள்ளைகளை தம் வசப்படுத்த அளவுக்கு அதிகமான பாசத்தைக்காட்டுவது, இரத்த உறவுகளோடு உறவுகளை இறுக்கமாக வைத்திருப்பது, தாங்கள் விரும்பாத தேர்வுகளை பிள்ளைகள் விரும்பினால் தாங்கள் செத்துவிடுவோம் என மிரட்டுவது. இப்படி பல காரணங்களால் பெற்றோர் விரும்பக்கூடியவர்களையே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் சூழலே அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் மறு பக்கம் தாங்கள் விரும்பியவரையே திருமணம் செய்வேன் என உறுதியாக இருப்பவர்கள் தற்கொலை வரை சென்று வெற்றி அடைந்தவர்களும் உண்டு. தோல்வியடைந்தவர்களும் உண்டு.
ஒரு சோடி இணைந்து வாழ பெண்ணின் தந்தையார் தடைவிதித்தன் காரணத்தால் அவரது கடையிலேயே வந்து பையன் நீதி கேட்டான். நாங்கள் இணைந்து வாழ மறுத்தால் இந்த இடத்திலேயே தற்கொலை செய்வேன் என்றான். பெண்ணின் தந்தையார் அவனது பேச்சை கருத்தில் எடுக்கவில்லை. அதனால் பையில் கொண்டுவந்த நஞ்சை அவ்விடத்திலேயே விழுங்கி விழுந்தான். அருகில் நின்றவர்கள் அவசர உதவியாளர்களை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபடியால் அவன் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் பெண் குடும்பத்தினர் இணைந்து விடக்கூடாது என தொடர்ந்தும் பல முயற்சிகள் செய்தனர். நாடுநாடாக பிள்ளையை கடத்தினர், பெண் தன் காதல் மேல் வைத்திருந்த வலிமையால் சிலகாலத்திற்குப்பின் காதலனுடன் இணைந்தார். இதற்கான காரணம் பெரிதாக எதுவும் இல்லை பையன் சாதியில் குறைவாம்.!!
இன்னுமொரு சம்பவம் நடந்தது… பெண் பிள்ளையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட தகப்பன் பிள்ளையை பின் தொடர்ந்து ஒரு நாள் இருவரையும் கண்டுகொண்டார். ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு தன் மகளுக்கு ஒரு புதுக்கதையை உருவாக்கினார்.
‘நீ காதல் செய்வதில் எனக்கு எந்த கோபமோ முரண்பாடோ இல்லை. ஆனால் அவன் நல்லவன் இல்லை முக்காலா குரூப்பில் இருக்கிறானாம். ஒரு நாள் யாரையாவது வெட்டிவிட்டு சிறைக்குப் போய்விடுவான், அல்லது இவனை யாராவது வெட்டுவாங்கள், அதன் பின்னர் உன் வாழ்க்கை என்னாவது’ என அழுதுள்ளார். (முக்காலா என்பது பிரான்சில் அடிதடி செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் ஒரு தமிழ் இளைஞர் குழு) தகப்பன் உண்மையைத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பி அதோடு அந்தப் பெண் தனது காதலை நிறுத்தி விட்டார். முக்காலாவோடு எந்த ஒட்டும் உறவுமில்லாத அந்தப் பையன் தன் மேல் சுமத்தப்பட்ட பழியை தாங்க முடியாமல் மனமுடைந்து நஞ்சு அருந்தினான். மருத்துவ உதவியால் நூலிழையில் உயிர் தப்பினாலும் அவனது காதல் தோற்றே போனது. இதிலும் பையன் சாதி குறைவாம்.! இப்படி பல சம்பவங்கள் புலம்பெயர் தேசங்களில் நடந்து கொண்டேயிருக்கிறது.
(தொடரும்……)