சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)

  — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

எல்லாவகையான இயற்கை வளங்களும் நிரம்பப்பெற்றிருந்தாலும், எழுவான்கரைப் பகுதியில் காணப்பட்ட நகரப்புறம் சார்ந்த அபிவிருத்திகள், போக்குவரத்து வசதிகள் என்பவை இல்லாமையால், படுவான்கரைப்பிரதேசம், பல்வேறு சிரமங்களோடும், பற்றாக்குறையான வளங்களோடும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவே இருந்தது.  

இப்போது உள்ளவாறு, மண்முனைப்பாலம் அப்போது இல்லை. வெல்லாவெளி, போரதீவு, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு முதலிய ஊர்கள் இப்போது கடை வீதிகளோடுகூடிய சிறு பட்டினங்களாக உள்ளன. அப்போது அபிவிருத்தியில் பின்தங்கிய கிராமங்களாகவே அவை எல்லாம் இருந்தன. அதனால், சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மீள்வது மக்களுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. முற்றாக அழிந்த வீடுகள், சிதைந்த வீடுகள், இருந்த இடம் தெரியாமல் அள்ளுண்டுபோன குடிசைகள் என்றிப்படி மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. உண்ண உணவில்லாமலும், உடுக்க மாற்று உடையில்லாமலும் மக்கள் பட்டுக்கொண்டிருந்த அல்லல்கள் சொல்லி மாளாதவை.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசாங்கத்தாலும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களாலும் அந்தமக்களுக்காக வழங்கப்பட்டிருந்த பொருட்கள், அவர்களுக்கு விநியோகிக்கப்படாமல், வீணாகிக்கொண்டிருப்பதை எங்களால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். எடுத்த முயற்சிகள் எதுவுமே பலன் தராமல் போகவே, இதுதான் ஒரே வழி என்று இன்னும் ஒரு முயற்சியை எடுத்தோம். 

நிலைமையை விளக்கி, விபரமான ஒரு முறைப்பாட்டைத் தயாரித்தோம். அதில் நானும் தவப்பிரகாசமும் கையொப்பமிட்டோம்.  

உதவி அரசாங்க அதிபருக்கு எதிரான அந்த முறைப்பாட்டின் பிரதியொன்றை மறுநாள் காலையில், அவர் வருவதற்கிடையில், அவரின் மேசையில் வைத்துவிட்டு, அன்றைய தினம் விடுமுறைக்கும் விண்ணப்பித்துவிட்டு, அரசாங்க அதிபரிடம் முறைப்பாட்டை நேரில் கையளிப்பதற்காக நானும், தவப்பிரகாசமும் மட்டக்களப்புக் கச்சேரிக்குச் சென்றோம்.   

மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபராக, எம்.அந்தோனிமுத்து அவர்கள் இருந்தார். ஆளணி விடயங்களுக்குப் பொறுப்பாக அவரே இருந்தார் என்பதாலும், என்னை அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும், அவரிடம் முறைப்பாட்டை நேரடியாகக் கொடுத்து, நிலைமையை எடுத்துக்கூறுவது உகந்ததென நினைத்தோம். 

அதன்படி, அவரிடம் முறைப்பாட்டைக் கொடுத்தோம். அவர் அதனை வாசிக்கும்போது அடிக்கடி எங்களை நிமிர்ந்து பார்த்தார். “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, அவரது உள்ளத்தில் தோன்றிய நினைவலையின் போக்கை எங்களால் உணரக்கூடியதாக இருந்தது. வாசித்து முடித்ததும், மிகவும் அமைதியாக, “இதில் சொல்லியிருக்கிறதெல்லாம் மிகவும் கடுமையான விசயங்கள். அவருக்குக் கீழ நீங்கள் வேலை செய்யுறீங்கள். விசாரணை என்று வந்தால், தனிப்பட்ட முறையில் அது உங்களைப் பாதிக்கலாம். நான் கவனிக்கிறன். நான் அவரோடு பேசுறேன்” என்று சொன்னார். 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம் உண்மை என்றும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை என்றும், அங்கே இருக்கும் சாமான்கள் முழுவதையும், அவை கெட்டுப்போவதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றும் கூறினோம். உடுப்புக்களும், போர்வைகளும், கூடாரங்களும் ஏராளமாகத் தேங்கிக் கிடப்பதை எங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, மழையிலும், வெயிலிலும் இருக்க இடமில்லாமல் கஸ்டப்படும் சனங்களுக்கு அவற்றையெல்லாம் இப்போது கொடுக்காமல், அவர்களில் சிலர் செத்தபிறகோ அல்லது வீடுகளைத் திருத்தின பிறகோ கொடுத்து என்ன பிரயோசனம் என்று நாங்கள் உதவி அதிபரிடம் பலமுறை சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை என்பதையும் விளக்கமாகச் எடுத்துரைத்தோம். தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேலதிக அரசாங்க அதிபர், அந்தோனிமுத்து அவர்கள் அழுத்திச் சொன்னார். 

