இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி

இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி

ஒரு சமூக ஜனநாயக கண்ணோட்டம் – 

         — அ. வரதராஜா பெருமாள் — 

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியல் யாப்பின் 13வது திருத்தம் பல குறைகளை –குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதனாலேதான் அதனை தமிழர்களுக்கான அரசியற் தீர்வாகக்கொள்ளமுடியாது என தமிழர் பிரதிநிதிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதில் உள்ள சரி பிழைகள் ஒருபுறமிருக்க, அதனை முற்றாக புறக்கணித்து விட்டு ஓர் இலட்சியபூர்வமான கோரிக்கையை முன்வைத்து பயணிப்பதற்கு உருப்படியான ஒரு அரசியற் பாதையை எவராலும் காட்ட முடியவில்லை என்பது தெளிவான ஒன்றாகும். 

தமிழீழக் கற்பனை கதையாய் கனவாய் கலைந்து போனநிலையில், வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களை மற்றுமொரு கனவுலகில் சஞ்சரிக்கவிட்டு வாக்கு வேட்டையாடுவதற்கு சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்ற கோஷங்கள் பயன்படலாம். அது மறுபுறமாக, இலங்கைவாழ் தமிழர்களை மேலும் பின்னோக்கிய அரசியல் சமூக வாழ்வுக்கே இட்டுச்செல்லும்.  

1990 தொடக்கம் நேற்று வரையான கடந்த முப்பது ஆண்டுகளின் அரசியல் நிகழ்வுகள் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்நிலையை தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டன. 1970 – 80களில் கொண்டிருந்த கற்பனைகளோடு தமிழர்கள் இன்று வாழமுடியாது – அந்த நினைப்பில் வாழவும் கூடாது. தோற்றவர்கள் என்பதற்காக அல்ல – விழுந்தவர்கள் மீண்டும் எழுந்து ஏனைய சமூகங்களுக்கு சமதையாக நிமிர்ந்து நிற்பதற்காக. 

மக்களிடையேயுள்ள இன மத வேறுபாடுகள் ஆதிக்க சக்திகளுக்கு பிரித்தாளும் ஆயுதங்கள் 

இலங்கையை ஆண்ட அரசர்கள் மற்றும் காலனியாதிக்க ஆட்சிகள் நடைபெற்ற காலங்களை விட்டு விடுவோம். 1948ல் சுதந்திரமடைந்த இலங்கையை இதுவரை ஆண்டவர்கள் – இப்போதும் ஆளுபவர்கள் எவரும் இலங்கையின் அனைத்து மக்கள் மீதும் நேசம்கொண்ட- இனம், மதம், சாதிகள் கடந்த தேசிய உணர்வை உடைய பிரதிநிதிகள் அல்ல. மாறாக அவர்கள் சிங்கள பௌத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த நாட்டை ஆள முடியும் – ஆள வேண்டும் எனும் எண்ணப்பாட்டை இங்கு ஆதிக்க சிந்தனையாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். 

அவர்களில் எவரும் சிங்கள உழைக்கும் மக்களின் – பரந்துபட்ட சாதாரண சிங்கள மக்களின்  நலன்களை முதன்மையாகக் கொண்டவர் அல்ல. அவர்கள் ஏனைய இன மக்களின் நலன்களை கீழ்நிலைப்படுத்துவது சிங்கள உழைக்கும் மக்களினது நலன்களையும்க கீழ்நிலைப்படுத்துவதற்காகவே. அதற்குரிய வகையில்  அவர்கள் தமது அரச அதிகாரங்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்காகவே அடுத்தடுத்து இலங்கையின் அரசியல் யாப்பை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் – பரந்துபட்ட சிங்கள பொது மக்களின் நலன்களை முன்னேற்றும் நோக்கமாகக்கொண்டல்ல. 

அரசியல் யாப்பின் 19வது திருத்தம் இலங்கையில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்துவதற்காகவா கொண்டுவரப்பட்டது? இல்லை, அது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு உள்ளேயுள்ள குழுக்களிடையில் அதிகாரத்தை தமது பக்கம் சாய்க்கும் போட்டியில் உருவானது. 19வது திருத்தம் ஒரு சிறு ஜனநாயக இடைவெளியை அரசியல் சமூகசக்திகளுக்கு வழங்கியது உண்மையே. ஆனால் நல்லாட்சி என படம் காட்டிய அந்தக் குழுவினர் இலங்கை எதிர்நோக்கிக்கொண்டிருந்த நெருக்கடிகளுக்கும் தமது மோசடிகளுக்கும் திரைகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்க குளிர்காய்ந்தது. 

