— ஜிஃப்ரி ஹாசன் —
இலங்கையில் மதரசாக் கல்வி குறித்து அரசாங்க மட்டத்திலும், சிங்கள பௌத்த அமைப்புகள் மட்டத்திலும் சர்ச்சைகள் அண்மைக்காலமாக மேற்கிளம்பிவருகின்றன. மதரசாக் கல்வி முறை இலங்கைக்குப் பொருந்தாது என்ற கருத்து அரசாங்கத்தின் சில தரப்பினர் மத்தியில் நிலவுகிறது. இது தொடர்பில் முஸ்லிம்கள் தரப்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் உள்ளது. உண்மையில் தற்போதைய மதரசாக்கல்வி முறை நாட்டுக்குப் பாதகமானதுதானா என்பது குறித்து வெளிப்படையாக பேசுவது இந்தத் தருணத்தில் முக்கியமானது.
பாடசாலைகளில் 6 – 8 வரையான தரங்களில் படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறு மதரசாக்களில் சேர்க்கப்படுகின்றனர். முன்னொரு காலத்தில் அதிக சுட்டியான கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளை பெற்றோர் மதரசாக்களுக்கு சேர்க்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இப்போதும் தொடரத்தான் செய்கிறது. நல்ல மீத்திறனான சிந்தனைத் திறன்கூடிய பிள்ளைகளை பெற்றோர் மதரசாக்களில் சேர்ப்பதில்லை. ஓரளவு கற்றலில் நாட்டம் குறைந்த மெல்லக் கற்கக்கூடியவர்களையே அதிகம் சேர்த்துவிடுகின்றனர். அத்தகையவர்களிடம் பரந்த அறிவு உருவாவதும் சாத்தியமில்லை. இதனால் இலகுவில் அவர்கள் மதரசாக்களில் கற்பிக்கப்படும் அனைத்து விடயங்களையும் எந்த மறுவிசாரணையுமின்றி நம்பிவிடுகின்றனர். பொதுவாகவே, யாராக இருந்தாலும் விடயங்களை நுணுகி ஆராய்ந்து தெளிவுபெறும் வயதும் அல்ல அது. எதையும் நம்பக்கூடிய வயதில் ஒரு பக்கம் மட்டுமே கற்பிக்கப்படுவது மோசமான அனுபவங்களுக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மையை முஸ்லிம் மதத்தலைமைகள் கவனத்திற்கொள்ளவேண்டும்.
இலங்கை வரலாற்றில் கல்வியைப் பெறுவதில் பின்தங்கி நின்ற சமூகம் முஸ்லிம்கள்தான். காலனித்துவ காலத்திலேயே இலங்கையில் பாடசாலைக் கல்விமுறை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அப்போது பாடசாலைக்குச் சென்று மேலைத்தேய/ ஆங்கிலக் கல்வி பெற வேண்டுமானால் அவர் கத்தோலிக்க மதத்துக்கு மாறவேண்டிய கட்டாயம் இருந்தது. இஸ்லாமிய சட்டத்தின்படி மதம் மாறுவது முர்த்தத் எனும் குற்றமாகக் கருதப்பட்டது. இக்குற்றத்துக்கான தண்டனை மரண தண்டனையாகும். இதனால் முஸ்லிம் சமயத் தலைமைகள் ஆங்கிலக் கல்வி படிப்பது ஹராம் என்றொரு தீர்ப்பை வழங்கினர்.
அந்த நிலைமை நீங்கிய பின்னரே முஸ்லிம்கள் கல்வியில் கவனஞ்செலுத்தினர். இதற்காக சித்திலெப்பை, ஏ.எம்.ஏ.அஸீஸ், ரீ.பி.ஜாயா, பதியுத்தீன் மஹ்மூத் போன்ற தலைமைகள் கடுமையாகப் பாடுபட வேண்டி இருந்தது.
இருந்தாலும் இலங்கையின் அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் பாடத்திட்டம் அரசினால் தீர்மானிக்கப்பட்டதாகவும், கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது. இஸ்லாமிய மத அடிப்படைகள், ஈமான் (விசுவாசம் கொள்ள வேண்டிய அம்சங்கள்), போன்றவற்றுக்கு அரச கல்வித் திட்டங்கள் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை என்ற மனக்குறை முஸ்லிம் மத அடிப்படைவாத, சமூகத் தலைமைகளுக்கு இருந்தது. அவர்கள் கல்வி என்று கருதியது மதக்கல்வியைத்தான். அதனையே இஸ்லாமும் கல்வி என்று போதிப்பதாக அவர்கள் உறுதியாக நம்பினர். இதனால் உலகக் கல்வி மீது ஒரு புறத்தியான் மனப்பாங்கு முஸ்லிம்கள் மத்தியில் மத அடிப்படைத் தலைமைகளால் வளர்க்கப்பட்டது.