மேலும், இனிமேல் அவர் மிகவும் கோபமாக இருப்பார், அவருடன் வேலை செய்ய முடியாது, வீணான பிரச்சினைகள் வரும், அதனால் நாங்கள் கச்சேரியிலேயே வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டோம்.  

உதவி அரசாங்க அதிபருடன் தான் கதைப்பதாகவும், எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்வதாகவும் கூறி, மறுநாள் அலுவலகத்திற்குச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.  

அந்த முறைப்பாட்டில் யார்யாருக்குப் பிரதிகள் அனுப்பப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பட்டிருப்பு, மட்டக்களப்பு, மற்றும் கல்குடா தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்த நேரத்தில் பட்டிருப்பு உறுப்பினராக, பூ.கணேசலிங்கம் அவர்களும், மட்டக்களப்பு முதலாவது உறுப்பினராக செ.இராசதுரை அவர்களும், இரண்டாவது உறுப்பினராக அஹமட்ஃபரீத் மீரா லெவ்வை அவர்களும், கல்குடா உறுப்பினராக கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களும் இருந்தார்கள். கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்கள் நீதி அமைச்சராகவும் இருந்தார். பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர், மொண்டேஹு ஜெயவிக்கிரம அவர்கள். 

இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. எதுவுமே நடக்கவில்லை. அதற்குள், மேலும் நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தன. இந்த நிலையில், வார விடுமுறையின்போது, எவரும் எதிர்பார்த்திராத விடயம் ஒன்று நடந்தேறியது. சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா என்று சரியாக நினைவில் இல்லை, ஆனால் அந்த இரண்டு நாட்களில் ஒருநாள், நீதி அமைச்சராகவிருந்த, கல்குடா பா.உ.தேவநாயகம் அவர்கள் வெல்லாவெளிக்கு வந்து, பண்டசாலையை உடைக்கச்செய்து அங்கிருந்த பொருட்களை அந்த இடத்திலிருந்தே பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார் என்ற செய்தி எனக்குத் தெரிய வந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் பொருட்களைப் பெற்றுச் சென்றதாகவும் அறிந்தோம்.  

அவர் அதிகாரிகளுடன் வந்திருந்தாரா, வெல்லாவெளி பிரதேசத்தின் எல்லா கிராம சேவகர் பிரிவுகளின் மக்களுக்கும் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததா? அதற்கான தகவல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டதா? என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை.  

திங்கட்கிழமை வழமைபோல நான் அலுவலகம் சென்றபோது, எங்களுக்கு முன்னரே அங்கு வந்திருந்த உதவி அரசாங்க அதிபர் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார். தவப்பிரகாசமும், இன்னும் சக உத்தியோகத்தர்கள் சிலரும் நின்றிருந்தார்கள். பொதுமக்களும் இருந்தார்கள். என்னைக் கண்டதும் எள்ளும் கொள்ளும் அவர் முகத்தில் வெடித்தது. சக உத்தியோகத்தர் ஒருவர், இப்படி நடந்தமைக்கு நானும், தவப்பிரகாசமுமே காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.  

“இதற்கு மூல காரணம் நாங்களல்ல, மக்களுக்குக் கொடுக்க வேண்டிய பொருட்களைப் பதுக்கி வைத்தது நாங்களில்லை. அதெல்லாம் கெட்டுப்போனதிற்குக் காரணம் நாங்களில்லை. துஸ்பிரயோகம் செய்ததும் நாங்கள் இல்லை” என்று நான் சொன்னேன். உடனே ஏஜீஏ இடைமறித்து, “துஸ்பிரயோகம் எதுவும் நடக்கவில்லை” என்று குரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, வேகமாக அலுவலகத்திற்குள் நுழைந்தார். 