அடுத்து வந்தவர்களோ அதிகாரத்தை 20வது திருத்தம் மூலம் தங்கள் பக்கம் சாய்த்தனர். அவர்கள் இப்போது பொருளாதார நெருக்கடிகளாலும், கோவிட் வைரஸாலும், புவி சார் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலாலும் தலையைத்தூக்க வழி தெரியாமல், விழி பிதுங்கி தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். வெளியிலிருந்து மட்டுமல்லாது, உள்வீடும் பிளவுபட்டு நிற்கிறது. 

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத்திறனுமின்றி  வஞ்சனை செய்வாரடி – வாய்ச்சொல்லில் வீரரடி 

இந்த இடைவெளியில் தமிழ்த்தேசியக்கொடி கொண்டு திரியும் தேர்தல் அரசியல்வாதிகளோ அரசோடு வெளிப்படையாக அணையமுடியாவிடினும் பின் கதவுகளால் அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சந்திப்புகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கெதிராக நேர்மையாக தம்மை அர்ப்பணித்து போராட முடியாத இவர்கள். தமது பதவிகளால் கிடைக்கும் சலுகைகளையும் பாதுகாப்பையும் பயன்படுத்தி வீதிகளில் வீரவசன நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். அதனையும் முழுமையாக நிறைவேற்றமுடியாமல் தங்களுக்குள் குத்திமுறிகிறார்கள். 

ஒரு பகுதியினர் இந்தியா தங்களோடுதான் நிற்கிறது – சர்வதேசம் தாங்கள் சொன்னபடிதான் செயற்படுகிறது என்று வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது போன்ற அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் மற்றொரு பகுதியினர் இன்னும் ஒரு படி மேலேபோய் இந்தியா அதனது பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தங்கள் காலடியில்த்தான் கடைசியில் வந்துவிழும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.  

இவர்கள் தமிழர்களின் அரசியற் பிரதிநிதிகளாக இருந்தாலும் தமிழ்மக்களின் உழைக்கும் மக்களினதோ -இங்கு தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பவர்களினதோ -யுத்த இழப்புகளாலும் வறுமையாலும் வேலைவாய்ப்பின்மையாலும் துன்பப்பட்டு நிற்கும் மக்களினதோ நலன்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இல்லை. எப்படி பாராளுமன்ற – இல்லாவிடின் மாகாண சபை – அதுவும் இல்லாவிடின் பிரதேச சபை உறுப்பினர் பதவியை அடையலாம் – தக்கவைக்கலாம் – அடுத்த முறையும் வெல்லலாம் என்பதிலேயே குறியாக உள்ளனர். இவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக்க வர்க்கமாக இருந்தாலும் இலங்கையின் அரசியலில் இவர்கள் வெறும் வெத்து வேட்டு வாய்வீச்சு வித்தகர்களாக மட்டுமே உள்ளனர். இவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சமூகத்தின் அரசியல் அதிகாரத்தினை இலக்காகக் கொண்டு அதற்கான சரியான பாதையை வகுத்து அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களாக இல்லை. 

சோறும் சுதந்திரமும் பிரிக்கப்படமுடியாதவை 

இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களிலிருந்து பார்க்கையில் இங்கு அரசியற் பிரதிநிதித்துவம் மிகவும் பலயீனமான ஒன்றாகவே உள்ளதென்பது அனைவராலும் உணரப்படும் ஒன்றே. தமிழர்கள் தங்களுக்கான அரசியல் சமத்துவம், நீதி, கௌரவம், பாதுகாப்பு என்பவற்றை எந்தக் கட்சியினர் நிலைநாட்டுவார்கள் எந்தத் தலைமையினால் அவற்றைச் சாதிக்கமுடியும் – அதற்காக யாரை நாடுவது என்பதில் தெளிவற்றவர்களாக -குழப்பமடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும். இந்த நோக்கங்களுக்காக தமிழ்தேசியக்கொடி பிடித்தவர்களின் பின்னாலேயே செல்கிறார்கள் என்றிருந்த நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. எந்தக் கட்சியும் வேண்டாம், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான இலக்குகளை முன்னெடுக்கட்டும் என்று எண்ணுகின்ற நிலைமையே தற்போது தமிழர் சமூகத்தில் தலைதூக்கி நிற்கிறது.   