எனவே முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய மதம், பண்பாடு, அரபு, இஸ்லாமிய வரலாறு, குர்ஆன், ஹதீஸ்கள், இஸ்லாமிய சட்டம், வாழ்வொழுங்கு போன்றவற்றைக் கற்பிப்பதற்காகவும், அந்த அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் தனியான கல்வி முறை ஒன்றை முஸ்லிம் சமயத்தலைமைகள் விரும்பினர். அதன் விளைவாகவே மதரசாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இலங்கை முஸ்லிம் சிறார்களுக்கு இஸ்லாமிய மதம், அரபுமொழி, இஸ்லாத்தின் புனிதப்பிரதிகளான குர்ஆன், ஹதீஸ் விளக்கங்கள், பிக்ஹ் எனும் இஸ்லாமிய சட்டக் கலை, போன்றவற்றை முறையாகக் கற்பித்து அதனைப் பின்பற்றக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
அந்த நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டே மதரசாக்களின் பாடத்திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஒரு பொது அமைப்பினதோ அல்லது அமைச்சினதோ தலையீடுகள் எதுவுமின்றி தன்னிச்சையாக மதரசாக்களால் பாடத்திட்டத்தை தயாரித்துக் கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுகிறது. இதனால் மதராசப் பாடத்திட்டங்கள் அந்தந்த மதரசாக்களை நடாத்துகின்ற இஸ்லாமிய இயக்கங்கள் சார்ந்து வேறுபடுகின்றன. ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத், ஷீயா போன்ற இஸ்லாமிய இயக்கங்களினாலேயே பெரும்பாலும் இந்த மதரசாக்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து மதரசாக்களும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய மத நம்பிக்கைக் கோட்பாட்டைப் போதிப்பதையே பொதுநோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களின் இயக்கம் சார்ந்து சிற்சில வேறுபாடுகள் பாடத்திட்டத்தில் காணப்பட முடியும்.
வெளித்தலையீடுகள் எதுவுமின்றியே மதரசாக்களை நடாத்துகின்ற இஸ்லாமிய இயக்கங்களிலுள்ள மூத்த உலமாக்களின் திட்டமிடலுக்கேற்பவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் மிகக் கூர்மையான கருத்து வேறுபாடுகள் காணப்படுவதால் சக இஸ்லாமிய இயக்கங்கள், கொள்கைகள் மீதான மிகத் தீவிர வெறுப்புணர்வும் பாடத்திட்டத்துக்கு இயைபாகப் போதிக்கப்படுகின்றன. இஸ்லாமிய இயக்கங்கள் தங்களது கொள்கைகளுக்கான உறுப்பினர்களை உருவாக்கும் வகையிலேயே இந்த மதரசாக்களின் பாடத்திட்டங்களை தீர்மானித்துக்கொண்டன. தற்போதைய இலங்கை மதரசாக்களின் பாடத்திட்டத்தின்படி அரபுமொழியும் இலக்கணமும், அரபு மொழி சார்ந்த மரபுகள் (சர்ஃப்), குர்ஆன் ஓதும் முறை, இத்தகைய மென்மையான பாடங்கள் முதலாம் தரத்தில் போதிக்கப்படுகின்றன.
இரண்டாம் தரத்தில் பாடங்கள் சற்று இறுக்கமடைகின்றன. அகீதா (இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு), தர்பியா, தஃவா (பிரச்சாரம்), பிக்ஹ் (இஸ்லாமிய சட்டக்கலை) இந்த சட்டங்களில் தொழுகை, நோன்பு, ஸக்காத் (தர்மம்), திருமணம், குழந்தைக்கான கடமைகள் மற்றும் இறந்தவர்களுக்கான கடமைகள் குறித்த சட்டங்கள், பாகப்பிரிவினை போன்ற சட்டங்களும், மற்றும் குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் போன்றன கற்பிக்கப்படுகின்றன. இந்தச் சட்டங்களும், நம்பிக்கைக் கோட்பாடும் இலங்கை முஸ்லிம் சிறார்களுக்கு போதிப்பது எந்தளவு தூரம் பொருந்தக்கூடியது என்பது குறித்து நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டும். தவிரஸீரா (நபியின் வரலாறு) தாரீஷ் (நபி மற்றும் நபித்தோழர்கள் வரலாறு), ஹதீஸ்கள் என இஸ்லாமியப் புலத்துக்குள் மட்டுமே பாடப்பரப்பு சுழல்கிறது. இவை தவிர மேலும் விடயங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துமே இஸ்லாம் என்ற மத எல்லையைத் தாண்டுவதில்லை. எதன்மீதும் மாற்றுப் பார்வையோ, வேறு கோட்பாட்டு அறிவுகளோ கற்பிக்கப்படுவதில்லை. இந்த நிலமைதான் ஒரு இளம் பருவத்தினரை மாற்றுச் சிந்தனையற்ற, தர்க்க ரீதியான பார்வையற்ற, உலகியல் நோக்கற்ற புனிதச் சொற்களை மட்டுமே மூளைக்குள் ஏந்திய ஒரு தலைமுறையை உருவாக்குகிறது.