அவரைப் பின்தொடர்ந்து எல்லா உத்தியோகத்தர்களும் அலுவலகத்திற்குள் சென்றோம். வழக்கமான கடமைகளில் ஈடுபட்டோம். நிவாரணப் பணிகளில் என்னையும் தவப்பிரகாசத்தையும் முழுமையாக ஈடுபடுத்துவதில் உதவி அரசாங்க அதிபர் முன்னரைப் போலவே மிகவும் அக்கறை காட்டினார். கச்சேரி மேலிடத்தில் அவ்வாறு அவருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்.  

இதற்கிடையில், ஒரு பத்திரிகையில் வந்திருந்த செய்தியொன்றால், இன்னும் ஒரு பிரச்சினை அவருக்கு வந்தது. சூறாவளி நிவாரணத்திற்கு வழங்கப்படும் சில உடுப்புப் பொதிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாகப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. சூறாவளி அடித்தது கிழக்கு மாகாணத்தில். நிவாரண உடுப்புப் பொதிகள் கைப்பற்றப்பட்டது வடமாகாணத்தில். கிழக்கு மாகாணத்தில் எந்த மூலையில் இருந்தும் அந்தப் பொதி களவாடப்பட்டிருக்கலாம். அல்லது கொழும்பில் இருந்துகூடக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்துதான் கையாடல் செய்யப்பட்டது என்று சொல்லமுடியாது. ஆனால் அது கைப்பற்றப்பட்ட இடம், இந்த உதவி அரசாங்க அதிபரின் சொந்த இடமாக இருந்தது. அதனால் தனக்கெதிரான பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அந்தச் செய்தி தன்னைச் சந்தேக வட்டத்திற்குள் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சமும், அவமானமும் அவரிடம் குடிகொள்ளத் தொடங்கின.   

ஆனால் அந்த விடயம் அப்படியே கால ஓட்டத்தில் கரைந்து போயிற்று. 

ஒரே அலுவலகத்தில் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவருக்கும் எங்களுக்கும் இடையே பழயபடியான சுமுகமான உறவு ஏற்படவில்லை. ஏற்படுமா என்றும் நம்பிக்கை இல்லை. ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு – முக்கியமாக எனக்கு – இருந்ததில்லை.  

இந்த நிலையில், அவருக்கு மிகவும் துயரமான பேரிழப்பு ஒன்று ஏற்பட்டது. அவரின் மனைவியார் யாழ்ப்பாணத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அது எங்களுக்குச் சற்று அதிர்ச்சியையும், கவலையும் கொடுத்தது. அன்றே அவர் தனது ஊருக்குப் பயணமானார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரிந்த, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான உயரதிகாரிகள் மட்டக்களப்பில் குடும்பத்துடன்தான் தங்கியிருந்தார்கள். ஆனால், இவர் தனியாகவே தங்கியிருந்தார். குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். 

மறுநாள் நானும், தவப்பிரகாசமும், மண்டூரைச் சேர்ந்த கிராம சேவக உத்தியோகத்தர் அரும்பொருளும், மரணச் சடங்கில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்திற்குப் பயணமானோம். சூறாவளி நிவாரணப்பொருட்கள் விநியோகம் சம்பந்தமாக அரசாங்க அதிபருடனான பிரச்சினைகளில், அக்கறை காட்டிய சில கிராம சேவகர்களில் அரும்பொருளும் ஒருவர். அவரும், நான் படித்த, களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும், அவரும், தவப்பிரகாசமும் எனக்கு மூன்று அல்லது நான்கு வகுப்புக்கள் முந்திப்படித்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன. 

மரண வீட்டில் எங்களைக் கண்டதும், அவருக்கு மிகவும் நெகிழ்ச்சியாகப் போய்விட்டது. மனைவியின் இழப்பின் துயரம் கண்ணீராக வெளிப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. திருமணமாகாத இளைஞர்களான நாங்கள் மூவரும், எங்கள் அறிவுக்குள் அகப்பட்ட அளவுக்கு அவருக்கு ஆறுதல் கூறி, அவரிடம் இருந்து விடை பெற்று, அன்றிரவே, ஊரை நோக்கிப் பயணித்தோம். 

 (நினைவுகள் தொடரும்)