தமிழ்த் தேசிய சட்டை போட்டிருப்பவர்களிடையே தத்தமது தேர்தல் அரசியலை நோக்கமாகக்கொண்ட போட்டிகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் பிளவுகளும், ஒருவரையொருவர் துரோகியென பட்டம் கட்டும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் இவர்கள் மீது வெறுப்பும் விரக்தியும் கொள்ள காரணமாகியுள்ளன. மேலும், இவர்கள் அரசின் மீது குற்றங்களை அடுக்குவதில் வல்லவர்களாக இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுகளை நோக்கி எந்தவகையிலும் செயற்திறனற்றவர்களாக இருக்கின்றமையும் காரணமாகும்.  

தமிழர்கள் தங்கள் அடிப்டைப் பொருளாதாரத் தேவைகளுக்கான தீர்வை அடைய அரசோடு அணைந்து நிற்கும் தமிழர் பிரதிநிதிகளிடம்தானே செல்லவேண்டும் – செல்கிறார்கள். ஒரு படி மேலேபோய் தேர்தல்களில் அவர்களுக்கு கணிசமான வாக்குகளை வழங்கி அவர்களை தெரிவு செய்துள்ளார்கள். தொடர்ச்சியாக நடைபெறும் மாற்றங்களைப் பார்த்தால் அவர்களது ஆதரவு தளம் கூடியிருப்பதையும் அவதானிக்கலாம். வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற உறுப்பினர்களாக அரச ஆதரவுக் கட்சியினரே உள்ளமையானது மாறிவரும் சூழலை உறுதிப்படுத்துகின்றது. அந்தநிலை மேலும் தொடர்ந்து விரிவடையுமா? இல்லை, இனி கீழ்நோக்கிச் செல்லுமா? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, அண்மைக்காலங்களில் ஏற்பட்டிருக்கும் யதார்த்தம் கவனத்திற்குரியதாகும். 

தமிழ் மக்கள் தமது எந்தெந்தத் தேவைகளுக்கு யார்யாரிடம் செல்வது என்பதில் தெளிவாக இருக்கிறார்களோ இல்லையோ தீர்க்கமானவர்களாக இருக்கிறார்கள். 

விருப்புகளும் வெறுப்புகளும் -பொதுவாழ்வில் இருப்புகளாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன 

எது எப்படி இருப்பினும் தமிழ்த்தேசியக்கொடியுடன் நிற்பவர்களுடன்தான் அரசாங்கம் பேசுகிறது. இவர்களுடன்தான் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள எதிர்க்கட்சிகள் பேசுகின்றன, இவர்களுடன்தான் இந்தியா பேசுகிறது, இவர்களுடன்தான் மேலைத் தேச நாடுகளின் பிரதிநிதிகள் பேசுகிறார்கள். 

தமிழ்த் தேசியக் கொடியைப் பிடித்திருக்கிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே. இவர்கள் இலங்கையின் அரசியல் அரங்கில் தவிர்க்கப்பட முடியாதவர்களாக உள்ளனர் என்பதே இன்று வரையான யதார்த்தம். 

அவர்களது கூட்டுக்குள் உள்ள பிரச்சினைகளோ அல்லது அவர்களது கட்சிகளுக்குள் உள்ள பிரச்சினைகளோ இப்போதைக்கு தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தோடு தொடர்புடையதாக இருக்கப்போவதில்லை. அரசாங்கத்தைச் சந்திப்பதிலும், இந்தியாவுக்குக் காதுகொடுப்பதிலும் மேலைத்தேச நாடுகளை நம்பியிருப்பதிலும் இவர்கள் ஒரே கூட்டத்தவர்களாகவே உள்ளனர்.  

இப்போது இவர்கள் நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பினூடாக ஓர்அரசியற் தீர்வினை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என இந்தியாவும் ஜெனீவாவும் வலியுறுத்துவதை வரவேற்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் அது தொடர்பாக தமது பக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை ஆர்வமுடன் ஆற்றுவார்களா என உறுதியாகத் தெரியவில்லை. எனினும் இவர்கள், சிங்கள எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு இந்தியாவின் துணையோடு மேலைத்தேச நாடுகளின் அனுசரணையோடு இப்போது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்புக்கு ஊடாக ஒரு வலுவான மாகாண சபை அமைப்புக்கு வழிவகுத்தால் இலங்கை மக்களின் நீண்டகால அரசியல் சமூக நலன்களுக்கு அது நல்லதாகவே அமையும்.  