மதரசாக்களிலிருந்து வெளியேறும் அனைத்து இளைஞர்களுமே பரந்த வாசிப்போ, மாற்றுச் சிந்தனையோ, சகிப்புணர்வோ இல்லாத தீவிர மதப்பற்றாளர்களாகவே சமுதாயத்தோடு இணைந்து கொள்கின்றனர். மற்ற மதங்கள், பண்பாடுகளை அங்கீகரிக்கவோ, நட்புறவுடன் நடந்துகொள்வதற்கோ அவர்களால் முடிவதில்லை. இஸ்லாமியத் தூய்மைவாத பக்தர்களாகவே அவர்கள் செய்யப்பட்டிருப்பதனால் அதிலிருந்து ஒரு அங்குலமேனும் அவர்களால் விலகி நின்று சிந்திக்க முடிவதில்லை. “ப்ரொக்கிரம்” செய்யப்பட்ட ரோபோவை ஒத்த நிலை அவர்களுடையது.
மாற்றுச் சிந்தனையை, தர்க்க சிந்தனையைக் கொண்ட விரிந்த கண்ணோட்டத்திலான ஒரு இளம் சமுதாயத்தை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்குவதில் மதரசாக்கள் தோல்வி கண்டுள்ளன என்ற உண்மையை முஸ்லிம் மதத் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிரபஞ்சம், மனித வாழ்வு, உலக இயக்கம் குறித்தெல்லாம் அறிவியல் சார்ந்தோ, பகுத்தறிவு சார்ந்தோ, உலகியல் சார்ந்தோ ஒரு பார்வை இளம் தலைமுறையினருக்கு அத்தியவசியமானதொரு காலகட்டம் இது. சில மதரசாக்களில் பாடசாலைக் கல்வி முறையும் இணைந்திருந்தாலும் அதற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரைத் திருப்திப்படுத்தும் அளவிலேயே அந்த முயற்சிகள் சுருங்கி இருக்கின்றன.
உண்மையில், இலங்கை மதரசாக் கல்விமுறை குறித்து சலசலப்பு தோன்றியுள்ள இந்தத் தருணத்தில் முஸ்லிம் மத, அரசியல் தலைமைகள் அறிவுசார்ந்து சிந்திப்பது பயனுள்ளது. மதரசாக்களின் பாடத்திட்டங்களில் முறையான மறுசீரமைப்பை ஏற்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும். அல்லது பாடசாலை முறைமைக்குள் அதனை உள்ளீர்க்கவேண்டும். இதனைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
பாடத்திட்ட மறுசீரமைப்பு எனும் போது, முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் உட்சிந்தனைகள், கொள்கைகள், சிந்தனைப் பள்ளிகள் குறித்த வெறுப்புணர்வை ஊட்டும் பார்வைகளைக் களைந்து பொதுவான பார்வைகளைக் கொண்டதாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இஸ்லாமிய சிந்தனை மரபுக்குள் தோன்றிய பல்வேறு தரப்புகள் குறித்தும் முடிவுகளை மாணவர்களே எடுக்கும் படியான பக்கச்சார்பற்ற கலைத்திட்டம் பேணப்பட வேண்டும்.
அடுத்து ஒப்பீட்டுச் சமயம் ஒரு கட்டாயப்பாடமாக உள்வாங்கப்படவேண்டும். அதேநேரம், வேறு சமயங்கள், பண்பாடுகள் பற்றியும் குறிப்பாக இந்திய சமயங்கள், தத்துவங்கள், இஸ்லாமிய மெய்யியல், சூஃபித்துவம் பற்றியும் ஒரு பொதுவான நோக்கிலமைந்த ஒரு சமநிலைப் பாடத்திட்டமே அறிமுகம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையுமாகும். மத நல்லிணக்கம், சகவாழ்வு, இலங்கையில் ஏனைய இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் குறித்த நல்லபிப்ராயத்தை சீர்குலைக்கக்கூடிய விசயங்கள் இஸ்லாமிய மதப்பிரதிகளில் காணப்படுமிடத்து அவற்றை முற்றாக நீக்கிவிட வேண்டும். முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய அறிவிப்புகள், வெளிப்பாடுகள் எடிட் செய்யப்பட்ட பிரதிகளையே இங்கு கற்பிக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களாக ஏனைய சமூகங்களோடு இணைந்து, இலங்கையின் பல்வேறு மரபுகள், பண்பாடுகளை மதித்து வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை மதத்தின் பேரால் இழந்து தனித்துப் போவற்கான சூழலை இஸ்லாமியர்கள் தங்களது அறியாமைப் பிடிவாதத்தால் ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது. தங்களது மத மேன்மையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் சற்று விழித்து இன்றைய உலகப் போக்குக்கேற்ப இலங்கை முஸ்லிம்கள் தங்களது மதரசாக் கல்வி முறை குறித்துச் சிந்தித்துச் செயற்படுவதே அறிவுடைமையாகும்.