உருப்படியாக – உரியவகைகளில் ஆகவேண்டியவற்றை செய்வார்களா?செய்யமாட்டார்களா? என்ற கேள்வியைவிட அவர்கள் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவதே சரியானதாகும். நல்லபடியாக நிறைவேற்றி முடிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் செய்வதற்கு எம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். நந்தவனத்தில் ஓர் ஆண்டிநாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதைக்கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி எனும் வகையாகவும் அவர்கள் செயற்படக் கூடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை – வெண்ணெய் திரளும்முன்னே தாழியை உடைக்கும் வேலையையும் அவர்கள் செய்யக்கூடியவர்கள். எவ்வாறாக இருந்தாலும் அவர்கள் முதற்கட்டமான முயற்சிகளை முன்னெடுக்க முயன்றாலும் அதற்கு ஒத்துழைப்பது அவசியமாகும். பின்னர் வருவதை அதற்குரிய நேரம் வருகையில் பார்த்துக் கொள்ளலாம் என முனைவதே சமூக அக்கறைகொண்டோருக்குப் பொருத்தமானதாகும். 

வேகமான ஓட்டங்களால் விளைந்தவையெல்லாம் விபத்துக்களே! படிப்படியான மாற்றங்களால் முன்னேற்றங்கள் சாத்தியமாகட்டும்!    

13வது திருத்தத்தினூடாக மாகாணசபைகளை வலுவுள்ள குறிப்பிடத்தக்க அளவு சுயாதீனமான ஒரு அரச நிறுவனமாக்குவது சுலபமான காரியமல்ல. அது நடந்தால் ஒரு பெரும் அரசியல் முன்னேற்றம் இலங்கையில் நிகழ்வது நிச்சயம். இனங்கள் மதங்கள் என்னும் எல்லைகளைக் கடந்து இலங்கையின் உழைக்கும் வர்க்கம் ஓரணிதிரள முடியாமைக்கு இன முரண்பாட்டின் கூர்மையே தடையாக உள்ளது. இதைத் தக்கவைக்கவே ஆளுங்குழுக்கள் ஒவ்வொன்றும் தமது வேறுபாடுகளுக்கு அப்பால் தொடர்ந்து முயன்றார்கள் -இனியும் முயல்வார்கள். 

ஆனால் இன்று இலங்கையின் அரசியல் பொருளாதார அகக்காரணிகளின் விளைவாகவும், இலங்கைக்கு புறத்தில் இலங்கையோடு தொடர்பாக பிராந்திய மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் காரணமாகவும் ஏற்பட்டுள்ள சூழல்களை வாய்ப்பாகக் கொண்டு மாகாணசபைகளை வலுவுள்ள நிறுவனமாக –அதன் மூலம் மாகாண மக்களின் அடிப்படையான அரசியல் பொருளாதார சமூக அபிலாஷைகளுக்கு வேண்டியவற்றை குறைந்தபட்சமாகவேனும் ஆற்றக்கூடியதோர் நிலை ஏற்படுமானால் அது இலங்கையின் இனமுரண்பாட்டைத் தணிக்கும் வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும் -இலங்கையின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்கள் ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் சமநிலையை உருவாக்கி ஜனநாயகப் பண்பாட்டு முன்னேற்றத்திற்கான பாதையைத் திறக்கும். 

இவை உழைக்கும் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற கோரிக்கைக்கான மைதானத்தை விரிவுபடுத்தும். அது சோசலிசப்புரட்சியை நோக்கிய நகர்வாக இல்லாவிடினும், இன்றைய நவதாராளவாத உலகப் பொருளாதார கட்டமைப்பினால் பாதிக்கப்பட்டு நிற்கும் பரந்துபட்ட பொதுமக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் முன்னிறுத்துகிற அரசியல் சமூக மேடைகளை நிச்சயம் அகலப்படுத்தும். அது இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை அடுத்த முன்னேற்றகரமான கட்டத்தை நோக்கி நகர்த்தும் எனத்துணிவோம். 

இது ஒரு தூர நோக்கு – ஆக்கபூர்வமான கனவு. இது மக்களை மோதவிடுவதாகவோ அல்லது சீரழித்து சிதறவிடுவதாகவோ இல்லாமல், மக்களை முன்னேற்றகரமான பாதையில் அழைத்துச் செல்லும் அரசியல் வேலைத்திட்டமே. எதிர்பார்க்கிற அளவுதூரம் போகாவிட்டாலும் பாதகமொன்றில்லை. உருப்படியான அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து ஆற்றல் மிக்க ஒரு மாகாண சபை ஏற்பட்டு அது காத்திரமாக செயற்படுமானால் அதுவே இலங்கையின் ஒட்டு மொத்த தேசிய அரசியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாகும்.